ஆமதாபாத்தில் 37 ஆண்டுக்கு முன்பு விமான விபத்து நேரிட்ட போது என்ன நடந்தது தெரியுமா?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தற்போது ஆமதபாதில் நடந்திருக்கும் கோரமான விமான விபத்து, சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பாக இதேபோல ஆமதாபாதில் நடந்த மற்றொரு கோரமான விமான விபத்தை நினைவூட்டுகிறது. அந்த விபத்து எப்படி நடந்தது?

ஜூன் 12ஆம் தேதி ஆமதாபாதில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் 'ஏஐ 171', புறப்பட்ட சில விநாடிகளில் கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய விபத்து ஆமதாபாதில் இருந்து விமானம் புறப்படும்போது நிகழ்ந்தது என்றால், முந்தைய விபத்து விமானம் ஆமதாபாத்தை நெருங்கும்போது நிகழ்ந்தது.

இந்த விபத்து நடந்தது, 1988ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி.

இந்தியன் ஏர்லைன்ஸின் விமானம் IC - 113 காலை 05:45 மணிக்கு பம்பாயில் இருந்து புறப்பட வேண்டும். ஆனால், ஒரு பயணி தாமதமாக வந்ததால் விமானம் காலை 6.05க்கு புறப்பட்டது.

மொத்தம் 135 பேர் விமானத்தில் இருந்தனர். இவர்களில் 129 பேர் பயணிகள். விமானிகளும் பணிப்பெண்களும் சேர்த்து 6 பேர். தலைமை விமானியாக கேப்டன் ஓ.எம். தாலயாவும் துணை விமானியாக கேப்டன் தீபக் நாக்பால் என்பவரும் இருந்தனர்.

இந்த விமானம் 6.20 மணியளவில் ஆமதாபாத் விமான நிலையத்தின் 'Approach Control'ஐ தொடர்புகொண்டு, ஆமதாபாதில் அப்போதிருந்த வானிலை குறித்த தகவல்களைப் பெற்றது. 6.25க்கு மீண்டும் வானிலை தகவல் அளிக்கப்பட்டது. விமானியால் 3 கி.மீ. தூரத்திற்கே பார்க்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டது.

பிறகு விமானியால் பார்க்கக்கூடிய தூரம் 2,000 மீட்டருக்கும் குறைவாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. பிறகு விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, விமானம் பறக்கும் உயரம் 1,000 அடியாகக் குறைந்தது. அப்போது விமானத்தின் வேகம் 300 கி.மீட்டராக இருந்தது. அந்த நேரத்தில் ஓடுபாதை விமானியின் பார்வையில் தெரியவில்லை. ஓடுபாதை விமானியின் கண்ணில் படாவிட்டால் விமானம் 500 அடி உயரத்திற்குக் கீழே இறங்கியிருக்கக்கூடாது.

ஆனாலும் விமானம் தொடர்ந்து உயரத்தைக் குறைத்து வந்தது. 6.53 மணியளவில் விமானத்தின் கீழ்பகுதி மரங்களின் மீது உரசியது. அடுத்த சில விநாடிகளில் சிலோடா கோத்தார்பூர் என்ற கிராமத்தில் விழுந்து நொறுங்கியது.

ஓடுபாதை துவங்குவதற்கு 2,540 மீட்டர் முன்பாகவே விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த 135 பேரில் 133 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஆமதாபாத் ஐஐடியின் பேராசிரியர் லப்தி பண்டாரியும் ஒருவர்.

தொடங்கிய விசாரணை

இந்த விமானம் ஏன் விபத்திற்குள்ளானது என விரிவான விசாரணைகள் நடந்தன. நீதிபதி ஏ.கே. மாதூர் தலைமையில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றன. இந்த விசாரணையில் பல விஷயங்கள் தெரிய வந்தன. விமானம் பம்பாயில் இருந்து புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக Notam எனப்படும் அறிக்கை தரப்பட்டது.

அதில், அவர்கள் தரையிறங்கவுள்ள விமான நிலையம் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அந்த அறிக்கையில், ஆமதாபாத் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க உதவும் விளக்குகள் பல செயல்படவில்லை என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. விமானத்தின் காக்பிட்டில் இருந்த குரல் பதிவுகளைக் கேட்டபோது, இரு விமானிகளுமே அந்த அறிக்கையைப் படிக்கவில்லை என்பது தெரிந்தது. இது முதல் தவறு.

துணை விமானியான தீபக் நாக்பாலுக்கு வெறும் 179 மணிநேரம் மட்டுமே பறக்கும் அனுபவம் இருந்தது. இருந்தபோதும் போயிங் 737 விமானத்தின் துணை விமானியாக இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். தலைமை விமானியான தாலயா, அனுபவம் வாய்ந்தவர் என்றாலும் போயிங் 737 அவருக்குப் புதியது. ஆகவே, தீபக் நாக்பால் இன்னும் அனுபவம் வாய்ந்த விமானியுடன்தான் துணை விமானியாக இருந்திருக்க வேண்டுமென விசாரணை ஆணையம் கருதியது.

காரணம் என்ன?

அடுத்ததாக, ஆமதாபாத் விமான நிலையத்தில் 2,000 மீட்டர் அளவுக்குப் பார்க்க முடியும் எனத் தகவல் தரப்பட்டிருந்தாலும், நிலைமை வேகமாக மாறி வந்தது. பனி மூட்டத்தால் பார்க்கக்கூடிய தொலைவு குறைந்துகொண்டே வந்தது. இந்தத் தகவல் விமானிகளுக்கு அளிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.

மேலும், ஆமதாபாத் விமான நிலையத்தில், திசையறிய உதவும் கருவிகள் (navigational aids) சரியாக வேலை செய்யவில்லை.

ஓடுபாதையின் துவக்கத்தைக் குறிக்கும் வகையில் வேலை செய்ய வேண்டிய விளக்குகூட எரியவில்லை. இவற்றையெல்லாம் தாண்டியும் விமானம் சரியாகத் தரையிறங்கியிருக்க முடியும். ஆனால், மேலும் சில தவறுகள் நடந்தன.

துணை விமானியான தீபக், விமானம் பறக்கும் உயரத்தைக் குறிப்பிட்ட இடைவெளியில் சொல்லிக்கொண்டே வரவேண்டும். அவர் அதைச் செய்யவில்லை. இதனால் ஓடுபாதை தெரியாத போதிலும் விமானம் 500 அடிக்குக் கீழே பறக்க ஆரம்பித்தது. அதை இருவரும் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும், ஓடுபாதை தெரியாத போதிலும் விமானத்தின் சக்கரங்கள் கீழே இறங்கியிருந்தன. இந்தத் தவறுகள் எல்லாம் சேர்ந்து அந்தக் கோரமான விபத்தை ஏற்படுத்தின.

ஆகவே, விமானிகளின் சில தவறுகளும் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்த மோசமான காலநிலை குறித்த தகவல் விமானிகளுக்குத் தெரியப்படுத்தப்படாததும்தான் விபத்திற்குக் காரணம் என விசாரணை ஆணையம் முடிவுக்கு வந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு