You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்மிதா பாட்டில்: சினிமாவில் மிக குறுகிய காலத்தில் சிகரம் தொட்ட 'அசாதாரண நாயகி'
2015 ஆம் ஆண்டு, பத்மபூஷன் விருதை பெறுவதற்காக ஸ்மிதா பட்டீலின் 88 வயதான தந்தை சிவாஜிராவ் கிரிதர் பாட்டில் வந்திருந்தார். ராஷ்டிரபதி பவனின் தர்பார் அரங்கிற்குள் நுழைந்தபோது அவரது கண்கள் கலங்கியிருந்தன.
அது பட்டீலின் குடும்பத்திற்கு மிக முக்கியமான நாள். 28 ஆண்டுகளுக்கு முன்பு, சிவாஜி ராவ்வின் மகள் ஸ்மிதாபாட்டில், பதம் ஸ்ரீ விருதை பெறுவதற்காக இதே ராஷ்டிரபதி பவனுக்கு வந்திருந்தார்.
ஆம் ஸ்மிதா பாட்டில்!
70களில் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஒரு அசாதாரணமான நடிகை.
எதிர்பாராத வாய்ப்புகளைப் பெற்று, குறுகிய காலத்தில் திரைத்துறையில் பல சாதனைகளைப் படைத்த ஸ்மிதா பாட்டில், அதே வேகத்தில் இந்த பூமியையும் விட்டுப் பிரிந்தார். ஆம் தன்னுடைய 31வது வயதில் மரணத்தைத் தழுவிய ஒரு சிறந்த நடிகையின் கதை இது.
தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளரான ஸ்மிதா பாட்டில்
ஸ்மிதா பாட்டில் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி பிறந்தார். அவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மராத்தி மொழியில்தான் பயின்றார். படிப்பை முடித்த பின் அவர் மும்பை தூர்தர்ஷனில், மராத்தி மொழியில் செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தைத் துவங்கினார்.
அவர் செய்தி வாசிப்பாளராக ஆனதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறது. ”ஸ்மிதா பட்டீலின் தோழி ஜோத்ஸ்னா கிர்பேக்கர் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். அவருடைய கணவர் தீபக் கிர்பேக்கர் ஒரு புகைப்பட கலைஞர். அவர் அவ்வபோது ஸ்மிதாவை புகைப்படம் எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
தீபக் கிர்பேகர் ஒருமுறை தூர்தர்ஷனுக்கு ஜோத்ஸ்னாவை சந்திக்க சென்றபோது, கையில் ஸ்மிதாவின் புகைப்படங்களை எடுத்துச்சென்றிருந்தார். உள்ளே நுழைவதற்கு முன்பாக, கேட்டின் அருகே அமர்ந்து ஸ்மிதாவின் படங்களை அடுக்கிக்கொண்டிருந்தார் தீபக். அப்போது அவ்வழியாக சென்ற மும்பை தூர்தர்ஷனின் இயக்குனர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி அந்த புகைப்படங்களை பார்த்தார்.
தீபக் கிர்பேக்கரிடம் ஸ்மிதா குறித்து கேட்டறிந்த கிருஷ்ணமூர்த்தி, ஸ்மிதாவை தான் சந்திக்க வேண்டுமென்று கூறினார்”.
இந்த நிகழ்வுதான் ஸ்மிதா என்ற சிறந்த நடிகை, இந்திய சினிமாவுக்கு கிடைப்பதற்கு திறவுகோலாய் அமைந்தது. மைத்திலி ராவ் என்னும் எழுத்தாளர் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தில்தான் ஸ்மிதாவின் தோழி ஜோத்ஸ்னா கிரிப்பேக்கர் மேற்கூறிய நிகழ்வுகள் குறித்துக் குறிப்பிட்டிருக்கிறார்.
“தூர்தர்ஷனில் நடந்தவை குறித்து தீபக் ஸ்மிதாவிடம் கூறியபோது, அவர் முதலில் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பின் தீபக் கிரிப்பேக்கரின் வலியுறுத்தல் காரணமாகவே அவர் கிருஷ்ணமூர்த்தியை சந்திக்க ஒப்புக்கொண்டார். தீபக்கின் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்தபடி, தூர்தர்ஷனுக்கு சென்றார் ஸ்மிதா. அங்கு அவருக்கு ஆடிஷன் வைக்கப்பட்டது.
ஆடிஷனில் தனக்குப் பிடித்த ஏதாவது ஒன்று குறித்து ஸ்மிதாவை பேச சொல்லியிருக்கிறார்கள். அப்போது ஸ்மிதா வங்கதேசத்தின் தேசிய கீதமான, ‘அமர் ஷோனா பங்களா’ பாடலை பாடினார்.
அந்த ஆடிஷனில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை தூர்தர்ஷனில் மராத்தி செய்தி வாசிப்பாளராக ஸ்மிதாவின் பயணம் தொடங்கியது” என்று மைதிலி ராவ்வின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஸ்மிதாவின் நீண்ட கழுத்தும், அவரது குரலும் அனைவரையும் வெகுவாக ஈர்த்தன. அப்போது ஸ்மிதாவிடம் மிக அருமையான கைத்தறி புடவைகள் இருந்தன. அந்த புடவைகள் அவருக்கு மேலும் அழகு சேர்த்தன.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் செய்திகளைப் படிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக மட்டுமே தனது சேலைகளை ஜீன்ஸ் பேண்டிற்கு மேல் அவசர அவசரமாக அணிந்துகொள்வார்.
சரியாக மராத்தி பேசத் தெரியாத பலரும், தூர்தர்ஷனில் ஸ்மிதா செய்தி வாசிப்பதை கவனிக்க தொடங்கினார்கள். ஸ்மிதா மராத்தி மொழி வார்த்தைகளை உச்சரிப்பதை பார்த்து அவர்கள் மராத்தி கற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள்.
ஸ்மிதா பாட்டில் சினிமாவிற்குள் எப்படி நுழைந்தார்?
ஸ்மிதா பாட்டில் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பதை பார்த்த பிரபல இயக்குனர் ஷ்யாம் பினிகல், அவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதற்கு முடிவு செய்தார்.
அதேபோல் மனோஜ் குமார் மற்றும் தேவ் ஆனந்த் போன்றோரும் ஸ்மிதாவை தங்களுடைய படத்தில் நடிக்க வைக்க விரும்பினர். தான் விரும்பியபடியே பின்னாளில், ‘அனந்த் அவுர் அனந்த்’ என்ற தன்னுடைய படத்தில் ஸ்மிதாவை நடிக்க வைத்தார் தேவ் ஆனந்த்.
அதேபோல் பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா, ஸ்மிதாவின் தீவிர ரசிகராக இருந்தார். அவர் பாம்பேவில் எங்கு இருந்தாலும், ஸ்மிதாவின் செய்திகளை கேட்பதற்காக, மாலையில் சரியான நேரத்திற்கு தன்னுடைய வீட்டிற்கு வந்துவிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.
ஸ்மிதா பாட்டில் தனது திரை பயணத்தை இயக்குனர் அருண் கோப்கரின் படத்தின் மூலம் தொடங்கினார். அந்த சமயத்தில் இயக்குனர் ஷ்யாம் பினிகல், தன்னுடைய படத்திற்காக ஒரு புதுமுகத்தை தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது ஷ்யாம் பினிகலிடம், ஒலிப்பதிவாளராக (sound recordist) பணியாற்றி வந்த ஹிதேந்தர் கோஷ் என்பவர் ஸ்மிதா பட்டீலை அவருக்கு நியாபகப்படுத்தினார்.
அதன்பிறகு, ஸ்மிதாவை ஆடிஷன் செய்த ஷியாம் பினிகல், தன்னுடைய ‘சரந்தாஸ் சோர்’ படத்தில் நடிக்க வைத்தார். முதலில் ஸ்மிதாவிற்கு துணை கதாபாத்திரம் ஒன்றைதான் ஷியாம் வழங்கியிருந்தார். ஆனால் படப்பிடிப்பின்போது ஸ்மிதாவின் திறமையை கவனித்த அவர், தன்னுடைய ‘நிஷாந்த்’ படத்தில் ஸ்மிதாவிற்கு முக்கிய கதாபாத்திரம் ஒன்றை அளித்தார்.
ஸ்மிதாவுடைய நடிப்பின் தனித்துவம் என்னவென்றால், அவர் எந்த வேடத்திலும் தன்னை முழுவதுமாக வார்ப்பித்து கொள்வதுதான். ராஜ்கோட் அருகே 'மந்தன்' படப்பிடிப்பின் போது, அவர் தனது சொந்த ஆடைகளை அணிந்துகொண்டு கிராமத்து பெண்களுடன் ஒருவராக அமர்ந்திருந்தார்.
அப்போது படப்பிடிப்பை பார்ப்பதற்காக வந்த சில கல்லூரி மாணவர்கள், படத்தின் கதாநாயகி எங்கே என்று தேடினர். அப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்த ஒருவர், கிராமத்து பெண்களுடன் அமர்ந்திருந்த ஸ்மிதாவை கைக்காட்டி, இவர்தான் கதாநாயகி என்று கூற, கல்லூரி மாணவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
கமர்ஷியல் படங்கள் முதல் சிறு பட்ஜெட் படங்கள் வரை
பூமிகா, மந்தன், அர்த், மண்டி, காமன் மற்றும் நிஷாந்த் போன்ற படங்களில் நடித்த ஸ்மிதா பாட்டில்தான், ’சக்தி’ மற்றும் ’நம்கஹலால்’ போன்ற மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவான படங்களிலும் நடித்துள்ளார்.
’மந்தன்’ படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்த ஸ்மிதா பாட்டீல், ’பூமிகா’ என்னும் படத்தில் புரட்சிகரமான மராத்தி நடிகையாக அறியப்பட்ட ’ஹன்சா வத்கராக’ நடித்திருந்தார் . பூமிகா படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பிற்காக ஸ்மிதா பாட்டிலுக்கு தேசிய விருது கிடைத்தது.
அதேபோல் ‘பவானி பவாய்’ என்னும் மராத்தி படத்தில் பழங்குடி பெண்ணாக நடித்திருந்தார். ’அம்பர்தா’ என்னும் மற்றொரு மராத்தி படத்தில், வேறு ஒரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்ததும், அவரை விட்டு விலகி தனியே வாழும் பெண்ணாக நடித்திருப்பார்.
இப்படி தான் நடித்த படங்களின் மூலம் தன்னுடைய நடிப்பின் பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியிருப்பார் ஸ்மிதா.
கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்த நடிகை ஸ்மிதா
ஹிந்தி படங்களில் ஹீரோக்களின் ஆதிக்கமே அதிகமாக காணப்பட்டு வந்த நேரத்தில், தான் நடித்த படங்களில் மொத்த படத்தின் கதையையும் தன்னுடைய தோளில் ஏற்றி சுமந்து காட்டினார் ஸ்மிதா.
ஸ்மிதாவின் தோழியும், பிரபல பத்திரிகையாளருமான குங்கும் சாதா தனது ‘தி மேரிகோல்ட் ஸ்டோரி’ என்ற புத்தகத்தில், “ஸ்மிதா ஆரம்பம் முதலே சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் சின்ன பட்ஜெட் இயக்குனர்கள் பெரிய நட்சத்திரங்களை தேடி ஓட ஆரம்பித்ததும், ஸ்மிதாவும் பெரிய பட்ஜெட் படங்களின் பக்கம் திரும்பினார். பெரிய நட்சத்திரம்தான் கதைக்கு வேண்டும் என்றால் நானும் பெரிய நட்சத்திரமாக மாறுவேன் என்று மனதிற்குள் அவர் வாக்குறுதி எடுத்துக்கொண்டார்” என்று ஸ்மிதா பாட்டில் குறித்து எழுதியுள்ளார்.
’நம்கஹ்லால்’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மழையில் நனைவது போல ஸ்மிதா கவர்ச்சியாக ஆட வேண்டியிருந்தது. அந்த பாடல் முடிந்த பிறகு, அவர் அதற்காக கதறி அழுததாக கூறப்படுகிறது. இதுவரை தன் மீது ஏற்பட்டிருந்த மொத்த பிம்பமும், இந்த பாடலால் மாறிவிடும் என ஸ்மிதா அச்சம் கொண்டார்.
ஸ்மிதா நடித்த பிற மொழி படங்கள்
ஹிந்தி, மராத்தி, குஜராத்தி என பல மொழி படங்களில் ஸ்மிதா நடித்துள்ளார்.
இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக அன்றைய காலத்தில் ஸ்மிதா இருந்தார்.
இயக்குனர் ஜி.அரவிந்தன் இயக்கிய ‘சிதம்பரம்’ என்னும் மலையாள படத்தில், ஒரு தமிழ் பெண்ணாக நடித்திருந்தார் ஸ்மிதா பாட்டில். ஒருமுறை கூட ஒத்திகை பார்க்காமல் நேரடியாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனாலும் அந்த படத்தில் ஸ்மிதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
கிட்டதட்ட 12 ஆண்டுகள் ஸ்மிதா பாட்டில் திரைத்துறையில் நடித்தார். சில நடிகர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் சாதிக்க முடியாததை ஸ்மிதா அந்த 12 ஆண்டுகளில் சாதித்து காட்டினார்.
ஷபானா ஆஸ்மியுடன் போட்டி
மகேஷ் பட் இயக்கிய ‘அர்த்’ மற்றும் ஷியாம் பினிகல் இயக்கிய ’மண்டி’ ஆகிய படங்கள் உட்பட பல படங்களில் ஸ்மிதா பாட்டிலும், ஷபானா ஆஸ்மியும் இணைந்து நடித்துள்ளனர்.
ஆனால் ஷபானா ஒருபோதும் ஸ்மிதாவிடம் அரவணைப்பான சுபாவத்தை வெளிப்படுத்தியதில்லை. ஸ்மிதாவின் நடிப்பு தன்னை தொந்தரவு செய்ததாக ஒருமுறை ஷபானா கூறியுள்ளார்.
மகேஷ் பட் தன்னுடைய ‘அர்த்’ படத்தில் ஷபானா மற்றும் ஸ்மிதா ஆகிய இருவருக்கும் சமமான கதாபாத்திரங்களை கொடுத்து நடிக்க வைத்தார். அவர்கள் இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது என்பது அவருக்கு தெரியும். அந்த போட்டிகளின் மூலம் அவர்கள் இருவரும் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும் என அவர் நம்பினார்.
அந்த படத்திற்காக ஷபானாவிற்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் இந்த படத்தில் ஸ்மிதாவின் கதாபாத்திரத்தை நீக்கினால், கதையே இருக்காது என்று கூறி ஸ்மிதாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார் மகேஷ் பட்.
ஷபானாவும், ஸ்மிதாவும் தங்களுக்குள் பேசிகொள்வதில்லை என்றாலும், ஒருவர் மீது மற்றொருவர் கன்னியமான மரியாதையை கொண்டிருந்தனர்.
ஸ்மிதாவின் அந்த திடீர் மரணம், ஷபானா ஆஸ்மியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ராஜ் பாபருடன் காதல்
ஸ்மிதா பாட்டில் தன்னுடன் நடித்த சக நடிகர் ராஜ் பாபர் மீது காதல் கொண்டார். ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, குழந்தைகள் இருந்தனர். ராஜ் பாபரின் குடும்பத்திற்குள் நுழைந்து மற்றொரு பெண்ணின் வாழ்க்கையை அழிப்பதாக ஸ்மிதா மீது பழி விழுந்தது.
ஸ்மிதாவின் இந்த காதலுக்கு, அவருடைய தாயும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஸ்மிதா யாருடைய பேச்சையும் கேட்கவில்லை.
ராஜ் பாபரும், ஸ்மிதாவும் கல்கத்தாவில் ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தை இவர்கள் ரகசியமாக வைத்திருந்தனர். அவர்களுக்கு பிரதீக் என்ற ஒரு மகன் பிறந்தபோதுதான், இவர்களின் திருமண செய்தி வெளியுலகிற்கு தெரிய வந்தது.
மிகுந்த பக்குவமுடைய ஸ்மிதா பாட்டில், எப்படி ஏற்கனவே திருமணமான ஒருவருடன் காதலில் விழுந்தார் என பலரும் விமர்சித்தனர்.
ஆனால் அந்த விமர்சனங்கள் அவர்களது வாழ்க்கையை பாதிக்கவில்லை.
”ராஜ் பாபரின் உயர்ந்த குணத்தினால் ஈர்க்கப்பட்டுத்தான், அவரை காதலித்ததாக” பத்திரிக்கையாளர் கும்கும் சாதாவிடம் ஸ்மிதா பாட்டில் ஒருமுறை கூறியிருக்கிறார்.
இளம் வயதில் மரணித்த ஸ்மிதா பாட்டில்
1986ஆம் ஆண்டு தன்னுடைய மகன் பிறந்த பிறகு, தன் சொந்த வீட்டிற்கு வந்துள்ளார் ஸ்மிதா. அப்போதிலிருந்து அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. மேலும் அவரது உடல்நலம் தொடர்ந்து மோசமடைந்து வந்திருக்கிறது.
அந்த சமயத்தில் அவரால் மீண்டும் மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. ஆனால் ஒருகட்டத்தில் அவரை வலுகட்டாயமாக மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர். ஆனால் நிலைமை அப்போது கைமீறி போய்விட்டது.
குழந்தை பிறந்த பிறகுதான் ஸ்மிதாவின் உடல்நலம் மோசமடைய துவங்கியதாக ஸ்மிதாவின் சகோதரி நம்பினார். ஸ்மிதாவுக்கு வைரல் தொற்று ஏற்பட்டிருந்தது. அவருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டதாகவும் சிலர் கூறினர்.
ஸ்மிதாவின் உடல் உறுப்புகள், ஒன்றின் பின் ஒன்றாக செயலிழக்க துவங்கியது. இறுதியில் 1986ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ஸ்மிதா உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 31 மட்டுமே.
ஸ்மிதா ஒரு சுதந்திர பறவையாக இருந்தார் என அவரது சகோதரி அனிதா கூறுகிறார்.
”ஸ்மிதாவுக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடித்தமான ஒன்று. அதேபோல் அவர் பிறருக்கு உதவும் குணத்தையும் கொண்டிருந்தார். ஒருமுறை அவரது படப்பிடிப்பு தளத்திற்கு வந்த ஒருவர், தான் மிகுந்த வறுமையில் இருப்பதாக கூறி உதவி கேட்டார். ஸ்மிதா உடனடியாக தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் எடுத்து அவரிடம் கொடுத்தார்.
அவள் திரும்பி வீட்டிற்கு வரும்போது காருக்கு பெட்ரோல் போடுவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை. அதேபோல் தேசிய விருது பெற்றபோது கிடைத்த பணத்தை, அவர் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்தார்” என்று தனது சகோதரி குறித்து நெகிழ்கிறார் அனிதா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்