யார் இந்த ஜெய்சங்கர்? இந்தியாவின் 'வலிமையான குரலாக' உருவெடுத்தது எப்படி?

முக்கிய சாராம்சம்
  • 1977 இல் இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார்.
  • 1985-1988 க்கு இடையில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார்.
  • 1990-1993 க்கு இடையில், அவர் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக நியமிக்கப்பட்டார்.
  • 1993-1995ல் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநராக (கிழக்கு ஆசியா) ஆனார்.
  • 1995-1998 காலகட்டத்தில் வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலர் (அமெரிக்கா)
  • 2000-2004ல் சிங்கப்பூரில் இந்திய ஹை கமிஷனர்.
  • 2007-2009 இல் வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக ஆனார் மற்றும் அமெரிக்க-இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியத் தரப்பை வழிநடத்தினார்.
  • 2009-2013 வரை சீனாவுக்கான இந்தியத் தூதராக இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.
  • 2013-2015 க்கு இடையில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்தார். மோதியின் நியூயார்க் பேரணியின் முக்கிய வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்.
  • 2015-2018 க்கு இடையில் இந்தியாவின் வெளியுறவு செயலராக இருந்த அவர், பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார்.
  • 2019 இல் வெளியுறவு அமைச்சரானார். இந்திய தூதாண்மையை மேலும் பரப்புவதில் கவனம் செலுத்தினார்.
    • எழுதியவர், ஜூபைர் அகமது
    • பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக, வெளியுறவு

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் போர் உலகை மேலும் பிளவுபடுத்தியுள்ளது என்றும் மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட உலக முறைமையில் பெரிய மாற்றம் தேவை என்றும் இந்தியா நம்புகிறது.

ஆனால் அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த நாட்டிற்கு இந்த உண்மையை யாரால் புரிய வைக்க முடியும்?

இதை சீனா வெளிப்படையாக கூறி வருகிறது. வளரும் நாடுகளின் தலைவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்தியாவும் இந்த பொறுப்பை ஏற்றுள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளின் சிந்தனையை எந்த தயக்கமும் இல்லாமல், கட்டுப்பாடான வார்த்தைகளில் வெளிப்படுத்தும் நபராக இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உருவெடுத்துள்ளார்.

இந்த பணியை ஜெய்சங்கர் சிறப்பாக செய்து வருவதாக இந்திய தரப்பில் கூறப்படுகிறது. ரஷ்யாவுடனான உறவை முறித்துக் கொள்ளவும், மேற்கத்திய முகாமில் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபடவும், சக்திவாய்ந்த மேற்கத்திய கூட்டாளி நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு பெரும் அழுத்தம் உள்ளது, ஆனால் இந்தியா அவ்வாறு செய்யவில்லை.

இந்தப் போரில் எந்தத் தரப்பையும் தான் ஆதரிக்கப் போவதில்லை என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. உலக நாடுகளின் அழுத்தத்தை எதிர்கொள்வதில் இந்தியா காட்டிய புதிய தன்னம்பிக்கையின் மிகப்பெரிய முகம் ஜெய்சங்கர்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் புகழ் இந்தியாவில் அதிகரித்து வருவதற்கு மிகப்பெரிய காரணம், அவர் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற உலகின் பெரும் வல்லரசுகளின் முன் உறுதியுடன் நிற்பதை மக்கள் பார்ப்பதுதான்.

ஜெய்சங்கரின் அறிக்கைகள் அச்சமற்றதாகவும், கூர்மையாகவும் சிலரின் பார்வையில் கேலிசெய்வதாகவும் உள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில், ஜனநாயகத்தை மதிப்பிடும் மேற்கத்திய நாடுகளின் முக்கிய அமைப்புகள், இந்தியாவில் ஜனநாயகத்தின் வீழ்ச்சி மற்றும் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றன. இந்த கவலைகள் குறித்த ஜெய்சங்கரின் நிலைப்பாடு மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது.

"இது கபட நாடகம். உலகில் சிலர் இதுபோன்ற சான்றிதழ்களை வழங்குவதற்கு உரிமை உள்ளவர்கள் என்று தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். இந்தியா அவர்கள் சம்மதத்தை நாடுவதில்லை என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை" என்று அவர் கூறினார்.

ஜெய்சங்கரின் இந்த அறிக்கையில் ஒரே ஒரு அதிர்ச்சியான விஷயம் இருந்தது. அவரது இந்த கூர்மையான அறிக்கை தூதாண்மை வாக்கியங்களின் சர்க்கரை பாகில் கலந்து கொடுக்கப்படவில்லை.

இந்தியாவின் சாமானிய மக்களும் தங்கள் நாட்டை யாராவது விமர்சித்தால் அதே மொழியில் பதிலளிப்பார்கள் என்பது ஜெய்சங்கருக்கு தெரியும். இத்தகைய அறிக்கைகள் ஜெய்சங்கரை சாமானிய இந்தியர்கள் மற்றும் குறிப்பாக தேசியவாதிகளின் பார்வையில் ஹீரோவாக ஆக்கியுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரியில், பாஜக தலைமையிலான அரசை 'இந்து தேசியவாத அரசு' என்று மேற்கத்திய ஊடகங்கள் கூறியபோது, ஜெய்சங்கர் அதற்கு கடுமையாக பதிலளித்தார்.

அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக, வெளியுறவு

பட மூலாதாரம், Getty Images

"வெளிநாட்டு செய்தித்தாள்களை படித்தால், இந்து தேசியவாத அரசு போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ கிறிஸ்தவ தேசியவாதிகள் என்று சொல்வதில்லை. குறிப்பாக நமக்காக இதுபோன்ற சொற்றொடர்களை அவர்கள் சேமித்து வைக்கின்றனர்" என்று அவர் கூறியிருந்தார்.

மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஜெய்சங்கரின் ஆக்ரோஷமான அணுகுமுறையை முழுமையாக ஆதரிப்பதாக அரசியல் மற்றும் வெளியுறவு நிபுணர் டாக்டர் சுவ்ரோக்மல் தத்தா கூறுகிறார்.

"உலக நாடுகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளை கையாளும் போது, ஜெய்சங்கரின் பார்வையில் இந்தியாவின் நலன்கள் முதன்மையாக உள்ளன. யுக்ரேனின் தற்போதைய நெருக்கடியின் போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு மேற்கத்திய நாடுகளை அவர் எதிர்த்த விதம் காரணமாக அவர் இந்தியாவில் மிகவும் பிரபலமாகிவிட்டார்,” என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், 'Modi's India: Hindu Nationalism and the Rise of Ethnic Democracy' என்ற நூலின் ஆசிரியரும், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியருமான கிரிஸ்டோஃப் ஜாஃபர்லோ, 'ஜெய்சங்கரின் பாணி ஒரு பிரபலமான தேசியவாதியின் பாணி' என்று வாதிடுகிறார். அவர் தனது நாட்டு மக்களின் இதயங்களை வெல்வதற்காக இவற்றை செய்கிறார் என்று அவர் குறிப்பிட்டார்.

"ஜெய்சங்கர் மேற்கத்திய நாடுகளைப் பற்றி பேசும் விதத்தின் உண்மையான நோக்கம், உள்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதே ஆகும். இதுவே அவரது ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு முக்கிய காரணம். ஆனால், இந்த அணுகுமுறை புதியதல்ல." என்று கிறிஸ்டோஃப் ஜாஃபர்லோ கூறுகிறார்,

"ஜெய்சங்கர் இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தராக மிகவும் கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும், ரிவர்ஸ் இஞ்சினியரிங்கை பயன்படுத்துகிறார்,” என்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக ஆய்வு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் நிதாஷா கெளல் கூறுகிறார்.

மேற்கத்திய காலனித்துவ வரலாற்றைப் பற்றிய ஜெய்சங்கரின் விமர்சனத்தை ஆதரிக்கும் பலர் மேற்கில் இருப்பதாக நிதாஷா கெளல் கூறுகிறார். ”ஆனால், மேற்கத்திய நாடுகளின் பழைய தவறான செயல்களை விமர்சிக்கும் தனது நாட்டு மக்களைக் கவரவும் அதே வாதங்களைப் அவர் பயன்படுத்துகிறார்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நட்பு மற்றும் எதிரி நாடுகள் எப்படிப் பார்க்கின்றன?

பேராசிரியர் ஹுவாங் யுன்சோங், சீனாவின் செங்டுவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுத்துறையின் இணை முதல்வர் ஆவார். ஜெய்சங்கர் சீனாவுக்கான இந்தியத் தூதராக நீண்ட காலம் பணியாற்றியவர்.

"சீனாவின் அறிவுசார் மற்றும் செயல் உத்தி வட்டாரங்களில் ஜெய்சங்கரை நன்கு அறிந்தவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் ஜெய்சங்கரை ஒரு யதார்த்த அரசியல்வாதியாக மதிக்கிறார்கள். அவர் கடினமானவர், தந்திரமானவர் மற்றும் தைரியமானவர்." என்று பேராசிரியர் ஹுவாங் கூறுகிறார்.

அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக, வெளியுறவு

பட மூலாதாரம், Getty Images

"அவரது தூதாண்மை திறமைகளில், அமைதியான குணமும், கூர்மையான அறிவும் அடங்கும். இந்தியாவின் அதிமுக்கியமான சுயாட்சியை எவ்வாறு பராமரிப்பது என்பதில் அவரது மனம் எப்போதும் விழிப்புடன் இருக்கும்,"என்றார் அவர்.

“மனித உரிமைகள் என்ற பெயரில் மற்ற நாடுகளில் தலையிட்டு, ஜனநாயகத்தை மேம்படுத்துவது என்ற பெயரில் மேற்கத்திய நாடுகள் பாசாங்குத்தனமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகின்றன என்பதை நிச்சயமாக நாம் மறுக்க முடியாது,” என்று பேராசிரியர் நிதாஷா கெளல் கூறினார்.

”ஜெய்சங்கரின் இந்த கூர்மையான பேச்சுகளை மேற்கத்திய நாடுகள் அறிந்திருக்கின்றன. ஆனால் சீனாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஜெய்சங்கரின் அறிக்கைகள் அத்தனை மோசமில்லை என்று கருதுகின்றன,” என்கிறார் பேராசிரியர் நிதாஷா கெளல்.

மறுபுறம், மேற்கத்திய நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் உலக முறைமை மாறிவருகிறது என்ற அவரது நம்பிக்கைதான், ஜெய்சங்கரின் துணிச்சலான அறிக்கைகள் மற்றும் பேச்சுகளின் வேர் என்று பேராசிரியர் கிறிஸ்டோஃப் ஜாஃபர்லோ கருதுகிறார்.

ஜெய்சங்கர் தனது 'தி இண்டியா வே: ஸ்டாடெர்ஜீஸ் ஃபார் என் அன்செர்டன் வேர்ல்ட்’ என்ற புத்தகத்தில் இதை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டியுள்ளார். இதுவரை நாம் கண்டிராத ஒரு மாற்றம் இன்று நம் முன் வந்து கொண்டிருக்கிறது” என்று அவர் எழுதியுள்ளார்.

ஜெய்சங்கரின் வளர்ச்சி

அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக, வெளியுறவு

பட மூலாதாரம், Getty Images

அமைச்சரவையில் ஜெய்சங்கரின் வளர்ச்சி ஏறுமுகமாக இருப்பதாக மோதி அரசிற்குள்ளேயே ஒரு சிந்தனை இருக்கிறது. குறிப்பாக யுக்ரேன் போர், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குதல் போன்ற பிரச்சனைகளை ஜெய்சங்கர் கையாண்ட விதம் அவரது புகழை அதிகப்படுத்தியுள்ளது.

மோதியின் அமைச்சரவையில் அதிகம் விரும்பப்படும் அமைச்சர்களில் ஜெய்சங்கரும் ஒருவர் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

"ஒரு வெளியுறவு அமைச்சராக மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் அதே மட்டத்தில் அவரை நான் வைக்கிறேன். வெளியுறவு அமைச்சராக டாக்டர். எஸ். ஜெய்சங்கரின் சாதனைகள் பண்டிட் ஜவஹர்லால் நேருவை விட மிக அதிகம் என்று நான் கருதுகிறேன் "என்று டாக்டர் சுவ்ரோக்மல் தத்தா கூறுகிறார்.

இது நிச்சயமாக பெரிய வார்த்தைகள்தான். ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சராகும் வரையிலான ஜெய்சங்கரின் பயணம், ஒரு தொழில்முறை தூதாண்மை அதிகாரியின் வெற்றிக்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும்.

1955 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த ஜெய்சங்கர், அரசு அதிகாரிகளின் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கே. சுப்ரமணியம் நன்கு அறியப்பட்ட நிர்வாக அதிகாரி. ஜெய்சங்கர் டெல்லியின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து சர்வதேச உறவுகளில் முனைவர் பட்டம் பெற்றார்.

அவர் மேற்கத்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு திறந்த மனதுடைய தாராளவாத நபர் என்று அவரது அக்கால தோழர்கள் கருதுகிறார்கள்.

ஜெய்சங்கர் 1977ல் தூதாண்மை அதிகாரியாக தனது தொழில் வாழ்க்கை பயணத்தை தொடங்கி பல நாடுகளில் இந்தியாவின் தூதராக பணியாற்றினார்.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக (2013-2015) ஜெய்சங்கர், அமெரிக்காவுடனான இந்தியாவின் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தினார். அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்றினார்.

இரு நாடுகளுக்கும் இடையே வலுவான செயல் உத்தி ஒத்துழைப்பை வளர்ப்பதில் அவர் மிக முக்கிய பங்கு வகித்தார்.

2009 மற்றும் 2013 க்கு இடையில் அவர் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்தபோது அவரது கருத்தியல் பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது என்று வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் 2011 இல், அவர் முதல் முறையாக நரேந்திர மோதியை சந்தித்தார். அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் ஜெய்சங்கர் அந்த நாட்களை நினைவு கூர்ந்தார். "நான் அவரை (நரேந்திர மோதியை) முதன்முதலில் 2011-ம் ஆண்டு சீனாவில் சந்தித்தேன். அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் என் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார்,” என்று ஜெய்சங்கர் கூறினார்.

"2011 வரை பல முதல்வர்களை இதுபோன்ற சுற்றுப்பயணங்களின்போது நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு சிறப்பான தயாரிப்புடன் வருகை தந்தவர்களை நான் பார்த்ததில்லை," என்றார் அவர்.

ஜெய்சங்கரின் கருத்தியல்

அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக, வெளியுறவு

பட மூலாதாரம், Getty Images

2014-ம் ஆண்டு நரேந்திர மோதி பிரதமராக பதவியேற்ற நேரத்தில், அமெரிக்காவுக்கான இந்திய தூதராக ஜெய்சங்கர் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தார்.

2014 செப்டம்பரில் நரேந்திர மோதி பிரதமராக முதல் முறையாக அமெரிக்கா சென்றபோது, ஜெய்சங்கருடனான அவரது சிறந்த உறவு வெளிப்பட்டது. இது ஜெய்சங்கரின் கருத்தியல் பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தால் நிகழ்ந்ததா என்று சொல்வது கடினம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நரேந்திர மோதியின் முதல் அமெரிக்கப் பயணத்தின் ஏற்பாடுகளில், அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த ஜெய்சங்கர் முக்கியப் பங்காற்றினார்.

நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் 'ஹவுடி மோடி' வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது பரவலாக அனைவராலும் விவாதிக்கப்பட்டது.

"மேடிசன் ஸ்கொயர் நிகழ்ச்சியின் போது நான் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்தேன். அந்த நிகழ்ச்சி ஒரு வரலாற்று நிகழ்வு என்று பலர் நம்புகிறார்கள்,” என்று ஜெய்சங்கரே கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

நரேந்திர மோதி அவரை வெளியுறவு செயலராக நியமித்தபோது (2015-2018), இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் அவர் மிக முக்கிய பங்கு வகித்தார்.

குறிப்பாக, 'விதிகளின் அடிப்படையிலான உலக முறைமை' பற்றிய இந்தியாவின் பார்வையை வடிவமைப்பதில் அவரது முக்கிய பங்களிப்பு இருந்தது.

அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக, வெளியுறவு

பட மூலாதாரம், Getty Images

வெளியுறவுச்செயலராக இருந்தபோது, நரேந்திர மோதியுடன் பல வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்குச்சென்றதாக ஜெய்சங்கர் கூறுகிறார்.

இருப்பினும் ஜெய்சங்கர் ஒரு வெளிநாட்டு சேவை அதிகாரியின் வரம்பிற்குள் இருக்காமல், தனது அரசியல் எஜமானருக்கு அதிகமாக சேவை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

2019 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றபிறகு பிரதமர் மோதி, வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கரை நியமித்தபோது, அவர் வெளியுறவுச்செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று புதிய வாழ்க்கைக்கு தயாராகிக்கொண்டிருந்தார்.

ஓய்வு பெற்ற வெளியுறவுச்செயலரை நேரடியாக கேபினட் அமைச்சராக்குவது மிகவும் அரிதானது என்று வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கூறுகின்றனர். தான் இதை எதிர்பார்க்கவில்லை என்று சமீபத்தில் ANI-க்கு அளித்த பேட்டியில், ஜெய்சங்கர் ஒப்புக்கொண்டார்.

இந்த யோசனையை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு ஒரு மாதம் யோசித்ததாக ஜெய்சங்கர் ஒரு பேட்டியில் கூறினார். இறுதியாக, வெளியுறவு அமைச்சராவதற்கு முன் அவர் முறைப்படி ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராகச்சேர்ந்தார்.

அவர் வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றபோது ஒரு முக்கிய நாளிதழ், "மோதியின் பிரச்சனைகளை நீக்குபவர் கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார்" என்ற தலைப்பை அளித்திருந்தது.

ஜெய்சங்கரின் வெளியுறவுக் கொள்கை தர்க்கரீதியானதா?

அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக, வெளியுறவு

பட மூலாதாரம், Getty Images

அவரது வெளியுறவுக் கொள்கை மூன்று சித்தாந்தங்களை அடிப்படையாக்கொண்டது என்று ஜெய்சங்கரின் புத்தகம் கூறுகிறது.

  • கூட்டணிகளைத் தவிர்த்தல்: அவர் கூட்டணிகளை விட ஒத்துழைப்பை நம்புகிறார். அவர் பன்மைத்துவம் அல்லது பலதரப்பு அரசியலை ஆதரிக்கிறார்.
  • அவர் பலமுனை உலகத்தை நம்புகிறார். இந்த உலக முறைமையில் உள்ளார்ந்த போராட்டங்களின் நன்மைகளை பெற விரும்புகிறார்.
  • இந்த இரண்டு விஷயங்களின் விளைவாக எழும் முரண்பாடுகளை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

ஜெய்சங்கரின் புத்தகம் 2020 இல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு நிறைய விஷயங்கள் மாறிவிட்டன.

”இந்தியா, சீனாவுடன் இணைந்து 21ம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக மாற்ற முடியும் என்று ஜெய்சங்கர் நம்புகிறார். அவர் தனது புத்தகத்திலும் இந்த யோசனையை முன்னெடுத்துச் செல்கிறார்.

ஜெய்சங்கரின் புத்தகத்தைப் படித்தவருக்கு அவர் சீனாவின் வேகமான முன்னேற்றத்தின் ரசிகர் என்பது தெரியும். சீனாவிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்,” என்று பேராசிரியர் ஜாஃபர்லோ கூறுகிறார்.

முரண்பாடுகள்

அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக, வெளியுறவு

பட மூலாதாரம், Getty Images

சீன அறிஞர், பேராசிரியர் ஹுவாங் யுன்சாங், "சீனாவும் இந்தியாவும் இணைந்து ஆசியாவின் நூற்றாண்டை உருவாக்க வேண்டும் என்ற ஜெய்சங்கரின் கருத்து, அவரது ஆக்கிரமிப்புக் கொள்கை மற்றும் சீனா மீதான அவரது அணுகுமுறையுடன் சிறிதும் பொருந்தவில்லை" என்று வாதிடுகிறார்.

அதற்கான காரணத்தை விளக்கிய பேராசிரியர் ஹுவாங், "சீனாவும் இந்தியாவும் இரண்டு வெவ்வேறு கிழக்கு நாகரிகங்கள். அவை முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரங்கள் மற்றும் புவியியல் பகுதிகளில் வளர்ந்துள்ளன.வரலாற்றில் மிகக் குறைந்த காலத்திற்கு மட்டுமே அவை தோற்கடிக்கப்பட்டுள்ளன," என்றார்.

"இன்று இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஒரு செயல் உத்தி கூட்டாண்மையிலிருந்து, எதிரி அண்டை நாடாக குறைக்கப்பட்டுள்ளது. நட்பு உறவுகளின் இடத்தை இப்போது பகை மற்றும் அலட்சியம் எடுத்துக்கொண்டுள்ளது,” என்று பேராசிரியர் ஹுவாங் கூறுகிறார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்புடன் ஆசிய நூற்றாண்டை வடிவமைக்கும் ஜெய்சங்கரின் யோசனை நடக்கக்கூடியது என்று பேராசிரியர் ஜாஃபர்லோ கருதவில்லை. அப்படி நடப்பது மிகவும் அரிது என்கிறார் அவர்.

சீனாவும் இந்தியாவும் இணைந்து ஆசிய நூற்றாண்டை உருவாக்க முடியும் என்ற ஜெய்சங்கரின் கோட்பாட்டை டாக்டர் சுவ்ரோக்மல் தத்தா நம்புகிறார். ஆனால், 'சீனா முதலில் தன் வழியை சரிசெய்துகொள்ள வேண்டும்' என்று அவர் கூறுகிறார்.

"நிச்சயமாக இந்த இரண்டு மாபெரும் ஆசிய சக்திகளும் இணைந்து ஆசிய நூற்றாண்டின் கனவை நிஜமாக்க முடியும். இது சாத்தியம்தான். ஆனால், சீனா தனது இந்திய விரோத போக்கை கட்டுப்படுத்த வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் இந்தியாவின் நண்பர்கள் மற்றும் எதிரிகளை கையாள்வதில் நீண்ட அனுபவம் உள்ள ஒரு மூத்த அரசியல்வாதி, இந்தியாவின் செல்வாக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக கருதுகிறார்.

ஜெய்சங்கரை விட சீனாவைப் புரிந்து கொண்ட தொழில்முறை தூதர் வேறு யாரும் இல்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதேபோல வேறு எந்த ஒரு அரசியல்தலைவரும் மோதியைப்போல ஒன்பது முறை சீனாவுக்கு பயணம் மேற்கொண்டதில்லை. நான்கு முறை குஜராத்தின் முதல்வராகவும், ஐந்து முறை இந்தியப் பிரதமராகவும் அவர் அங்கு சென்றுள்ளார்.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் பதற்றத்தை குறைப்பார்கள் இந்த இருவர் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது போல காணப்படுகிறது. அமைதி ஒப்பந்தம் ஏற்படும் நம்பிக்கையும் தற்போது தென்படவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: