You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாரதிராஜா - தமிழ் சினிமாவை மடை மாற்றிய மாபெரும் கலைஞன்
- எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ் சினிமாவின் "இயக்குனர் இமயம்" எனப் புகழப்படும் பாரதிராஜா இன்று தனது 82-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்
’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பல கிராமப் பின்னணியில் அமைந்த கதைகளை இயக்கி, மாபெரும் வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல், தனது 80 வயதில் ”மாடர்ன் லவ்” என்ற வெப் சீரிஸில் “பறவைகள் கூட்டில் வாழும் மான்கள்” என்ற ஒரு பகுதியை இயக்கி, வயது, காலம், தலைமுறைகள் அனைத்தையும் தாண்டி காலத்தால் அழியாத அசல் கலைஞனாய், தமிழ் சினிமாவில் தன் பெயரை காலங்கள் தாண்டியும் பதிவு செய்ததோடு இல்லாமல், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இன்றளவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
'பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா' பேசுகிறேன் என தன் குரலால் ரசிகர்களுக்கு அறிமுகமானவர், “கல்லுக்குள் ஈரம்” என்ற திரைப்படத்தின் மூலம், முழு நீளப் படத்தில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்குனர் மணிரத்னத்தின் “ஆய்த எழுத்து” திரைப்படத்திலும், “பாண்டிய நாடு”, “குரங்கு பொம்மை”, ”எங்க வீட்டுப் பிள்ளை”, “திருச்சிற்றம்பலம்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அனைத்து தலைமுறைக்குமான ரசிகர்களை பெற்றார்.
வாழ்க்கை வரலாறு
பாரதிராஜா அவர்களின் இயற்பெயர் "சின்னச்சாமி". இவர் தேனி மாவட்டத்திலுள்ள "அல்லி நகரம்" என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் பெரிய மாயத் தேவர், கருத்தம்மா. இவருக்கு பள்ளியில் படிக்கும்போதே இலக்கியங்கள் படிப்பதிலும், மேடை நாடகங்கள் நடத்துவதிலும் மிகுந்த ஆர்வமிருந்தது.
'ஊர் சிரிக்கிறது ', ’சும்மா ஒரு கதை ' போன்ற கதைகளை எழுதி அவர் ஊர் திருவிழாக்களின் போது, பல மேடைகளில் அரங்கேற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் பயணம்
இயக்குனர் பாரதிராஜா அவர்கள் அவரது ஊரிலேயே சிறிது காலம் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு, சினிமாவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதால் சென்னைக்கு சென்றார். திரைத்துறைக்குள் நுழையும் அனைவரையும் போலவே, ஆரம்பத்தில் இவரும் பல இன்னல்களுக்கு ஆளானார். மேடை நாடகம், பெட்ரோல் பங்க் வேலை என பணிபுரிந்து கொண்டே சினிமாத் துறையில் நுழைய கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
முதன் முதலில், இயக்குனர் பி புல்லையாவிடம் உதவி இயக்குனராக பாரதிராஜா பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து, பிரபலக் கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகளிடம் சேர்ந்து நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
துடிப்பான உதவி இயக்குனராக இருந்ததால் பாரதி ராஜாவுக்கு முதல் வாய்ப்பு 1977 ஆம் ஆண்டு '16 வயதினிலே ' திரைப்படம் மூலம் கிட்டியது. இதில், கமல்ஹாசன், ஶ்ரீதேவி, ரஜினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் அதுவரை கிராமிய திரைப்படங்களுக்கு என இருந்த இலக்கணத்தை பாரதிராஜா மாற்றி எழுதினார்.
முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் அமைந்த இக்கதையில் கமல்ஹாசன் 'சப்பாணி' என்னும் பெயரில் வெள்ளந்தியாக நடித்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தது.
தமிழ் சினிமாவின் வரலாற்றை திருப்பிப் பார்த்தால், அதுவரை ஸ்டூடியோக்குள் மட்டுமே திரைப்படங்கள் படமாக்கப்பட்டன. இயக்குனர் பாரதிராஜா அவர்கள் ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முதலாக படப்பிடிப்பினை வெளிப்புறப் படப்பிடிப்புத் தளத்திற்கு கொண்டு சென்றார்.
கண்களைக் கவரும் கிராம பின்னணியை அச்சு அசலாக கிராமத்திற்கே சென்று படம் பிடித்ததாலும், மிக எளிமையான பாமரருக்கும் புரியும்படியான காதல் காட்சிகளாலும், இசையாலும், நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மிக இயல்பான மனிதர்களின் கதாபாத்திர வடிவமைப்பாலும், பஞ்ச் வசனங்களாலும் ரசிகர்களை தன் முதல் படத்திலேயே திருப்திப்படுத்திய இயக்குனரானார் பாரதிராஜா.
இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் திரைப்படங்கள் இயக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர். குறிப்பாக, தமிழில் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட தரமான, அசலான படைப்புகளைத் தந்து, ஒரு தலைமுறையையே தன் படைப்புக்கு ரசிகராக்கினார்.
இவர் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் உயரிய விருதான "பத்ம ஶ்ரீ" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், ஆறு முறை "தேசிய விருதுகள்", மூன்று முறை "தமிழ்நாடு மாநில விருதுகள்" மற்றும் ”ஃபிலிம் ஃபேர் விருது", "கலைமாமணி விருது" என பல விருதுகள் வாங்கிய பெருமைக்கெல்லாம் சொந்தக்காரரானார்.
பாரதிராஜா இயக்கிய திரைப்படங்கள்
பதினாறு வயதினிலே (1977), சிகப்பு ரோஜாக்கள் (1978), கிழக்கே போகும் ரயில் (1978), நிறம் மாறாத பூக்கள் (1979), நிழல்கள் (1980), அலைகள் ஓய்வதில்லை (1981), புதுமைப் பெண் (1983), மண்வாசனை (1983), ஒரு கைதியின் டைரி (1984), முதல் மரியாதை (1985), கடலோரக் கவிதைகள் (1986), வேதம் புதிது (1987), ஆராதனா (1987), கொடி பறக்குது (1989), புது நெல்லு புது நாத்து (1991), நாடோடி தென்றல் (1992), கிழக்குச் சீமையிலே (1993), கருத்தம்மா (1995) உள்ளிட்ட திரைப்படங்கள் பாரதிராஜாவின் மிகவும் புகழ் பெற்ற திரைப்படங்களாகும்.
பாரதிராஜாவால் அறிமுகமானோர் பட்டியல் பெரிது
இயக்குனர் பாரதிராஜா அவர்கள் அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகளின் பட்டியல் மிகப் பெரிது. அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்தார்கள் என்றே சொல்லலாம். கார்த்திக், ராதா, ராதிகா, சுதாகர், ருக்மணி, பிரியாமணி உள்ளிட்ட பலரையும் இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்தியுள்ளார்.
விருதுகளும், மரியாதைகளும்
இந்திய அரசு இயக்குனர் பாரதிராஜாவிற்கு 2004-ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி கவுரவப்படுத்தியது.
இயக்குனர் பாரதிராஜாவின் ”சீதாகொகா சிகே” திரைப்படத்திற்காக 1982-ஆம் ஆண்டு தேசிய விருதும், ”முதல் மரியாதை” திரைப்படத்திற்காக 1986-ஆம் ஆண்டு தேசிய விருதும், ”கருத்தம்மா” திரைப்படத்திற்காக 1995-ஆம் ஆண்டு தேசிய விருதும், ”அந்தி மந்தாரை” திரைப்படத்திற்காக 1996- ஆம் ஆண்டு தேசிய விருதும், ”கடல் பூக்கள்” திரைப்படத்திற்காக 2001-ஆம் ஆண்டு தேசிய விருதும் வழங்கப்பட்டது.
”கிழக்கே போகும் ரயில்” திரைப்படத்திற்காக 1978-ஆம் ஆண்டின் ‘ஃபிலிம்பேர்’ விருது கிடைத்தது
”16 வயதினிலே” திரைப்படத்திற்காக 1977-ஆம் ஆண்டிலும், ”புதிய வார்ப்புகள்” திரைப்படத்திற்காக 1979-ஆம் ஆண்டிலும், ”அலைகள் ஓய்வதில்லை” படத்திற்காக 1981-ஆம் ஆண்டிலும், ”ஈர நிலம்” திரைப்படத்திற்காக 2003-ஆம் ஆண்டிலும் “தமிழ்நாடு அரசின் மாநில விருதும்”, தமிழ்நாடு அரசின் “கலைமாமணி” விருதும் பெற்றார்.
‘சீதாகொகா சிலுகா’ திரைப்படத்திற்காக 1981-ஆம் ஆண்டுஆந்திரபிரதேச அரசிடம் இருந்து “நந்தி விருது” பெற்றார்.
கதாநாயகனே இல்லாமல் ஷூட்டிங் சென்றவர் - சித்ரா லஷ்மண்
பாரதி ராஜா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் பணிபுரிந்த தயாரிப்பாளர்கள், உதவி இயக்குனர்களிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
முதலில் மண்வாசனை திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகரும், மூத்த பத்திரிகையாளருமான சித்ரா லஷ்மணனிடம் பேசினோம். அவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா பற்றி பல சுவாரசியமான நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறும்போது, “ நான் பத்திரைகையாளராகவும், சினிமா பத்திரிகை தொடர்பாளராகவும் இருந்ததால், இயக்குனர் கிருஷ்ணனின் ’தலைப்பிரசவம்’ என்ற திரைப்படத்தில் பாரதிராஜா உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்த போதிருந்தே நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது. பல கோணங்களில் நான் அவருடன் பழகும் வாய்ப்பும் கிட்டியது. நான் பத்திரிகையாளராக அவருடன் உரையாடியிருக்கிறேன், அவர் இயக்கிய “மண்வாசனை” திரைப்படத்தினைத் தயாரித்திருக்கிறேன், அவர் இயக்கத்தில் நடிக்கவும் செய்திருக்கிறேன்,” என்றார்.
வளையல் கடை ஊழியரான 'பாண்டியன்' நடிகரானது எப்படி?
தொடர்ந்து அவர் பேசும்போது, ”மண்வாசனை” திரைப்படத்தின்போது ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. பாரதிராஜா அவர்கள் திரைப்படத்திற்கு கதாநாயகனை தேர்வு செய்யாமலேயே 100 பேர் கொண்ட சினிமா யூனிட்டை அழைத்துக் கொண்டு போடிநாயக்கனூருக்குச் சென்று விட்டார். ”மண்வாசனை” திரைப்படத்திற்கு முன்னமே அவர் “கிழக்கே போகும் ரயில்” போன்ற திரைப்படத்தில் புது முகங்களை வைத்து வெற்றித் திரைப்படம் கொடுத்ததால், தயாரிப்பாளராக என்னால் எதுவும் கூறமுடியவில்லை.
ஒரு நாள் நாங்கள் அனைவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றோம். அங்குள்ள வளையல் கடையில் வேலை செய்து கொண்டிருந்த பாண்டிக் கண்ணன் என்ற இளைஞன் காரை எட்டிஎட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த பாரதிராஜா அவர்கள் அந்த இளைஞனை அப்படியே காரில் ஏறிக் கொள்ளச் சொல்லி விட்டு, அறைக்கு வந்தவுடன் பாண்டிக் கண்ணனை சிரிக்கச் சொல்லிப் பார்த்தார்; பின்னர் அழச் சொல்லிப் பார்த்தார்; என்ன நினைத்தாரோ தெரியவில்லை இவர்தான் நமது கதாநாயகன் என்று கூறிவிட்டார். எனக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை.
பாண்டிக் கண்ணன் நடிக்க ஆரம்பித்த ஒரு வாரத்தில் அவரது நடிப்பை மொத்த யூனிட்டும் பார்த்து வியந்தது. நானும் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத பாண்டியின் நடிப்பை பார்த்து வியந்தேன்; நான் தயாரித்த எனது அடுத்த படைப்பான “வாழ்க்கை” திரைப்படத்திலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வளர்ப்பு மகனாக நடிக்க வாய்ப்புக் கொடுத்தேன். இப்படியாக, இயக்குனர் பாரதிராஜாவின் உள்ளுணர்வும், அவரது முடிவுகளும் மிகத்துல்லியமாக இருக்கும்”, என்றார்.
'டைரக்டர்' என்ற சொல்லுக்கு சொந்தக்காரர்: இயக்குனர் நிர்மல் குமார்
தன் முதல் படமான “சலீம்” திரைப்படத்திலேயே ஹிட் கொடுத்த, இயக்குனர் நிர்மல் குமாரிடம் இயக்குனர் பாரதிராஜா பற்றிப் பேசினோம். அவர், “நான் இயக்குனர் பாரதிராஜாவிடம் 14 வருடங்கள் உதவி இயக்குனராக பணியாற்றினேன். “ஈர நிலம்”, “கண்களால் கைது செய்”, “பொம்மலாட்டம்”, “தெக்கத்திப் பொண்ணு”, “அன்னக்கொடி” உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்தேன்.
பாரதிராஜா அவர்களின் சிறப்பு என்னவென்றால் அவர் சந்திக்கும் மனிதர்களை கூர்ந்து கவனிப்பார். அவர்கள் எதாவது கதாபாத்திரத்திற்கு பொருந்திப் போனால், அவர் உதவி இயக்குனர்களை அழைத்து அவர் சந்தித்த அந்த மனிதர், அவருடைய நடை, உடை, அவர் யாருடன் பேசிக் கொண்டிருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என அனைத்தையும் விவரிப்பார். நாங்கள் அந்தக் குறிப்பிட்ட மனிதரை அழைத்து வரும் வரையில் எங்களை விட மாட்டார்.
அப்படித் தான் “கண்களால் கைது செய்” திரைப்படத்தில் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால், இறுதியில் பாரதிராஜா ஒரு முறை பல்லடத்திலுள்ள தியேட்டர் உரிமையாளர் மகன் ஃபசல் என்பவர் “கண்களால் கைது செய்” திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். ஃபசலிடம் ஒரு மேட்டிமைத் தன்மை இருப்பதாகவும், திரைப்படத்திற்கு அது உதவும் எனவும் கூறினார்”, என்றார்.
மேலும், ”தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, எல்லா இயக்குனர்களையும் அவர்களின் பெயரைச் சொல்லி, சார் என அழைப்பது தான் வழக்கம். உதாரணமாக பாலச்சந்தர் சார், ஷங்கர் சார், பாலு மகேந்திரா சார் என அழைப்பார்கள். ஆனால், பாரதிராஜா அவர்களை மட்டும் தான் “டைரக்டர்” என டெக்னீஷியன்கள் அழைப்பது வழக்கம். அவர் அப்படி ஒரு மரியாதையை சம்பாதித்துள்ளார்”, என்றார்.
நிர்மல் குமார் இயக்கி வரும் ‘நானா’ படத்தில் இயக்குநர் பாரதிராஜா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி இயக்குநர்களை உயர்த்துவார்- இணை இயக்குநர் வேல் முருகன்
நிர்மல் குமாரின் இணை இயக்குனரும், பாரதிராஜா அவர்களிடம் 10 வருடமாக பணிபுரிந்தவரும், தற்போது திரைப்படம் ஒன்றினை இயக்கவிருக்கும் வேல்முருகன் அவர்கள் கூறும்போது,
"தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத போதே, பல நுணுக்கங்களை பரீட்சித்துப் பார்த்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் பாரதிராஜா. உதாரணமாக, ”அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்தில் “ஆயிரம் தாமரை மொட்டுக்களே” பாடலில் கேமரா கதாநாயகனையும், கதாநாயகியையும் 360 டிகிரியில் சுற்ற வேண்டும்.
அந்தக் காலகட்டத்தில் அவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாததால், உதவி இயக்குனர்கள் இருவரின் தோளில் கேமரா மேன் அமர்ந்து கொண்டு அவர் கதாநாயகியையும், கதாநாயகனையும் சுற்றி வந்து அந்தக் காட்சியைப் படம் பிடித்தார்.”, என்றார்.
உணர்வுப்பூர்வமான கலைஞன்: இயக்குனர் மித்ரன் ஜவஹர்
”திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாரதிராஜாவை ‘ட்ரெண்டிங் தாத்தா’வாக ஒவ்வொரு வீட்டிற்குள்ள்ளும் அழைத்துச் சென்ற இயக்குனர் மித்ரன் ஜவஹரிடம் பாரதிராஜாவைப் பற்றிப் பேசும்போது, “நானும், நடிகர் தனுஷும் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகிய இருவரின் மிகப் பெரிய ரசிகர்கள்; படப்பிடிப்பு முடிந்தவுடன் நாங்கள் இருவரும் அறைக்குச் சென்று பாரதிராஜா, இளையராஜா அவர்கள் இருவரும் இணைந்து பணிபுரிந்த திரைப்படங்களின் பாடல்களைக் கேட்டு ரசிப்போம்.
அதிலும், குறிப்பாக நான் இயக்குனர் பாரதி ராஜா அவர்களின் “முதல் மரியாதை” திரைப்படத்தை மிகவும் வியந்து பார்த்திருக்கிறேன்.
"நாம் இதில் நுட்பமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், தமிழ் சினிமாவுக்கு அப்படி ஒரு காதல் கதை மிகவும் புதிது. அப்படியொன்றை தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்களா? என்பது சந்தேகம், ஆனால் அதனை விரசம் இல்லாமல் அவ்வளவு அழகாக காட்டியிருப்பார்,” என்றார்.
மேலும், “ திருச்சிற்றம்பலம் கதையை எழுதியபோதே தனுஷின் தாத்தாவாக பாரதிராஜா அவர்கள் தான் நடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. நடிகர் தனுஷ் போனில் திருச்சிற்றம்பலம் கதையை பாரதிராஜா அவர்களிடன் கூறினார். உடனே அவரும் நடிக்க ஒத்துக் கொண்டார். பாரதிராஜா அவர்களை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தோம். அவர் பாடல்களை செட்டில் அவ்வப்போது ஒலிக்கவிட்டதெல்லாம் மறக்க முடியாத அனுபவம். அவரும் நடிப்பில் மிகவும் அருமையாக ஒத்துழைப்புக் கொடுத்தார்." என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்