மணிப்பூர் வன்முறை: பிணவறைகளில் உரிமை கோரப்படாமல் கிடக்கும் சடலங்கள்

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஷகீல் அக்தர்
    • பதவி, பிபிசி உருது, டெல்லி

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி தொடங்கிய வன்முறை இன்னும் நின்றபாடில்லை. அங்குள்ள மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள 90க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காண இன்னும் யாரும் முனவரவில்லை.

மணிப்பூரில் கடந்த மே 3ஆம் தேதி குக்கி மற்றும் மெய்தேய் இனக்குழுக்களின் இடையே வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டன. மொபைல் இணையத்திற்கான தடை செப்டம்பர் 23 அன்று நீக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு மாணவர்களின் சடலங்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

இதன் காரணமாக, மணிப்பூரின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அதனால் அரசாங்கம் மீண்டும் அங்கு மொபைல் இணையத்தை தடை செய்தது.

இந்த இன வன்முறையில் இதுவரை 170க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டிருக்கின்றனர்.

குக்கி மற்றும் மெய்தேய் இனக்குழுக்களின் இடையே நடக்கும் இந்த வன்முறையில் இறந்த சுமார் 96 பேரின் உடல்கள் மணிப்பூரின் மூன்று பெரிய மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் காண்பதற்கு இதுவரை யாரும் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவில்லை.

அப்பகுதி மக்கள், அச்சம் காரணமாக மருத்துவமனைகளில் இருந்து உறவினர்களின் உடல்களை எடுக்க யாரும் செல்வதில்லை என்கின்றனர்.

இந்தச் சடலங்கள் பல மாதங்களாக பிணவறைகளில் கிடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள் குழு, இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வகையில், இறந்தவர்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிடுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இன்னும் உரிமை கோருபவர்கள் முன்வராதவர்களின் இறுதிச் சடங்குகள் முழு மரியாதையுடன் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வன்முறையில் இறந்த 96 பேரின் உடல்கள் இம்பாலில் உள்ள மூன்று மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன

வைரலான இரண்டு மாணவர்களின் படங்கள்

அரசாங்கப் புள்ளிவிவரங்களின்படி, மணிப்பூர் வன்முறையில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இன்னும் பலர் காணாமல் போயிருக்கின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தேய் மற்றும் குக்கி பழங்குடியின மக்களிடையே வன்முறை வெடித்த பிறகு, ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு பிரிவினரின் பகுதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் முழுவதும் இனக்குழுக்களின் அடிப்படையில் பிரிந்து கிடக்கிறது.

வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதிகாரிகளின் கூற்றுப்படி, மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.

இக்கட்டுரை எழுதப்பட்டபோது இரண்டு மாணவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இவ்விரு மாணவர்கள் ஜூலை முதல் வாரம் காணாமல் போனவர்கள்.

கடந்த திங்கட்கிழமை மாலை, இறந்த மாணவர்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டன. அதில் ஒன்றில் ஆயுதம் ஏந்திய நபர்களுக்கு அருகில் இரு மாணவர்களும் ஒன்றாக அமர்ந்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாவது படத்தில் அவர்களின் இறந்த உடல்கள் இருந்தன.

பிபிசி அந்தப் படங்களின் உண்மைத்தன்மையைச் சுயாதீனமாகச் சரிபார்க்கவில்லை. ஆனால் இந்த விஷயம் சமூக ஊடகங்களில் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, அம்மாநில அரசு பொறுமையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கலவரத்திற்குப் பிறகு குக்கி மக்கள் மெய்தேய் பகுதிக்கும், மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குக்கி பகுதிக்கும் செல்ல முடிவதில்லை.

உடல்கள் அடையாளம் காணப்படாதது ஏன்?

மணிப்பூரின் தலைநகரான இம்பாலை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் வஹெங்பாம் டெகேந்தர் சிங், வன்முறையில் இறந்த 96 பேரின் உடல்கள் இம்பாலில் உள்ள மூன்று மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாக பிபிசியிடம் கூறினார்.

இவை - பிராந்திய மருத்துவ கல்லூரி, ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி, மற்றும் சுராசந்த்பூரில் உள்ள பிராந்திய மருத்துவமனை.

இம்பால் பள்ளத்தாக்கில் மெய்தேய் இனக்குழு ஆதிக்கம் செலுத்துகிறது. இங்குள்ள இரண்டு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள உடல்கள் குக்கி இனக்குழுவைச் சேர்ந்தவர்களுடையவை.

சுராசந்த்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடல்களில் குக்கி மற்றும் மெய்தேய் ஆகிய இரு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இருப்பினும் குக்கி மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

கலவரத்திற்குப் பிறகு குக்கி மக்கள் மெய்தேய் பகுதிக்கும், மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குக்கி பகுதிக்கும் செல்ல முடியாததுதான் பிரச்னை என்று வாஹெங்பாம் கூறினார்.

சட்டத்தின்படி, இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உடல்களை அடையாளம் காண மருத்துவமனை சவக்கிடங்கிற்குச் சென்று நேரில் பார்வையிட வேண்டும். ஆனால் இப்போது மக்கள் அங்கு செல்ல முடியாததால் இந்த உடல்கள் பல மாதங்களாக அடையாளம் காணப்படாமல் இருக்கின்றன.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், மருத்துவமனைகள் இன்னும் அந்த உடல்களின் புகைப்படங்கள் மற்றும் அவை தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடவில்லை.

பாதுகாப்புப் படைகளைத் தடுக்கும் மக்கள்

நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், மருத்துவமனைகள் இன்னும் அந்த உடல்களின் புகைப்படங்கள் மற்றும் அவை தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடவில்லை என்று அவர் கூறினார்.

இறந்தவர்களின் குடும்பங்கள் உடல்களை அடையாளம் கண்டு அவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூடிய அளவிற்கு நிலைமையைச் சீர்செய்ய அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் முயற்சி செய்கிறார்கள், ஆனால் இது சாத்தியமில்லை.

கடந்த சில நாட்களாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், இதனால் உயிரிழப்புகள் ஓரளவு குறைந்துள்ளதாகவும் வாஹெங்பாம் தெரிவித்தார்.

“ஆனால், இரு இன மக்களிடையேயும் அவநம்பிக்கை மற்றும் வெறுப்பு மிகவும் ஆழமாகிவிட்டதால், அதைக் கடக்க நிறைய நேரம் பிடிக்கும்," என்கிறார் அவர்.

அவரைப் பொறுத்தவரை, "மெய்தேய் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படைகள் செல்லும் வழிகளில் தடைகளை உருவாக்குகிறார்கள். அவர்கள் எந்த உதவியும் வழங்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அதே நேரத்தில் குக்கி குழுக்கள் மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரை தங்கள் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. பரஸ்பர அவநம்பிக்கைதான் இச்சமயத்தில் மிகப்பெரிய பிரச்னை.”

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆயிரக்கணக்கான மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் தற்காலிக முகாம்களில் வாழ்கின்றனர்.

செல்ஃபோன் மூலம் அடையாளம் காணப்படும் உடல்கள்

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ‘குக்கி பூர்வீக பழங்குடியினர் தலைவர்கள் மன்றத்தின்’ செயலாளர் முவான் தெவாபெங், “இம்பால் பள்ளத்தாக்கு மரண பள்ளத்தாக்கு போல இருப்பதால், இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண அங்கு செல்ல முடியாது.

பெரும்பாலான சடலங்கள் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் அதிகாரிகள் முழுமையான சட்ட ஆவணங்கள் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை,” என்று கூறினார்.

இந்தச் சடலங்களைத் தவிர, 41 குக்கி நபர்களை இன்னும் காணவில்லை என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூற்றுப்படி, பல சடலங்கள் எரிந்துபோயிருக்கின்றன. அவற்றை அடையாளம் காண்பது கடினம். அவர் பிபிசிக்கு இறந்தவர்களின் பட்டியலை அனுப்பியுள்ளார், அதில் அவர்களின் பெயர்கள், வயது மற்றும் பிற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பெரும்பான்மை இனக் குழுவான மெய்தேய் மக்கள் சாதகமான நடவடிக்கைகளை எடுக்கும்போதும், மத்திய அரசு குக்கி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும்போதும் மட்டுமே நிலைமையை மேம்படுத்த முடியும் என்றார் அவர்.

"குக்கி மக்களில் 40,000 பேர் இன்னும் தற்காலிக முகாம்களில் வாழ்கின்றனர். இந்நிலைமையை சில நாட்களில் சரி செய்ய முடியாது. அரசின் எண்ணத்தைப் பொறுத்தே நிலைமை அமையும். தற்போதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை," என்கிறார்.

அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது?

கடந்த மாதம், ஜம்மு காஷ்மீர் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில், ஓய்வு பெற்ற மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. மணிப்பூரில் மனிதாபிமான அம்சங்களுக்கு உதவுவதே இந்தக் குழுவின் பணி.

ஐந்து மாதங்களாகத் தொடரும் வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை மாநில அரசு வெளியிட்டு வெளியிட வேண்டும் என்று இந்த குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. இறந்தவர்களின் உறவினர்களை அடையாளம் கண்டு, அவர்களின் குடும்பங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அது பலனளிக்கவில்லை என்றால், மாவட்ட ஆட்சியர் உரிய இடத்தை நிர்ணயம் செய்து, முழு மரியாதையுடன் இறந்த உடல்களைத் தகனம் செய்ய வேண்டும் என்று குழு அறிவுறுத்தியுள்ளது.

பத்திரிக்கையாளர் வாஹெங்பாம் டெகேந்தர் சிங் கூறுகையில், "அடையாளம் தெரியாத உடல்களை எரிப்பது என்பது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இந்த நேரத்தில் அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டால் மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை," என்கிறார்.

மணிப்பூர் தற்போதுவரை பதற்றத்திலும் வன்முறையின் அச்சத்திலும் மூழ்கியுள்ளது. இங்கு மீண்டும் சில நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் தற்காலிக முகாம்களில் வாழ்கின்றனர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை எப்போது இயல்பு நிலைக்கு வரும் என்பது குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாத நிலையே இருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)