அமெரிக்காவுக்கு எதிராக சீனா, ரஷ்யாவுடன் ஓரணியில் இந்தியா - வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசம் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், உலகின் அனைத்து வல்லரசு நாடுகளும் தங்கள் செல்வாக்கை நிலைநாட்ட முயல்கின்றன.
அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளான ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பிஎன்பி) ஆகியவை தேர்தலைப் புறக்கணித்துள்ளன.
இடைக்கால அரசாங்கத்தின் மேற்பார்வையில் மட்டுமே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அந்த நாட்டில் 44 கட்சிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. இதில் 26 கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன, மீதமுள்ள 14 கட்சிகள் புறக்கணித்துள்ளன.

பட மூலாதாரம், ANI
அரசியல் அணி திரட்டல்கள்
உள்ளூர் ஊடகங்களின்படி, கடந்த 11 மாதங்களில், வங்கதேசத்தில் அரசியல் வன்முறைகளால் 8,150 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலைமைக்கு எதிர்க்கட்சிகள் மீது அரசு குற்றம் சாட்டுகிறது.
வங்கதேசத்தில் ஜனவரி 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பல எதிர்க்கட்சித் தலைவர்கள் அவாமி லீக் தலைமையிலான நிர்வாகத்தால் கைது செய்யப்பட்டனர். எதிர்க்கட்சிகளின் கூற்றுப்படி, அக்டோபர் மாதம் 21,385 பி.என்.பி. நிர்வாகிகள் பல வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அங்கு நிகழும் நிகழ்வுகள், உலக அரசியலில் குறிப்பிடத்தக்க அணிதிரட்டல்களைத் தூண்டியுள்ளன. வங்கதேசத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைக் கோரிய பி.என்.பி. கட்சியை அமெரிக்கா ஆதரிக்கிறது.
ஆனால், வங்கதேசத்தின் நட்பு நாடாக திகழும் இந்தியாவோ, சீனா மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறது. வங்கதேசத்தின் தேர்தல்களில் வெளிப்புற தலையீடு ஏற்கத்தக்கது அல்ல என்பதை இந்தியா வலியுறுத்துகிறது.
அமெரிக்காவின் தலையீடு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தும் என்பதுடன், தெற்காசியா முழுவதும் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்த அனுமதிக்கும் என்று இந்தியா அஞ்சுகிறது.

பட மூலாதாரம், ANI
வங்கதேசத்திற்கு அமெரிக்கா நெருக்கடி
உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிராந்திய வல்லரசாக வளரும் இந்தியா ஆகியவை வங்கதேச தேர்தலை தத்தமது நலன் சார்ந்து அணுகுகின்றன. இதனால், வங்கதேசத் தேர்தல் உலக அரசியலில் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது. இதில் அமெரிக்கா மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
2014 தேர்தலுக்கு முன்பே ஷேக் ஹசீனாவை வங்கதேசத்தின் உயர் பதவியை அலங்கரிக்க சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளே ஒன்று சேர்ந்து ஏற்பாடு செய்ததாக வதந்திகள் உள்ளன.
2023 மே மாதம் அமெரிக்கா ஒரு புதிய விசா கொள்கையை அறிவித்தது. வங்கதேசத்தில் ஜனநாயக தேர்தல் செயல்முறையை சீர்குலைக்கும் நபர்களுக்கான விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதே அதன் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டது.
வங்கதேசத்தில் சுதந்திரமான மற்றும் அமைதியான தேர்தலை நடத்துவதே முதன்மையான இலக்கு என்று அது கூறியது.
"வங்கதேசத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள், அரசு சார்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நீதித்துறை உறுப்பினர்கள், சட்ட அமலாக்க பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்" என்று அமெரிக்கா கூறியது.
விசா கட்டுப்பாடுகளுக்கு பதிலளித்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் அர்த்தமற்றவை என்றார்.
அமெரிக்காவை குறிவைக்கும் சீனா, ரஷ்யா

பட மூலாதாரம், GETTY IMAGES
சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்காவின் நகர்வுகளை உடனடியாகக் கண்டித்தன.
வங்கதேச ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க சீனா உறுதுணையாக இருக்கும் என்று ஹசீனாவின் ஆகஸ்ட் கூட்ட அறிக்கையை சீன அதிபர் ஷி ஜின்பிங் நினைவுபடுத்தினார்.
ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நியாயமான தேர்தல்கள் பற்றி ஒரு நாடு பேசும்போது, மற்றொரு நாடு தன்னிச்சையாக விசாக்களை கட்டுப்படுத்துகிறது என்று அமெரிக்காவை பெயர் குறிப்பிடாமல் வங்கதேசத்துக்கான சீன தூதர் யு வென் விமர்சித்தார்.
வங்கதேச தேர்தல்கள் தொடர்பாக சீனா - அமெரிக்கா இடையே நிலவும் அதிகாரப் போட்டியை இது எடுத்துக் காட்டுகிறது.
வங்கதேசத்தில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்யும் நாடு அமெரிக்கா. தெற்காசிய நாடுகளில் ஆயத்த ஆடைகளுக்கான மிகப்பெரிய உற்பத்தி மையம் வங்கதேசம் ஆகும்.
வங்கதேசத்தின் முதன்மை வர்த்தக பங்காளி மற்றும் பாதுகாப்பு தளவாட சப்ளையர் சீனா ஆகும். தற்போதைய போட்டி இந்த இரண்டு உலக வல்லரசுகளுக்கும் இடையிலான ஆதிக்கத்திற்கான போட்டியில் விளைந்தது.
இதுதவிர, வங்கதேசத்துடனான உறவில் ரஷ்யாவும் முன்னேற்றம் கண்டுள்ளது. முந்தைய ஐம்பது ஆண்டுகளில் இல்லாத வகையில், சமீபத்தில் வங்கதேசத்திற்கு ஒரு போர்க்கப்பலையும் ரஷ்யா அனுப்பியது. தேர்தலில் முறைகேடு செய்ய அமெரிக்கா முயற்சிப்பதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
டிசம்பர் 15 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், "அமெரிக்கா எதிர்பார்த்த தேர்தல் முடிவு கிடைக்கவில்லை என்றால் அரபு வசந்தத்தைப் போன்று வங்கதேசத்தில் அமைதியின்மையைத் தூண்டக் கூடும்" என்று ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா எச்சரித்தார்.
அமெரிக்காவுக்கு எதிராக சீனா, ரஷ்யாவுடன் ஓரணியில் இந்தியா
வங்கதேச தேர்தலில் அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு எதிராக சீனா மற்றும் ரஷ்யாவுடன் ஓரணியில் இந்தியா நிற்கிறது.
பி.என்.பி .கட்சி வெற்றி பெற்றால் அப்பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகரிக்கும் என்று இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சியும் சந்தேகிக்கின்றது
வங்கதேசத்தில் இஸ்லாமிய போராளிகள் மீது ஆளும் அவாமி லீக் அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததால் இந்தியாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன.
வங்கதேசத்தில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தக் கோரிய கிளர்ச்சியாளர்கள் மீது ஹசீனாவின் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது
இந்த அமைப்புகளுக்கு பிஎன்பி மற்றும் ஜமாத்-இ-இஸ்தாமி கட்சிகள் ஆதரவளிப்பதாகக் கருதப்படுகிறது.
எவ்வாறாயினும், தேர்தலுக்கு முன்பாக பி.என்.பி. ஆதரவாளர்கள் மீது ஹசீனா அரசாங்கம் அடுக்குமுறைகளை ஏவியது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்தே அமெரிக்கா விசா கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்தது.
இந்தியாவோ, இது வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரம் என்று கூறுகிறது. வங்கதேசத்தில் தற்போதைய அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் அழுத்தம் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், அது தீவிரவாதக் குழுக்களை வலுப்படுத்தி, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகக் கூடும் என்றும் அமெரிக்காவை இந்தியா கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.
வங்கதேசத்தில் வெளியாகும் ஆங்கில நாளிதழான டாக்கா ட்ரிப்யூன் தனது ஆகஸ்ட் மாத கட்டுரையில், "அடிப்படைவாதத்தையும் தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கும் எந்தவொரு சக்தியும் வங்கதேசத்தில் ஆட்சிக்கு வருவதை இந்தியா ஒருபோதும் விரும்புவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












