சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது என்ன? சமூகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அகில இந்திய அளவில் இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

அடுத்து நடக்கவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தப் போவதாக மத்திய அரசு ஏப்ரல் 30ஆம் தேதியன்று அறிவித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் டெல்லியில் புதன்கிழமையன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "காங்கிரஸ் அரசுகள் எப்போதுமே சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து வந்திருக்கின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு நடந்த எந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளிலும் சாதி குறித்த விவரங்கள் சேகரிக்கப்படவில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என 2010ஆம் ஆண்டில் மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டுமென பரிந்துரைத்தன. இருந்தபோதும் சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பு (எஸ்இசிசி) ஒன்றை நடத்த மட்டுமே மத்திய அரசு முடிவெடுத்தது" என்று குறிப்பிட்டார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை பெரும்பாலான கட்சிகள் வரவேற்றுள்ளன. சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென நீண்ட காலமாகக் கோரி வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென அரசுக்கு நாங்கள் அளித்து வந்த அழுத்தத்திற்குப் பலன் கிடைத்துள்ளது. நாங்கள் இதோடு நிறுத்த விரும்பவில்லை.

இட ஒதுக்கீட்டிற்குக் காரண அடிப்படையின்றி விதிக்கப்பட்டுள்ள 50 சதவிகித உச்சவரம்பை நீக்க வேண்டும். மேலும், தனியார் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 15(5) முழுமையாகச் செயல்படுத்துவதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்" என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளார். ஆனால், சில கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

"சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தாமதிக்கவும் மறுக்கவும் செய்யப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து இதையும் நடத்தப் போவதாக மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், எப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும், எப்போது நிறைவடையும் என்ற முக்கியக் கேள்விகள் பதிலின்றியே நிற்கின்றன" என்றார்.

இது அறிவிக்கப்பட்ட தருணம் குறித்தும் அவர் கேள்வியெழுப்பினார்.

பிகார் தேர்தல்களில் சமூக நீதி ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த திடீர் முடிவு அரசியல் அவசியத்தால் எடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது எனக் குறிப்பிட்ட அவர், சாதியின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாக எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டிய இதே பிரதமர் அந்தக் கோரிக்கைக்கு இப்போது பணிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மற்றவர்கள், மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பைக் கோரியபோது, "நாங்கள் உறுதியாக நின்றோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் பணி. சென்சஸ் சட்டப்படி, மத்திய அரசு மட்டும்தான் சட்டரீதியாக செல்லத்தக்க சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும்" என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

அ.தி.மு.க., பா.ம.க. உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன. சில கட்சிகள், எப்போது இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காலவரையறை குறிப்பிடப்படாததைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளன.

இந்தியாவில் 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புதான் சாதிவாரியாக மேற்கொள்ளப்பட்ட கடைசி கணக்கெடுப்பு. 1980களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மையமாகக் கொண்ட கட்சிகள் வலுப்பெற்றபோது, சாதிவாரி கணக்கெடுப்பிற்கான கோரிக்கைகள் எழத் துவங்கின.

சாதிவாரிக் கணக்கெடுப்பில் இருந்து வெளிவரும் புள்ளிவிவரங்கள் மூலம் யாருக்கு என்ன எண்ணிக்கை உள்ளது, சமூகத்தின் வளங்களில் யாருக்கு என்ன பங்கு உள்ளது என்ற உண்மைகள் வெளிவரும். இதில் சமத்துவமின்மை இருந்தால் அது தெரிய வரும் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதற்கு எதிரான குரல்களும் தொடர்ந்து எழுந்தன. ஆதிக்க சாதியினர் பொதுவாக இதுபோன்ற சாதிவாரி கணக்கெடுப்புகளை விரும்புவதில்லை. குறிப்பாக, சிறுபான்மையாக இருக்கும் ஆதிக்க சாதி பிரிவினர் இதை விரும்புவதில்லை என்ற கருத்து உள்ளது. இந்த நிலையில்தான், கடந்த சில ஆண்டுகளில் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கான கோரிக்கைகள் தொடர்ந்து வலுவடைந்து வந்தன.

ஆனால், மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. இதைக் கடுமையாக எதிர்த்து வந்தது. இது மக்களைப் பிளவுபடுத்தும் கோரிக்கை எனக் கூறி வந்தது. ஆனால், திடீரென சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இருந்தபோதும், பல அரசியல் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, எப்போது இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பது வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு

கடந்த 1865இல் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது. அதற்குப் பிறகு, 1872இல் அடுத்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டது என்றாலும் வங்க மாகாணத்தில் கணக்கெடுப்பு நடக்கவில்லை.

இதற்குப் பிறகு, 1881இல் முதல் முறையாக, இந்தியாவின் அனைத்து இடங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் நேரடியாகவும் உள்ளூர் ஆட்சியாளர்களின் கீழ் உள்ள சமஸ்தானங்களில் சென்சஸ் ஆணையர் விதித்த அறிவுரைகளின்படியும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது தவிர, அந்தத் தருணத்தில் போர்ச்சுகீசு மற்றும் பிரெஞ்சு குடியேற்றங்களும் இந்தியாவில் இருந்தன. இதில் போர்ச்சுக்கீசியர்கள் கீழ் இருந்த பகுதிகளில், கணக்கெடுப்பு நடத்தப்பட்டு புள்ளிவிவரங்கள் பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு அளிக்கப்பட்டன.

கடந்த 1881 முதல் 1941 வரை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டது. ஆனால், 1941ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு, இரண்டாம் உலகப் போர் காரணமாக முழுமையாக நடக்கவில்லை. ஆகவே, 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியதில் இருந்தே, இந்தியாவில் உள்ள மதங்கள், சாதிகள், இனங்கள் ஆகியவற்றை வகைப்படுத்துவது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சவாலான விஷயமாகவே இருந்தது.

ஆகவே, இது ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் ஒரு முறை மாறி வந்தது. 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1,646 சாதிகள் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டது. 1941இல் எடுத்த கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 4,147ஆக உயர்ந்தது.

இந்தியாவில் கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த கணக்கெடுப்பு 2021ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் காரணமாக அப்போது அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என இப்போது வரை மத்திய அரசு அறிவிக்கவில்லை.

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி குறித்த விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டப்படி பட்டியல் சாதியினருக்கும் பழங்குடிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. ஆகவே, மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஒருவரது சமூக பொருளாதார, சாதி விவரங்களையும் சேகரிக்க முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், இந்த விவரங்கள் மட்டும் 1948ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ளப்படவில்லை. இதனால், சேகரிக்கப்பட்ட விவரங்களை அரசு வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. 2011 கணக்கெடுப்பின்போது மொத்தமாக 46 லட்சம் சாதிகள், துணை சாதிகள், சாதி பெயர்கள், குலங்கள் ஆகியவை மக்களால் அளிக்கப்பட்டிருந்தன.

இந்தப் புள்ளி விவரங்களை அரசு வெளியிடாதது தொடர்பாகத் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட சாதி தொடர்பான விவரங்களைப் பகுப்பாய்வு செய்ய அப்போதைய நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அதற்குப் பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏதும் நடத்தப்படாத நிலையில் சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களை மேம்படுத்த சில முயற்சிகள் நடந்துள்ளன. இதற்கென நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு ஆணையங்கள் அமைக்கப்பட்டன. ஒன்று 1953இல் அமைக்கப்பட்ட கலேல்கர் ஆணையம். முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்றும் கலேல்கர் ஆணையம் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஆணையம் 1955இல் தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது.

இந்தியா முழுவதும் 2399 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் 837 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் இருப்பதாக இந்த ஆணையம் கூறியது. பின்தங்கிய நிலையை அளவிட சாதியை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆனால், இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த கலேல்கரே இந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்தது.

இதற்கு அடுத்ததாக, 1979ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி. மண்டல் நியமிக்கப்பட்டார். 1980ஆம் ஆண்டு மண்டல் ஆணையம் தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது. 1931ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை வைத்து, இந்தியாவில் 52 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என வரையறுத்தது.

ஏற்கெனவே பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு 22.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஓபிசி பிரிவினரின் எண்ணிக்கை அளவுக்கு அதாவது 52 சதவிகித இட ஒதுக்கீடு அளித்தால், அது 50 சதவிகிதம் என்ற எல்லையைத் தாண்டிவிடும் என்பதால், வெறும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க ஆணையம் முடிவு செய்தது. 1990இல் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, ஆணையத்தின் அறிக்கையைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தது.

தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களைத் தவிர, நாடு முழுவதும் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு நிலவியது. முடிவில், வி.பி. சிங் அரசு கவிழ்ந்தது. இருந்தபோதும் பல்வேறு வழக்குகளுக்குப் பிறகு 27 சதவிகித இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் தேவை?

இந்தியாவில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்துப் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அப்படி நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டால் அது மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தும் என்ற வாதங்களும் பல முறை முன்வைக்கப்பட்டுள்ளன.

"சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு நிச்சயம் தேவை இருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு மக்களைப் பிளவுபடுத்தும் என பா.ஜ.கவும் அவர்கள் உடன் இருப்பவர்களும்தான் சொல்லி வந்தார்கள். எப்போதுமே எந்தவொரு தரவுகளுமே சமூகத்தைப் பிரிக்காது. அது தவிர, எந்தவொரு உறுதியான நடவடிக்கையையும் (affirmative action) செயல்படுத்த தரவுகள் தேவை. அந்தத் தரவுகளை இந்த சாதிவாரிக் கணக்கெடுப்புகள் அளிக்கும்" என்றார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்

இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எண்களே மிகவும் பழையவை எனக் கூறிய அவர், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வைத்துக்கொண்டு, அதில் உள்ள விவரங்களை ஆண்டுக்கு ஏற்றபடி உயர்த்தித் திட்டமிடுகிறார்கள் என்றார்.

"நமக்குத் துல்லியமான எண்கள் தேவை. அதேபோல, இட ஒதுக்கீட்டிற்கும் துல்லியமான எண்கள் தேவை. அதற்கு இந்தக் கணக்கெடுப்பு உதவும்" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதை வைத்து இட ஒதுக்கீட்டைத் தகுந்த முறையில் அளிக்க முடியும் என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி.

"இந்தியாவில் 1931க்குப் பிறகு, எந்த சாதியினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற எந்தப் புள்ளிவிவரமும் கிடையாது. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பில், பட்டியலினத்தோர், பழங்குடியினர் குறித்த தகவல்கள்தான் சேகரிக்கப்படுகின்றன. பிற்படுத்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுவதில்லை," என்றார் அவர்

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவிகிதம்தான் வழங்கப்படுகிறது என்றும் ஆனால் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் 60 சதவிகிதம் அளவுக்கு இருப்பார்கள் எனக் கருதுவதாகவும் கூறினார் கோ. கருணாநிதி. "அதை இந்தக் கணக்கெடுப்பின் மூலம் உறுதி செய்ய முடியலாம்."

"இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில், நீதிமன்றங்கள் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களைக் கோருகின்றன. உதாரணமாக, கல்வி நிலையங்களில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது தொடர்பான வழக்கிலும் நீதிமன்றம் அப்படி ஒரு கேள்வியை எழுப்பியது," என்றார் கோ. கருணாநிதி.

"அப்போது அரசுத் தரப்பில், 1931ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களை அளித்தபோது, அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இப்போது எப்படி செல்லத்தக்கதாக இருக்கும் என நீதிமன்றம் கேட்டது. இப்போது பல தரப்பினர் இட ஒதுக்கீடு கோரி வருகின்றனர். இவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால், எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்தீர்கள் என நீதிமன்றம் கேள்வியெழுப்பும்" என்கிறார் அவர்.

மேலும், பிற்படுத்தப்பட்டோரின் சதவிகிதத்தோடு ஒப்பிட்டால் மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அரசின் எல்லாத் திட்டங்களுக்குமே புள்ளி விவரங்கள் தேவை என்றும் அவர் கூறினார்.

"இன ரீதியான ஒடுக்குமுறை இருக்கும் நாடுகளில், உறுதியான நடவடிக்கைக்கான (affirmative action) இனரீதியான தகவல்களைச் சேகரிக்கிறார்கள். இந்தியாவில் சாதி ரீதியான ஒடுக்குமுறை நீடிக்கும் நிலையில் சாதி ரீதியான புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வேண்டும்" என்கிறார் கோ. கருணாநிதி.

வேறொரு விஷயத்தையும் ஏ.எஸ். பன்னீர்செல்வன் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, இந்தியாவில் உள்ள சாதி சார்ந்த புள்ளி விவரங்கள் 1931ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. அதிலிருந்து சமூகம் வெகுதூரம் பயணப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

"உதாரணமாகத் தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், அந்தக் காலகட்டத்தில் நாடார்கள் சமூக ரீதியில் மிகவும் பின்தங்கியவர்களாக இருந்தார்கள். இந்த நூறு ஆண்டுகளில் அவர்களின் நிலை எவ்வளவோ மாறிவிட்டது. ஷிவ் நாடார், டேவிட் டேவிதார் என சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க ஆட்கள் அந்த சமூகத்தில் இருந்து வந்துவிட்டார்கள்.

அப்படியிருக்கும் சூழலில் அந்தக் காலகட்டத்தில் புள்ளிவிவரங்களை இப்போதும் பயன்படுத்துவது சரியாக இருக்குமா? சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தினால், யார் கீழே சென்றிருக்கிறார்கள், யார் மேலே ஏறியுள்ளார்கள் என்ற விவரங்கள் நமக்குக் கிடைக்கும்" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

சாதிவாரிக் கணக்கெடுப்பை ஏற்காமல் இருந்த பா.ஜ.க. இந்த முடிவை எடுத்ததற்குக் காரணம், இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல்தான் என்ற கருத்தையும் சில விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள்.

"நிச்சயமாக பிகார் தேர்தல்தான் இதற்குக் காரணம். சாதிவாரிக் கணக்கெடுப்பு எந்தெந்த சாதியினர் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதை அறியவும் அதன் மூலம் இடஓதுக்கீட்டை மாற்றியமைக்கவும் உதவக் கூடியது. இப்போது, இந்த விஷயங்கள் அனைத்தையும் பா.ஜ.க. ஏற்கிறது என்றால், மண்டல் கமிஷன் பரிந்துரைகளைக் கடுமையாக எதிர்த்தது ஏன்? மண்டல் பரிந்துரைகளை மத்திய அரசின் வேலை வாய்ப்புகளுக்கும் விரிவுபடுத்தியபோது அதை எதிர்த்தது ஏன்?" எனக் கேட்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

இப்போது பிகார் தேர்தலில் சாதிவாரிக் கணக்கெடுப்பு முக்கிய விவகாரமாக முன்வைக்கப்படுவதால், பா.ஜ.க. இதை ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றும் "வெறும் கணக்கெடுப்பைத்தான் நடத்தப் போகிறோம், அதன் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் இருக்காது என்று கூறுவதாக இருந்தால் அதை வெளிப்படையாக அவர்களால் சொல்ல முடியுமா?" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

ஆனால், பா.ஜ.க. எப்போதுமே இடஒதுக்கீட்டை ஆதரித்து வந்திருக்கிறது என்கிறார் பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி.

"மண்டல் ஆணையத்தை அமைத்ததே ஜனதா ஆட்சியில்தான். அதற்குப் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சிகள் அதைக் கிடப்பில் போட்டுவிட்டன. 1989இல் வி.பி. சிங்கின் ஆட்சி கவிழந்ததற்குக் காரணம், மண்டல் விவகாரமல்ல. அத்வானி கைது செய்யப்பட்டதுதான். தீக்குளித்த ராஜீவ் கோஸ்வாமியை பார்த்துவிட்டு வந்த அத்வானி, இதுபோலத் தீக்குளிப்பது தவறு என்றுதான் சொன்னார். இதற்கு முன்பாக ஒவ்வொரு மாநிலமும் சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தாங்களாக நடத்தப் போவதாகச் சொன்னதைத்தான் நாங்கள் எதிர்த்தோம். இப்போது மத்திய அரசு நடத்துவதில் பிரச்னையில்லை" என்கிறார் அவர்.

இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க பா.ஜ.க. ஒப்புக்கொள்ளுமா?

"இதுபோலக் கணக்கெடுப்பு நடந்தால் பல விவரங்கள் தெரிய வரும். அந்தத் தருணத்தில் அதைப் பற்றி முடிவெடுக்கலாம்" என்கிறார் அவர்.

சாதி பிளவுகளைக் கூர்மைப்படுத்துமா?

ஆனால், இதுபோன்ற சாதிரீதியான கணக்கெடுப்புகளால் வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் பெரிய பலனிருக்காது என்பதுபோல, அது சாதிப் பிளவுகளைக் கூர்மைப்படுத்தவே செய்யும் என்கிறார் தலித் முரசு இதழின் ஆசிரியரான புனித பாண்டியன்.

"இந்தியா முழுக்க உள்ள அரசு வேலைவாய்ப்புகள் மூன்று சதவிகித்திற்கும் குறைவு. 98 சதவீத வேலை வாய்ப்புகள் தனியார் துறையில்தான் உள்ளன. தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமெனப் பல கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றினாலும் அவை தீர்மானங்களாகவே உள்ளன. சாதிவாரிக் கணக்கெடுப்பின் விவரங்கள் வந்தாலும் அதனால் ஏதும் நடக்காது. காரணம், இதுவரை பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 27 சதவிகித இட ஒதுக்கீட்டையே அவர்கள் ஒழுங்காக நடைமுறைப்படுத்தவில்லை" என்கிறார் அவர்.

ஆகவே, இதுபோன்ற சாதிவாரிக் கணக்கெடுப்புகள் எதற்கு உதவுமென்றால், தங்கள் சாதியினர் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று காட்டவும் அதன் மூலம் சாதிப் பெருமிதங்களைப் பேசவும்தான் உதவும் என்றும் புனித பாண்டியன் கூறுகிறார்.

"அரசு வேலை வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதால், அதை விட்டுவிட்டு, அமைச்சரவையில் கூடுதல் இடங்கள், கூடுதல் எம்.எல்.ஏ. இடங்களை சில சாதியினர் கோருவதற்குத்தான் இது பயன்படும். தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலேயே இதுதான் நிலை என்றால், மற்ற மாநிலங்களின் நிலையை யோசித்துக் கொள்ளலாம்" என்கிறார் புனிதபாண்டியன்.

ஆனால், அரசியல் கட்சிகள் ஏற்கெனவே சாதி பார்த்துத்தான் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்துவதால், இந்தப் புள்ளி விவரங்களால் புதிதாக ஏதும் நடந்துவிடாது என்கிறார் கோ. கருணாநிதி.

தமிழ்நாடு எப்படி கூடுதல் இட ஒதுக்கீட்டை அளித்து வந்தது?

இந்தியாவில் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு 1931ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புதான் என்ற நிலையிலும்கூட, தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வந்த அரசுகள் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அதிகரித்து வந்தன. இது எப்படி நடந்தது?

இந்தியாவில் நீண்ட காலமாக சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே அப்போதைய சென்னை மாகாணத்தில் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது. அந்தக் காலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வந்தன.

இதை அடிப்படையாக வைத்து, அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதோர் விகிதத்தை உயர்த்துவதற்காக Communal GO என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை பனகல் அரசர் தலைமையிலான அரசால் செப்டம்பர் 16, 1921இல் வெளியிடப்பட்டது.

இது போல மூன்று அரசாணைகள் வெளியாயின. 1928 டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்ட மூன்றாவது கம்யூனல் ஜி.ஓ. மூலம்தான், இட ஒதுக்கீடுகள் அமலுக்கு வந்தன. அரசுப் பணிகள், கல்வியிடங்களில் பிராமணர் அல்லாதோரின் விகிதத்தை உயர்த்துவதற்காக இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டாலும், இதில் பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்த அரசாணையை எதிர்த்து இரு மாணவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றபோது, இந்த கம்யூனல் ஜி.ஓ. செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் பிறகு, இட ஒதுக்கீடு அளிக்க ஏதுவாக, இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

இதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவிகிதமும் பட்டியலினத்தோருக்கு 16 சதவிகிதமும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. மு. கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சரான பிறகு, பிற்படுத்தப்பட்டோரின் நிலை குறித்து ஆராய ஏ.என். சட்டநாதன் தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 1970இல் அளித்தது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டு விகிதத்தை தி.மு.க. அரசு மாற்றி அமைத்தது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த 25 சதவிகித இட ஒதுக்கீடு 31 சதவிகித இட ஒதுக்கீடாக மாற்றப்பட்டது. பட்டியலினத்தோருக்கு வழங்கப்பட்டு வந்த 16 சதவிகித இட ஒதுக்கீடு 18 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், 1979இல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசு இட ஒதுக்கீட்டைப் பெற வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டு வருமானம் ரூ. 9,000க்கு மேல் பெறுபவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தி.க., தி.மு.க. உள்ளிட்டவை போராட்டம் நடத்திய நிலையில், அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது.

இதையடுத்து வருமான வரம்பு ஆணை திரும்பப் பெறப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த 31 சதவிகித இட ஒதுக்கீடு 50 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. 1989இல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடும் பட்டியலினத்தோருக்கு 18 சதவிகித இட ஒதுக்கீடும் பழங்குடியினருக்கு ஒரு சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.

"தமிழ்நாட்டில்தான் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பட்டியலினத்தோர் இட ஒதுக்கீட்டில் 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடாக அருந்ததியருக்கு வழங்கப்பட்டது. இது அனுபவ அடிப்படையில் செய்யப்பட்டது. புள்ளிவிவரங்கள் இன்னும் இதை மேம்படுத்த உதவும்" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.