You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் விமான விபத்துகளில் தப்பியவர்கள் இறுதி தருணத்தில் கண்டது என்ன?
ஆமதாபாதில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 232 பயணிகளில் ஒரே ஒருவர் மட்டும் தப்பிப் பிழைத்திருக்கிறார். தான் உயிர் பிழைத்தது எப்படி என்பது அவருக்குத் தெரியவில்லை. இவரைப் போலவே இதற்கு முந்தைய விபத்துகளில் தப்பிப் பிழைத்தவர்கள் என்ன கூறினார்கள்?
ஆமதாபாதில் இருந்து லண்டனுக்குச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சுமார் 30 நொடிகளில் தரையில் விழுந்து விபத்திற்குள்ளானது.
விபத்திற்குள்ளான அந்த விமானத்தில் 11A என்ற இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார். ஆனால், தான் உயிர் பிழைத்தது எப்படி என்பதே தனக்குத் தெரியவில்லை என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த விபத்துகளில் பலர் உயிர் பிழைத்திருக்கிறார்கள். அதில் சிலருக்கு விபத்து ஏற்படப் போவதும் தெரிந்திருக்கிறது. இதுகுறித்து அவர்கள் ஊடகங்களிலும் பேசியுள்ளனர்.
இப்படி தப்பிப் பிழைத்தவர்கள் விபத்து நடக்கப் போகும் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை விவரித்துள்ளார்கள்.
ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விழுந்த விமானம்
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயில் இருந்து கோழிக்கோடு வந்து சேர்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுபாதையைத் தாண்டிச் சென்று கீழே விழுந்தது. 184 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்தனர். இவர்களில் 21 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர்.
உயிர் பிழைத்தவர்களில் சிலர் ஊடகங்களிடம் பேசினர். இந்த விமானத்தில் பயணம் செய்த 46 வயதான ஜயமோல் ஜோஸ்ப், விபத்து எப்படி நடந்தது எனத் தனது உறவினரிடம் கூறியிருந்தார்.
அதன்படி, "விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தில் இறங்கி மீண்டும் மேலே ஏறியுள்ளது. அப்போது, விமானத்தின் உள்ளே இருந்த அனைவரிடமும் ஒருவிதமான அச்சம் பரவியது. விமானம் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதை ஜயமோல் உணர்ந்தார். விமானத்தில் இருந்த அனைவருக்கும் என்ன நடக்கிறது என்பது தெரிந்திருக்கிறது.
விமானம் விபத்துக்குள்ளான பிறகு, அதில் இருந்த பயணிகள் அனைவரும் உறவினர்களுக்கு அழைத்திருக்கிறார்கள். ஜயமோல் எங்களுக்கு அழைத்தார்," என்று அந்த உறவினர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அதே விமானத்தில் பயணித்த யூஜின் யூசுப் என்பவரும் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.
அதன்படி, "துபையில் இருந்து கேரளாவுக்கு மதியம் 2 மணிக்கு விமானம் கிளம்பியது. நான் விமானத்தின் பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தேன். விமான ஓட்டுநர்கள் கோழிக்கோடு வரை பயணிகளுக்கான அறிவிப்புகளைத் தெரிவித்துக் கொண்டே இருந்தனர். திடீரென, எதையோ அறிவிக்க வந்தவரின் சத்தம் முழுமையடையாமல் நின்றது.
விமானியின் அறிவிப்பு பாதியில் நின்ற அடுத்த சில நிமிடங்களில், அதிவேகத்தோடு விமானம் தரையில் மோதியது. பயணிகள் அனைவரும் இருக்கையில் இருந்து தூக்கி எறியப்பட்டோம். உடைந்து நொறுங்கிய இரும்புக் கம்பிகள் பலருக்கு பலத்த காயத்தை ஏற்படுத்தியிருந்தது. விமானத்தின் பின் பகுதியில் நான் அமர்ந்திருந்ததால் உயிர் தப்பினேன். விபத்து ஏற்பட்டதும் மீட்பதற்காக ஆட்கள் வரத் துவங்கினர்" என்று விவரித்தார்.
மேலும், 2 வயதுக் குழந்தை ஒன்று இருக்கைகளுக்குள் சிக்கிக் கதறி அழுது கொண்டிருந்தது பற்றி அவர் குறிப்பிட்டார்.
"உடனடியாக அக்குழந்தையை மீட்டு தோளில் கிடத்திக்கொண்டு உடைந்த விமானத்தைவிட்டு வெளியேறினேன். மருத்துவ சிகிச்சைக்காகக் குழந்தையை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தோம். பயங்கரமான இந்த விமான விபத்தில் சிக்கி உயிர் தப்பியது ஆச்சரியத்தை அளித்தாலும், உடனிருந்த பயணிகள் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது," என்றார் யூசுஃப்.
மங்களூர் விமான விபத்து
கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் துபாயில் இருந்து மங்களூருக்கு வந்த விமானம், ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விழுந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்த 166 பேரில் 8 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
காயமடைந்து மங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ப்ரதீப் என்பவர், "விமானம் தரையைத் தொட்டவுடன் டயர் வெடித்தது. விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. அடுத்த ஐந்து நிமிடங்களில் விமானம் முழுக்க தீயும், புகையும் பரவியது. என்னால் மூச்சுவிட முடியவில்லை. உடைந்த ஜன்னல் ஒன்றின் வழியாக வெளியே வந்து கீழே குதித்தேன். காலிலும் கைகளிலும் காயம் ஏற்பட்டது," என்று ஊடகங்களிடம் தெரிவித்தார் (ஆனால், விசாரணையில் விபத்திற்கு டயர் வெடித்தது காரணமாகக் குறிப்பிடப்படவில்லை).
இதே விமானத்தில் பயணித்த கே.பி. மணிக்குட்டி, விமானம் மெதுவாகத்தான் தரையிறங்கியதாகத் தெரிவித்தார். "ஆனால், தரையைத் தொட்டவுடன் விமானம் வெகுவாகக் குலுங்கியது. பிறகு, எதிலோ மோதியது. பிறகு, இரண்டாகப் பிளந்து தீப்பிடித்தது. நான் அந்த இடைவெளியில் வெளியேறினேன்" என்றார் மணிக்குட்டி.
இதே விமானத்தில் பயணித்த ஸ்டாலின் மாயக்குட்டி என்பவர் விமானி திடீரென பிரேக் பிடித்ததாகத் தெரிவித்தார்.
"ரன்வேயில் இறங்கியவுடனேயே விமானம் விழுந்தது, அதிர்வுகள் ஏற்பட்டன. விமானி திடீரென பிரேக் பிடித்தார். விமானம் ஏதோவொரு கட்டடத்தில் மோதி உடனே தீப்பிடித்து நொறுங்கியது. திடீரென பிரேக் பிடித்தவுடனேயே நான் தூக்கியெறியப்பட்டேன். என்னோடு வேறு சிலரும் தூக்கியெறியப்பட்டார்கள்" என்றார் ஸ்டாலின் மாயக்குட்டி.
'பனி மூட்டமான பகுதிக்குள் விமானம் நுழைந்தது'
கடந்த 1988ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸின் போயிங் விமானம் ஒன்று ஆமதாபாத் விமான நிலையத்தை நெருங்கும்போது விபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்தில் சிலர் உயிரோடு மீட்கப்பட்டாலும் இறுதியில் இரண்டு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். இவர்களில் விமானப் படை விமானியான வினோத் திரிபாதியும் ஒருவர்.
அவர் ஆங்கில இதழ் ஒன்றுக்கு என்ன நடந்தது என்பதை விரிவாகப் பகிர்ந்துள்ளார். அவர் விமானத்தின் 21ஏ இருக்கையில் அமர்ந்திருந்தார். வானிலை தெளிவாக இருந்த நிலையில், திடீரென பனி மூட்டமான பகுதிக்குள் விமானம் நுழைந்தது எனக் குறிப்பிட்டார் அவர்.
திடீரென எதன் மீதோ மோதிய விமானம், வெடித்தது எனக் குறிப்பிட்டார் திரிபாதி. ஆனால், அந்தத் தருணத்தில் போதுமான அளவு பார்க்கக்கூடிய நிலையில்தான் வானிலை இருந்ததாக உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். ஆகவே, ஒரு குறுகிய நேரத்திற்கு விமானம் பனி மூட்டமான பகுதிக்குள் நுழைந்திருக்கலாமோ எனக் கருதப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு