1971 போரை இந்திரா காந்தி கையாண்ட விதம் இப்போது பேசப்படுவது ஏன்?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை நிறுத்தம் மே 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளின் ராணுவங்களும் தாக்குதல்களை முறியடித்து வருவதாக பரஸ்பரம் கூறிவருகின்றன.

எல்லையின் இருபுறங்களிலும் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பான படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி வருகின்றன.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் அதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் குண்டுவீச்சு தாக்குதல் ஆகியவற்றால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து, மே 10-ஆம் தேதி மாலை 5 மணியளவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில், "அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட நீண்ட நேர பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளும் முழுமையான மற்றும் உடனடியான போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டன.

மே 6-ஆம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், சில இலக்குகளை தாக்கியதாக மே 7-ஆம் தேதி இந்திய ராணுவம் அறிவித்தது.

இத்தகைய சூழ்நிலையில், நான்கு தினங்களுக்குள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இச்சூழலில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை காங்கிரஸ் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்கள், சமூக ஊடக பயனர்கள் சிலர் குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திரா காந்தி குறித்து காங்கிரஸ் கூறியது என்ன?

காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து இந்திரா காந்தி மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சன் ஆகியோரின் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது.

அந்த புகைப்படத்துடன், "இந்திரா காந்தி நிக்சனிடம் 'எங்கள் முதுகெலும்பு நேரானது. எந்தவொரு கொடுமையையும் எதிர்கொள்வதற்கான வளங்களும் திறனும் எங்களிடம் உள்ளன. மூன்று-நான்காயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் அமர்ந்துகொண்டு, தங்களின் விருப்பத்தை பின்பற்றுமாறு உத்தரவிடும் காலம் போய்விட்டது' என கூறினார்" என பதிவிடப்பட்டிருந்தது.

காங்கிரஸ் அப்பதிவில், "இதுதான் தைரியம். இது இந்தியாவுக்காக உறுதியாக நிற்பதும் நாட்டின் மாண்புடன் சமரசம் செய்யாத செயலும் ஆகும்." என தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் சமூக ஊடக பயனர்கள் சிலர், குடிமைப் பணிகள் தேர்வுகளுக்கான பயிற்சியாளர் விகாஸ் திவ்யகீர்த்தியின் பழைய காணொளி ஒன்றையும் பகிர்ந்துவருகின்றனர்.

அந்த காணொளியில், "ஒரு பெண் பிரதமராகிறார், அவர் பாகிஸ்தானை இரு பகுதிகளாக பிரிக்கிறார். மற்றவர்கள், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' செய்வோம் என தொடர்ந்து கூறிவருகின்றனர். அந்த பெண் பிரதமர் எதையும் சொல்லவில்லை, அவர் பாகிஸ்தானை இரண்டாக பிரித்தார்." என விகாஸ் கூறுகிறார்.

எனினும், 1971 மற்றும் 2025 சூழல்களை ஒப்பிடுவது சரியல்ல என்று சிலர் நம்புகின்றனர்.

பாகிஸ்தானுடனான போருக்குப் பிறகு 1971-இல் வங்கதேசம் உருவான போது, சோவியத் ஒன்றியம் இருந்தது. ஆனால், 1991-இல் சோவியத் ஒன்றியம் சிதைந்து, ரஷ்யா உருவானது. சோவியத் ஒன்றியத்துக்கு இருந்த செல்வாக்கு ரஷ்யாவுக்கு இல்லை, இது இந்தியாவுக்கும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஒருபுறம், சோவியத் ஒன்றியம் இந்தியாவுக்கு ஆதரவளித்தது, மறுபுறம் அச்சமயத்தில் பாகிஸ்தான் அணுசக்தி நாடு அல்ல.

ஹன்ஸ்ராஜ் மீனா சமூக ஊடகப் பக்கத்தில், "அமெரிக்காவிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தன. களச்சூழல் கடினமானதாக இருந்தது. ஆனால் இந்திரா காந்தி பயப்படவில்லை. 1971-இல் அவர் இந்தியாவின் மாண்பை மட்டும் காக்கவில்லை. பாகிஸ்தானை பிரித்து புதிய நாட்டை உருவாக்கி புதிய வரலாறும் படைத்தார். அவர் பிரதமர் மட்டுமல்ல, பேரார்வமும் நோக்கமும் கொண்டவர்." என பதிவிட்டிருந்தார்.

பத்திரிகையாளர் ரோகிணி சிங், "தேர்தலில் போராடுவதற்கும் போரில் சண்டையிடுவதற்கும் வித்தியாசம் உண்டு. யாரும் இந்திரா காந்தி போன்று எளிதில் ஆகிவிட முடியாது." என பதிவிட்டிருந்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு கடிதத்தைப் பகிர்ந்து, "1971-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சனுக்கு இந்திரா காந்தி எழுதிய கடிதம் இது. பாகிஸ்தான் நான்கு தினங்களுக்குப் பிறகு சரணடைந்தது." என பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, பாஜகவின் தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாள்வியா, "பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்ததுடன் 1971 போர் முடிவுக்கு வந்தது. ஆனால், அதைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் அழுத்தத்தால் சிம்லா ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. எவ்வித வியூக நன்மையும் இல்லாமல் 99,000 போர் கைதிகளை இந்தியா விடுவித்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேறுவதற்கு எந்த நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை, எல்லையும் முறையாக முடிவு செய்யப்படவில்லை. இந்தியா மீது சுமத்தப்பட்ட அகதிகள் நெருக்கடி மற்றும் போரால் ஏற்பட்ட இழப்பீடுகளுக்கான நிவாரணம் கோரப்படவில்லை. அந்த சமயத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். உங்களின் வசதிக்கு ஏற்ப விஷயங்களை கூறுவதை நிறுத்துங்கள்" என பதிவிட்டிருந்தார்.

இந்திரா காந்தி - நிக்சன் சந்திப்பில் என்ன நடந்தது?

அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் இந்திரா காந்திக்கு இடையேயான கசப்பான உறவு அனைவரும் அறிந்ததே.

1967-இல் டெல்லியில் இந்திரா காந்தியை நிக்சன் சந்தித்தார். அப்போது வெறும் 20 நிமிடங்களில் நிக்சனுடன் இருந்த இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரியிடம், "இன்னும் இவரை நான் எவ்வளவு நேரம் பொறுத்துக்கொள்ள வேண்டும்?" என இந்திரா காந்தி சலிப்புடன் கேட்டதாக, அவர் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1971க்கு முன்பும் இருவருக்குமான உறவு இப்படித்தான் இருந்தது.

கிழக்கு பாகிஸ்தானில் நடைபெற்ற அத்துமீறல்கள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்க இந்திரா காந்தி 1971-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கா சென்றார். அப்போது இந்திரா காந்தியை 45 நிமிடங்கள் காக்கச் செய்தார் நிக்சன்.

வெள்ளை மாளிகையில் அவர் ஆற்றிய வரவேற்புரையில், பிகாரில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்த நிக்சன், கிழக்கு பாகிஸ்தான் குறித்து குறிப்பிடவே இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வெளியுறவு துறையின் மூத்த அதிகாரி மகாராஜ் கிருஷ்ணா ரஸ்கோத்ராவிடம் பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபசல் பேசினார்.

ரஸ்கோத்ரா பிபிசியிடம், "அச்சமயத்தில் நான் அங்கு இருந்தேன். இந்திரா காந்தியின் நிலையை காட்டுவதே நிக்சனின் நோக்கமாக இருந்தது. அவர் இந்திரா காந்தியை அவமானப்படுத்த நினைத்தார். ஆரம்பத்திலிருந்தே இருவருக்குமான உரையாடல் நன்றாக இல்லை" என கூறினார்.

மேலும் அவர், "இந்தியாவுக்கு அச்சமயத்தில் வந்த ஒரு கோடி வங்க அகதிகள் குறித்தோ, அவர்கள் இந்தியாவுக்கு சுமையாக மாறியது மற்றும் அவர்கள் முகாம்களில் பசியால் வாடுவது பற்றியோ நிக்சன் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. நாங்கள் போரை அறிவிக்க தான் வந்திருக்கிறோம் என அவருக்கு சில சந்தேகங்கள் இருந்திருக்கலாம். இந்திரா காந்தியிடம் வெளிப்படையாகவே அவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டார்" என்றார்.

இந்திரா காந்தி குறித்து பேசிய அவர், "இந்திரா காந்தி அதை பொருட்படுத்தவில்லை. அவர் மிகவும் மாண்புடைய பெண்மணி. நிக்சனிடம் என்ன சொல்ல வேண்டுமோ அதை அவர் சொல்லி விட்டார். கிழக்கு பாகிஸ்தானில் நடக்கும் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும், இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள் மீண்டும் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும், அவர்களுக்கு எங்கள் நாட்டில் இடமில்லை என்பதுதான் அவருடைய பேச்சின் சாராம்சம்." என்றார்.

1971 போரும் அமெரிக்க கடற்படையும்

1971-ஆம் ஆண்டு போரில் அமெரிக்கா தனது போர்க் கப்பலை வங்காள விரிகுடா நோக்கி அனுப்பியது.

இத்தாலிய பத்திரிகையாளர் ஒரியானா ஃபல்லாசிக்கு இந்திரா காந்தி பின்னர் அளித்த பேட்டி ஒன்றில், "அமெரிக்கா ஒரு துப்பாக்கி குண்டை சுட்டிருந்தாலோ அல்லது வங்காள விரிகுடாவில் அமர்ந்திருப்பது தவிர வேறு ஏதேனும் செய்திருந்தாலோ, மூன்றாம் உலகப் போர் தொடங்கியிருக்கும். ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஒருமுறை கூட மனதில் எனக்கு அந்த பயம் தோன்றவில்லை." என்றார்.

'தி மேன் வூ பாம்ப்ட் கராச்சி' எனும் தன் சுயசரிதையில் அட்மிரல் எஸ்எம் நந்தா, "டிசம்பர் முதல் வாரத்தில் மலாக்கா ஜலசந்தியிலிருந்து ஒரு சோவியத் போர்க் கப்பலும் ஒரு கண்ணிவெடி அகற்றும் கப்பலும் இந்தப் பகுதியை அடைந்தன. 1972-ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் அமெரிக்க போர்க் கப்பல் இங்கிருந்து வெளியேறும் வரை சோவியத் கடற்படை அதைப் பின்தொடர்ந்தது." என குறிப்பிட்டுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு