You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆதிபுருஷ்: திரைப்படமா? வீடியோ கேமா? - நெட்டிசன்கள் கலாய்க்கும் அளவுக்கு படத்தில் என்ன பிரச்னை?
ராமாயணத்தை அடிப்படையாக வைத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அந்தப் படத்தில் என்ன பிரச்னை?
ராமாயணக் கதையை அடிப்படையாக வைத்து இந்தியாவின் பல மொழிகளிலும் பல திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. தமிழில் சம்பூர்ண ராமாயணம் உள்பட பல படங்கள் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து வெளியாகிவிட்டன.
இதற்குப் பிறகு 1987-88இல் இந்தியாவின் அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒன்றரை ஆண்டுகளுக்கு ராமாயணக் கதை ஒளிபரப்பானது.
இதற்குப் பிறகும் மீண்டும் ராமாயணக் கதையை திரைப்படமாக எடுப்பதாக, இயக்குநர் ஓம் ராவத் அறிவித்தபோது, புதிதாக என்ன சொல்லப் போகிறார்கள் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், இந்தப் படத்தின் டீஸர் - ட்ரெய்லர் வெளியானபோது அந்த ஆர்வமெல்லாம் வடிந்துபோனது.
அந்த ட்ரெய்லரில் இருந்த கிராஃபிக் காட்சிகள் படுமோசமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, படத்தின் வெளியீட்டை தள்ளிப்போட்டு, கிராஃபிக்ஸை மேம்படுத்தப் போவதாக படக்குழு அறிவித்தது. இதனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாக வேண்டிய படம், ஓராண்டு கழித்து தற்போது வெளியாகியிருக்கிறது.
ஆதிபுருஷ் முப்பரிமாண சித்ரவதையா?
ராமாயணத்தின் ஆரம்பப் பகுதிகளை, டைட்டில் ஓடும்போதே ஓவியங்களில் சொல்லிவிடுகிறார்கள். ராமன் வனவாசம் போவதிலிருந்துதான் படத்தின் கதை துவங்குகிறது.
ஆதிபுருஷ் குறித்து சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்கள் வெளியாகிவரும் நிலையில், "மூன்று மணி நேர முப்பரிமாண சித்ரவதை" என்று குறிப்பிட்டிருக்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.
"ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் அதை திரைக்கதையாக எழுதும்போது பார்வையாளர்களை மூன்று மணிநேரம் கட்டிப்போடும் வகையில் ஜாலம் செய்திருக்க வேண்டாமா?" என்றும் இந்து தமிழ் திசையின் விமர்சனம் கூறுகிறது.
"சுவாரஸ்யம் கிஞ்சித்தும் இல்லாத தொய்வான காட்சியமைப்புகளால் பார்ப்பவர்கள் மத்தியில் ஒரு சின்ன சலனம்கூட ஏற்படவில்லை. இப்படத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்து, 100 எபிசோட்களாக பிரித்து இந்தியில் சீரியலாக வெளியிட்டிருந்தால் ஒருவேளை கவர்ந்திருக்கலாம்."
"படத்தில் உள்ள படு அபத்தமான மற்றோர் அம்சம், ஆடை அலங்காரம். எந்த நிலப்பரப்பில் எந்த காலகட்டத்தில் எப்படியான ஆடைகளை அணிந்திருப்பார்கள் என்ற ஒரு சின்ன ஆய்வுகூட செய்யத் தோன்றவில்லையா?
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இதிகாசத்தை திரைப்படமாக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் மட்டும் போதாது. அதை திரையில் கொண்டு வரும்போது திரைக்கதையில் கொஞ்சமேனும் மெனக்கெட வேண்டும். அது ‘ஆதிபுருஷ்’ படத்தில் முற்றிலுமாக மிஸ்ஸிங்," என்று விமர்சித்திருக்கிறது இந்து தமிழ் திசை.
இந்த விமர்சனத்தை ஒட்டியே, மற்ற சில ஊடகங்களும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால், சமூக ஊடகங்களில் இந்தப் படத்தை மிகக் கடுமையாக கேலி செய்தும் விமர்சித்தும் வருகின்றனர்.
சிலர் தூர்தர்ஷனில் ராமாயணத்தை இயக்கிய ராமானந்த சாகரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்தப் படம் வெளியாகும் திரையரங்கில் ஓர் இருக்கையை அனுமனுக்கு ஒதுக்க வேண்டுமென படத்தின் இயக்குநர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனால், சில திரையரங்குகளில் ஒரு இருக்கையை அனுமனுக்கு என ஒதுக்கி அவர் படத்தையும் வைத்திருந்தனர். ஆனால், இந்தப் படத்திற்கு வரும் விமர்சனங்களைப் பார்த்தால் 100 சதவீத இடங்களையும் அனுமனுக்குத்தான் ஒதுக்க வேண்டும் போலிருக்கிறது எனக் கூறியிருக்கிறார் ஒருவர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் விரல்விட்டு எண்ணக்கூடிய திரையரங்குகளிலேயே காலை 8 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. ஆனால், முதல் சில காட்சிகளுக்கு பெரிய ரசிகர்களின் வரவேற்பு இல்லை. இதனையும் சிலர் கேலி செய்துள்ளனர்.
மக்களால் மிகவும் அறியப்பட்ட ஒரு கதையை மீண்டும் மீண்டும் படமாக்கும்போது, அந்தக் கதையில் புதிய பரிமாணத்தைக் காட்டுவது, புதிய விளக்கங்களைச் சொல்வது ஆகியவற்றின் மூலமாகவே படத்திற்கு வரும் ரசிகர்களைக் கவர முடியும்.
ஆனால், இந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற பழங்கதைகளை எடுக்கும்போது, சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக கதையில் எவ்வித மாற்றத்தையும் செய்யாமல் படமாக்குகின்றனர். சமீபத்தில் சமந்தா நடித்து வெளியான சாகுந்தலம் இதேபோன்ற விமர்சனத்தைத்தான் எதிர்கொண்டது.
இந்தப் படத்திலும் ராமாயணக் கதையின் ஒரு பகுதியை அப்படியே சொல்ல முயன்றிருக்கின்றனர். ஆனால், ராமாயணத்தில் உள்ள செவ்வியல் காட்சிகளை நவீனமாகக் காட்டுகிறோம் என்ற பெயரில் வீடியோ கேம்களிலும் ஐரோப்பிய வெப் சீரிஸ்களிலும் வருவதைப் போன்ற கோட்டைகள், ஆடை வடிவமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
ராமாயணத்திற்கு சற்றும் பொருந்தாத பேய்க் காட்சிகள், ராவணனுக்கு வவ்வால் வாகனம் என்று இருப்பது, ராமாயணத்தை எதிர்பார்த்து வரும் ரசிகர்களை இன்னும் அன்னியப்படுத்துகிறது.
"எங்கள் பெண்ணைத் தொட்டவனை சும்மா விடமாட்டோம்", "தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போரில் நடுநிலை வகிப்பவன் இன்னும் ஆபத்தானவன்" என்பது போன்ற வசனங்களின் மூலம் ஏதோ சொல்ல முயல்கிறார்கள். ஆனால், எதுவும் சுவாரஸ்யமாக அமையவில்லை.
சுமார் 3 மணி நேரத்திற்கு, நமக்கு ஏற்கெனவே தெரிந்த கதையை, மிக மோசமான காட்சியமைப்புகளோடு, திரைக்கதையோடு சொல்லியிருக்கிறது 'ஆதிபுருஷ்'.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்