பிரிட்டன் தேர்தல்: படுதோல்வி அடைந்த ரிஷி சூனக்கின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகின. 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி அங்கு ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதையடுத்து, பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் கியர் ஸ்டாமர் பதவியேற்றுள்ளார். நாட்டின் புதிய துணைப் பிரதமராக ஏஞ்சலா ரெய்னர் பதவியேற்றுள்ளார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 650 இடங்கள் உள்ளன. அதில் தொழிலாளர் கட்சி 412 இடங்களை வென்றுள்ளது, இது பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களைவிட அதிகம்.
அதேநேரம் தேர்தல் முடிவுகளால் ஆட்சியில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய பிரதமர் ரிஷி சூனக் தலைமையில் நடைபெற்ற தேர்தல் என்பதால், தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது மற்றும் 250 இடங்களை இழந்துள்ளது. இது அக்கட்சியினருக்கு மோசமான ஒரு தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.
பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி பிபிசியிடம் பேசுகையில், "முன்பு கன்சர்வேடிவ் கட்சிக்கு வாக்களித்த ஏராளமான மக்கள் தற்போது சீர்திருத்தக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இழந்த மக்கள் செல்வாக்கை எப்படித் திரும்பப் பெறுவது என்று கன்சர்வேடிவ் கட்சியினர் சிந்திக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தோல்விக்குப் பொறுப்பேற்ற ரிஷி சூனக்
தோல்விக்குப் பிறகு, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் அமைந்துள்ள 10 டவுனிங் வீதியிலிருந்து இறுதியாக செய்தியாளர்களிடம் ரிஷி சூனக் உரையாற்றினார். பிரிட்டன் அரசாங்கம் மாற்றப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான சமிக்ஞையை வாக்காளர்கள் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
"முதலில் நான் ஒரு முக்கியமான விஷயத்தை மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், என்னை மன்னித்து விடுங்கள். இந்தப் பொறுப்பிலிருந்து என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். ஆனால் நீங்கள் பிரிட்டன் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்று தெளிவான சமிக்ஞையை வழங்கியுள்ளீர்கள். உங்கள் முடிவு மட்டுமே எங்களுக்கு முக்கியம். இந்தத் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்" என்று கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு, ரிஷி சூனக் பக்கிங்ஹாம் அரண்மனையை அடைந்து அரசர் மூன்றாம் சார்லஸை சந்தித்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.
ஆனால் பிரதமர் பதவியை விட்டு விலகியது மட்டுமல்லாது, எதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் பணியாற்ற மாட்டேன் என ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்ட அவர், "நீங்கள் கடுமையாக உழைத்தீர்கள், ஆனால் நம்மால் வெற்றி பெற முடியவில்லை. இந்த முடிவிற்குப் பிறகு நான் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன், ஆனால் உடனே ராஜினாமா செய்ய மாட்டேன். புதிய தலைவருக்கான தேர்தல் பணிகள் முடியும் வரை காத்திருப்பேன்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ரிஷி சூனக் அடுத்து என்ன செய்வார்?
லண்டனில் உள்ள பிபிசி செய்தியாளர் ராகவேந்திர ராவ், "கடந்த 14 ஆண்டுகளில் மட்டும், பிரிட்டன் ஐந்து பிரதமர்களைக் கண்டுள்ளது. மக்களிடையே கோபமும் ஒருவித சோர்வும் இருந்தது. மக்கள் மாற்றத்தை விரும்பினர்" என்று இந்தியாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் முகமது ஷாஹித்திடம் கூறினார்.
மக்கள் தொழிலாளர் கட்சிக்குத் தங்கள் ஆதரவை வழங்கியிருந்தாலும், புதிய பிரதமர் கியர் ஸ்டாமருக்கான பாதை அவ்வளவு எளிதானதாக இருக்காது என்றும், தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் பிரிட்டன் அரசின் முன் உள்ளன என்றும் ராகவேந்திர ராவ் தெரிவித்தார்.
ரிஷி சூனக்கின் எதிர்காலம் குறித்து அவர் கூறுகையில், "வரும் காலங்களில் கன்சர்வேடிவ் கட்சியில் புதிய தலைவர் எழுச்சி பெறுவது உறுதி. ஆனால், சூனக் என்ன செய்வார் என்று இப்போதே சொல்வது கடினம்" என்றார்.
"பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் ரிஷி சூனக்தான். ஆனால் தற்போது அவரது தலைமையில் கன்சர்வேட்டிவ் கட்சி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. அவருக்கான ஒரு களங்கமாகப் பார்க்கப்படுகிறது. இதைப் போக்குவது அவருக்கு ஒரு கடினமான பணியாக இருக்கும்" என்று கூறினார் ராகவேந்திர ராவ்.

பிரிட்டனுக்கான முன்னாள் இந்திய தூதர் ருச்சி கன்ஷ்யாம், "ரிஷி சூனக் பிரதமரானபோது, பிரிட்டன் மிகவும் கடினமான ஒரு காலகட்டத்தை எதிர்கொண்டது" என்று பிபிசி செய்தியாளர் முகமது ஷாஹித்திடம் கூறினார்.
"வெள்ளிக்கிழமை மதியம், பிரதமர் இல்லத்திற்கு வெளியே ரிஷி சூனக் பேசுகையில், பிரிட்டனின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியதாகவும், பணவீக்கத்தைக் குறைத்ததாகவும் வளர்ச்சியின் வேகத்தை அதிகரித்ததாகவும் கூறினார். புதிதாகப் பொறுப்பேற்க இருக்கும் பிரதமரைப் பற்றி நல்ல விஷயங்களையும் தெரிவித்ததால், அவரது கடைசி உரை நன்றாகவே இருந்தது" என்று ருச்சி கன்ஷ்யாம் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ரிஷி சூனக் ஒரு இளம் தலைவர், நல்லவர். பதவியில் இருந்தபோது அவர் தனது நல்ல பண்புகளை வெளிப்படுத்தினார். அவர் கூறியது போல், கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் கன்சர்வேடிவ் கட்சியை வழிநடத்துவார். ஆனால், கட்சியில் உறுப்பினராக இருப்பதோடு, எம்.பியும் கூட. எதிர்காலம் என்ன என்பதை காலம்தான் சொல்லும்" என்று கூறினார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரும், தொழிலாளர் கட்சியின் முன்னாள் உறுப்பினருமான லார்ட் மேக்நாத் தேசாய், பிபிசி செய்தியாளர் சரிகா சிங்கிடம் பேசுகையில், "ரிஷி சூனக் ஒரு அரசியல் தலைவர் அல்ல, அவர் ஒரு தொழில்நுட்ப நிபுணர், ஒரு வங்கியாளர். எனவேதான் அவரால் மக்களுடன் எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை" என்று கூறினார்.
“ஒருபுறம் கன்சர்வேடிவ் கட்சியினர் வேலை செய்தாலும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மறுபுறம் ஐந்து ஆண்டுகள் பணியாற்ற அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வார்கள் என்பதைக் காலம்தான் சொல்லும்" என்கிறார் மேக்நாத் தேசாய்.
வாழ்த்துச் செய்திகளும் எதிர்பார்ப்புகளும்

பட மூலாதாரம், Getty Images
தொழிலாளர் கட்சியின் வெற்றிக்குப் பிறகு, சர்வதேச தலைவர்களின் அறிக்கைகளும் வெளிவருகின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோதி கியர் ஸ்டாமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் உங்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்" என்று அவர் கூறினார்.
இதனுடன், ரிஷி சூனக்கின் தலைமைத்துவத்தைப் பாராட்டிய பிரதமர் மோதி, அவரது எதிர்காலத்திற்கான நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், "ஒரு நிலையான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு உறவு, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களைப் பூர்த்தி செய்கிறது மற்றும் சர்வதேச அமைதி நிலை தொடர்பான சவால்கள் மற்றும் வளர்ச்சிக்கு ஒன்றாக பதிலளிப்பதன் அவசியத்தையும் அது உணர்த்துகிறது. பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் பிரிட்டனுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்" என்றார்.
ஜெர்மானிய அரசுத் தலைவர் ஓலாஃப் ஷூல்ட்ஸ் மற்றும் நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஆகியோரும் கியர் ஸ்டாமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












