You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலக அழகியை தேர்வு செய்யும் போட்டி எப்படி நடக்கும்? சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
- எழுதியவர், அல்லு சுரிபாபு
- பதவி, பிபிசி செய்தியாளர்
72வது உலக அழகிப் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய போட்டி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு நடுவே இந்தப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. உலக அழகிப் போட்டிகள் 1951ம் ஆண்டு ப்யூட்டி 'வித் எ பர்பஸ் (Beauty with a Purpose)' என்கிற முழக்கத்துடன் தொடங்கப்பட்டன.
ஒவ்வொரு கட்டத்திலும் கடும் போட்டி
நடப்பு உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் நந்தினி குப்தா உட்பட 108 நாடுகளைச் சேர்ந்த இளம் பெண்கள் கலந்து கொள்கின்றனர்.
முதல்கட்ட போட்டிகளுக்குப் பிறகு, ஒவ்வொரு கண்டத்தில் இருந்தும் 10 பேர்(அமெரிக்கா மற்றும் கரீபியனில் இருந்து 10 பேர், ஆப்பிரிக்காவில் இருந்து 10 பேர், ஐரோப்பாவில் இருந்து 10 பேர், ஆசியா மற்றும் ஓசியானியாவில் இருந்து 10 பேர்), மூன்று கட்டங்களாக நடைபெறும் கால் இறுதி போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்,
முதல் கட்ட கால் இறுதிப் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. ஒவ்வொரு கண்டத்திலும் 10 பேர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில், முதல் ஐந்து பேர் இரண்டாவது கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கு அடுத்து, இந்த ஐந்து பேரில் இருந்து முதல் இரண்டு பேர் மூன்றாவது கட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள். இப்போது எட்டு பேர் போட்டியில் இருப்பார்கள். இவர்கள் எட்டு பேரில், ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒருவர் என நான்கு பேர் அரை இறுதிப் போட்டியில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறும்.
இந்த நான்கு இறுதிப் போட்டியாளர்கள், ஆசியா மற்றும் ஓசியானா குழுவை இந்தியாவைச் சேர்ந்த நந்தினி குப்தா பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அதே போல் ஐரோப்பா குழுவை அயர்லாந்தைச் சேர்ந்த ஜாஸ்மின் கர்ஹத், ஆப்பிரிக்க குழுவை நமீபியாவைச் சேர்ந்த செல்மா கமானியா, அமெரிக்கா மற்றும் கரீபிய குழுவை மார்டினிக்கைச் சேர்ந்த ஆரேலி ஜோச்சி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இறுதிப் போட்டியில் இவர்கள் நால்வரும் பங்கேற்க ஒருவருக்கு 'உலக அழகி' பட்டம் கொடுக்கப்படும். மற்ற மூவரும் அவர்களின் திறமைக்கு ஏற்ப மதிப்பிடப்படுவார்கள். 2025 உலக அழகி இறுதிப் போட்டிகள் ஹைதரபாத்தில் உள்ள ஹிடெக்ஸ் கண்காட்சி மையத்தில் வருகிற 31ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியாவின் கை ஓங்கியுள்ளது
உலக அழகிப் பட்டம் வென்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் வெனிசூலாவும் முதலிடத்தில் உள்ளன. இந்தியாவில் இருந்து தற்போது வரை ஆறு பேர் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார்கள்.
உலக அழகிப் பட்டம் வென்ற இந்தியர்கள்
1994 - ஐஷ்வர்யா ராய்
1996 - ரிடா ஃபாரியா
1997 - டயானா ஹைடன்
1999 - யுக்தாமுகி
2000 - ப்ரியங்கா சோப்ரா
2017 - மனுஷி சில்லர்
வெனிசூலாவும் ஆறு பட்டங்களை வென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரிட்டன் (5), அமெரிக்கா (5) மற்றும் தென் ஆப்பிரிக்கா (3) பட்டங்களை வென்றுள்ளன.
ஆரம்பம் முதலே சர்ச்சைகள்
போட்டியாளர்களில் ஒருவரும் மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்றவருமான மில்லா மேகி போட்டியில் நடுவிலே விலகி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து சென்றுவிட்டார்.
இந்தச் சம்பவத்தை விசாரிக்க தெலங்கானா அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. உலக அழகி நிறுவனமும் அவர்களின் விளக்கம் அடங்கிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மூன்றாவது முறையாக உலக அழகிப் போட்டி நடைபெறுகிறது. முதல் முறை 1996ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்றது. இந்தப் போட்டியை நடத்துவதில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அபிதாப் பச்சனின் நிறுவனம் முக்கியப் பங்காற்றியது.
இரண்டாவது முறை 2024-ம் ஆண்டு மும்பை மற்றும் டெல்லியில் நடைபெற்றது. கடந்த வருடம் மார்ச் 9 அன்று மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா உலக அழகிப் பட்டத்தை வென்றார்.
2025-ல் உலக அழகிப் போட்டியை நடத்தும் மூன்றாவது நகரமாக உள்ளது ஹைதராபாத். எனினும் கடந்த காலத்தைப் போல அல்லாமல் தெலங்கானா அரசாங்கமே இதனை தற்போது நடத்துகிறது.
'தெலங்கானா, ஜரூர் ஆனா' - ('Telangana, Zaroor Aana') என்கிற முழக்கத்துடன் இந்தப் போட்டிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை தெலங்கானா சுற்றுலாத் துறை எடுத்துள்ளது.
இவை தெலங்கானா சுற்றுலா மற்றும் அதன் தயாரிப்புகள், கலைகளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் நோக்குடன் செயல்படுத்தப்படுவதாக தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சி மே 10 அன்று கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த போட்டியாளர்கள் தெலங்கானா அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
நாகர்ஜுனசாகரில் உள்ள பௌத்த தீம் பார்க், சார்மினார், லாட் பஜார், சௌமஹல்லா அரண்மனை போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு அவர்கள் சென்று வந்தனர். அவர்கள் தெலங்கானா தலைமைச் செயலகத்துக்கும் சென்று வந்தனர். இந்தப் போட்டிகளை ஒருங்கிணைக்க ரூ.27 கோடி செலவு செய்யப்படுவதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்
எனினும் இந்தப் போட்டிகளை நடத்த முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ரூ.200 கோடி வரை செலவு செய்வதாக பி.ஆர்.எஸ் செயல் தலைவர் கேடி ராமராவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பெண்கள் குழுக்களின் போராட்டங்கள்
1996-ல் பெங்களூருவில் முதல் முறையாக உலக அழகிப் போட்டிகள் நடைபெற்றபோது அதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த சமயம் பாஜகவும் இதனை எதிர்த்தது.
தொடக்கத்தில் இருந்தே உலக அழகிப் போட்டிகள் மேற்கத்திய கலாச்சாரத்தை இந்தியாவில் ஊக்குவித்து பெண்களை வர்த்தகப் பொருளாக மாற்றுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. பல பெண்ணியவாதிகளும் இந்தப் போட்டிகளை எதிர்த்து வருகின்றனர். 1996-ல் பெங்களூருவில் இதற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.
சமீபத்தில் சில பெண்கள் குழுக்கள் ஹைதராபாத்தில் அழகிப் போட்டிக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தின. போலிஸார் இவர்கள் முன்கூட்டியே கைது செய்து சூழ்நிலையை சரி செய்தனர்.
கலாச்சார, வரலாற்று மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் பயணத்தின் ஒரு பகுதியாக உலக அழகிப் போட்டியாளர்கள் ராமப்பா கோயிலுக்குச் சென்றதுபோது சர்ச்சை உருவானது. அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக உள்ளூர் பெண்கள் சிலர் அவர்களின் பாதங்களைக் கழுவினர்.
மிஸ் இங்கிலாந்து வெற்றியாளர் மில்லா மேகி, முன்கூட்டியே வெளியேறி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து அழகிப் போட்டி பற்றிய சர்ச்சைகள் அதிகரித்தன. அவரின் கருத்துக்கள் பிரிட்டன் செய்தித் தாளான தி சன்-னில் வெளியானது.
மில்லா எழுப்பிய குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து தெலங்கானா அரசு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை வைத்து நடத்திய விசாரணையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என அரசு சிறப்பு தலைமைச் செயலாளர் ஜெயேஷ் ரஞ்சன் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
உலக அழகி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜூலியா மோர்லி, மேகியின் குற்றச்சாட்டுக்களை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எனினும் மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரான மல்லு லக்ஷ்மி இந்தக் குற்றச்சாட்டுகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் முழுமையான விசாரணை தேவை என பிபிசியிடம் தெரிவித்தார்.
"பெண்களின் அழகை மதிப்பிடும் இந்த அழகுப் போட்டிகளுக்குப் பின்னால் கார்ப்பரேட் சதி உள்ளது. மக்கள் தொகையில் 60% இளைஞர்களே உள்ளனர். இந்த அழகுப் போட்டிகள் அவர்களைக் கவர்ந்து தங்களின் அழகு சாதனப் பொருட்களின் வியாபாரத்தை அதிகரிக்கவே நடத்தப்படுகின்றன. பல நாடுகளில் இதற்கு எதிர்ப்பு உள்ளது. நாங்களும் இதனை எதிர்க்கிறோம்" என்றார் மல்லு லக்ஷ்மி.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு