விஜய்யின் 68-ஆவது படத்தை இயக்கும் வெங்கட் பிரபு

பட மூலாதாரம், AGS
விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்றும் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்திற்கு அடுத்து நடிப்பதற்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டுவந்தார் விஜய். இந்த நிலையில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
லியோ திரைப்படம் விஜய்யின் 67- ஆவது படமாக உள்ள நிலையில், வெங்கட் பிரபு இயக்கும் படம் விஜய்யின் 68வது படமாக இருக்கும். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார், யார் என்பது இதுவரை வெளியாகவில்லை.
இந்தப் படத்திற்கு பெயர் சூட்டப்படவில்லை. 'தளபதி 68' என்ற பெயரோடுதான் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரது நிறவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 25வது படமாக இது இருக்கும். ஏஜிஎஸ் நிறுவனம் இதற்கு முன்பாக விஜய்யை வைத்து பிகில் படத்தைத் தயாரித்துள்ளது. தற்போது உருவாகவுள்ள படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுவார் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், Venkat Prabhu
லியோ திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், வெங்கட் பிரபு இயக்கும் படம் அடுத்த ஆண்டு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - 600 028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு, அதற்குப் பிறகு சரோஜா, கோவா, மங்காத்தா, மாஸ் என்கிற மாசிலாமணி, சென்னை - 28 இரண்டாம் பாகம், மாநாடு, மன்மத லீலை, கஸ்டடி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
நாக சைதன்யா நடித்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த கஸ்டடி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கும் நிலையிலும் விஜய்யின் அடுத்த படத்திற்கான இயக்குநராக வெங்கட் பிரபு தேர்வாகியிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












