நரேந்திர மோதி ஆட்சியில் நாட்டின் கடன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதா - உண்மை என்ன?

    • எழுதியவர், அன்ஷுல் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் கடன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அந்தக் கட்சி கொண்டாடி வரும் வேளையில் காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், பாஜக தொண்டர்கள், மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகள் என்ன?

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு மோதி அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம்,” என்று பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

“2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, கடந்த 67 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த கடன் 55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் 2014இல் பிரதமராக நரேந்திர மோதி பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் கடன் 155 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதாவது வெறும் ஒன்பது ஆண்டுகளில் மோதி தலைமையிலான மத்திய பாஜக அரசு 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ளது. இந்தியாவின் கடனை மூன்று மடங்கு உயர்த்தி இந்த விஷயத்தில் பிரதமர் மோதி சாதனைப் படைத்துள்ளார்,” என்று சுப்ரியா கூறியிருந்தார்.

பாஜக பதிலடி

காங்கிரசின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, நாட்டின் கடன் விஷயத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) பின்னணியில் பார்க்க வேண்டும் என்று பாஜக விளக்கம் அளித்துள்ளது.

“நாட்டின் பொருளாதார நிலை, நிதிப் பற்றாக்குறையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 2013-14 முதல் 2022-23 வரையிலான ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 113.45 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 272 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது 139 சதவீதம் அதிகம். கடன் இருந்தபோதிலும் மோதி தலைமையிலான அரசில், கடந்த 2014இல் இருந்து நாட்டின் நிதிப் பற்றாக்குறை குறைந்துள்ளது,” என்று பாஜகவின் ஐடி பிரிவின் தலைவர் அமித் மாளவியா பதிலடி கொடுத்துள்ளார்.

“கொரோனா காரணமாக எடுக்கப்பட்ட சில பொருளாதார முடிவுகளின் விளைவாக, 2020-21 நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை குறுகிய காலத்திற்கு அதிகரித்தது. தற்போது நிதிப் பற்றாக்குறை மீண்டும் குறைந்துள்ளது. 2023 நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை ஜிடிபி உடன் ஒப்பிடுகையில் 6.4 சதவீதமாக வைத்திருப்பது அரசின் இலக்காக உள்ளது,” என்றும் மாளவியா விளக்கம் அளித்துள்ளார்.

2014 வரை மத்திய அரசின் கடன் எவ்வளவு?

நாட்டின் கடன் நிலவரம் குறித்து, மத்திய பட்ஜெட் குறித்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

‘2014 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு மீதான கடன் நிலவரம்’ என்ற தலைப்பிலான அந்த விளக்கத்தின்படி, 2014 மார்ச் 31ஆம் தேதி வரை, நாட்டின் மொத்த கடன் 55.87 லட்சம் கோடியாக இருந்துள்ளது.

இவற்றில் உள்நாட்டுக் கடன்கள் 54.04 லட்சம் கோடி ரூபாயாகவும், வெளிநாடுகள் தொடர்பான கடன்கள் 1.82 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

இவற்றில் ரிசர்வ் வங்கி வெளியிடும் சிறப்பு பங்குகள், வெளிச்சந்தையில் கடன்களை அதிகரிப்பது உள்ளிட்டவை உள்நாட்டு கடன்களாக கருதப்படுகின்றன.

சர்வதேச நிதி நிறுவனங்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து பெறப்படுபவை வெளிநாட்டு கடன்களாகவும் கருதப்படுகின்றன.

2023 வரை மத்திய அரசின் கடன் எவ்வளவு?

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், 2022-23 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 152.61 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

இவற்றில் உள்நாட்டு கடன்கள் 148 லட்சம் கோடி ரூபாயாகவும், வெளிநாட்டுக் கடன் 5 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என்றும் அப்போது மதிப்பிடப்பட்டிருந்தது.

இவற்றுடன் கூடுதல் பட்ஜெட் செலவினங்கள் (Extra Budgetary Resources) மற்றும் நிதி இருப்புகளைச் சேர்த்தால் நாட்டின் மொத்த கடன் 155.77 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

நிதி அமைச்சரின் விளக்கம்

இந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நாட்டின் கடன் நிலவரம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான நமா நாகேஷ்வர ராவ், எழுத்துப்பூர்வமாக இந்தக் கேள்வியை எழுப்பி இருந்தார்.

அவரது கேள்விக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தார்.

அதில், “2023 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசின் மொத்த கடன் கிட்டத்தட்ட 155.8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது(இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57.3 சதவீதம்).

இவற்றில், வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் கடன் 7.03 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் (ஜிடிபியில் 2.6 சதவீதம்) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று மத்திய நிதி அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.

மோதி ஆட்சியில் கடன் வேகமாக அதிகரித்துள்ளதா?

காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுப்படி, பிரதமர் மோதி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் கடன் பெரிய அளவில் அதிகரித்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

இந்தக் கேள்விக்கு விடை காணும் நோக்கில், இந்தியாவில் கடந்த ஐந்து முறை மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசுகள், தங்களது ஆட்சியின் இறுதி ஆண்டில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்களில் குறிப்பிட்டிருந்த கடன்கள் குறித்த புள்ளிவிவரங்களை பிபிசி ஆய்வு செய்தது.

அதில், மத்திய அரசின் கடன் விகிதம் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் 70 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு கடன் அதிகரிக்கப்பதற்கான காரணம் குறித்து, பொருளாதார நிபுணர் அருண் குமார் கூறும்போது, "அரசின் கடன் என்பது அதன் வரவு மற்றும் செலவுகளைப் பொருந்தது. அரசின் மொத்த செலவுகள் வரவைவிட அதிகமாக இருந்தால், நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு கடன் வாங்க வேண்டி வரும்.

கடந்த 1980க்கு பிறகு, மத்திய பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை நாம் சந்தித்து வருகிறோம். அரசின் தற்போதைய வருவாயைவிட செலவுகள் அதிகமாக இருந்தால், அது வருவாய் பற்றாக்குறையை குறிக்கும். இந்த பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு கடன் வாங்க வேண்டியுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் பெரும் பங்கு பல்வேறு திட்டங்களுக்கான மானியங்கள் அல்லது பாதுகாப்புக்கு செலவிடப்படுகிறது. அதன்பின், நாட்டின் கடன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது," என்றார்.

அரசாங்கங்களின் கடன் எங்கே செலவிடப்படுகிறது?

ஆனால், அரசுகள் ஏன் இவ்வளவு கடன்களை வாங்குகின்றன? இந்தக் கடன் தொகைகள் எங்கெல்லாம் செலவிடப்படுகின்றன?

இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.

இந்தக் கேள்விகளுக்கு விடை காணும் நோக்கில், பொருளாதார ஆய்வாளர் பரஞ்சோய் குஹா தாகுர்தா மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்ட பொருளாதார நிபுணரான டாக்டர் சுவ்ரோக்மல் தத்தா ஆகியோருடன் பிபிசி உரையாடியது.

மோதி அரசும் இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது

“பிற அரசுகள் மக்களுக்கு இலவசங்களை அள்ளி வழங்குகின்றன என்று மோதி அரசு கூறி வருகிறது. ஆனால் அவரது தலைமையிலான அரசும் இலவசங்களை அளிக்கத்தான் செய்கிறது. இதற்குத் தேவையான நிதிக்கு கடன் வாங்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

இவ்வாறு அளவுக்கு அதிகமாக வாங்கப்படும் கடனால் ஏற்படும் சுமை அரசை இன்று பாதிக்காமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் நம் குழந்தைகளின் மீது தான் இந்த கடன் சுமை விழும்.

நாட்டின் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை பெருக்கவில்லை என்றாலோ, நாட்டில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்படவில்லை என்றாலோ அரசு தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டே இருக்கத்தான் வேண்டி வரும். அரசு கடனில் இயங்குவது துரதிருஷ்டவசமானது,” என்கிறார் பொருளாதார ஆய்வாளர் பரஞ்சோய் குஹா தாகுர்தா.

ஜிடிபி புள்ளி விவரத்தில் குழப்பம்

ஜிடிபி ஒதுக்கீடு குறித்து அரசு தெளிவான தகவல்களை அளிப்பதில்லை எனவும் கூறுகிறார் அவர்.

"நாட்டில் உள்ள சில தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு உயர்ந்ததாலோ அல்லது வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்ததாலோ ஜிடிபி உயர்ந்துள்ளதா?" என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

ஜிடிபி குறித்த அரசின் புள்ளிவிவரங்களில் இருந்து,பொருளாதாரத்தில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான வேறுபாடு தெரியாமல் போய்விடும் என்கிறார் பரஞ்சோய் குஹா.

கடன் தொகை எங்கே போகிறது?

பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரை இலவசமாக வழங்குகிறோம் என்று அரசாங்கம் கூறுகிறது. விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இவை தொடர்பான திட்டங்களுக்கு அரசின் கடன் தொகை செலவிடப்படுகிறது.

மேலும், நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டவும் கடன் தொகை பயன்படுத்தப்படுகிறது என்கிறார் பரஞ்சோய் குஹா.

காங்கிரசை சாடும் பொருளாதார நிபுணர்

“மத்திய அரசின் கடன்கள் குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள், தரவுகள் எங்கிருந்து கிடைத்தன என்ற ஆதாரங்களை அக்கட்சி தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கூறுவது போல நாட்டின் கடன் இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு அதிகரித்து விட்டது என்று மத்திய அரசோ அல்லது எந்தவொரு சர்வதேச அமைப்போ அதிகாரப்பூர்வமாகக் கூறவில்லை," என்கிறார் பொருளாதார நிபுணரான டாக்டர் சுவ்ரோக்மல் தத்தா.

"மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்த அறிக்கையிலும், 2014ஆம் ஆண்டு முதல் இது நாள்வரை அரசு வாங்கிய கடன்கள் குறித்து அவர் எந்த புள்ளி விவரத்தையும் தரவில்லை.

கடந்த 2023ஆம் நிதியாண்டு வரை நாட்டின் மொத்த கடன் 155 லட்சம் கோடி ரூபாய் என்றுதான் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் காங்கிரஸ் ஆட்சி புரிந்த கிட்டத்தட்ட 60 ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடன்களும் சேரும்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாட்டின் ஒவ்வொரு குடிமகன் மீதும் 17 ஆயிரம் ரூபாய் கடன் சுமை இருப்பதாக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என அனைத்து சர்வதேச அமைப்புகளும் உறுதி செய்திருந்தன.

காங்கிரஸ் ஆட்சி செய்தபோது நாட்டின் மொத்த மக்கள் தொகை 115 கோடி அல்லது 120 கோடியாக இருந்தது. இந்தக் கடன்களுக்கு எல்லாம் இப்போது யார் பதில் சொல்வது?

அரசின் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்துவது, அதன் பின்னர் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்காமல் ஓடிவிடுவது என்ற பாணியை (Hit and Run) 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது,” என்கிறார் வலதுசாரி சிந்தனை கொண்ட, பொருளாதார நிபுணரான டாக்டர் சுவ்ரோக்மல் தத்தா.

பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த கடன்

பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது அரசின் மீதான கடன் மிகவும் குறைவு என்கிறார் அவர். இந்தியாவின் இன்றைய மொத்த கடன் மதிப்பு 155 லட்சம் கோடி ரூபாய் என்றால், நாட்டின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பு 3.35 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்.

உலக அளவில் பொருளாதாரரீதியாக ஐந்தாவது பெரிய நாடாகத் திகழும் இந்தியா, 2028இல் மூன்றாவது இடத்திற்கு முன்னேற உள்ளது.

ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என இன்று நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கெல்லாம் பணம் தேவைப்படுகிறது.

உதாரணமாக, 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் வெறும் 15 அல்லது 20 விமான நிலையங்கள்தான் இருந்தன. ஆனால், பிரதமர் மோதி தலைமையிலான ஆட்சியில் இன்று சிறியதும் பெரியதுமாக நாடு முழுவதும் மொத்தம் 200 விமான நிலையங்கள் உள்ளன. ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில்களை இயக்கும் திட்டத்தையும் மோதி அரசு செயல்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 11 கிலோமீட்டர் அளவுக்கு சாலைகள் போடப்பட்டு வந்தன. சாலைகள் அமைக்கும் பணியின் வேகம் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கும் போது அதற்கான செலவும் அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறார் டாக்டர் சுவ்ரோக்மல் தத்தா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: