மு.க.ஸ்டாலின் பதிலால் பி.டி.ஆர் ஆடியோ லீக் சர்ச்சை முடிவுக்கு வந்ததா? அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகும் அரசு

- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஆடியோ லீக் சர்ச்சையால் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பதவி பறிக்கப்படலாம் என்று பரவிய செய்திகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பதில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆடியோ லீக் சர்ச்சை இத்துடன் ஓயுமா? மேலும் வீடியோக்கள் வரக் கூடுமா? திமுகவில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனித்து விடப்பட்டுள்ளாரா? அவருக்கு பா.ஜ.க. குறி வைக்கிறதா? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.
இந்திய அரசியலில் பல விஷயங்களில் முன்னோடியாக திகழும் தமிழ்நாடு, இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப அரசியல் செய்வதிலும் அப்டேட்டாகி வெகு நாட்களாகிவிட்டன. குறிப்பாக, பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு ஆடியோ, வீடியோ கசிவு, ஸ்டிங் ஆபரேஷன் என பல பெயர்களில் தனிப்பட்ட பதிவுகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிடப்பட்டன.
ஆடியோ டேப் கசிவும், பி.டி.ஆர் விளக்கமும்
அந்த வரிசையில், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவின் முதல் பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த ஆடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, அதனால் எழுந்த அதிர்வுகள் அடங்கும் முன்பே ஏப்ரல் 25ஆம் தேதி பிடிஆர் பேசுவதாகக் கூறி இரண்டாவது ஆடியோவை தாமே வெளியிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
முதல் ஆடியோ பதிவில் "உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்றும், இரண்டாவது ஆடியோ பதிவில், "ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவளித்து வருகிறேன். பா.ஜ.கவிடம் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டுமல்லவா? எல்லா முடிவுகளையும் அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும்தான் எடுக்கின்றனர். நிதியை மேலாண்மை செய்வது சுலபம். இப்படி ஒரு அமைப்பு இருக்க முடியாது. They are taking the bulk of the spoils. முதல்வரின் மகனும் மருமகனும்தான் கட்சியே. அவர்களை நிதியளிக்கச் சொல்லுங்கள்" என்றும் பேசுவது பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்தான் என்று கூறப்பட்டது. (இரு ஆடியோக்களின் உண்மைத்தன்மை சுயாதீனமான முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை.)
இந்த இரண்டு ஆடியோக்களிலுமே பொதுவான ஒரு அம்சம் இருந்தது.
அவற்றில் எதிர் முனையில் இருப்பவர் யார் அல்லது பதிவு செய்தவர் யார் என்பதை, ஆடியோக்களை வெளியிட்டவர்கள் கூறவில்லை.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
ஆடியோ சர்ச்சைக்கு விளக்கமளித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "ஆடியோவில் உள்ள எந்த செய்தியையும் எந்தவொரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை. நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் துணையாகவும் இருக்கிறார் சபரீசன்.
எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி, சபரீசன் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்காத நிலையில், அவர்கள் மீது களங்கம் சுமத்த இது போன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களிடம் இருந்து என்னை பிரிப்பதன் மூலம் தங்கள் அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு மிரட்டல் கும்பல்" என்று வீடியோ மூலம் பதிலளித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
சிறிய மெளனத்திற்குப் பிறகு ஏப்ரல் 26ஆம் தேதியன்று தி.மு.கவின் அதிகாரபூர்வ தொழில்நுட்ப அணியின் ட்விட்டர் பக்கத்தில் பி.டி.ஆருக்கு ஆதரவாக கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. அந்த ஒரு பதிவைத் தவிர தி.மு.க தரப்பிலிருந்து எதுவுமே சொல்லப்படவில்லை என்பதும் கட்சிக்குள் பி.டி.ஆர். மீது நிலவும் அதிருப்தியைக் காட்டுவதாகவே கருதப்பட்டது.
திமுகவின் சொத்துப்பட்டியல் என்று கூறி அண்ணாமலை வெளியிட்ட தகவலுக்காக அவர் மீது வழக்கு தொடரப் போவதாக அறிவித்த அக்கட்சி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விஷயத்தில் கட்சி சார்பில் வழக்கு தொடுக்கப்படாது என்று தெளிவுபடுத்தியது. திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இதுதொடர்பாக அளித்த பேட்டி வெளியானதுமே, கட்சிக்குள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனித்து விடப்பட்டிருப்பதாக ஊகங்கள் பரவின.

பட மூலாதாரம், TWITTER
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் அல்லது அவரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு வேறு இலாகா தரப்படலாம் என்று தமிழ்நாடு அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில்தான், 'உங்களில் ஒருவன்' என்ற பெயரில் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கும் 11.15 நிமிட வீடியோ செவ்வாய்க்கிழமை வெளியானது.
அதில், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ லீக் சர்ச்சை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருந்த அவர், "இந்த ஆடியோ குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே 2 முறை விளக்கம் அளித்துவிட்டார். இந்த மட்டமான ஆடியோ அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை. மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மட்டமான அரசியல் செய்யும் நபர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை" என்று கூறியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
"முதலமைச்சர் பதிலால் முற்றுப்புள்ளி வரவில்லை"
தமிழ்நாடு அமைச்சரவையில் ஒரு வாரத்திற்குள் மாற்றம் இருக்கும், அமைச்சர் பி.டி.ஆரின் பதவி பறிக்கப்படலாம் அல்லது இலாகா மாற்றப்படலாம் என்னும் வகையில் பரவிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளதாகவே கருதப்படுகிறது.
ஆனால், அது நிரந்தரமானதாக இருக்குமா என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
”முதலமைச்சரின் பதிலால் ஆடியோ லீக் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக நான் கருதவில்லை. ஏனெனில், இதுவரை வெளிவந்த 2 ஆடியோக்களுமே துண்டுதுண்டாக வந்தவை. மேலும் ஆடியோக்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை.
அவற்றின் உண்மைத்தன்மை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பி.டி.ஆரை மட்டுமின்றி ஒட்டுமொத்த திமுகவையும் குறிவைக்கும் பா.ஜ.க., திமுகவுக்கு எதிராக சிறு துரும்பு கிடைத்தாலும் விடாது எனும் போது பி.டி.ஆர். ஆடியோ விவகாரத்தில் அவர்கள் அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள்.
அடுத்தபடியாக, குறிப்பிட்ட சில திட்டங்கள், வேலைகளைக் குறிப்பிட்டு பி.டி.ஆர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ஏதேனும் ஆடியோ வெளியானால் நிலைமை மோசமாகிவிடும்” என்கிறார் குபேந்திரன்.
"ஆடியோ பதிவு அண்ணாமலைக்கு எப்படி கிடைத்தது?"
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறும் போது, "செலெக்ட்டிவ் கிளிப்பிங் ஆபத்தானது. முழுமையான உரையாடலின் ஓரிரு வார்த்தைகளை மட்டும் வெட்டி ஒட்டி வெளியிட்டால் முற்றிலும் மாறுபட்ட கருத்து கிடைக்கும்.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இது சாத்தியம். நிதி அமைச்சர் தியாகராஜன் யாரோடு பேசினார்? அது தொலைபேசி உரையாடல் என்றால் அது அண்ணாமலைக்கு எப்படி கிடைத்தது? ஒட்டு கேட்கப்பட்டது என்றால் மத்திய அரசா மாநில அரசா? இந்த கேள்விகளுக்கு இதுவரை விடை இல்லை.
நிதியமைச்சர் தியாகராஜன் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்து முழுமையான ஆடியோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கலாம் அல்லது பொதுவாழ்வில் தூய்மை என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் அண்ணாமலையே முழு ஆடியோவை வெளியிடலாம். அவ்வாறு செய்யாத வரை சர்ச்சை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்." என்றார்.

பட மூலாதாரம், SHYAM
"சத்யபால் மாலிக் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. என்ன பதில் அளித்தது?"
அதேநேரத்தில், மற்றொரு மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயனோ மாறுபட்ட கோணத்தை முன்வைத்துள்ளார்.
"பிரதமர் மோடி ஊழலுக்கு எதிரானவர் அல்ல, புல்வாமா தாக்குதலின் போது பாதுகாப்புப் படையினர் உயிரிழக்க காரணமான அரசின் தவறுகள் தொடர்பாக அமைதி காக்குமாறு தன்னை பிரதமர் கேட்டுக் கொண்டார் என்பன போன்ற குற்றச்சாட்டுகளை ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் அதிகாரப்பூர்வமாக இணைய இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதுபோன்ற சீரியசான குற்றச்சாட்டுகளுக்குக் கூட பா.ஜ.க. இன்னும் பதில் அளிக்கவே இல்லை.
பி.டி.ஆர். விவகாரத்தில், ஆடியோ டேப்பில் இருப்பது அவரது குரல்தானா என்பது இன்னும் உறுதியாகவே இல்லை. அவரோ அது தன்னுடைய குரல் அல்ல என்று மறுக்கிறார். இந்த சூழலில், பி.டி.ஆர். மீது நடவடிக்கை எடுப்பது, அந்த குற்றச்சாட்டுகளை திமுகவே ஒப்புக்கொண்டதாக ஆகிவிடாதா? அதனால்தான், ஆடியோ டேப் விவகாரத்தில் அது பிடிஆரின் தனிப்பட்ட விஷயம் என்று கூறி திமுக விலகி நிற்கிறது." என்கிறார் அவர்.

மேலும், "சத்யபால் மாலிக் அதிகாரபூர்வமாக பேசிவிட்ட பிறகும் கூட, அதற்கு விளக்கமோ அல்லது நடவடிக்கையோ எடுக்காத பா.ஜ.க.வுக்கு, தமிழ்நாட்டில் இப்போது கேள்வி எழுப்ப எந்தவொரு தார்மீக உரிமையும் கிடையாது. அதுபோக, பா.ஜ.க.வின் வளர்ச்சி, குஜராத் மாடல் போன்ற பிரசாரங்களுக்கு எதிராக மத்திய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களைக் கொண்டே பி.டி.ஆர். பதிலடி கொடுக்கிறார். பா.ஜ.க.வின் இந்துத்துவ அரசியலுக்கு மாற்றாக திமுகவின் சமூகநீதி அரசியலை அவரை வலுவாக முன்வைக்கிறார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தவறுகளை புள்ளிவிவரங்களுடன் அவர் புட்டுபுட்டு வைக்கிறார். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கருத்துகள் தேசிய அரசியலில் அறிவுசார் தளத்தில் பெரிய அளவில் விவாதிக்கப்படும் ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. இதனால், தேசிய அரசியலில் பா.ஜ.க.வுக்கு அவர் ஒரு நெருடலாகவே திகழ்ந்து வருகிறார். ஆகவே, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக இதனை வலுவான ஆயுதமாக பா.ஜ.க. பயன்படுத்துகிறது" என்று கார்த்திகேயன் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












