ஆஸ்திரேலிய காடுகளில் 11 நாள் - தொலைந்து போன பெண் மீட்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Western Australia Police
- எழுதியவர், ஜாக் பர்கெஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
மேற்கு ஆஸ்திரேலியாவின் வனப்பகுதியில் தொலைந்து போன பயணி ஒருவர் 11 நாட்கள் குகைகளில் உறங்கியும் ஓடைகளிலிருந்து தண்ணீர் பருகியும் பிழைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த 26 வயதான கரோலினா வில்கா வெள்ளியன்று மீட்கப்பட்டார். அவர் மீட்கப்பட்ட நேரத்தில் சோர்வு, நீரிழப்பு, "தீவிரமான பூச்சிக் கடிகள்" மற்றும் காயப்பட்ட பாதம் என் நிலையில் இருந்தார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரின் வேன் தொலைதூர பயணத்தினிடையே புதரில் சிக்கிய நிலையில் அங்கிருந்து 24 கிமீ (15 மைல்கள்) "குழப்பமான மற்றும் வழிதவறிய" நிலையிலே நடந்து சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தான் மீட்கப்படமாட்டோம் என வில்கா தன்னைத்தானே நம்ப வைத்துக் கொண்டார் எனக் கூறும் காவல்துறையினர் அவரின் குடும்பத்தினர் தற்போது நிம்மதியாக உள்ளதாக தெரிவித்தனர்.
"அவர் 11 இரவுகள் வனப்பகுதியில் தன்வசம் இருந்த குறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டுக் கொண்டும் மழை மற்றும் ஓடைகளிலிருந்து தண்ணீர் பருகிக் கொண்டும் இருந்துள்ளார்" என மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த மீட்பு "முழுவதும் அதிர்ஷ்டமானது" எனக் காவல் ஆய்வாளர் ஜெச்சிகா செகுரோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
வில்கா ஒரு ஓட்டுநரால் கண்டறியப்பட்டு வான்வழியாக பெர்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவரை மீட்ட ஓட்டுநர் தானியா ஹென்லி ஆஸ்திரேலிய அரசு ஊடகமான ஏபிசியிடம் பேசுகையில் ஒரு சாலை ஓரத்தில் வில்கா கையசைத்துக் கொண்டிருந்தபோது தான் கண்டதாகவும் அப்போது அவர் வலுவற்ற நிலையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

"அந்த புதரில் இருந்த அனைத்துமே முட்கள் நிறைந்து இருந்தன. அவர் பிழைத்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் காலணி எதுவும் அணியவில்லை, தனது கால்களை சுருக்கிக் கொண்டு இருந்தார்" என ஹென்லி தெரிவித்தார்.
மீட்கப்படுவதற்கு முன்பு வில்கா ஜூன் 29 அன்று கடைசியாக மேற்கு ஆஸ்திரேலியா பேகன் நகரில் ஒரு அங்காடியில் தனது வேனில் காணப்பட்டார்.
பேகனுக்கு வடக்கே அடர்ந்த புதர் நிறைந்த பகுதியில் அவரின் கைவிடப்பட்ட வேனை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
என்ஜின் பழுதடைந்த நிலையில் வில்கா வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிகிறது என செகுரோ கூறியுள்ளார்.
"வில்கா படிப்படியாக முன்னேறி வரும் நிலையில் மருத்துவமனையில் நன்றாக ஓய்வெடுத்து வருகிறார்", என செகுரோ தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












