லெபனான்: தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் - போர் நிறுத்தம் கோரும் அமெரிக்கா, பிரான்ஸ்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டேவிட் கிரிட்டன்
- பதவி, பிபிசி நியூஸ்
இஸ்ரேல் ராணுவத் தலைவர் தனது படைகளிடம், ஆயுதக் குழு ஹெஸ்பொலாவை குறிவைத்து நடத்தப்படும் விரிவான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, “எதிரியின் பகுதிக்குள் நுழைய” அவசியம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
“மேலே ஜெட்டுகள் போவது கேட்கிறதா? நாம் நாள் முழுவதும் தாக்கி வருகிறோம். இது தரைவழித் தாக்குதலுக்கு களத்தைத் தயார் செய்யவும், ஹெஸ்பொலாவை தொடர்ந்து மட்டுப்படுத்தம் உதவும்” என்று ஜெனரல் ஹெர்சி ஹலெவி கூறியுள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் ஹெஸ்பொலாவின் உளவுத்துறை இயக்குநரகம் தாக்கப்பட்டு, அவர்களின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த மோதல்களை மட்டுப்படுத்துவதற்கான ராஜ்ஜீய முயற்சிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா 21 நாட்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளன.
அமெரிக்க அதிபரும் ஃபிரான்ஸ் அதிபரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்த மோதல்கள் “பொறுத்துக்கொள்ள முடியாதவை” என்றும் அந்த “பிராந்தியத்தில் நிலைமைகள் தீவிரமடைவதற்கான” ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது இஸ்ரேல் மற்றும் லெபனான் மக்களின் நலனுக்கு உகந்தது அல்ல என்று கூறியுள்ளனர். இந்த அறிக்கை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், கத்தார் ஆகிய நாடுகள் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

தரை வழி தாக்குதலுக்குத் தயாராகிறதா இஸ்ரேல்?

பட மூலாதாரம், Reuters
ஒரு இஸ்ரேல் மூத்த அதிகாரி தரைவழித் தாக்குதல் விரைவில் நடத்தப்படலாம் என்று நேரடியாகச் சொல்வது இதுவே முதல் முறை.
“நாங்கள் அவர்களை எல்லா இடங்களிலும் தாக்கிக் கொண்டிருக்கிறோம்” என்று வடக்கு இஸ்ரேலில் ராணுவப் பயிற்சி ஒன்றில் பங்கேற்ற ஏழாவது பிரிகேட்-ஐ (ராணுவக் குழு) சேர்ந்த வீரர்களிடம் புதன்கிழமை கூறியதாக இஸ்ரேல் ராணுவம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
“இலக்கு மிகத் தெளிவாக உள்ளது. மக்களைப் பாதுகாப்பாக வடக்கில் குடியமர்த்த வேண்டும். அதைச் சாதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் அர்த்தம் உங்கள் பூட்ஸ் கால்கள் எதிரியின் பகுதிக்குள் நுழையப் போகிறது” என்றும் அதில் தெரிவித்திருந்தார்.
ஜெனரல் ஹலெவி தங்கள் படைகள், “எதிரியை அழிக்கும்”, அவர்களின் கட்டமைப்புகளையும் அழிக்கும் என்று பேசியுள்ளார்.
இஸ்ரேல் லெபனானுக்குள் உடனே நுழைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன், அது “உடனடியாக” நடைபெறுவதாகத் தெரியவில்லை என்று கூறியிருந்தது.
ஆனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தனது இரண்டு ராணுவக் குழுக்களை “வடக்கில் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை” மேற்கொள்வதற்காக அழைத்திருந்தது. அதன் பிறகே, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அதன் தலைவரது கருத்துகளை வெளியிட்டிருந்தது.
போர் நிறுத்தம் கோரும் அமெரிக்கா, பிரான்ஸ்

பட மூலாதாரம், Reuters
புதன்கிழமை பிபிசியின் குழு ஒன்று இஸ்ரேல் எல்லையில் உள்ள ஒரு நகரத்தைப் பார்வையிட்டது. அப்போது, ஹெஸ்பொலா போராளிகள் எல்லையிலிருந்து வெகுதொலைவு பின்னால் தள்ளி, அதாவது 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின்படி, லிதானி ஆற்றுக்கு வடக்கில் இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது.
அமெரிக்கா உட்பட இஸ்ரேலின் நட்பு நாடுகள், அந்தப் பிராந்தியத்தில் ஒரு முழு வீச்சிலான போரைத் தடுக்க முயன்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்புக்கும் இடையே சிறிய காலத்துக்குப் போர் நிறுத்தம் ஏற்படுத்த அமெரிக்க மூத்த அதிகாரிகள் முயன்று வருவதாக பல ஊடக செய்திகள் வெளியாகின.
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நியூ யார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் சந்தித்தபோது, போர் நிறுத்தத்திற்காக எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து அவருடன் ஆலோசித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளும் “பேச்சுவார்த்தைக்கு இடம் அளிக்கும் வகையில்” 21 நாள் “தற்காலிக போர் நிறுத்தம்” வேண்டும் என்று கோருவதாக பிரான்ஸ் கூறியது.
“லெபனானில் போர் ஏற்படக்கூடாது. இதற்காகத்தான் இஸ்ரேலிடம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த வேண்டாம் என்று வற்புறுத்துகிறோம். ஹெஸ்பொலாவிடம் இஸ்ரேலுக்குள் நடத்தும் ஏவுகணை தாக்குதல்களை நிறுத்துமாறு வறுபுறுத்துகிறோம்” என்று அதிபர் மாக்ரோன் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் தெரிவித்தார்.
“நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது” என்று கவலை தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்று வற்புறுத்தினார்.
முழுவீச்சிலான போர் தொடங்குமா?

பட மூலாதாரம், Getty Images
லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி “இஸ்ரேல் ராணுவத்தின் மிருகத்தனமான நடவடிக்கைகளால் தங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதாக” பேசினார்.
ஐக்கிய நாடுகள் கூட்டம் முடிந்து நாடு திரும்பும்போது, “அனைத்து எல்லைகளிலும் உடனடி போர் நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதில் ஒரு சீரிய முடிவு” எடுக்கப்படும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
இஸ்ரேலின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் டேனி டேனன், நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க எடுக்கப்படும் ராஜ்ஜீய முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். எனினும், “சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு எங்கள் இலக்கை அடைய எங்களுக்கு இருக்கும் எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்” என்றும் தெரிவித்தார்.
இஸ்ரேல் “முழு வீச்சிலான போரை விரும்பவில்லை” என்றும் அமைதிக்கான தனது விருப்பத்தை ஏற்கெனவே “தெளிவுப்படுத்தி” இருப்பதாகவும் கூறினார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை நியூயார்க் வருவார் என்று கூறிய தூதுவர், அன்று இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்றும் மறுநாள் ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசுவார் என்றும் தெரிவித்தார்.
எல்லை தாண்டிய தாக்குதல்கள் புதன்கிழமை தொடர்ந்தது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தைத் தாக்கியதாக ஹெஸ்பொலா கூறியது. இஸ்ரேலின் மக்கள் அடர்த்தி அதிகமான டெல் அவிவ் நகரத்தின் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை.

பட மூலாதாரம், EPA
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கர்னல் நாடவ் ஷொஷானி, அந்த “ஏவுகணை மக்கள் வசிக்கும் பகுதிகளை” நோக்கி வந்ததாகவும், “மொசாட் தலைமையகம் அந்தப் பகுதியில் இல்லை” என்றும் தெரிவித்தார்.
வடக்கு இஸ்ரேல் நோக்கி பத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் லெபனான் மீது நிகழ்த்திய வான்வழித் தாக்குதல்களில் இஸ்ரேல் போர் விமானங்கள் 280 “ஹெஸ்பொலா இலக்குகளை” தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபிராஸ் அபியாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, இஸ்ரேல் தாக்குதல்களில் 51 பேர் கொல்லப்பட்டதாகவும் 223 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்தது. ஆனால் இதில் எத்தனை பேர் பொதுமக்கள், எத்தனை பேர் போராளிகள் என்று குறிப்பிடவில்லை.
தெற்கு இஸ்ரேலில் சௌஃப் மலைகளில் உள்ள ஜௌன், அதேபோன்று பெய்ரூட்டில் மற்றொரு மலைப் பாங்கான பகுதியில் உள்ள மேய்ஸ்ரா, பேகா பள்ளத்தாக்கின் வடக்கில் எனப் பல இடங்களில் கொடூரமாக இஸ்ரேலிய தாக்குதல்கள் நடைபெற்றதாக லெபனான் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












