You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தமிழில் பிறந்ததே கன்னடம்': கமல் பேச்சு பற்றி கன்னட நடிகர் சிவராஜ்குமார் கூறியது என்ன?
தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருந்த நடிகர் கமல்ஹாசன், தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோருகின்றனர்.
இந்நிலையில், இன்று (மே 28) இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் கமல்ஹாசன், "அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, "கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது அவருக்கு (கமல்ஹாசன்) தெரியாது." என்று தெரிவித்துள்ளார்.
சிவராஜ்குமார் கூறியது என்ன?
இசை வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற சிவராஜ்குமார் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். "கமல்ஹாசன் கன்னட மொழி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார்." என அவர் மே 28 அன்று நடைபெற்ற நிகழ்வில் கூறியுள்ளார். "பெங்களூரு குறித்து கூறுவதற்கு அவரிடம் நல்ல விஷயங்கள் மட்டுமே உள்ளன." என்றும் அவர் தெரிவித்தார்.
"நான் கமல் சாருக்கு பெரிய ரசிகன். எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவர் என்ன கூறினார் என்பது கமல் சாருக்கு தெரியும். அவர் தகுந்த பதிலை கூறுவார்." என அவர் தெரிவித்தார்.
மொழி ரீதியான பிரச்னைகளை கையாளும்போது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கமல் பேசியது என்ன?
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றிருந்தார்.
மேடையில் பேசிய கமல்ஹாசன், "ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்" என்று பேசியிருந்தார்.
கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
கமல் ஹாசனின் பேச்சு சர்ச்சையான நிலையில், இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த தக் லைஃப் திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த விஷயத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். நான் அன்பினால் தான் அப்படி சொன்னேன்." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பல வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழியின் வரலாற்றை பற்றி கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நான் எதையும் குறிப்பாக அர்த்தப்படுத்த விரும்பவில்லை. தமிழ்நாடு அடிப்படையில் தனி சிறப்பு கொண்டது. இங்கு ஒரு மேனன், ஒரு ரெட்டி, மாண்டியாவிலிருந்து வந்த ஒரு கன்னட ஐயங்கார் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்திருக்கின்றனர்.
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு ஒருமுறை சென்னையில் பிரச்னை வந்தபோது, கர்நாடக மக்கள் எனக்கு ஆதரவளித்தார்கள். எனவே தக் லைஃப் படத்தையும், எனக்கு எதிரான மொழி பிரச்னையையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு மொழியைப் பற்றி பேச தகுதியில்லை, நான் உள்பட. இத்தகைய மிக ஆழமான விவாதங்கள் அனைத்தையும் வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழி நிபுணர்களிடம் விட்டுவிடுவோம்." என கூறினார்.
மேலும், "நான் அளிப்பது விளக்கம், பதில் அல்ல. அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என்றும் கூறினார்.
கர்நாடக பாஜக என்ன கூறுகிறது?
'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதற்கு கர்நாடகாவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், "ஒருவர் தனது தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் ஆணவம் காட்டுவது நாகரிகமற்ற நடத்தை. குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.
கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவராஜ்குமாரை தனது தமிழ் மொழியைப் புகழ்வதில் இணைத்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம். இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் கன்னடம் பல நூற்றாண்டுகளாக ஒரு முக்கிய மொழியாக இருந்து வருகிறது.
மேலும், "எந்த மொழி எந்த மொழியிலிருந்து தோன்றியது என்பதை வரையறுத்து கூற கமல்ஹாசன் வரலாற்றாசிரியர் அல்ல. ஆனால் இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கன்னட மொழி, இந்திய வரைபடத்தில் செழிப்பையும் நல்லிணக்கத்தையும் குறிக்கிறது.
கன்னடர்கள் மொழியை வெறுப்பவர்கள் அல்ல, ஆனால் கன்னட நிலம், மொழி, மக்கள், நீர் மற்றும் கருத்துக்களைப் பொறுத்தவரை ஒருபோதும் சுயமரியாதையை தியாகம் செய்ததில்லை என்பதை ஒரு உண்மையான ஞானியைப் போலப் பேசிய கமல்ஹாசன் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு
- செலவுகளுக்கு அஞ்சி குழந்தை பெறுவதை தவிர்க்கும் தம்பதிகள் அதிகரித்து வருவது ஏன்?
- உலக அழகியை தேர்வு செய்யும் போட்டி எப்படி நடக்கும்? சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
- தமிழக அரசியலில் பவன் கல்யாண் ஆர்வம் - தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளை குறி வைக்கிறாரா?
திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம் என எச்சரிக்கை
கன்னட அமைப்புகள் சிலவும் கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி கமலை எச்சரித்து வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழ் பிறந்த பிறகுதான் கன்னடம் பிறந்தது என்றும் கன்னடத்தை விட தமிழ்தான் சிறந்தது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். நாங்கள் கமலை எச்சரிக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வியாபாரம் வேண்டும். ஆனாலும் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா?
இன்று நீங்கள் எங்கள் மாநிலத்தில் இருந்திருந்தால், உங்கள் மீது நாங்கள் கருப்பு மை பூசி இருப்போம். நீங்கள் தப்பிவிட்டீர்கள். கர்நாடகாவுக்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம். உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என்றும் நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.
செவ்வாய்கிழமை பெங்களூருவில் கமல் ஹாசன் ஒரு நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது. அந்த இடத்தில் கன்னட அமைப்பினர் சிலர் கூடி கன்னடத்தில் கோஷங்கள் எழுப்பினர். தக் லைஃப் படத்தின் போஸ்டர்களை கன்னட அமைப்பினர் கிழிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இவை மட்டுமல்லாமல் கன்னட அமைப்பினர் பலர் சமூக ஊடகங்களில் கமல் ஹாசனுக்கு கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு