ஆதிபுருஷ் சர்ச்சை: 'சீதை இந்தியாவின் மகளா?' - எதிர்க்கும் நேபாள மக்கள்

ராமாயணத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் நேற்று இந்தியா முழுவதும் வெளியானது.

நடிகர் பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படம் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் வரும் அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்த ட்ரோல்கள் சமூக ஊடகங்களில் ஏற்கெனவே வைரலாகி வரும் நிலையில், தற்போது ஆதிபுருஷ் திரைப்படம் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சீதையைக் குறித்து ஆதிபுருஷ் திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்று, தற்போது இந்த சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது.

இந்தப் படத்தில், சீதையை ’இந்தியாவின் மகள்’ என்று வர்ணித்துள்ளனர். இதற்கு நேபாள தலைநகர் காத்மாண்டுவின் மேயர் பலேந்திர ஷா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

படத்தில் சீதையைக் குறிப்பிட்டு வரும் இந்த வசனத்தை நீக்குமாறு, அவர் படக் குழுவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு 3 நாள் வரை படக் குழுவினருக்குக் கால அவகாசம் கொடுத்துள்ள பலேந்திர ஷா, இந்த விவகாரம் மற்ற இந்தி மொழிப் படங்களுக்கும் பிரச்னையாக அமையலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் பிபிசி இந்தி சேவையிடம் பேசிய ஆதிபுருஷ் படக்குழுவினர், “அவர்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் குறிப்பிட்ட வசனம், நேபாள தணிக்கைக் குழுவினரால் ஏற்கெனவே முடக்கப்பட்டுவிட்டது,” என்று தெரிவித்தனர்.

காத்மாண்டு மேயரின் எதிர்ப்புக்கு என்ன காரணம்?

ராமாயணத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், ராமன், ராவணன், சீதை உள்ளிட்ட எந்த கதாபாத்திரங்களையும் சிறப்பான முறையில் வடிவமைக்கவில்லை என்ற விமர்சனங்கள் ஏற்கெனவே எழுந்துள்ளன.

இந்நிலையில், நேபாளத்தில் ஆதிபுருஷ் திரைப்படம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தப் படத்தில் சீதையை 'இந்தியாவின் மகள்' எனக் குறிப்பிட்டிருப்பது, அவர்களின் எதிர்ப்புக்குக் காரணமாகியுள்ளது.

"சீதை நேபாளத்தில் உள்ள ஜானக்பூரில் பிறந்தவர்” என்று நேபாள மக்களால் நம்பப்படுகிறது.

“எனவே சீதை இந்தியாவின் மகள் என்று வரும் வசனத்தைப் படக் குழுவினர் நீக்காவிட்டால், காத்மாண்டு நகரத்தில் இனி எந்தவொரு இந்தி படமும் வெளியாக முடியாது. இந்த வசனத்தை நீக்குவதற்கு அவர்களுக்கு 3 நாட்கள் மட்டும் அவகாசம் இருக்கிறது,” என்று பலேந்திரா ஷா எச்சரித்துள்ளார்.

நேபாள தணிக்கை குழுவினர் என்ன சொல்கின்றனர்?

இந்த வசனம் குறித்த விவகாரத்தில் நேபாள தணிக்கை குழுவினருக்கும் ஆட்சபேனை இருக்கிறது.

"அனைத்து நாடுகளிலும் உள்ள நடைமுறையைப் போலவே, நேபாளத்திலும் ஒவ்வொரு படமும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் ஆதிபுருஷ் திரைப்படமும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது” என்கிறார் நேபாளத்தின் திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர் ரிஷிராஜ் ஆச்சாரியா.

பிபிசியிடம் பேசிய அவர், “கடந்த புதன்கிழமை ஆதிபுருஷ் திரைப்படம் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. படத்தை முழுவதுமாகப் பார்த்த பிறகு, சீதையைக் குறிப்பிட்டு வரும் வசனத்தை நீக்கினால் மட்டுமே, படத்தைத் திரையிடுவதற்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சிலர், இந்த வசனம் வரும் இடத்தில் ‘பீப்’ ஒலியை நிரப்பலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் அப்படிச் செய்ய முடியாது. குறிப்பிட்ட வசனத்தைப் படத்திலிருந்து முழுவதுமாக நீக்க வேண்டும்.

நேபாளத்தை தவிர மற்ற இடங்களில் திரையிடப்படும் காட்சிகளிலும் இந்த வசனத்தை நீக்க வேண்டும். குறைந்தபட்சம் நேபாளத்தில் திரையிடப்படும் காட்சிகளிலாவது குறிப்பிட்ட வசனம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை நீக்கியிருக்கிறோம்,” என்று ரிஷிராஜ் தெரிவித்துள்ளார்.

திரைப்பட மேம்பாட்டு வாரியம் எதிர்ப்பு

'உண்மைக்குப் புறம்பான விஷயங்களை ஆதிபுருஷ் திரைப்படம் கூறியிருப்பதால், இந்த படத்திற்குத் தனது எதிர்ப்பை' திரைப்பட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

திரைப்பட மேம்பாட்டு வாரிய தலைவர் புவன் கே.சி வெள்ளிக்கிழமையன்று இதுகுறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அதில், “ஆதிபுருஷ் படத்தில் ‘ஜானகி இந்தியாவின் மகள்’ என்று வரும் வசனத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

நேபாளத்தின் பாரம்பரியம், சுதந்திரம் போன்றவற்றை தொடர்புபடுத்தி, எந்தவொரு படத்திலும் தவறான காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறுவதை திரைப்பட மேம்பாட்டு வாரியம் அனுமதிக்காது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வசனத்தை நீக்குமாறு, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தை, திரைப்பட மேம்பாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ளது.

நேபாள திரைப்பட சங்கம் என்ன சொல்கிறது?

ஆதிபுருஷ் படத்தில் வரும் வசனத்திற்கு காத்மாண்டுவின் மேயர் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, தனக்குப் பல மிரட்டல்கள் வருவதாகக் கூறுகிறார் நேபாள திரைப்பட சங்கத்தின் துணைத் தலைவர் பாஸ்கர் துங்கானா.

பிபிசி நேபாள சேவையிடம் பேசிய அவர், “பாதுகாப்பு கருதி நேபாளத்தில் நேற்று காலை வெளியாக வேண்டிய ஆதிபுருஷ் படத்தை, திரையிட வேண்டாமென நாங்கள் திரையரங்கு உரிமையாளர்களிடம் கூறினோம்.

இந்த விவகாரம் தொடர்பாக சில இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.

ஆனால் குறிப்பிட்ட வசனம் நீக்கப்பட்ட பிறகு, இத்தகைய போராட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகிறது. தணிக்கை குழுவினர் ஏற்கெனவே படத்திற்கு அனுமதி வழங்கிவிட்டனர்,” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, அக்‌ஷய் குமார் நடித்த ‘சாந்தினி சௌக் டூ சீனா’ என்ற திரைப்படத்தில் புத்தர் குறித்த சர்ச்சைக்குரிய வசனம் ஒன்று இடம்பெற்றிருந்தது. ஆனால் குறிப்பிட்ட அந்த வசனம் நீக்கப்பட்ட பிறகு, அந்தப் படம் நேபாளத்தில் திரையிடப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: