You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹிட் 3 விமர்சனம்: ரத்தம் தெறிக்கும் கிரைம் த்ரில்லர் - ஆக்ஷன் ஹீரோ ஆக முயலும் நானி
- எழுதியவர், ஜி.ஆர்.மஹர்ஷி
- பதவி, பிபிசிக்காக
நானி ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள ஹிட் 3 திரைப்படம், ஹிட் வெற்றித் தொடரின் மூன்றாவது பாகமாக வெளிவந்துள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர்களால் ஏற்பட்ட பரபரப்பு, அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'ஹிட் 3' திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
காவல்துறை அதிகாரி அர்ஜுன் சர்க்கார் (நானி) கைது செய்யப்படுவதில் தொடங்கும் திரைப்படத்தில், சிறையில் இருக்கும்போது கதை சொல்வதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி-யாக இருக்கும் அர்ஜுன், அடுத்தடுத்து இரண்டு பேரைக் கொலை செய்கிறார். அவர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, தலையைத் துண்டித்து கொல்கிறார். இதற்கு ஒரு பின்னணி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் காவல்துறை புலனாய்வு அதிகாரியாகப் பணிபுரியும் ஹீரோ நானி, கொலைக் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் அமர்த்தப்படுகிறார். விசாரணையில் திடுக்கிடும் மர்மங்கள் வெளியாகின்றன. ஒரே பாணியில் இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் பலர் கொல்லப்பட்டதும் தெரிய வருகிறது.
அப்பாவி மக்களைக் கொலை செய்வதற்கான காரணம் என்ன? கொலையாளி யார்? கொலை செய்தவர்களை காவல்துறை அதிகாரி தண்டித்தாரா? இதுதான் ஹிட் 3 படத்தின் கதை.
உண்மையில், கதை என்று குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமே இல்லை என்றே சொல்லலாம். ஹீரோவின் வேலை, தொடர்ந்து சண்டையிடுவதும், கொல்வதும் தானா என்று தோன்றுகிறது.
திரை முழுவதும் ஒரே ரத்தக்களறியாக இருக்கிறது. நானி ஒரு நல்ல நடிகர், அவரது படங்கள் குடும்பமாக அனைவரும் அமர்ந்து பார்க்க ஏற்றவை. இருந்தாலும், அவர் 'கிருஷ்ணார்ஜுன யுத்தம்' படத்திற்குப் பிறகு ஆக்ஷன் ஹீரோவாக மாற முயல்கிறார்.
ஒரு வகையில், 'தசரா' மற்றும் 'சரிபோடா சனிவாரம்' படங்களின் மூலம் அவரது ஆக்ஷன் ஹீரோ ஆசை நிறைவேறியது. ஆனால், அந்தப் படங்களில் வலுவான கதையும் அருமையான கதாபாத்திரங்களும் இருந்தன.
ஹிட்-3 கொரிய நாடகம் போல, ஸ்க்விட் விளையாட்டு பாணியில் அமைந்துள்ளது. ஹிட்-1 மற்றும் ஹிட்-2 திரைப்படங்களின் கதை, நமக்குத் தெரிந்த ஒரு ஊரில் நடக்கிறது. அதில் நாயகன், தனது பலத்தால் அல்ல, அறிவால் கொலைகளைச் செய்கிறான். ஹிட் 3 படத்தின் கதை, காஷ்மீர், பிகார், ஜெய்ப்பூர், அருணாச்சல பிரதேசம் என நாடு முழுவதும் சுற்றுகிறது. ஹீரோ அங்கெல்லாம் சென்று கொலை செய்கிறார்.
முதல் இரண்டு படங்களில், கதாநாயகன் கொலை செய்வதற்கான நோக்கம் வெளிப்படையாகத் தெரிந்தாலும் ஹிட் 3 திடைப்படத்தில் கொலைவெறியே பிரதானமாகத் தெரிகிறது. ஹிட் 3 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரதீக் பப்பர் புதுமுக நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் வலுவான வில்லன் இல்லாதது ஒரு குறை. அந்தக் கதாபாத்திரம் மனதில் பதிவாகவில்லை, அதனால்தான் ஹீரோ சிந்தும் ரத்தம் ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தவில்லை.
திரைப்படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அவர் சிறிது நேரம் தோன்றி, ஒரு திருப்பத்தை அளித்தாலும் அதுவும் பெரியதாக எடுபடவில்லை. ராவ் ரமேஷும், சமுத்திரக்கனியும் இரண்டு காட்சிகளில் மட்டுமே வருகின்றனர், நானி மட்டுமே முழு படத்தையும் தனது தோளில் சுமக்கிறார்.
கதாநாயகன், கொஞ்சம் திமிர் பிடித்தவராக நடிக்கும் ஒரு ஸ்டைலான போலீஸ் அதிகாரியாகத் தெரிகிறார். அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஆனால், திரைப்படங்களில் வன்முறை மற்றும் ஆபாசம் இருப்பது நவீன போக்கு என்று இயக்குநர் ஷைலேஷ் கொலானி நம்புவது போலத் தெரிகிறது.
அனிமல், மார்கோ போன்ற திரைப்படங்களை ரசித்த ரசிகர்கள், ஹிட் 3 படத்தையும் ரசிப்பார்கள் என்று இயக்குநர் நம்புவதை ஒவ்வொரு பிரேமிலும் தெளிவாக உணர முடிகிறது. அந்த நம்பிக்கை உண்மையாகுமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மொத்தத்தில், இதுவொரு வழக்கமான படம் இல்லை. அதிரடி வன்முறை படம். தந்தை, மகன் சம்பந்தப்பட்ட இரண்டு காட்சிகள் உள்ளன. கதாநாயகி, காதல் மற்றும் நல்ல பாடல்கள் இருந்தாலும், அவை கதையுடன் ஒன்றாமல் கவனத்தைச் சிதறடிக்கின்றன.
படத்தின் நீளத்தை இன்னும் 15 நிமிடங்கள் வரை குறைத்திருக்கலாம் மைக்கி ஜே. மேயரின் பின்னணி இசையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
இதுபோன்ற கிரைம் திரில்லர் படங்களுக்கு கேமரா மிகவும் முக்கியமானது. சனுஜன் வர்கீஸ் அதிரடி மனநிலையை உருவாக்கியுள்ளார். திரையில் காட்சிகளைவிட ரத்தம் அதிகமாக இருப்பதால், சிறு குழந்தைகள் பார்க்கக்கூடாத படம் என்ற பட்டியலில் ஹிட் 3 சேர்ந்துவிடுகிறது.
இறுதியில், ஆதிவாசி சேஷுவும் கார்த்தியும் சிறப்புத் தோற்றங்களில் வந்து பார்வையாளர்களிடம் இருந்து கைத்தட்டல்களைப் பெறுகிறார்கள். ஹிட் 2இன் இறுதியில் நானி தோன்றியதைப் போலவே, கார்த்தி ஹிட் 3இல் தோன்றுகிறார். அதாவது படத்தின் நான்காம் பாகமும் வெளிவரலாம் என்று தெரிகிறது.
உண்மையில் ரசிகர்களுக்கு இவ்வளவு வன்முறை பிடிக்குமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. வன்முறை நானியைப் பார்க்க விரும்புவோருக்கு இந்தப் படம் பிடிக்கும். ரத்தக்களறியை விரும்பாதவர்கள் படத்தைப் பார்க்காமல் இருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.