பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி: எளிய முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? 9 கேள்விகளும் பதில்களும்

இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

(இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் யாவும் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசனின் பார்வையே. முதலீடு குறித்த எந்தவொரு அறிவுரையையும் பிபிசி வழங்குவதில்லை.)

இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில நாட்களாகவே பெரும் இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன. மற்றொரு பக்கம், தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பங்குச் சந்தையில் தொடர் சரிவுக்கான காரணம் குறித்தும், சாதாரண முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸனுடன் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் கலந்துரையாடினார். அதிலிருந்து:

கேள்வி 1: கடந்த சில நாட்களாக பங்குச் சந்தைகள் இறக்கத்தைச் சந்தித்து வருவது ஏன்?

பதில்: பங்குச் சந்தை சுமார் 26,500 புள்ளிகளில் இருந்து சரிய ஆரம்பித்தது. இப்போது 22,725 புள்ளிகள் வரை விழுந்துவிட்டது. இதோடு இது நிற்காது. இன்னும் 1,500 புள்ளிகளாவது குறையும். இப்போதைக்கு பங்குச் சந்தை உயர்வதற்கான வாய்ப்பே இல்லை.

இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உள்நாட்டைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) போன்றவை சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து அதனைத் தூக்கி நிறுத்தப் பார்க்கின்றன. ஆனால், வீழ்ச்சி தொடர்கிறது. எனவே, கடந்த எட்டு மாதங்களில் முதலீடு செய்திருந்தால் இழப்புதான். அதேபோல, Small Cap, Mid Cap பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கும் கடுமையான இழப்புதான்.

என்னைப் போன்றவர்கள் பல நாட்களாக இதைச் சொல்லிவந்தோம். தற்போது ஐசிஐசிஐயின் தலைமை முதலீட்டாளரே வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். ஆகவே, பங்குச் சந்தை இன்னும் விழும்.

இப்படி விழுவதற்கு முக்கியமான காரணம், வளர்ச்சி குறைவாக இருப்பதுதான். பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் நுகர்வோர் அவற்றை வாங்குவது குறைவாக இருக்கிறது. இதை பல நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் வருவாய் குறைவானவர்களில், கடன்களை வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இவையெல்லாம் வளர்ச்சி குறைவையே சுட்டிக்காட்டுகின்றன. இந்தப் போக்கும் பங்குச் சந்தையை பாதிக்கிறது.

இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி
படக்குறிப்பு, பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்

கேள்வி 2: பங்குச் சந்தை விழுகிறதென்றால், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று பணத்தை வெளியில் எடுக்கிறார்கள் என அர்த்தம். அப்படி விற்பது யார்?

பதில்: பெரும்பாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்தான் (Foreign Institutional Investors) விற்கிறார்கள். இவர்கள் ஜனவரி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை சுமார் ஒரு லட்சம் கோடியை சந்தையிலிருந்து எடுத்திருக்கிறார்கள். இந்தப் பணத்தை அமெரிக்காவில் முதலீடு செய்கிறார்கள்.

கேள்வி 3: எப்போது மீண்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைக்குத் திரும்பக்கூடும்?

பதில்: இந்தியாவில் முதலீடு செய்தால், பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வர வேண்டும். என்னைப் பொருத்தவரை, தற்போதைய பொருளாதார சூழலில் அப்படி நடக்க வாய்ப்பில்லை. அவர்கள் திரும்பும் வரை உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தையில் முதலீடு செய்து கொண்டேயிருப்பார்கள். ஆனாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறவெளியேற சந்தை வீழ்ச்சியடைவது தொடரும். தங்கத்தின் மதிப்பு உயரும்.

கேள்வி 4: பங்குச் சந்தையில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இப்போது இருக்கும் வாய்ப்பு என்ன?

பதில்: பங்குச் சந்தையில்தான் முதலீடு செய்ய வேண்டுமென விரும்பினால், Nifty 50 Fundல் முதலீடு செய்துவிட்டு பத்தாண்டுகள் காத்திருந்தால் பலன் கிடைக்கும். இல்லாவிட்டால், நல்ல முதலீட்டு ஆலோசகரைப் பிடித்து, பங்குகளைப் பற்றிப் படித்து, நல்ல பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி ஒரு ஐந்தாண்டுகள் பேசாமல் இருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், இன்று முதலீடு செய்துவிட்டு, அடுத்த ஆண்டே பணம் வேண்டுமென்றால் பங்குச் சந்தைக்கு வராதீர்.

கேள்வி 5: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், அந்தப் பணம் மோசமான பங்குகளில் முதலீடு செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறீர்கள். அப்படியானால் சரியான மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்வது எப்படி?

பதில்: மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாகி எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிய முடியாது. இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்டுகளில்தான் முதலீடு செய்ய வேண்டும் என விரும்பினால், Nifty 50 பங்குகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளை வாங்கலாம். இது போன்ற மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், தரகுக் கட்டணமும் குறைவாக இருக்கும். நிர்வாகிகளின் தலையீடும் குறைவாக இருக்கும். முதலீடு செய்துவிட்டு ஒரு பத்தாண்டுகள் காத்திருந்தால் நல்ல பலன் கிடைக்கும். அந்தப் பத்தாண்டுகளும் நீங்கள் மாதாமாதம் முதலீடு செய்துகொண்டே இருக்க வேண்டும்.

இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

கேள்வி 6: இம்மாதிரி கடினமான சூழலில் முதலீட்டாளர்களுக்கு வேறு வாய்ப்புகள் என்ன இருக்கின்றன?

பதில்: இது கடினமான சூழலே அல்ல. கடினமான நாட்கள் இனிமேல்தான் வரவிருக்கின்றன. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இப்போதுதான் பதவியேற்றிருக்கிறார். அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும். அது இந்தியப் பங்குச் சந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கும். ஏனென்றால், இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்து, குறைவாக இறக்குமதி செய்யும் ஒரே பெரிய நாடு அமெரிக்காதான். அதனால்தான் அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியச் சந்தையை பாதிக்கின்றன.

கேள்வி 7: தங்கம் ஏன் தொடர்ந்து பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது?

பதில்: தங்கம் வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆகவே, டாலரில் பணம் செலுத்தி வாங்க வேண்டியிருக்கிறது. ரூபாயின் மதிப்பு குறையக் குறைய தங்கத்தின் விலை அதிகரிக்கும். சீனா முன்பு தங்களுடைய ரிசர்வை டாலரில் வைத்திருந்தார்கள். இப்போது தங்கமாக வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்த 24 மாதங்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஜி.எஸ்.டியைச் சேர்த்து நிச்சயம் பத்தாயிரத்தைத் தொடும் வாய்ப்பு உள்ளது.

கேள்வி 8: தங்கத்தை எந்த முறையில் வாங்குவது, ETFஆகவா, காசாகவா இல்லது நகையாகவா?

பதில்: எப்படி வேண்டுமானாலும் வாங்கலாம். நகையாக வாங்கினால் அவசரத்திற்கு அடகு வைக்க முடியும். அவ்வளவுதான்.

கேள்வி 9: இம்மாதிரியான சூழலில் ஒரு எளிய முதலீட்டாளர் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய என்ன செய்ய வேண்டும்?

பதில்: இப்போதைய சூழலில் தங்கம்தான் பாதுகாப்பான முதலீடு. பங்குச் சந்தையில் இன்று முதலீடு செய்தால் நாளை விலை இறங்கும். அதைத் தாங்கும் தைரியம் இருக்க வேண்டும். 100 ரூபாய் பங்கு, 50 ரூபாய்க்கு வரும் போதும் வருத்தப்படாமல் இருக்க முடியுமானால் இங்கே முதலீடு செய்யலாம். ஏனென்றால் பெரிய, நல்ல நிறுவனங்களின் பங்குகளே சந்தை வீழும் போது, விலை குறையும். இதைப் போன்ற விலை இறக்கங்களைப் பார்த்து அதிரக்கூடாது. அது முடியாது என்றால் தங்கத்தில் முதலீடு செய்துவிட்டு பேசாமல் இருக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)