You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தந்தையர் தினம்: "அப்பாக்கள் உணர்வுகளை வெளிக்காட்ட தெரியாதவர்கள்"
- எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கலையின் நவீன வடிவமான சினிமாவில், ஒரே கனத்தில் அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தி, அவர்களுக்கு மிக நெருக்கத்தில் உணரச்செய்யும் கதாபாத்திரங்களின் பட்டியலில் கண்டிப்பாக அப்பா கதாபாத்திரத்திற்கு தான் முதலிடம்.
அப்பா என்பவர் என்றைக்கும் சுவாரசியமான புத்தகம் தானே. சிலர் படித்து பாடம் பெறுகிறார்கள். இன்னும் சிலரோ படிக்கத் தவறி அவரை இழந்த பின்பு இன்னும் படித்திருக்கலாம், வாழ்க்கை முழுதும் நினைத்துப் பார்க்க இன்னும் சில படிப்பினைகளை அப்புத்தகத்திலிருந்து கற்றுத் தெரிந்திருக்கலாம் என வருந்துகிறார்கள். இப்படியாக, அப்பா கதாபாத்திரங்கள் எப்பொழுதும் சினிமாவில் ரசிகனுக்கும், திரைக்கும் இடையே ஆத்மார்த்த தொடர்பை ஏற்படுத்தியுள்ளன.
இயக்குநர்களின் கண்ணியமான எழுத்து மற்றும் கலைஞர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு என இவை இரண்டும் இணைந்து சில காலத்தால் அழியாத அப்பா கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
காலத்தால் அழியாத, மக்கள் மனதில் நின்ற “அப்பா” கதாபாத்திரங்கள்
- தீபாவளிக்கு முதல் நாள் எப்பாடுபட்டாவது குழந்தைகளுக்கு புது துணியும், பட்டாசும், பலகாரமும் வாங்க பாடு படும் எளிய மக்களின் பிரதிநிதியாக வலம் வந்த இயக்குனர் சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படத்தின் “இராமையா” கதாபாத்திரம். இயக்குனர் சேரனும், இராமையாவாக நடித்த ராஜ்கிரணும் வாழ்வியல் முரண்களை அத்திரைப்படத்தின் காட்சிகளின் வாயிலாக ரசிகர்களின் கண் முன் நிறுத்தி வாழ்வின் எதார்த்தத்தை பதிவு செய்திருப்பார்கள்.
- அப்பா என்றால் தோள் மீது கை போடும் இனிய உறவாகவும், அம்மாவுக்கு கால் பிடித்து விட்டுக் கொண்டே, மகனின் காதல் கதைகளையும், கிடாரையும் ரசித்து மில்லெனியம் ஜெனரேஷனின் மனதைக் கொள்ளை கொண்ட இயக்குனர் கெளதம் வாசு தேவ் மேனனின் வாரணம் ஆயிரம் “கிருஷ்ணா”.
- பிள்ளைகளுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்றெல்லாம் தெரிந்து கொள்ள மாட்டேன்; ஆனால் அவர்களுக்கு எது சிறந்தது என தெரிந்து வைத்து அவர்களது விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அவர்களுக்கு அதையே கொடுக்க விரும்புவேன் என முரட்டு பிடிவாதம் பிடிக்கும், பெரும்பாலான தமிழ் சமூகத்தின் மொத்த பிரதிபலிப்பாக இயக்குநர் ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தின் சுப்ரமணியம் கதாபாத்திரம்.
- அப்பா, மகள் உறவு என்பது இனிமையான உறவு. அப்பாவுக்கு மகள் தான் உலகம். அன்பு மகளாக த்ரிஷாவும், பேரன்பான தந்தையாக பிரகாஷ் ராஜீம் நடித்து இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய ஆதரவை சம்பாத்தித்த திரைப்படம் இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த அபியும், நானும் திரைப்படம்.
- இப்படி அப்பாவை மையமாக வைத்து அல்லது அப்பா கதாபாத்திரங்களை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்த திரைப்படங்கள் நூற்றுக்கணக்கில் வெளியாகியுள்ளன. அவற்றுள், அப்பா கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காமல் இடம்பிடிப்பதற்கு காரணமான சில இயக்குனர்களை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசினோம்.
தந்தை என்ற உணர்வு பொறுப்புணர்ச்சிக்குள் பயணப்பட வைக்கும்- டாடா இயக்குநர்
பொறுப்பற்ற இளைஞனாக வலம் வந்து அதனால் தன் மனைவியை பிரிய நேர்ந்து பின் பொறுப்பாக மாறும் இளம் தலைமுறை தந்தை ஒருவரின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து சமீபத்தில் வெளிவந்த டாடா திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபுவிடம் தந்தையர் தின கட்டுரைக்காக பேசும்போது, “ஒரு ஆண் தந்தையாக மாறும்போது பல பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. நமது சமூகத்தின் வரையறையின்படி ஆண் என்பவன் தந்தையாக மாறும்போது அவன் அவனது உணர்வுகளை அவ்வளவு சுலபமாக வெளியே காட்டக் கூடாது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு குழந்தையை வளர்க்க வேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் தேவை என ஒரு ஆய்வுக் கட்டுரையில் படித்தேன். தற்போதுள்ள தலைமுறையை வரையறுக்க வேண்டுமென்றால் Happy faces with sad generation எனச் சொல்லலாம். இதில், ஆணுக்கான அழுத்தங்கள் என்பது வேறு ஒன்றாக உள்ளது. நான் என் தந்தையை இதுவரை கட்டிப்பிடித்தது இல்லை. அப்படியே கட்டிப் பிடித்தாலும் அது எனக்கு மிகவும் வித்தியாசமாகவே இருக்கும். இப்படி பல உணர்வுகளை கூட வெளிப்படுத்த முடியாதவர்களாகவே ஆண்கள் இருக்கின்றனர்.”, என்றார்.
