You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மெக்காவில் இந்திய விருந்தினர் மாளிகையால் 50 ஆண்டுகளாக நீடிக்கும் சர்ச்சை
- எழுதியவர், நியாஸ் ஃபரூக்கி
- பதவி, பிபிசி நியூஸ்
வருடாந்திர ஹஜ் யாத்திரை முடிவடையும் தருவாயில் உள்ளது. மெக்காவின் ஒரு பழமையான பகுதியில் இருந்து, அதன் ஆன்மிக சிறப்புக்காக அல்லாமல், 50 ஆண்டுகளாக நிலவும் ஒரு சொத்துத் தகராறுக்காக, மெக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள இந்தியாவில் ஒரு பெரும் விவாதம் எழுந்துள்ளது.
'கேயி ரூபத்' எனப்படும் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு விருந்தினர் மாளிகைதான் இந்த சர்ச்சையின் மையப்புள்ளி.
கடந்த 1870-களில் மலபாரைச் சேர்ந்த (இன்றைய கேரளா) புகழ்பெற்ற பணக்கார வணிகர் மியான்குட்டி கேயி என்பவரால் இந்த மாளிகை கட்டப்பட்டது. அவர் உருவாக்கிய வர்த்தக சாம்ராஜ்ஜியம் மும்பையில் இருந்து பாரிஸ் வரை பரவியிருந்தது.
இஸ்லாத்தின் புனிதத் தலமான அல்-ஹராம் மசூதிக்கு அருகில் அமைந்திருந்த இந்த விருந்தினர் மாளிகை, மெக்கா நகரத்தை விரிவுபடுத்தும் திட்டத்திற்காக 1971ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.
அதற்கான இழப்பீடாக சௌதி அரசு 1.4 மில்லியன் ரியால்களை (இன்றைய மதிப்பில் சுமார் 3,73,000 டாலர்) அரசின் கருவூலத்தில் டெபாசிட் செய்தது. அந்த நேரத்தில் மியான்குட்டியின் சரியான வாரிசை அடையாளம் காண முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகள் கழிந்தும், அந்த நிதி இன்னும் சௌதியின் அரசுக் கருவூலத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது.
இப்போது, அந்தத் தொகையை யார் பெற வேண்டும் என்ற கேள்வி, கேயி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு தரப்பினருக்கு இடையே கடுமையான மோதலை உருவாக்கியுள்ளது. இருவரும் அந்தப் பணம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கோருகின்றனர்.
ஆனால் அந்த முயற்சியில் இரு தரப்பினரும் இதுவரை வெற்றியடைவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக, அடுத்தடுத்து பதவிக்கு வந்த மத்திய அரசுகளும், கேரள மாநில அரசுகளும் தொடர்ந்து முயற்சி செய்தும் இந்த நெருக்கடியான சூழ்நிலைக்குத் தீர்வு காண முடியவில்லை.
பணவீக்கத்திற்கு ஏற்ப அந்த இழப்பீட்டை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என மியான்குட்டியின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் தற்போது கூறுகின்றனர். ஆனால், இழப்பீட்டை சரிசெய்ய சௌதி அதிகாரிகள் தயாராக இருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அதேநேரம், சிலர் அந்தத் தொகையின் இன்றைய மதிப்பு ஒரு பில்லியன் டாலருக்கு மேல் இருக்கலாம் என்கின்றனர்.
இந்த வழக்கைப் பின்தொடர்பவர்கள் அந்த சொத்து ஒரு வக்ஃப் சொத்து (வக்ஃப் என்பது இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட எவராலும் அல்லாவின் பெயரால் மத நோக்கங்களுக்காக அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படும் அசையும் அல்லது அசையா சொத்துகள்) என்று கூறுகிறார்கள்.
அதனால், மியான்குட்டியின் சந்ததியினர் அதை நிர்வகிக்க முடியுமே தவிர, அவர்களால் அதைச் சொந்தமாக வைத்திருக்க முடியாது. அவ்காஃப் (அறக்கட்டளை சொத்துகளை) நிர்வகிக்கும் சௌதி துறை பிபிசியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து சௌதி அரசாங்கம் இதுவரை எந்தவிதமான பொது அறிக்கையும் வெளியிடவில்லை.
ஆகவே, அந்தப் பணம் யாருக்குச் சொந்தம்? அது எங்கே சென்றது? என்பது குறித்த பலரின் ஊகங்களும் தொடர்ந்து எழுகின்றன. அதேபோல் அந்த விருந்தினர் மாளிகையைப் பற்றியும் பெரியளவில் தகவல் கிடைக்கவில்லை .
ஆனால், மஸ்ஜித் அல்-ஹராமுக்கு நெருங்கிய இடத்தில், 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த அந்த மாளிகை, 22 அறைகள் மற்றும் பல அரங்குகளைக் கொண்டது என்று மியான்குட்டியின் சந்ததியினர் கூறுகிறார்கள்.
கேயி அதைக் கட்டுவதற்காக மலபாரில் இருந்து மரங்களைக் கொண்டு சென்றதாகவும், அதை நிர்வகிக்க ஒரு மலபாரி மேலாளரை நியமித்ததாகவும் நீண்ட காலமாக அவர்கள் குடும்பத்தினரால் ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது.
அந்தக் காலகட்டத்தில் அது ஓர் அசாதாரணமான செயலாக இல்லாவிட்டாலும்கூட, ஒரு துணிச்சலான முயற்சியாகப் பார்க்கப்படுகின்றது.
அப்போது ஒப்பீட்டளவில், சௌதி அரேபியா ஓர் ஏழ்மையான நாடாக இருந்தது. அதன் மிகப்பெரிய எண்ணெய் வயல்கள் அந்தக் காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.
ஹஜ் யாத்திரையும், இஸ்லாம் மதத்தில் மெக்கா நகரத்துக்கு உள்ள முக்கியத்துவத்தின் காரணமாக, இந்திய இஸ்லாமியர்கள் அங்குள்ள இந்திய யாத்ரீகர்களுக்கு பணத்தை நன்கொடையாக வழங்கினர் அல்லது அங்கு உள்கட்டமைப்பை உருவாக்கினர்.
வரலாற்று ஆசிரியர் ஜியாவுதீன் சர்தார் 2014-இல் வெளியிட்ட "மெக்கா: புனித நகரம்" (Mecca: The Sacred City) என்ற புத்தகத்தில், 18ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், மெக்கா நகரம் இந்திய இஸ்லாமியர்களின் ஆதரவால் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று, ஒரு தனித்துவமான இந்திய பண்பை பெற்றிருந்தது என்று கூறியுள்ளார்.
"அந்த நகரத்தில் வசித்த மக்களில் சுமார் 20% பேர் இந்திய வேர்களைக் கொண்டவர்கள். அவர்கள் குஜராத், பஞ்சாப், காஷ்மீர், தக்காணம் போன்ற பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களை உள்ளூர் மக்கள் 'ஹிந்தி' என்று அழைத்தனர்," என்று சர்தார் எழுதியுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டில் சௌதி அரேபியாவில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மெக்காவில் பரந்த அளவில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் மூன்று முறை இடிக்கப்பட்ட 'கேயி ரூபத்' மாளிகை, கடைசியாக 1970களின் தொடக்கத்தில் ஒரு முறை இடிக்கப்பட்டது. அப்போதுதான் இழப்பீடு தொடர்பான குழப்பம் தொடங்கியதாகத் தெரிகிறது.
இந்தியாவின் மத்திய வக்ஃப் கவுன்சிலின் முன்னாள் செயலாளர் பி.எம். ஜமாலின் கூற்றுப்படி, ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அப்போது அரசுக்கு கடிதம் எழுதி, மியான்குட்டி கேயியின் சட்டப்பூர்வ வாரிசு குறித்த விவரங்களைக் கேட்டது.
"என்னுடைய புரிதலின்படி, அதிகாரிகள் அந்தச் சொத்துக்கு மேலாளரை நியமிக்கவே வாரிசுகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். இழப்பீட்டு தொகையைப் பகிர்வதற்காக அல்ல," என்றார் ஜமால்.
ஆயினும், மியான்குட்டியின் தந்தைவழிக் குடும்பமான கேயி மற்றும் அவர் திருமணம் செய்துகொண்ட கேரளாவை சேர்ந்த அரச குடும்பமான அரக்கல் எனும் இரண்டு பிரிவுகளும், தாங்கள்தான் மியான்குட்டியின் வாரிசு என்று உரிமை கோரின.
இரு குடும்பங்களும் பாரம்பரியமாக தாய்வழி மரபுரிமை முறையைப் பின்பற்றின. ஆனால் இது சௌதி சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்படாத வழக்கம். அதனால் நிலுவையில் உள்ள பிரச்னை மேலும் சிக்கலடைந்தது.
மியான்குட்டி குழந்தை இல்லாமல் இறந்தார். ஆகவே, அவரது சகோதரியின் பிள்ளைகள் தாய்வழி மரபின்படி அவருடைய சரியான வாரிசுகளாக உள்ளனர் என்று கேயி குடும்பம் வாதிடுகிறது.
ஆனால், மியான்குட்டிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்ததாகக் கூறி, இந்திய சட்டத்தின்படி அவரது பிள்ளைகள்தான் சட்டப்பூர்வ வாரிசுகளாக இருப்பதாக அரக்கல்கள் வாதிடுகின்றனர்.
இந்த சர்ச்சை நீண்டுகொண்டே செல்ல, அந்தக் கதையும் தானாகவே உயிர் பெற்றுவிட்டது. அந்த இழப்பீடு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கலாம் என 2011ஆம் ஆண்டில் வதந்திகள் பரவிய போது, 2,500க்கும் மேற்பட்ட மக்கள் கண்ணூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு, தாங்கள் கேயி குடும்பத்தின் சந்ததியர்கள் என்று கூறினர்.
"தங்கள் மூதாதையர்கள் மியான்குட்டிக்கு சிறுவயதில் பாடம் கற்பித்ததாகக் கூறியவர்கள் அங்கு இருந்தனர். மற்றவர்கள், தங்கள் மூதாதையர்கள் விருந்தினர் மாளிகைக்கு மரக்கட்டைகளை வழங்கியதாகவும் கூறினர்," என்று பெயர் குறிப்பிடாமல் பேச விரும்பிய ஒரு மூத்த கேயி குடும்ப உறுப்பினர் பிபிசியுடன் பகிர்ந்துகொண்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டில், கேயி சந்ததியினர் போல நடித்து, இழப்பீட்டில் கிடைக்கும் பங்கில் இருந்து பணம் தருவதாக உறுதியளித்து, உள்ளூர் மக்களை ஏமாற்றியவர்கள் இருந்ததாக மாநில அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வழக்கு இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளது. மியான்குட்டி கேயி விரும்பியபடி, ஹஜ் யாத்ரீகர்களுக்காக மற்றொரு விருந்தினர் மாளிகையைக் கட்டுவதற்கு இழப்பீட்டுத் தொகையைப் பயன்படுத்துமாறு சௌதி அரசிடம் கேட்பதே சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சிறந்த வழி என்று அவரது சந்ததியினர் சிலர் கருதுகின்றனர்.
ஆனால் மற்றவர்கள் இதை நிராகரித்து, விருந்தினர் மாளிகை தனியாருக்குச் சொந்தமானது என்றும், எனவே எந்தவொரு இழப்பீடும் குடும்பத்திற்குச் சொந்தமானது என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.
மறுபுறம், அந்தக் குடும்பம் மியான்குட்டி கேயியின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபித்தாலும், அதற்கான ஆவணங்கள் இல்லாவிட்டால் அவர்களால் எதையும் பெற முடியாது என்று சிலர் கூறுகின்றனர்.
கேயி மற்றும் அரக்கல் குடும்பங்களின் வரலாறு குறித்த புத்தகத்தை இணைந்து எழுதிய கண்ணூரைச் சேர்ந்த முகமது ஷிஹாத்துக்கு, இந்தப் பிரச்னை வெறும் பணத்தைப் பற்றியது மட்டுமல்ல, குடும்பத்தின் வேர்களை கௌரவிப்பது பற்றியது.
"அந்தக் குடும்பம் இழப்பீட்டை பெறாவிட்டாலும், இந்த உன்னதமான செயலுடன் அந்தக் குடும்பத்துக்கும், அந்தப் பிராந்தியத்திற்கும் இருக்கும் தொடர்பை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு கௌரவிப்பதுதான் சிறந்தது" என்றார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு