You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரெட்ரோ விமர்சனம்: சூர்யாவின் கம்பேக் படமாக இருக்கிறதா?
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், ஷ்ரேயா சரண் என நடிகர் பட்டாளமே நடித்துள்ள 'ரெட்ரோ' திரைப்படம் இன்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிக வைரல் ஆனது.
அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூர்யா - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் வெளிவந்துள்ள ரெட்ரோ திரைப்படம் எப்படி உள்ளது?சூர்யா மற்றும் அவரது ரசிகர்களுக்கு கங்குவா ஏற்படுத்திய ஏமாற்றத்துக்கு ரெட்ரோ திரைப்படம் ஆறுதல் அளித்துள்ளதா?
படத்தின் கதை என்ன?
பாரிவேல் கண்ணன் என்னும் கதாபாத்திரத்தில் வரும் சூர்யா, திலகன் என்னும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் வரும் ஜோஜு ஜார்ஜால் ஒரு மகனை போல வளர்க்கப்படுகிறார்.
திலகனுக்கு வலதுகரமாக சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கிறது.
கேங்ஸ்டர் வாழ்க்கையில் இருந்து விலகி வாழ்வேன் என சத்தியம் செய்யும் சூர்யா, ருக்மிணி கதாபாத்திரத்தில் வரும் பூஜா ஹெக்டேவை திருமணம் செய்கிறா
ஆனால், சூர்யாவால் இந்த சத்தியத்தை காப்பாற்ற முடிந்ததா? அவரது கடந்தகாலம் எப்படி அவரை விடாமல் பின்தொடர்ந்து வருகிறது என்பதுதான் மீதிக்கதை.
'சூர்யாவின் கம்பேக் படம்'
"படத்தில் பாராட்டத்தக்க விஷயம், தொடக்கம் முதல் இறுதி வரை ஆக்ஷனுக்கான களம் என்றாலும் கூட, கதையை காதல் கோணத்தில் எழுதியிருந்த விதம்தான்", என்று பாராட்டியுள்ள இந்து தமிழ் திசை, "அதற்கேற்ப அமைக்கப்பட்ட காதல் காட்சிகளும் ஈர்க்கின்றன. இன்னும் சொல்லப் போனால் ஆக்ஷன் காட்சிகளை விட எந்தவித செயற்கைத் தனமும், 'க்ரிஞ்சு' வசனங்களும் இல்லாத காதல் காட்சிகள் அதிக சுவாரஸ்யத்தை தருகின்றன", என்றும் தெரிவித்துள்ளது.
"காதல், சிரிப்பு, யுத்தம் என்ற கூட்டணி கலவையில், ரசிக்கும்படி திரைக்கதை அமைத்து மீண்டும் தனது முத்திரையை ஆழமாக பதித்து உள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். கங்குவா படத்தின் தோல்வியை அடுத்து வெளியான ரெட்ரோ படம் சூர்யாவுக்கு நல்ல கம்பேக் கொடுத்துள்ளது", என்று தினத்தந்தி அதன் விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
"ரெட்ரோவை 'ஜிகர்தண்டா 3' என்று அழைத்திருந்தால், அது கச்சிதமாக பொருந்தி இருக்கும். சினிமா எப்படி ஒரு நபரை மாற்றும் என்பதைப் பற்றி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஜிகர்தண்டா முதல் பாகத்தில் பேசினார். சினிமா எப்படி ஒரு சமூகத்தை மாற்றும் என்பதைப் பற்றி அவர் இரண்டாம் பாகத்தில் பேசினார். ஒரு தனிநபரை மாற்றுவதன் மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை இந்த படத்தில் மேற்கொள்கிறார். இந்த முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைத்ததைப் போல தோல்வியும் கிடைத்துள்ளது", என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.
"படத்தில் நிறைய அபத்தமான மற்றும் தொடர்பில்லாத விஷயங்கள் உள்ளன. சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயகம் பற்றி தேவையற்ற கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இதனால் படம் ஒரு கட்டத்தில் அதிக தகவல்களால் திணறுவது போல் உள்ளது. இது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் படங்களில் பொதுவாக காணப்படும் ஒரு குறைபாடு", என்று இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
சூர்யாவின் நடிப்பு எப்படி?
"90 காலகட்டத்தை குறிப்பிடும் படத்தில் ஸ்டைலான லுக்கில் சூர்யா அசத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார். மேக்கப் இல்லாத முகமாய் அழகான நடிப்பால் கவர்கிறார் பூஜா ஹெக்டே. நளினமான அவரது நடனம் ரசிக்க வைக்கிறது", என்று தினத்தந்தி பாராட்டியுள்ளது.
"ஜோஜு ஜார்ஜுக்கு நடிக்க பெரிய வேலை இல்லை என்றாலும் வில்லன் கேரக்டரில் நிறைவை தந்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஜெயராம், நாசர் எல்லாம் படத்தில் எதற்கு என்று தெரியவில்லை", என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.
"ரெட்ரோ' திரைப்படம் நடிகர் சூர்யாவின் உண்மையான திறமைகளை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. கார்த்திக் சுப்பராஜ் போன்ற திறமையான இயக்குநர், சூரியாவைப் போன்ற ஒரு நடிகரிடம் இருந்து மிகச்சிறப்பான நடிப்பை வெளிக்கொண்டு வர முடியும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணமாக இருக்கிறது", என்று பாராட்டும் இந்தியா டுடே, "கார்த்திக் சுப்பராஜ் 'ரெட்ரோ' படத்தை ஒரு காதல் படம் என்று விளம்பரப்படுத்தினார். ஆனால், காதல் பகுதிதான் மிகக் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பூஜா ஹெக்டேவின் ருக்மணி கதாபாத்திரம் புத்தரை உருவகப்படுத்தினாலும், அவரது கதாப்பாத்திரம் மீது ஈடுபாடு ஏற்படவில்லை", என்றும் தெரிவித்துள்ளது.
படத்தின் மற்றொரு ஹீரோ - சந்தோஷ் நாராயணன்
"படத்தின் மற்றொரு ஹீரோ சந்தேகமே இல்லாமல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்தான். படம் முழுக்க பின்னணி இசையில் அதகளப்படுத்தி இருக்கிறார். கனிமா பாடல் வரும் போது திரையரங்கின் சீட்டில் யாரும் அமரவில்லை. அது தவிர மற்ற பாடல்களும் ரசிக்கும்படி உள்ளன. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக இருந்தது", என்று இந்து தமிழ் திசை அதன் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
சந்தோஷ் நாராயணனும் சமீப நாட்களில் தான் இசையமைத்த படங்களில் ரெட்ரோவில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளதாக நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.
"குதூகலாமான 'கனிமா' பாடலை உள்ளடக்கிய 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியானது, மாறுபட்ட உணர்ச்சிகளையும், அற்புதமாக உருவாக்கப்பட்ட சண்டைக் காட்சிகளையும் வெளிக்காட்டுகிறது", என்று இந்தியா டுடே தெரிவிக்கின்றது.
"இயக்குநர் நிறைய விஷயங்களை தெளிவாகக் கூறவில்லை என்றாலும், ரெட்ரோ படத்தில் அவர் என்ன செய்ய முயற்சித்தார் என்பது தெளிவாகிறது. அவர் இதுவரை முயற்சிக்காத ஒரு ஜானர் படத்தை அவர் உருவாக்கியுள்ளார். சூர்யாவின் சிறந்த அம்சங்களை வெளிப்படுத்தும் நோக்கில் ஒரு திரைப்படத்தை வழங்கியுள்ளார். மேலும் சூர்யாவும் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி இந்த படத்தில் நடித்துள்ளார்", என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.