அப்பா - உணர்வுகளை வெளிக்காட்டத் தெரியாதவர்: இயக்குநர் சற்குணம்
இயக்குநர் சற்குணம் பேசியது பின்வருமாறு: “எனது அப்பா வெளிநாட்டில் வேலை செய்தவர். நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. ஆனால் நான் என் அப்பாவிடம் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்து விட்டதாக பொய் கூறிவிட்டேன். ஒரு வேளை என் அப்பா இந்தியாவுக்கு வந்து நான் தேர்ச்சியடையவில்லை என்ற உண்மை தெரிந்தால் என்னவாகியிருக்கும் என சிந்தித்து உருவாக்கியது தான் களவாணி திரைப்படம்.
நான் உதவி இயக்குநராக இருந்தபோது என் அப்பா என்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார். அதனால் தான் என்னை உதவி இயக்குநர்கள் கூட்டத்தில் நான் மிகவும் பணக்கார உதவி இயக்குநர் எனக் கிண்டல் அடிப்பார்கள். அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததால் தான் என்னால் நிறைய புத்தகங்கள் படிக்க முடிந்தது. என்னை நானே செதுக்கி கொள்ள முடிந்தது.
நான் களவாணி திரைப்பட ரிலீசன்று படம் பார்க்க தியேட்டருக்கு செல்லாமல் பயத்துடன் ரசிகர்களின் விமர்சனத்துக்காக அலுவலகத்தில் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது என் அப்பா லண்டனில் இருந்தார். லண்டனில் நமது நாட்டின் நேரத்திலிருந்து ஆறு மணி நேரம் பின்னோக்கி இருக்கும் அப்போதும் என் அப்பா என் மீதிருந்த அன்பினால் என் நண்பர்களுக்கு ஃபோன் செய்து நேரம், காலம் பார்க்காமல் நிலவரத்தைக் கேட்டுக் கொண்டார்.
ஒரு தந்தை எந்த ஒரு சூழ்நிலையிலும் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார். ஆனால், தன் குழந்தைகளை விட்டுக் கொடுக்க மாட்டார். குழந்தைகள் பொறுப்பில்லாமல் திரியும்போது கோபப்படுவதெல்லாம் அது அவர்களின் எதிர்காலத்தை நினைத்து தான் தவிர வேறெதும் இல்லை. அதைத் தான் நான் களவாணி திரைப்பத்திலும் காட்டினேன்” என்று உணர்வுப் பூர்வமாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
இன்னும் கொண்டாடப்படாத ஹீரோக்கள் தான் அப்பா: டி இமான்
திரைப்படங்கள் மட்டுமல்ல தந்தையைப் பற்றி வெளிவந்த பாடல்களும் ரசிகர்களின் வாழ்வில் நீங்காத இடம் பெற்றவை. அப்படி சில வருடங்களுக்கு முன்பு விசுவாசம் திரைப்படத்தில் “கண்ணான கண்ணே வெளிவந்து அப்பா என்ற உணர்வின் அர்த்த்தை இசை வடிவமாக்கி ரசிகர்களுக்கு வழங்கி, அதற்காக தேசிய விருதும் பெற்ற இசையமைப்பாளர் டி இமானிடம் பேசினோம்.
அவர் கூறும்போது, “தந்தையை நமது சமூகம் அவ்வளவாக கொண்டாடுவதில்லை. ஏனென்றால் தந்தைகளுக்கு உணர்வுகளை அவ்வளவாக வெளிக்காட்டத் தெரியாது. நமது சமூகத்தில் தாய்மையை மட்டுமே தொடர்ந்து கொண்டாடி வருகிறோம்.
”ஆராரிரோ” என்ற சொல்லாடல் கூட தொடர்ந்து தாய் குழந்தைக்குப் பாடும் தாலாட்டாகவே காலங்காலமாக எழுதப்பட்டு வருகிறது. அந்த மரபை உடைக்க வேண்டுமென்பதாலேயே நான் தந்தை தன் மகளுக்குப் பாடும் பாடலின் முதல் சொல்லாக “ஆராரிராரோ” வை வைத்தேன். கண்ணான கண்ணே பாடலை கவிஞர் தாமரை எழுதியிருந்தாலும் முதல் வரியான “ஆராரிரோ” என்பதை மட்டும் நான் எழுதினேன். அதனை மாற்ற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டேன்”, என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்