மதிமுக அரசியல்: துரைசாமியின் ஆவேச கடிதம் - வைகோவின் கட்சிக்குள் என்ன நடக்கிறது?

வைகோ மதிமுக துரைசாமி
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ம.தி.மு.கவிற்குள் நடக்கும் பல்வேறு மாற்றங்களைக் குறிப்பிட்டு, கட்சியை தி.மு.கவோடு இணைத்து விடலாம் என ஆவேச கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் அக்கட்சியின் அவை தலைவரான துரைசாமி. ம.தி.மு.கவிற்குள் என்ன நடக்கிறது?

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி ம.தி.மு.கவின் அவைத் தலைவர்களில் ஒருவரான சு. துரைசாமி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான வைகோவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கேள்விகளை எழுப்பியிருந்தார் துரைசாமி.

ஏழு பக்கங்களில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில் பின்வரும் குற்றச்சாட்டுகளை அவர் எழுப்பியிருந்தார்.

"1993ல் ம.தி.மு.க துவங்கப்பட்டபோது அதன் நிர்வாகிகளாகப் பொறுப்பு வகித்தவர்கள் தாங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தி.மு.கவில் பொறுப்புகளை வகித்து, தி.மு.கவை வளர்த்தவர்கள். வாரிசு அரசியலுக்கு எதிரான தங்களது உணர்ச்சிமிகு உரைகளைக் கேட்டே, லட்சக்கணக்கான தோழர்கள் தங்களது பேச்சில் உறுதியிருக்கும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர்.

ஆனால், தங்களின் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக, பெருவாரியான முன்னணித் தலைவர்களும் தோழர்களும் தி.மு.கவிற்கே சென்று விட்டனர்.

ஏப்ரல் 16ஆம் தேதி குளித்தலையில் திருமண நிகழ்ச்சியில் பேசிய நீங்கள், "கட்சியின் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்தவரும் இன்னும் முக்கிய பொறுப்புகளில் இருந்த நான்கைந்து பேரும் சேர்ந்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம், கட்சியை உடைத்து விடலாம் என்று முயற்சித்தார்கள்" என களங்கப்படுத்தும் நோக்கத்துடன் மீண்டும் பேசியுள்ளீர்கள்.

ஈரோடு மற்றும் திருப்பூர் வார்டுகளில் போலியான பெயர்களில் உறுப்பினர்களைப் பதிவு செய்து, உள்கட்சி தேர்தல்களை நடத்தி முடித்துள்ளீர்கள். கொங்கு மண்டலத்திலேயே ம.தி.மு.கவின் நிலை இதுவென்றால் வேறு மாவட்டங்களைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ம.தி.மு.கவில் நடைபெறும் சம்பவங்களால் வெட்கப்படவும் வேதனைப்படவும் வேண்டியுள்ளது.

கழகத்தின் கள நிலவர செல்வாக்கு முற்றிலும் சரிந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமை ம.தி.முகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவார்கள் என்று தெரியாத நிலையில் விருதுநகர் மாவட்ட கழகம் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ஒருவர் பெயரை குறிப்பிட்டு, போட்டியே வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி பத்திரிகைக்கு செய்தி வெளியிடுவதும் அவரே திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டுமென திருச்சி மாவட்டக் கழகத் தோழர்களிடம் சொல்லி தீர்மானம் நிறைவேற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவதும் இதேபோல திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியிலும் செய்வதும் தான் அரசியல் நேர்மையா?

எந்தக் குடும்ப அரசியலுக்கு எதிராக தொண்டர்களை தூண்டினீர்களோ அன்று ஒரு நிலைப்பாடும் இன்று அதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதும் மகனை ஆதரித்து அரவணைப்பதும் தங்களது சந்தர்ப்பவாத அரசியலையும் பொது வெளியில் கழகத்தைப் பார்த்து மக்கள் எள்ளி நகையாட வைத்துவிட்டது என்பதையும் தாங்கள் அறியாமல் இருப்பது வருந்தத்தக்க வேதனையான நிகழ்வு.

தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்து எந்த அரசியல் கட்சியும் இப்படி பதவி கேட்டு தீர்மானங்களை நிறைவேற்றியதில்லை. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தங்கள் குடும்ப மறுமலர்ச்சிக்குத்தான் என்பதை தங்களின் செயல்பாடு வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

கடந்த முப்பது ஆண்டுகளாக தங்களது உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடைய செய்யாமல் இருக்க, கழகத்தை தாய்க் கழகமான தி.மு.கவுடன் இணைத்துவிடுவதுதான் சமகால அரசியலுக்குச் சாலச் சிறந்தது" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வைகோவின் மகன் துரை வையாபுரி ம.தி.மு.கவில் கட்சிப் பதவிக்குக் கொண்டுவரப்படுவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார் துரைசாமி. 2021 அக்டோபரில் துரை வையாபுரி தலைமைக் கழகச் செயலர் பதவிக்குக் கொண்டுவரப்படுவதை அவர் எதிர்த்தார்.

"கட்சிக்குள் வாரிசு அரசியலை ஊக்குவிக்க வேண்டாம் என ஒன்றரை மணிநேரம் வைகோவிடம் பேசினேன், அவர் கேட்கவில்லை," என்று அந்த சமயத்தில் தெரிவித்தார் துரைசாமி.

நிராகரித்த வைகோ, ஆதங்கப்படும் துரைசாமி

வைகோ துரைசாமி

திங்கட்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைகோவிடம், துரைசாமி அனுப்பிய கடிதம் குறித்துக் கேள்வி எழுப்பியபோது, "துரைசாமி அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளராக நான் அலட்சியப்படுத்துகிறேன். இரண்டு வருடங்களாக கட்சிக்கு வராமல் இருந்துவிட்டு, தற்போது அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இனிமேல் அவரின் பேச்சுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்" என்று மட்டும் தெரிவித்தார்.

கட்சிக் கூட்டங்களுக்கு வராமலேயே இதுபோல கடிதங்கள் எழுதுவதாக வைகோ கூறுவது குறித்து அவைத் தலைவர் துரைசாமியிடம் கேட்டபோது, "ஏதாவது கூட்டத்தைக் கூட்டினால்தானே வர முடியும். தவிர, ஒரு கூட்டத்தைக் கூட்டுவதற்கு முன்பாக அவைத் தலைவரிடம் கலந்தாலோசனை செய்ய வேண்டும்.

கடந்த இரண்டாண்டுகளில் அப்படி ஒரு போதும் கேட்டது கிடையாது. கடைசியாக நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்திற்கு, என் பெயரைப் போடாமல் வாட்ஸப்பில் அழைப்பிதழ் அனுப்பினார். சிலர் எதிர்ப்பு தெரிவித்த பிறகு துரைசாமி தலைமையில் கூட்டம் நடக்கும் என மறுபடியும் அழைப்பிதழ் அனுப்பினார்.

அந்தக் கூட்டத்திற்கு நான் வர மாட்டேன் என்று நினைத்தார். ஆனால், நானும் கணேசமூர்த்தியும் வந்து விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தோம். கணேசமூர்த்தியிடம் பேசிய வைகோ, கூட்டத்தில் கலந்துகொண்டால், உறுப்பினர் சேர்க்கை தவிர வேறு எதையும் பேச வேண்டாம் என்று சொல்லுங்கள் என்றார்.

நான் கூட்டத்திற்குப் போனபோது, பிரதான வாசல் கதவை மூடிவிட்டார்கள். காரிலிருந்து இறங்கி நடந்துவாருங்கள் என்றார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றுவிட்டேன். பிறகு வைகோவே போன் செய்து அழைத்தார். பிறகு போய் கலந்துகொண்டேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை மாவட்டக் கழகக் கூட்டங்கள் கூட்டப்பட்டுள்ளன? மாவட்ட செயலாளர் கூட்டமோ, ஊழியர் கூட்டமோ நடந்திருக்கிறதா? ஒன்றும் நடக்கவில்லை. அதைத்தான் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்" என்று தனது கடிதத்திற்கு பின்னால் உள்ள காரணங்களை விவரித்தார்.

துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டதுதான் உங்கள் அதிருப்திக்குக் காரணமா என்று கேட்டபோது, "2021லேயே வைகோவிடம் சொல்லிவிட்டேன். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சியை ஆரம்பித்துவிட்டு, மகனுக்கு பதவி கொடுத்தால் கெட்ட பெயர் வரும் என்று சொன்னேன். கேட்கவில்லை" என்று முடித்துக்கொண்டார் துரைசாமி.

இந்த விவகாரம் தொடர்பாக துரை வையாபுரியிடம் கேட்டபோது, அவர் இந்த மோதலின் பின்னணியே வேறு எனக் குறிப்பிட்டார்.

துரை வையாபுரி
படக்குறிப்பு, துரை வையாபுரி

"இவர் தி.மு.க. தொழிற்சங்கத்தில் இருந்தபோதே வேறொரு பெயரில் தொழிற்சங்கம் ஆரம்பித்து, சொத்துகளை வாங்கினார். இது தொடர்பாக தி.மு.க. தொழிற்சங்கத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்குகள் இப்போதும் நிலுவையில் உள்ளன.

இவர் ம.தி.மு.க.வுக்கு வந்தபோது, தன்னுடைய தொழிற்சங்கத்தை பாதுகாப்பிற்காக, ம.தி.மு.கவுடன் இணைக்கப்பட்ட தொழிற்சங்கமாக மாற்றிக்கொண்டார். பிறகு, அந்தத் தொழிற்சங்கத்தின் சொத்துகளுக்கும் ம.தி.மு.கவுக்கும் தொடர்பில்லை என்றார். இப்போது தன் பெயரிலேயே ட்ரஸ்ட் ஆரம்பித்திருக்கிறார். தொழிற்சங்க சொத்துதான் இவரது இலக்கு. தனிப்பட்ட விருப்பு -வெறுப்புக்காக இதைச் செய்கிறார்.

2019ல் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, மதவாதத்தை எதிர்க்க தி.மு.கவுடன் தேர்தல் உடன்பாடு கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகள் குறிப்பிட்டார்கள்.

இவர் உள்பட சிலர் மட்டும் ஆட்சேபணை தெரிவித்தனர். பிறகு, இப்போதைய முதல்வரைப் பற்றி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கூட்டணி வேண்டாம் என்றார்.

பிறகு, கூட்டணி சேர்ந்தால், தொழிற்சங்கம் தொடர்பான வழக்குகளை தி.மு.க. திரும்பப் பெறுமா என்று கேட்டார். ஆனால், கூட்டணி பேச்சு வார்த்தைகளில் அதைப் பற்றிப் பேச முடியாது என வைகோ கூறிவிட்டார். பிறகு, தி.மு.கவுடன் கூட்டணி வேண்டுமென எல்லோரும் முடிவெடுத்துவிட்டதால் இவரால் அதைத் தடுக்க முடியவில்லை.

பிறகு, தேர்தலின்போது தனக்கு நெருக்கமான நிர்வாகிகளை அழைத்து தேர்தல் வேலை பார்க்க வேண்டாம் என்று சொன்னார். நான் முதல்வரைச் சந்தித்தபோது, உங்கள் அவைத் தலைவர் இதுபோல சொல்கிறாராமே என முதல்வரே என்னிடம் கேட்டார்.

துரைசாமியைப் பொறுத்தவரை, தொழிற்சங்க வழக்குகள் தொடர்பாக அவருக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது. அதற்காக ம.தி.மு.கவும் தலைவரும் பயன்பட்டார்கள். அவருக்குக் கொள்கை ஏதும் கிடையாது. இப்போது மொட்டைக் கடுதாசி மூலமும் பெயரிட்ட கடுதாசி மூலமும் இதுபோல செய்து கொண்டிருக்கிறார். அவர் மீது தொண்டர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். இவரோடு எந்த நிர்வாகியும் தொடர்பில் இல்லை. திருப்பூரிலேயே நிர்வாகிகள் கண்டித்திருக்கிறார்கள். இவர் பங்களா அரசியல் செய்யும் தனி மரம்" என்றார் துரை வைகோ.

தி.மு.கவுடன் ம.தி.மு.கவை இணைக்கச் சொல்லியிருப்பது குறித்துக் கேட்டபோது, "முதலில் தி.மு.க. கூட்டணியே வேண்டாம் என்றவர், இப்போது தி.மு.கவுடன் இணைக்க வேண்டும் என்கிறார். தி.மு.கவுடன் ம.தி.மு.கவை இணைத்துவிட்டால், வழக்கில் உள்ள தொழிற்சங்க சொத்துக்களை தி.மு.க. தொழிற்சங்கத்திற்கு கொடுத்துவிடுவாரா?" என்று கேள்வியெழுப்பினார்.

துரைசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாகவும் துரை வைகோ தெரிவித்தார்.

ம.தி.மு.கவின் எதிர்காலம் என்ன?

வைகோ

ம.தி.மு.கவைப் பொறுத்தவரை கடந்த பத்தாண்டுகளில் தேர்தல் அரசியலில் பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. 2019ஆம் ஆண்டில் தி.மு.க. கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலைச் சந்தித்த ம.தி.மு.க. ஒரு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியையும் பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளைப் பெற்றது. ஆனால், தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்திலேயே இந்த வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில்தான் கட்சியை தி.மு.கவுடன் இணைக்க வேண்டும் எனப் பேசியிருக்கிறார் துரைசாமி. "இனிமேல் ம.தி.மு.கவுக்கு எதிர்காலம் கிடையாது. கட்சியை தி.மு.கவில் இணைத்துவிட்டால் மீதமுள்ள தொண்டர்களாவது அவரவர் சக்திக்கு ஏதாவது செய்வார்கள். அவர்களது அரசியல் வாழ்க்கை பாழாகாமல் இருக்கும்" என பிபிசியிடம் கூறினார் துரைசாமி.

ஆனால், வைகோ இந்தக் கருத்தை நிராகரித்திருக்கிறார். "ம.தி.மு.கவை தி.மு.கவுடன் இணைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. ம.தி.மு.க. 30 வருடங்களாக தனித்தே இயங்குகிறது; இனியும் தனித்தே இயங்கும்" என்கிறார் வைகோ.

"வைகோ இரண்டு விஷயங்களுக்காக கட்சியை ஆரம்பித்தார். தி.மு.கவில் இருந்த வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு ஒரு காரணம். அவரைத் தி.மு.கவில் ஒதுக்க ஆரம்பித்தது இரண்டாவது காரணம். ஆனால், ம.தி.மு.கவைப் பொறுத்தவரை முதல் தேர்தலில் இருந்தே சறுக்கல்தான். கடந்த பத்தாண்டுகளாக தி.மு.கவை எதிர்த்தவர், 2019க்குப் பிறகு தி.மு.கவை ஆதரிக்க ஆரம்பித்தார். இந்த பத்து ஆண்டுகளில் அவரது வாக்கு வங்கி வெகுவாகச் சரிந்துவிட்டது.

ஆனால், இதையெல்லாம் விட பெரிய பிரச்சனை கட்சியை எதற்காக ஆரம்பித்தாரோ, அந்த அடிப்படை நோக்கத்திலிருந்து மாறுபட்டதுதான். அதனால்தான், துரைசாமி போன்றவர்கள் கட்சியை தி.மு.கவுடன் இணைத்து விடலாம் என்கிறார்கள்.

தவிர, தற்போதைய சூழலில் தி.மு.கவிற்கும் ம.தி.மு.கவிற்கும் கொள்கை ரீதியாக பெரிய வித்தியாசம் கிடையாது. தனித்து இயங்குவதற்குமான தேவையும் கிடையாது. ஆகவே, தி.மு.கவுடன் இணைப்பதுதான் சரி. ஆனால், அதை வைகோ ஏற்க மாட்டார்.

கட்சி என்பது வெறும் கட்சி அல்ல. அதற்கு சொத்துகள் உள்ளன. தனி கட்சி நடத்துவதில் சில ஆதாயங்கள் இருக்கின்றன. அது தனக்குப் பிறகு தன் மகனுக்குக் கிடைக்க வேண்டுமென நினைக்கிறார் வைகோ. என்பதுதான் பிரச்சனை" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

ம.தி.மு.கவின் தோற்றமும் தேய்வும்

வைகோ திமுக கருணாநிதி ஸ்டாலின் வைகோ

தி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய வைகோ, 1964ஆம் ஆண்டு அண்ணா இருக்கும் காலத்திலேயே அரசியலில் இறங்கியவர். தொடர்ந்து தி.மு.கவில் செயல்பட்ட வைகோ, 80களின் இறுதியிலும் 90களின் துவக்கத்திலும் மிகப் பிரபலமான ஒரு தலைவராக இருந்தார்.

1992ஆம் ஆண்டில், புலிகள் உதவியுடன் வைகோ தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம் என தனக்குத் தகவல் வந்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். இதையடுத்து இருவருக்கும் இடையிலான மோதல் முற்றியதில், தி.மு.கவிலிருந்து வெளியேறிய வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவங்கினார்.

மதுவிலக்கிற்கான போராட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு, முல்லைப் பெரியாறு பிரச்சினை, மீத்தேன் எடுப்பதற்கு ௭திர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதால் 2001ல் கைதுசெய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார் வைகோ. ஆனால், அவரது போராட்டங்கள் எதுவும் தேர்தல் ரீதியாக பெரும் வெற்றிகளை ம.தி.மு.க பெற்றுத் தரவில்லை.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து, தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றுள்ளது. வைகோ தற்போது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

வைகோவின் உடல்நிலை நலிவடைந்த நிலையில், அவருடைய மகன் துரை வையாபுரியை அரசியலுக்கு அழைத்துவர வேண்டுமென நிர்வாகிகளின் ஒரு பகுதியினர் கோரிய நிலையில், 2021ஆம் ஆண்டு அக்டோபரில் துரை வையாபுரி, ம.தி.மு.கவின் தலைமை கழக செயலராக நியமிக்கப்பட்டார். இதற்கு ஒரு பகுதி நிர்வாகிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர்.

2024ல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் துரை வையாபுரி விருதுநகர் தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்காக பல மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: