"தோட்டாக்கள் துளைக்கப்பட்ட இந்திரா உடல் - எரிந்த நிலையில் சீக்கியர் சடலங்கள்" : எய்ம்ஸ் மருத்துவமனையில் என்ன நடந்தது?

    • எழுதியவர், அவ்தர் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மருத்துவர் ஸ்நே பார்கவா. வயது 95. டெல்லியின் நியூ ஃபிரெண்ட்ஸ் காலனியில் வசித்து வருபவர். 1984 அக்டோபர் 31 அன்று இந்திய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அதே நாளில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் பெண் இயக்குநராக பொறுப்பேற்றவர் தான் ஸ்நே பார்கவா.

பொறுப்பேற்ற அதே நாளில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் பிரதமர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்கவா இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்.

"வழக்கமான 'பிசியான' காலை அது. நான் கதிரியக்கத்துறையில் ஒரு முக்கியமான விவரம் குறித்து விவாதித்துக் கொண்டு இருந்தேன். அப்போது கதிரியக்கப் பிரிவில் பணியாற்றும் நிபுணர் ஒருவர் ஓடி வந்து, பிரதமர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறினார். முன் தகவல் மற்றும் பாதுகாப்பு இல்லாமல் பிரதமர் வரமாட்டார் என்று நான் நினைத்தேன். இது முறையான 'ப்ரோட்டோகால்' இல்லை. ஏதோ சரியாக இல்லை என்று நான் உணர்ந்தேன்," என்று தெரிவிக்கிறார் பார்கவா.

"நான் அங்கே ஓடிச் சென்று பார்த்த போது, இரண்டு இளம் மருத்துவர்கள் பதற்றத்துடன் இருந்தனர். பிரதமர் எங்கே என்று நான் அவர்களிடம் கேட்ட போது, ட்ராலியில் படுக்க வைக்கப்படிருந்த பிரதமரை காட்டினார்கள். ரத்தம் வழிந்தோடிய அவர் உடல் மீது காயங்களை மறைக்கும் வகையில் துணி கொண்டு கூட மூடாமல் அப்படியே 'ட்ராலியில்' கிடத்தி வைத்திருந்தனர்," என்று பார்கவா கூறுகிறார்.

இந்த சம்பவம் நடைபெற்று 40 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் மருத்துவர் ஸ்நே பார்கவா புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அவரின் நினைவுக்குறிப்பாக வெளிவந்துள்ளது 'தி வுமென் ஹூ ரன் எய்ம்ஸ்' என்ற அந்த புத்தகம்.

ரத்தத்தில் தோய்ந்த இந்திராவின் உடல்

1930-ஆம் ஆண்டு பஞ்சாபின் ஃபெரோஸேபூரில் பிறந்தவர் மருத்துவர் ஸ்நே பார்கவா. எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் பெண் இயக்குநராக 1984 முதல் 1990 வரை பணியாற்றினார்.

இந்திய பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்ட பிறகு அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நாளை நினைவு கூறும் பார்கவா, "அவர் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது. நான் அவரின் முகத்தைப் பார்த்தேன். அவர் பிரத்யேகமாக விட்டுவைத்திருந்த அந்த வெள்ளை முடிகளை நான் பார்த்தேன். இப்படியாகத்தான் இருந்தது பிரதமரின் நிலை. துப்பாக்கியால் துளைக்கப்பட்ட அந்த உடல் அங்கே இருந்தது," என்று நினைவு கூறுகிறார் பார்கவா.

சீக்கியர்களின் புனித தலமான, அமிர்தசரஸில் அமைந்திருக்கும் ஶ்ரீ தர்பார் சாஹிபில், இந்திய ராணுவம் தாக்குதல் ஒன்றை நடத்தியது. 1984-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் இந்த தாக்குதல் நடைபெற்றது.

தர்பார் சாஹிபில் இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே மற்றும் அவரது கூட்டாளிகளைக் கொல்லவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய அரசின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஐந்து மாதங்கள் கழித்து அதே ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி அன்று இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவருடைய சீக்கிய பாதுகாப்பு காவலர்கள் இருவரால், அவருடைய இல்லத்தில் வைத்து சுடப்பட்டார். சிகிச்சைக்காக அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.

ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடந்து 5 மாதங்களில் கொல்லப்பட்ட இந்திரா

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மகள் தான் இந்திரா காந்தி. 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை 21 மாத காலம் இந்தியாவில் அவசர நிலையை அறிவித்தார் இந்திரா.

1970களின் ஆரம்ப காலத்தில், தம்தாமி தக்சல் அமைப்பின் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே சீக்கியர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து குரல் எழுப்பிய வண்ணம் இருந்தார். அதனால் அரசியல் வட்டாரத்தில் அவர் பெரும் பேசுபொருள் ஆனார்.

1984-ஆம் ஆண்டு அவருக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் எதிராக ராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்த உத்தரவு பிறப்பித்தார் இந்திரா. அது சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸின் பொற்கோவிலில் நடைபெற்றது.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்று பெயரிடப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையில் ராணுவத்தினர், பக்தர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாக இருக்கலாம் என்று சீக்கிய அமைப்புகள் தரப்பில் கூறப்படுகிறது.

எய்ம்ஸில் மருத்துவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

இரண்டே நிமிடங்களில் இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இந்திரா காந்திக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று எழுதுகிறார் பார்கவா.

"நாடித் துடிப்பு இல்லை. ஆனால் இதய - நுரையீரல் கருவியின் உதவியை நாடினால் ஏதாவது நடக்க வாய்ப்பு உண்டு என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். இன்னும் ஏன் தாமதிக்க வேண்டும். உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறினேன்.

உடனடியாக அறுவை சிகிச்சை அறைக்கு பிரதமர் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் தயார் நிலையில் இருந்தார்," என்று நினைவு கூறுகிறார் பார்கவா.

இந்திராவின் ரத்த பிரிவானது 'பி நெகடிவ்'. இது மிகவும் அரிதானது. எங்களின் குளிர்சாதன பெட்டியில் சில பாட்டில் ரத்தம் சேமிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அவசரத்தின் போது மருத்துவர்கள் 'ஓ நெகடிவ்' ரத்தத்தை நோயாளிகளுக்கு வழங்குவார்கள் என்று விவரிக்கிறார் பார்கவா.

"மருத்துவக் கண்காணிப்பாளர் டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் ரத்தத்தைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இந்திராவுக்கு கழுத்தின் ஒரு பக்கத்தில் இருந்து ரத்தம் வழங்கப்பட்டது. ஆனால் அது வேறொரு வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது," என்று அவர் மேலும் விவரிக்கிறார்.

சோனியாவின் நிலை எப்படி இருந்தது?

இந்திரா சுடப்பட்ட போது, ராஜீவ் காந்தி மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

இந்திராவை மருத்துவமனையில் அனுமதித்த போது, ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா மற்றும் அவர்களின் குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்தனர்.

"பிரியங்காவும், ராகுலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சோனியா காந்தியுடன் வந்தனர். பிறகு குழந்தைகள் தேஜி பச்சனின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சோனியா மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். ஆஸ்துமாவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவர் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே, ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார் சோனியா.

சோனியாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்திரா குறித்த செய்தி வெளியானதும் பலரும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர். யாரை பார்க்க அனுமதிக்கலாம், அனுமதிக்கக் கூடாது என்பதை நான் சோனியாவிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்," என்று பார்கவா தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார்.

இந்திராவின் மரணம் குறித்த செய்தி வெளியாவதில் தாமதம் நிலவியதா?

அப்போதைய குடியரசுத் தலைவர் கியானி ஜைல் சிங் இந்தியாவில் இல்லை. மூத்த அதிகாரிகள், ராஜீவ் காந்தி உட்பட யாரும் டெல்லியில் இல்லை. இந்திரா காந்தியின் தனிச் செயலாளர் ஆர்.கே. தவான் மற்றும் அரசியல் ஆலோசகர் மகான் லால் ஃபோடேதார் மருத்துவமனையில் இருந்தனர் என்று குறிப்பிடுகிறார் பார்கவா.

"அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் பி. சங்கர் ஆனந்த் மற்றும் இதர காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் நடத்திய வண்ணம் இருந்தனர். அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே அவர் இறந்த செய்தியை வெளியே கூறக் கூடாது," என்று அவர்கள் கூறியதாக பார்கவா தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

அச்சத்தில் உறைந்த கியானி ஜைல் சிங்

இந்திரா காந்தியின் மரணத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான மனநிலை உருவாகி இருந்தது.

அந்த நேரத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த கியானி ஜைல் சிங் அரசுப் பயணமாக ஏமனில் இருந்தார். இந்தியாவின் முதல் சீக்கிய குடியரசுத் தலைவர் அவர். இந்திராவின் மரண செய்தியை அறிந்த பிறகு உடனடியாக நாடு திரும்பினார் ஜைல். பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்திராவின் உடலைப் பார்க்க வந்தார்.

இது குறித்து தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பார்கவா, ஜைல் சிங் மருத்துவமனைக்கு 5.20 மணி அளவில் வந்ததாக எழுதுகிறார். அப்போது அவர் அதிர்ச்சியும் பயமும் கலந்த உணர்வுடன் இருந்ததாக குறிப்பிடுகிறார் பார்கவா.

"சீக்கியர்களே துப்பாக்கியின் மூலம் இந்திராவை சுட்டனர் என்ற செய்தி ஏற்கனவே பரவியிருந்த நிலையில் ஜைல் சிங் அச்சத்துடன் காணப்பட்டார். மேலும் மருத்துவமனையில் சிறிது நேரம் தங்கியிருந்த அவர், 'ராஜீவ் வரட்டும்,' என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்," என்று பார்கவா குறிப்பிடுகிறார்.

ராஜீவ் காந்தியின் நிலைமை என்னவாக இருந்தது?

ராஜீவ் காந்தியின் நிலை குறித்து பார்கவா, "அதிர்ச்சி அடைந்த நிலையில் இருந்தார். ஆனால் அமைதியாகவே இருந்தார்," என்று எழுதுகிறார்.

மருத்துவமனைக்கு வந்த அவர் சோனியா காந்தியை பார்த்துவிட்டு இந்திராவை பார்க்கச் சென்றதாக குறிப்பிடுகிறார் பார்கவா.

"இந்திரா காந்தியிடம் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்ட ஒரு சீக்கியர் குறித்து ஏற்கனவே எச்சரிக்கையாக இருக்கும்படி அவர்கள் கூறியதை என்னிடம் நினைவு கூர்ந்தனர். ஆனால் ராஜீவ் அதிக நேரம் இறந்து போன அவர் தாயின் உடலுக்கு அருகே நிற்கவில்லை," என்று எழுதுகிறார் பார்கவா.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்த சீக்கியப் பணியாளர்கள் நிலை என்ன?

இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு, சீக்கியப் படுகொலைகள் டெல்லியில் அரங்கேறின.

இந்த படுகொலைகள் பற்றி விசாரிக்க அரசால் அமைக்கப்பட்ட நானாவதி கமிஷன் தன்னுடைய அறிக்கையில், 2733 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் சீக்கிய அமைப்புகள் மற்றும் அரசு என இரு தரப்பிலும் வழங்கப்படும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாறுபாடுகள் உள்ளன.

பார்கவா தன்னுடைய புத்தகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பலர் எரிந்த நிலையில் கொண்டு வரப்பட்டனர் என்று குறிப்பிடுகிறார்.

இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய சீக்கியப் பணியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்ததாக கூறுகிறார்.

"ரத்தத்தை மாற்றும் பணியாளராக பணியாற்றியவர் ஒரு சீக்கியர். இந்திராவைக் கொன்றது சீக்கியர்கள் என்று தெரிய வந்ததும் அவர் பதற்றமடைந்து அறுவை சிகிச்சை மையத்தில் இருந்து ஓடிவிட்டார். தலைமை கதிரியக்க சிகிச்சை நிபுணரும் ஒரு சீக்கியர். நான் உடனடியாக ஐ.ஜி.க்கு அழைப்பு விடுத்து, பணியாளர்கள் பாதுகாப்பாய் உணரும் வகையில் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்," என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு