ஏழு மணிநேரம் ஒட்டக சவாரி செய்து குழந்தை பெற்ற 19 வயது பெண்ணின் கண்ணீர் கதை

பட மூலாதாரம், SADAM ALOLOFY/UNFPA
- எழுதியவர், சார்லின் ஆன் ரோட்ரிக்ஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
கர்ப்பிணியான இளம்பெண் மோனா (வயது 19) மலை உச்சியில் இருக்கும் தனது வீட்டில் இருந்து மருத்துவமனையை அடைய நான்கு மணிநேரம் ஆகலாம் என்று கணித்திருந்தார்.
ஆனால் சாலை வசதி இல்லாத கரடுமுரடான பாதை, கடுமையான பிரசவ வலி, மோசமான வானிலை போன்ற காரணங்களால் அவர் மருத்துவமனையை அடைய ஏழு மணி நேரம் ஆகிவிட்டது.
“ஒட்டகம் ஒவ்வோர் அடியை எடுத்து வைத்தபோதும் நான் உடைந்து போனேன்” என்கிறார் மோனா.
ஒரு கட்டத்தில் ஒட்டகம் மேற்கொண்டு பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது, பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த மோனா, ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கி தனது கணவருடன் மருத்துவமனையை நோக்கி தடுமாற்றத்துடன் நடக்க துவங்கினார்.
வடமேற்கு ஏமனின் மஹ்வீத் மாகாணத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் சிசிச்சை பெறுவதற்கு எஞ்சியுள்ள ஒரே மருத்துவமனை பானி சாத்.
மோனாவின் கிராமமான அல் -மஹராவில் இருந்து ஆபத்தான மலைப் பாதைகளின் வழியே ஒட்டகம் மூலமோ, நடந்தோதான் மருத்துவமனைக்குச் செல்ல இயலும்.
ஒட்டகத்தை இறுகப் பற்றி கொண்டு மருத்துவமனையை நோக்கிப் பயணித்த மோனா, தன் பாதுகாப்பு மற்றும் தனது வயிற்றில் இருந்த குழந்தையின் பாதுகாப்பு குறித்து மிகவும் அச்சம் அடைந்திருந்தார்.
“சாலை மிகவும் கரடுமுரடாக இருந்தது; நான் அப்போது உடலளவிலும், மனதளவிலும் சோர்வடைந்திருந்தேன்” என்று தனது அந்தக் கொடுமையான பயண அனுபவத்தை நினைவுகூர்ந்தார் மோனா.
“கடவுள் என்னை பத்திரமாக அழைத்துச் சென்று, என் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும். அதனால் நான் வலியில் இருந்து விடுபட வேண்டும் என்று கடவுளிடம் அப்போது வேண்டிக்கொண்டேன்,” என்று கண்ணீர் மல்கக் கூறினார் அவர்.
மருத்துவமனையை அடைந்தபோது மோனா நினைவு இழந்திருந்தார். ஆனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கையில் தவழ்ந்த தனது குழந்தையின் அழுகுரலைக் கேட்ட பிறகு, வாழ்க்கையின் மீது தமக்கு மீண்டும் நம்பிக்கை பிறந்ததாக பூரிப்புடன் கூறினார் மோனா.
கணவருடன் சேர்ந்து தங்களது உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களின் நினைவாக, தனக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ‘ஜராஹக்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் அவர்.
போரின் எதிர்விளைவு
பானி சாத் மருத்துவமனைக்கு அருகே உள்ள கிராமங்களில் இருந்து இந்த மருத்துவமனைக்கு செல்லும் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. சில சாலைகள் துண்டிக்கப்பட்டோ அல்லது தடுக்கப்பட்டோ இருக்கின்றன.
சௌதி அரேபியா தலைமையிலான அரச கூட்டுப் படைகளுக்கும், இரானிய ஆதரவு ஹவூதி கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் தான் ஏமன் மக்களின் இந்த இன்னல்களுக்குக் காரணம்.
மலைக் கிராமங்களில் இருந்து கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர்களின் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள், உள்ளூர் பெண்கள் பல மணிநேரம் உதவியாக இருக்கின்றனர்.
33 வயதான சல்மா அபு, ஒருநாள் இரவு கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்க்க அவருடன் பயணித்துள்ளார். அப்போது பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த மற்றொரு கர்ப்பிணி, மருத்துவமனை நோக்கிய பயணத்தில் பாதி வழியிலேயே இறந்ததை கண்கூடாகக் கண்டதாக வேதனையுடன் கூறினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீது அரசு கருணை காட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
“எங்களுக்கு சாலைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் போன்றவை வேண்டும். இந்த அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் நாங்கள் இந்தப் பள்ளத்தாக்கில் சிக்கித் தவிக்கின்றோம்.
யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர்கள் பாதுகாப்பாக குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். மற்றவர்கள் துயரமான இந்தப் பயணத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்,” என்கிறார் சல்மா.

பட மூலாதாரம், SADAM ALOLOFY/UNFPA
இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பெண் மரணம்
ஏமனில் பிரசவத்தின்போது ஒவ்வொரு இரண்டு மணிநேரத்துக்கும் ஒரு பெண் இறக்கிறார். ஆனால் இந்த மரணங்களுக்கான காரணங்களை முன்கூட்டியே தடுக்கலாம் என்கிறார் ஏமனில் உள்ள ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தை (UNFPA) சேர்ந்த ஹிச்சாம் நஹ்ரோ.
ஏமனின் தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் ரத்தப்போக்கு அல்லது கடுமையான பிரசவ வலி ஏற்படும் வரை, பேறுகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய வழக்கமான பரிசோதனைகளையோ, பிறரின் உதவியையோ நாடுவதில்லை என்று கவலையுடன் கூறுகிறார் அவர்.
ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் புள்ளிவிவரப்படி, ஏமனில் 50 சதவீதத்துக்கும் குறைவான பிரசவங்கள் மட்டும் திறமையான மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. மூன்றில் ஒரு பங்கு பிரசவங்கள் மட்டுமே முறையான மருத்துவ வசதியுள்ள இடங்களில் நடைபெறுகின்றன.
ஏமனின் மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் இரண்டு பங்கு பேர், பிரசவம் போன்ற அவசர காலத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட அரசு மருத்துவமனையை அடைய, ஒரு மணி நேரத்துக்கும் மேல் பயணிக்க வேண்டிய தொலைவில் வசிக்கின்றனர் என்றும் அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
ஏமனின் சுகாதார கட்டமைப்பு போருக்கு முன்பே கடும் போராட்டங்களைச் சந்தித்து வந்தது. இந்நிலையில் அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போர் மருத்துவமனைகள், சாலைகள் என அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்பை மேலும் சிதைத்துள்ளது. இதன் விளைவாக அவசர மருத்துவ உதவி தேவைப்படும் பொதுமக்கள் சிரமமின்றி மருத்துவமனையை அடைவது இயலாத காரியம் ஆகிவுள்ளது.
இங்குள்ள மருத்துவமனைகளில் தகுதியான பணியாளர்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடுகளும் முடங்கியுள்ளன.
சராசரியாக ஐந்தில் ஒரு மருத்துவமனையில் மட்டுமே பாதுகாப்பான பிரசவம் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவ வசதிகள் உள்ளன என்று சுட்டிக்காட்டுகிறது ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் புள்ளிவிவரம்.

பட மூலாதாரம், SADAM ALOLOFY/UNFPA
‘வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன்’
மோனாவின் மோசமான பிரசவ அனுபவம், ஏமனில் கர்ப்பிணிகள் அனுபவித்து வரும் அவஸ்தையை உணர்த்துவதற்கான ஓர் எடுத்துக்காட்டு மட்டும்தான்.
கர்ப்பிணிகள் போன்றோரை மருத்துவமனைக்கு சிரமமின்றி அழைத்துச் சென்று வர கார் போன்ற போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதும் ஏமனில் பெரும்பாலான மக்களுக்கு இயலாத காரியமாகவே உள்ளது. ஏனெனில் இங்கு 80 சதவீத மக்கள் அரசின் உதவியையே நம்பியுள்ளனர். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் மட்டுமே இருசக்கர வாகனங்களை வைத்துள்ளனர்.
ஹைலா என்ற பெண்ணின் கணவர், சௌதி அரேபியாவில் பணிபுரிந்தபோது சேமித்து வைத்த பணத்தில் இருசக்கர வாகனத்தை வாங்கினார்.
தீவிர ரத்தப் போக்கு போன்ற பேறுகால சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அவருக்கு வீட்டில் பிரசவம் பார்க்க இயலாது என முன்னரே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், கர்ப்பிணியாக இருக்கும் ஹைலாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டியே அவரது கணவர் இருசக்கர வாகனத்தை வாங்கியிருந்தார்.
ஒருநாள் திடீரென ஹைலாவின் பணிக்குடம் உடையவே, அவரை இருசக்கர வாகனத்தில் பத்திரமாக அமர வைத்து அவரது மைத்துனர் மருத்துவமனைக்குப் பயணித்தார்.
ஆனால், போகும் வழியில் அவர் வாகனத்தில் இருந்து கீழே விழவே, தாமரில் உள்ள ஹதாகா சுகாதார மையத்தில் ஹைலா அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை மோசமாக இருந்ததால் உடனே அவர் அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
தாயும், சேயும் கடைசி நிமிடத்தில் காப்பாற்றப்பட்டனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
“மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, எனது வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன். நானும், வயிற்றில் இருக்கும் குழந்தையும் இனி உயிர் வாழ வாய்ப்பில்லை என்று எண்ணினேன்,” என கண்ணீர் மல்கக் கூறினார் 30 வயதான ஹைனா.
“நான் கிட்டதட்ட என் குழந்தையை இழந்தேன். பாழாய்ப்போன இந்தப் போரால் நாங்கள் வாழ்க்கையை இழந்துள்ளோம். ஆனாலும் இந்தக் குழந்தை எனக்கு புது நம்பிக்கையை அளித்தது.
இதைக் குறிக்கும் விதத்தில், அரபி மொழியில் நம்பிக்கை என்ற பொருள் தரும் வார்த்தையான ‘அமல்’ என்பதையே என் குழந்தைக்குப் பெயராகச் சூட்டியுள்ளேன்,” என்று ஹைலா ஆனந்த கண்ணீருடன் கூறுகிறார்.
ஏமனுக்கான சர்வதேச நிதி உதவிகள் கிடைப்பது குறைந்துவிட்டதன் விளைவாக, பானி சாத் போன்ற மருத்துவமனைகள் மேலும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
தாய் - சேய் நலன் குறித்துக் கவலைப்படும் மருத்துவமனை பணியாளர்கள், இருவரில் யாரேனும் ஒருவரை மட்டும் காப்பாற்ற வேண்டிய கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












