You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொன்முடி: 41.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல்
தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 41.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 81.7 லட்ச ரூபாய் பணம் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் 13 லட்ச ரூபாய்) பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு அவரை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் செந்தில்பாலாஜியைப் போல அவரும் கைது செய்யப்படக் கூடும் என்று கூறப்பட்ட நிலையில், சுமார் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு நள்ளிரவில் அவர் வீட்டிற்குத் திரும்பினார். விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்ததாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமாக சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை நேற்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விக்கிரவாண்டி சாலையில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. இதேபோல், அவரது மகனும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற போது அங்கே இருந்த அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 13 மணி நேர சோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு அவரை சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அமைச்சர் பொன்முடியை அவரது காரிலேயே அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு தனி அறையில் அவரிடம் விசாரணை நடைபெற்றது. வீட்டில் கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இந்த விசாரணை இன்று நள்ளிரவு 3 மணியளவில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி அங்கிருந்து வீட்டிற்கு தனது காரிலேயே புறப்பட்டு சென்றார்.
இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக சம்மன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், "இதுபோன்ற சோதனைகளால் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் குழப்பத்தை விளைவிக்கலாம் என்று பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் கருதுகின்றன. ஆனால், ஆளுநரும், அமலாக்கத்துறையும் எங்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள் என்று எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மாநிலத்தில் அவர்கள் திமுகவுக்கு செய்யும் உதவி தொடரட்டும். இது 2024 தேர்தலில் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்... அவர்கள் (பாஜக) அமலாக்கத்துறை போன்ற அரசு அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயல்கிறார்கள். 2024-ம் ஆண்டில் பாஜக தூக்கி எறியப்படும்." என்று கூறினார்.
அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கடந்த ஆண்டு விடுபட்ட அமைச்சர் பொன்முடி மீது சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அண்மைக் காலமாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், மாநிலத்தில் ஆளும் திமுக அரசுக்கும் இடையே நீடிக்கும் மோதல், இவர் வகிக்கும் உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதிலும் எதிரொலித்தது.
செந்தில்பாலாஜிக்கு அடுத்தபடியாக பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடக்கலாம் என்று மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், இன்று அது நடந்திருக்கிறது.
சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் சென்றனர். காலை 7 மணி தொடங்கி பல மணி நேரமாக அங்கே சோதனை நடைபெற்று வந்தது. அந்த வீட்டில் அமைச்சர் பொன்முடி இருந்தார்.
அதேநேரத்தில், விழுப்புரத்தில் சண்முகபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் பொன்முடி குடும்பத்தினர் அங்கத்தினர்களாக உள்ள சூர்யா அறக்கட்டளைக்குச் சொந்தமாக, விக்கிரவாண்டி சாலையில் உள்ள பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
விழுப்புரத்தில் அமலாக்கத்துறையைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மத்திய பாதுகாப்பு படையுடன் இந்த சோதனை நடைபெற்றது. சென்னை, விழுப்புரம் என அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத்தூறை சோதனை மேற்கொண்டாத முதல் கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலங்கள், பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இல்லம் கயல் பொன்னி ஏஜென்சி சூரியா பொறியியல் கல்லூரிகளில் நடைபெற்ற அமலாக்க துறை சோதனை 17 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு பெற்றது
அமைச்சர் பொன்முடி மீதுள்ள வழக்குகள் என்ன?
2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததால் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.
சென்னை சைதாப்பேட்டையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றில் இருந்து நீதிமன்றம் ஏற்கெனவே பொன்முடியை விடுவித்திருக்கிறது
கௌதம சிகாமணி மீதுள்ள வழக்கு என்ன?
ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல், இந்தோனேஷியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் முதலீடு செய்து அதன் மூலம் பல கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளார் என்று கௌதம சிகாமணி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. வெளிநாடுகளில் கௌதமசிகாமணி செய்த முதலீடுகள் மற்றும் அவர் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் லாபம் ஈட்டிய தொகைகளுக்கு ஈடாக 8.60 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துகளை அமலாக்கத்துறை 2020-ம் ஆண்டு 'பெமா' சட்டத்தின் கீழ் முடக்கியது.
அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் இந்த வழக்கில் தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமலாக்கத்துறை சோதனைக்கு ஆளான 2-ஆவது அமைச்சர்
தமிழ்நாடு அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கு அடுத்தபடியாக அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியுள்ள 2-வது அமைச்சர் பொன்முடி ஆவார். செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய பின்னர் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்ற நிலை அமைச்சர் பொன்முடிக்கும் வரக் கூடுமோ என்ற யூகங்களும் எழுந்துள்ளன.
அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சிகள் ரத்து
அமலாக்கத்துறை சோதனை காரணமாக அமைச்சர் பொன்முடி இன்று பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த அரசு விழா ரத்தாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் புறப்பாடு
அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தேசிய அளவில் ஒன்று கூடும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமலாக்கத்துறை சோதனை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
"பாட்னாவிலும், அதன் தொடர்ச்சியாக பெங்களூருவிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்துவது மோதி அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் இந்த அமலாக்கத்துறை சோதனை. வட மாநிலங்களில் செய்து கொண்டிருந்த அதே வேலையை தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருக்கிறார்கள். அதைக் கண்டு திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த வழக்கு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது புனையப்பட்ட பொய் வழக்கு. அதன் பிறகு அதிமுகதான் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் இந்த வழக்கில் அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அமைச்சர் பொன்முடி 2 வழக்குகளில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டார். அதுபோல் இந்த வழக்கில் இருந்தும் அவர் மீண்டு வருவார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கெல்லாம் பதில் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
ஒரு வரியில் சொல்வதென்றால், பீகார், கர்நாடகாவைத் தொடர்ந்து இன்னும் பல மாநிலங்களில் நடக்கவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்ப மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு செய்யும் தந்திரம்தான் இதுவே தவிர வேறில்லை. இதனை எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் சமாளிப்போம்." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதனால் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதா என்ற செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாட்டில் திமுகவுக்காக ஏற்கனவே ஆளுநர் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார். அதில் தற்போது அமலாக்கத்துறையும் சேர்ந்திருக்கிறது. அவ்வளவுதான்" என்றார்.
கடந்த முறை பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்