அரோரா, வெங்கடேஷ் அபாரம் - கொல்கத்தாவின் பந்துவீச்சில் சிதைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

IPL 2025 - KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 3 அன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 15வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் கடைசியில் ஒருதரப்பாக முடிந்தது. சன்ரைசர்ஸ் அணியின் சேஸிங் தொடங்கியது முதல் கொல்கத்தா அணியின் ஆதிக்கமே இருந்தது. முழுமையாக 20 ஓவர்கள்கூட ஆடாமல் சன்ரைசர்ஸ் அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்தது. 201 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 16.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 80 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது.

தடுமாறி வரும் சன்ரைசர்ஸ் அணி

IPL 2025 - KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

சன்ரைசர்ஸ் அணி விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் பாதளத்தில் இருக்கிறது. கடந்த முறை 2வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த முறை தொடக்கம் தடுமாற்றமாக அமைந்துள்ளது.

அதேநேரம் கொல்கத்தா அணி கடந்த போட்டியில் மும்பையிடம் 116 ரன்களுக்கு சுருண்ட நிலையில் மீண்டு வந்து 200 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றுள்ளது.

வருண், அரோரா அமர்க்களம்

சன்ரைசர்ஸ் அணியின் டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், கிளாசன் ஆகிய 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் வைபவ் அரோரா ஆட்டநாயகன் விருது பெற்றார். 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன், 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அற்புதமாகப் பந்துவீசினார். அரோரா எடுத்த ஒவ்வொரு விக்கெட்டும் ஆட்டத்தில் அடுத்தடுத்த திருப்பத்தை ஏற்படுத்தின.

தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனுக்கு இணையாகப் பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

மீண்டு வந்த வெங்கடேஷ் அய்யர்

கொல்கத்தா அணியின் துணை கேப்டன் வெங்கடேஷ் அய்யர் மீதான ஐபிஎல் விலை பெரிய அழுத்தமாக இருந்து வந்த நிலையில் நேற்று இயல்பான ஆட்டத்திற்குத் திரும்பி நெருக்கடியிலிருந்து மீண்டார்.

ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 200 ரன்களை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தநிலையில், 29 பந்துகளில் 60 ரன்கள் என்று வெங்கடேஷ் அதிரடியாக ஆடியது, ரிங்கு சிங் 17 பந்துகளில் 32 ரன்கள் என கேமியோ ஆடியது, அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தியது. கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தா அணி 78 ரன்கள் சேர்த்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நரேன், டீகாக் விரைவாக விக்கெட்டுகளை இழந்த பிறகு, ரஹானே, ரகுவன்ஷி ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தனர். இந்த இரு பார்ட்னர்ஷிப்களும் தான் கொல்கத்தா அணியின் ஸ்கோர் உயரக் காரணமாக அமைந்தன. ரஹானே மற்றும் ரகுவன்ஷி தலா 38, 50 ரன்கள் சேர்த்துப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

13 பந்துகளில் சன்ரைசர்ஸின் டாப்ஆர்டர் காலி

IPL 2025 - KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் நேற்று பொறுப்பற்ற வகையில் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஒவ்வொரு பந்தையும் பெரிய ஷாட்டாக மாற்ற நினைத்து பேட்டர்கள் விக்கெட்டுகளை இழந்தனர். முதல் 13 பந்துகளிலேயே டாப்ஆர்டரில் இருந்த டிராவிஸ் ஹெட்(4), அபிஷேக் சர்மா(2), இஷான் கிஷன்(2) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தனர். வைபவ் அரோரா பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு முயன்று டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். கடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் இதேபோன்று அரோரா பந்துவீச்சில்தான் ஹெட் விக்கெட்டை இழந்தார்.

டாப் ஆர்டரில் இருந்த 3 பேட்டர்களும் மொத்தமாக 8 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினர். இந்தச் சரிவிலிருந்து மெல்ல மீண்டு வந்த சன்ரைசர்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 66 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், அடுத்த 55 ரன்களுக்குள் மீதமிருந்த வி்க்கெட்டுகளையும் இழந்தது.

கொல்கத்தா ஆடுகளம் நேற்று பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. பேட்டர்கள் விளையாட முடியாத அளவுக்கு வீசப்படும் பவுன்ஸர்களுக்கும், ஸ்விங்கிற்கும் ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில், பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளத்திலும் சன்ரைசர்ஸ் பேட்டர்களால் விளையாட முடியவில்லை, தவறான ஷாட்கள்தான் தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கொல்கத்தா அணியில் நேற்று மிட்ஷெல் ஸ்டார்கிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் வேகப்பந்துவீச்சில் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் அணியின் நிலைமை பரிதாபமாக மாறியிருக்கும். டிராவிஸ் ஹெட், அபிஷேக், இஷான் ஆகியோர் ஆட்டமிழந்த 3 பந்துகளும் சாதாரண பந்துகளே. அவற்றில் தவறான ஷாட்களை அடிக்க முயன்று அவர்கள்தம் விக்கெட்டை இழந்தனர்.

அரோராவின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று டிராவிஸ் ஹெட் பேட்டில் எட்ஜ் எடுத்து விக்கெட்டை இழந்தார். ரானாவின் ஸ்லோவர் பந்தில் அபிஷேக் விக்கெட்டை இழந்தார். இஷான் சாதாரண பந்தில் ரஹானேவிடம் கையில் கேட்ச் கொடுத்தார்.

நடுப்பகுதியில் நிதிஷ் ரெட்டி(19), கமிந்து மெண்டிஸ்(27), கிளாசன்(33) ஆகியோர் மட்டுமே ஓரளவு பேட் செய்தனர். ஆனாலும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு அவர்களால் போராட முடியவில்லை.

சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி பந்துவீச வந்த பிறகு சன்ரைசர்ஸ் அணியின் ரன்வேகம் படுத்துக்கொண்டது. இறுதியாக இருந்த 2 விக்கெட்டுகளையும் இழந்தனர். வருண் சக்ரவர்த்தி 16வது ஓவரில் கம்மின்ஸ், சிமர்ஜித் சிங் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அந்த அணியின் பேட்டிங் மீது கேள்வியை எழுப்பியுள்ளது.

நரேன், டீகாக் ஏமாற்றம்

IPL 2025 - KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

கொல்கத்தா அணி பேட்டர்களுக்கு ஏதுவாக நேற்று இருந்த போதிலும், தொடக்க ஆட்டக்கார்கள் நரேன்(7), டீ காக்(1) இருவரும் கம்மின்ஸ், ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 3 ஓவர்களில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா தடுமாறியது.

ரஹானேவும் ரகுவன்ஷியும் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். பவர்ப்ளேவை பயன்படுத்த இருவரும் தவறவில்லை. பவர்ப்ளேயில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்தனர். ரஹானே பவர்ப்ளேயில் பவுண்டரி, சிக்ஸர்களை விளாச, ரகுவன்ஷியும் ஷமி, கம்மின்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.

இருவரின் அதிரடி ஆட்டத்தைக் குறைக்க லெக் ஸ்பின்னர் அன்சாரி வரவழைக்கப்பட்டார். அதற்குப் பலன் கிடைத்து, கொல்கத்தா ரன்ரேட் திடீரென குறைந்தது. அன்சாரி பந்துவீச்சுக்குத் திணறிய ரஹானே 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரகுவன்ஷி நிதானமாக பேட் செய்து 30 பந்துகளில் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தை நிறைவு செய்தார்.

வெங்கடேஷ், ரிங்கு ஜோடி சேர்ந்த பிறகு, கொல்கத்தா அணியின் ரேன்ரேட் உயரத் தொடங்கியது. ரிங்கு தொடர்ந்து 3 பவுண்டரிகளை ஹர்சல் படேல் பந்துவீச்சில் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். கம்மின்ஸ் பந்துவீச்சில் 3 பவுண்டரி, 6 சிக்ஸர் அடித்து வெங்கடேஷ் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஹர்சல் வீசிய கடைசி ஓவரையும் விட்டு வைக்காத வெங்கடேஷ் சிக்ஸர், பவுண்டரி என வெளுத்தார். வெங்கடேஷ் 60 ரன்களில் ஹர்சல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 32 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒரே ஓவரில் இரு கைகளிலும் பந்துவீச்சு

IPL 2025 - KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்ற இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் நேற்று ஒரே ஓவரில் இரு கைகளிலும் பந்துவீசினார். ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்று ஒரே ஓவரில் இரு கைகளிலும் பந்துவீசியது இதுதான் முதல்முறை. 13வது ஓவரை வீசிய கமிந்து மெண்டிஸ், முதல் 3 பந்துகளை இடது கையில் லெக் ஸ்பின்னாகவும், அடுத்த 3 பந்துகளை வலது கையில் ஆஃப் ஸ்பின்னாகவும் வீசினார்.

கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் ஒரே ஓவரில் இரு கைகளாலும் பந்து வீசுவது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், பந்துவீச்சை வேறு கைக்கு மாற்றும் போதெல்லாம் நடுவரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம். மெண்டிஸ் வலது கையில் வீசும் ஆஃப் ஸ்பினைவிட இடதுகையில் வீசும் லெக் ஸ்பின் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் இதற்கு முன் இலங்கை வீரர் ஹசன் திலகரத்னே, பாகிஸ்தானின் ஹனிஃப் முகமது ஆகியோர் இதுபோன்று பந்துவீசியுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு