அரசியல், பொருளாதாரம் என இரட்டை கொந்தளிப்பில் பாகிஸ்தான் - இந்தியாவும் கவலைப்பட வேண்டுமா?

இம்ரான் கான்

பட மூலாதாரம், AFP

தெற்காசிய அரசியலில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்காவின் முன்னணி நிபுணர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, உள்ளூர் அரசியல் ஆய்வாளர் ஒருவரை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் பேசியது இன்னும் தன்னுள் எதிரொலிப்பதாக அந்த அரசியல் ஆய்வாளர் கூறுகிறார்.

"பாகிஸ்தான் தோல்வியுற்றால், அது இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்யவேண்டும் என அந்த அரசியல் ஆய்வாளர், வாஷிங்டனில் உள்ள தெற்காசிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் குகல்மேனிடம் கூறினார்.

கடந்த சில வாரங்களில், அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் பாகிஸ்தான் கொந்தளித்து வருகிறது. ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால், நாடு முழுவதும் வன்முறை மோதல்கள் வெடித்தன.

ஏற்கெனவே அதிக பணவீக்கம் மற்றும் மோசமான பொருளாதார பிரச்சினையில் தத்தளிக்கும் பாகிஸ்தானில் இந்த மோதல்கள் மேலும் பல புதிய பிரச்னைகளுக்கு வித்திட்டுள்ளன.

மேலும், அந்நாட்டு அரசியலில் அதிக அளவில் தலையிடும் ராணுவத்திற்கு எதிராக இம்ரான் கான் குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருப்பது அவருக்கும், ராணுவத்துக்கும் இடையே நிலவும் முரண்பாடுகளை அதிகரித்துள்ளது. ராணுவம் அவரைக் கொலை செய்ய முயன்றதாகக்கூட இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

"உங்களுக்கு எதிரி நாடாக விளங்கும் அண்டை நாட்டில் இதுபோல் கொந்தளிப்புகள், அரசியல் அழுத்தங்கள் அதிகரித்தால், பெரிய அளவிலான அமைதியின்மை மற்றும் ராணுவத்துடனான கவலையளிக்கும் உறவுகள் போன்றவை காணப்பட்டால், அது நீங்களும் கவலைப்பட வேண்டிய ஒரு விஷயமே," என்கிறார் குகல்மேன்.

"பாகிஸ்தானில் நிலவும் மோசமான அரசியல் நிலை இந்தியாவிற்குள் பரவக்கூடும் என்பதல்ல இதன் பொருள். ஆனால் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் அரசின் கவனம் திசை மாறுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவுக்குக் கடும் ஆபத்துகள் ஏற்படும் என்ற கவலைதான் அது."

1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின் இந்த இரு நாடுகளும் மூன்று முறை போரிட்டுள்ளன. இதில் ஒரு சண்டையைத் தவிர மற்ற இரண்டும் காஷ்மீர் அரசியல் குறித்த போர்கள்.

காஷ்மீரில் இந்திய படைகளின் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் 2019ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து இந்தியா ஒரு தாக்குதலை நடத்தியது.

அந்தத் தாக்குதலின்போது, இரு நாடுகளும் அணு ஆயுதப் போர் நடக்கும் அளவுக்கு மோசமான நிலைக்குச் செல்லவிருந்தன என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ அண்மையில் எழுதிய தமது வரலாற்று ஆய்வு நூலில் தெரிவித்துள்ளார். ஆனால் எல்லைப் பகுதியில் தாக்குதல் நிறுத்தம் செய்ய 2021இல் முடிவெடுக்கப்பட்டதால் அந்த ஆபத்து குறைந்தது.

பாகிஸ்தான் அரசியல் கொந்தளிப்பு குறித்து இந்தியா கவலைப்படவேண்டுமா?

பட மூலாதாரம், Empics

பாகிஸ்தான் அரசியல் கொந்தளிப்பு குறித்து இந்தியா கவலைப்படவேண்டுமா?

கடந்த கால வரலாற்றை மையமாகக் கொண்டு ஆராய்ந்தால் சில முடிவுகளை எட்ட முடியும்.

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட கொந்தளிப்பு ஒரு மிகப்பெரும் ரத்தக்களறியை ஏற்படுத்திய போருக்கு வித்திட்டது. இந்தப் போரின் இறுதியில் பங்களாதேஷ் என்ற நாடு உருவானது. 2008ஆம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக, பர்வேஸ் முஷாரஃபின் தலைமையிலான ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது.

தேர்தலில் அவர் படுதோல்வியடைந்த நிலையில், அதன் பின்னர் பல மாதங்கள் கழித்து இந்தியாவின் மும்பை நகரில் பாகிஸ்தானுடன் தொடர்பிலிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஆனால் அண்மைக்கால வரலாற்றிலும், பாகிஸ்தானில் தற்போது அதிகரித்து வரும் பிரச்னைகள் இந்தியாவுக்கு மேலும் கவலையை ஏற்படுத்துகின்றன என முன்னாள் பாகிஸ்தான் தூதரும், வாஷிங்டன் டிசியில் உள்ள ஹட்சன் நிறுவனத்தின் கல்வியாளரும், அபுதாபியில் உள்ள அன்வர் கர்காஷ் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவருமான ஹுசைன் ஹக்கானி தெரிவிக்கிறார்.

"பாகிஸ்தான் மிக மோசமான பொருளாதார பாதிப்பில் இருக்கும்போது, இது போன்ற மோசமான அரசியல் கொந்தளிப்புகள் ஏற்பட்டுள்ளன," என்கிறார் அவர்.

இந்நிலையில், "பாகிஸ்தானில் சமரசம் ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுப்பது அல்லது இந்தியாவைக் குறிவைத்துள்ள தீவிரவாதிகளை அந்நாட்டு எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தத் தூண்டுவது என்ற எல்லைகளுக்கு பாகிஸ்தான் செல்ல நிச்சயமாக வாய்ப்பில்லை என்ற நிலையில், இந்தியாவுடன் புதிய மோதல் போக்கை பாகிஸ்தான் உருவாக்கலாம்" என குகல்மேன் போன்ற நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அதுபோன்ற இருநிலைகளுக்கும் இடையில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதே இந்தியாவின் கவலையாக இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

"பாகிஸ்தானில் உள்நாட்டுப் பிரச்னைகள் அதிகமாகி, அவற்றில் மட்டுமே கவனம் செலுத்தும் நிலை ஏற்பட்டால் எல்லைப் பகுதியின் மீது பாகிஸ்தான் கண் வைக்கும் வாய்ப்புகள் இருக்காது," என்கிறார் குகல்மேன்.

பாகிஸ்தான் அரசியல் கொந்தளிப்பு குறித்து இந்தியா கவலைப்படவேண்டுமா?

பட மூலாதாரம், Getty Images

லண்டனில் உள்ள SOAS பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுப் பிரிவில் விரிவுரையாளராக இருக்கும் அவினாஷ் பாலிவாலும் இதேபோன்ற உணர்வை எதிரொலிக்கிறார். பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இரட்டை நெருக்கடிகள் இந்திய எல்லையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தைப் பாதிக்கலாம் என்கிறார்.

"பிரச்னையிலிருந்து திசை திருப்பும் முயற்சியாகவோ, அல்லது பாகிஸ்தான் ராணுவத்தின் மீதான தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியாகவோ, ராவணுத்தின் எல்லை தாண்டிய செயல்பாடுகளை அந்நாட்டு ராணுவ தளபதி ஊக்குவிக்கலம்.

பாகிஸ்தானிடம் போதிய ராணுவ பலம் இல்லாவிட்டாலும், இதுபோன்ற ஒரு சிக்கல் இருக்கிறது என்பது நிதர்சனம். ஏனென்றால் தாக்குதல் நிறுத்த உறுதிமொழியை அளித்துள்ள ராணுவ தளபதி அதை மீறும் கட்டாயத்தையும் எதிர்கொள்ளும் நிலை காணப்படுகிறது," என்கிறார் பாலிவால்.

"ஆனால் பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உடன்பாட்டை மீறினால் அது இந்தியாவுக்குக் கவலையளிக்காது. இருப்பினும், சீனாவுடன் தற்போது நீடிக்கும் ராணுவரீதியிலான மோதல் போக்குடன் அதுவும் இணைந்து அதிக ஆபத்தாக மாறிவிடும்."

பாகிஸ்தானை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பதை இந்தியா துடைத்தெரிய வேண்டும் என்றும், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்த கவலையும் தேவையற்றது என்றும் பலர் நினைக்கின்றனர்.

பாகிஸ்தான் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக்கொண்டதாகவும், அந்நாட்டின் நடவடிக்கைகளே இதுபோன்ற தண்டனையைப் பெற்றுத் தந்துள்ளதாகவும் இந்தியாவில் பலர் நம்புகின்றனர்.

பாகிஸ்தானின் இந்த நிலைமை பலருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக பாகிஸ்தானின் பொருளாதாரத்தைவிட இந்தியாவின் பொருளாதாரம் பத்து மடங்கு மேலானது என்றும், இந்தியாவின் வளம் மிக்க மாநிலமான மகாராஷ்ட்ராவின் பொருளாதாரம்கூட பாகிஸ்தானிடம் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்றதோர் எதிர்வினை நிச்சயமாக யூகிக்கக்கூடியதுதான் என்கிறார் குகல்மேன்.

"எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் மற்றும் போருக்குத் தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட ஒரு போட்டி நாடு இதுபோன்ற நிலையில் தத்தளிப்பதை எந்தவொரு நாடும் ரசிப்பது இயல்பானதுதான்.

பாகிஸ்தான் ராணுவமே இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத் தாக்குதல்களை ஊக்குவித்த நிலையில், தற்போது அந்த ராணுவம் பிரச்னையில் சிக்கித் தவிப்பது இந்தியர்களுக்கு மனநிறைவை அளிக்கிறது."

பாகிஸ்தானில் இணையதளங்கள் ஏன் முடக்கப்பட்டுள்ளன

பட மூலாதாரம், AFP

பாகிஸ்தானில் இணையதளங்கள் ஏன் முடக்கப்பட்டுள்ளன

"பாகிஸ்தானால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்துக் கவலைப்படாமல், அந்நாட்டின் தற்போதைய நிலையைக் கண்டு இந்தியா மகிழ்ச்சியில் திளைத்தால் அதனாலும் ஆபத்து ஏற்படும்," என்கிறார் குகல்மேன்.

ஹக்கானி நினைப்பது போல், "அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அண்டை நாடு இதுபோல் அரசியல் கொந்தளிப்பால் சூழ்ந்திருப்பது," உண்மையில் ஆபத்தானது.

அதே நேரம் பாகிஸ்தான் உடனடியாக பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ளப் போவதில்லை என்றும், எப்போதும் போலவே அந்நாட்டில் இதுபோன்ற பிரச்னைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் என்றும் பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதர் ஷரத் ஷபர்வால் போன்ற அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலிவால் சொல்வதைப் போல், கருத்தியல் மற்றும் மத ரீதியான தீவிரத் தன்மைகளின் விளைவுகளை பாகிஸ்தானின் நிலை நன்றாக உணர்த்தியுள்ளது மற்றும் மத தேசியவாதத்தின் தேவை இருப்பதையும் உணர்த்தியுள்ளது.

தோல்வியின் விளிம்பில் பாகிஸ்தான் இருப்பதால் இந்தியா என்ன செய்யவேண்டும்?

"இருநாடுகளுக்கும் இடையே நிலவும் குறைந்தபட்ச உறவுகளை அப்படியே பயன்படுத்தி எல்லைப் பகுதியில் புதிய பிரச்னைகள் எழாமல் பார்த்துக்கொள்வதும், தாக்குதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதுவுமே இந்தியாவின் தற்போதைய தேவையாக இருக்கிறது," என பாகிஸ்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் டிசிஏ ராகவன் தெரிவிக்கிறார்.

ஹக்கானி போன்ற சில அரசியல் விமர்சகர்கள், "என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்ற நிலையில் இந்தியா இருப்பதாகக் கருதுகின்றனர்.

"இந்தியா தொடர்ந்து எல்லைப் பகுதியில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்றும், எப்போதும் விழிப்புடன் செயல்படவேண்டும் என்றும்" குகல்மான் தெரிவிக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: