செந்தில் பாலாஜி உறவினர்களின் வீடுகளில் சோதனைக்கு சென்ற வருமான வரி அதிகாரிகளை தாக்கிய திமுகவினர் - என்ன நடந்தது?

செந்தில் பாலாஜி
படக்குறிப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது நடந்த ஊழல் முறைகேடு புகார்கள் தொடர்பாக தற்போதைய திமுக ஆட்சியில் அமைச்சராக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியின் வீட்டை சோதனையிட அதிகாரிகள் வந்தபோது, அவர்களுடன் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடு கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ளது. அவருக்கு எதிரான ஊழல் முறைகேடு புகார் தொடர்பாக குறித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அதிகாரிகளின் வாகனத்தை தாக்கிய திமுகவினர்

ஐடி தாக்குதல்
படக்குறிப்பு, வருமான வரித்துறையினர் வந்த காரின் கண்ணாடியை உடைத்த திமுகவினர்

முன்னதாக, வருமான வரித்துறை சோதனை நடைபெறும் கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு சோதனைக்கு சென்ற அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை முற்றுகையிட்ட திமுகவினர் அடையாள அட்டை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த அதிகாரி ஒருவர் திமுகவினரை தாக்கியதாக கூறப்படுகிறது. திமுகவினர் ஒருவரை பெண் அதிகாரி தாக்கியதாக கூறப்படுகிறது.

திமுகவினர் தாக்குதல்

அதன்பின் அங்குள்ள அதிகாரிகளை கண்டித்து திமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். செந்தில் பாலாஜி வீட்டுக்கு வெளியே வருமான வரித்துறை அதிகாரிகள் சென்ற கார் கண்ணாடிகளை திமுகவினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின் அங்கிருந்து சென்ற அதிகாரிகள் பாதுகாப்பு கருதி கரூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

திமுகவினர் தாக்குதல்

தமிழ்நாடு முழுவதும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் சென்னை, கரூர், கோவை என சுமார் 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டம் இராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் வந்தபோது அங்கு கூடியிருந்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுகவினர் தாக்குதல்

அதிகாரிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட திமுகவினர் பலரும் அங்கு கூடியிருந்தனர்.

இந்த வாக்குவாதத்தின் போது, வருமான வரித்துறையினரின் வாகனம் சேதத்திற்கு உள்ளானது. இதனால் சோதனையைத் தொடர முடியாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். பின்னர் கரூர் நகர காவல் நிலையத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் திமுகவினர் மீது வருமான வரித்துறையினர் புகார் அளித்தனர்.

பதிலளிக்க மறுத்த கே.என்.நேரு

வருமான வரித்துறையினரின் வாகனம் சேதமடைந்தது தொடர்பாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் வருமான வரித்துறை வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், "வருமான வரித்துறையினர் காவல்துறை பாதுகாப்பு இன்றி சோதனைக்குச் சென்றுள்ளனர். சி.ஆர்.பி.எஃப். வீரர்களையும் அழைத்து வரவில்லை.

பொதுவாக வருமான வரித்துறையினர் சோதனைக்கு வருகின்றபோது காவல்துறையிடம் தகவல் தெரிவிப்பார்கள். ஆனால் இந்த முறை அவ்வாறு தகவல் தெரிவிக்கவில்லை. சோதனை தொடர்பாகத் தகவல் அறிந்ததும் பாதுகாப்பிற்கு காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்," என்றார்.

“என் வீடுகளில் சோதனை நடக்கவில்லை”

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை நடத்தி வரும் சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால், அவர் அதற்குப் பதில் சொல்ல மறுத்துவிட்டார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கேட்டதற்கு தனக்கு ஏதும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி

வருமான வரித்துறையின் சோதனை தொடர்பாக டாஸ்மாக் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற செந்தில் பாலாஜியிடம் கேள்வியெழுப்பியபோது, “எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடக்கவில்லை. எனது தம்பி, தெரிந்தவர்களுடைய வீடுகளில்தான் நடக்கிறது. அதைப் பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது,” என்று தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் திமுகவினர் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாகப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தவறு செய்யவில்லை என்றால் வருமான வரித்துறை அதிகாரிகளை எதற்காகத் தடுக்க வேண்டும்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், “சோதனை செய்ய அனுமதிக்காதபோது அங்கு ஏதோ தவறு இருப்பதாகத் தெரிகிறது. நேர்மையாளர்களாக இருந்தால் அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும். வீட்டில் ஒன்றும் இல்லை என்றால் திறந்து காட்டிவிட வேண்டியதுதானே!” என்றும் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி

"முதலமைச்சர் ஸ்டாலின் என்ன தமிழ்நாட்டிற்கு ராஜாவா?"

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நடக்கும் சோதனை குறித்துப் பேசினார்.

அப்போது, “வருமான வரித்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடிய ஓர் அமைப்பு. பல்வேறு ஆட்சிக்காலங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடந்துள்ளன. ஆனால், மத்திய அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளைக்கூட செய்ய முடியாத சூழல்தான் தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

மேலும், “அப்படியென்றால் தமிழ்நாடு என்ன தனி ராஜ்ஜியமா? முதலமைச்சர் ஸ்டாலின் என்ன தமிழ்நாட்டிற்கு ராஜாவா? ராஜாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுத்தான் தமிழ்நாடு செயல்படுகிறதா?” என்று கேள்வியெழுப்பினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதோடு, “அனைத்து மாநிலங்களுமே மத்திய அரசுக்கு கட்டுப்பட்டவைதான். அப்படியிருக்கையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அமைப்பு அதன் கடமையைச் செய்யவிடாமல் திமுகவினர் தடுப்பது அரசமைப்பு சட்டத்தை மீறும் செயல். இப்படியொரு சூழ்நிலையில், ஆளுநர் இதில் உடனடியாகத் தலையிட்டு மத்திய ரிசர்வ் காவல் படையின் பாதுகாப்புடன் இதுபோன்ற சோதனைகளைச் செய்ய வழிவகைகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

வருமான வரித்துறை மீது கை வைப்பது தேன் கூட்டில் கை வைப்பதைப் போன்றது. இதை அவர்கள் அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

“சீமான் பேசுவதற்கு எல்லாம் பதில் கூற முடியாது”

இதற்கிடையே திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ உள்ளிட்ட மூன்று படைகளை கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை பழி வாங்கிவிடலாம் என பாஜக கனவு காண்கிறது.

முதல்வர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள நிலையில் அது குறித்த செய்திகளை திசைதிருப்ப வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது,” என்று தெரிவித்தார்.

மேலும், "தமிழ்நாட்டிற்கு வருகின்ற முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. முதல்வர் ஊரில் இல்லாத நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகின்ற முதலீட்டுகள் குறித்த செய்திகளை ஜீரணிக்க முடியாமல் அவற்றை திசை திருப்ப பாஜக இந்த சோதனையை நடத்துகிறது. இது போன்ற சோதனைகளைப் பற்றி திமுக எந்தக் காலத்திலும் கவலைப்பட்டது கிடையாது.

பாஜக என்றால் என்ன, அதன் அதிகாரம் என்ன, அதன் விளைவுகள் என்ன என்பதை செந்தில் பாலாஜி விரைவில் உணர்ந்து கொள்வார் என 10 நாட்களுக்கு முன்பு அண்ணாமலை பேட்டி கொடுத்திருந்தார்.

செந்தில் பாலாஜியை முடக்கவே இந்த சோதனை நடத்தப்படுகிறது. முதல்வர் தமிழ்நாட்டில் இல்லாத நேரத்தில் சோதனை நடத்துவது பாஜகவின் அசிங்கமான அரசியலைக் காட்டுகிறது,” என்று கூறினார்.

செந்தில் பாலாஜி

அதோடு, “பொதுவாக சோதனை என்றால் மாநில காவல்துறையிடம் தகவல் தெரிவித்த பின்பு தான் நடத்துவார்கள். ஆனால் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை என கரூர் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

காவல்துறைக்கு தெரிவிக்காமல் வந்தது தவறு. அதனால் வந்தவர்கள் யாரென்று தெரியாத சந்தேகத்தினால்தான் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

திட்டமிட்டு வேண்டுமென்றே அரசுக்கு களங்கம் விளைவிக்க சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைப் போன்று உருவாக்கப் பார்க்கிறார்களோ என சந்தேகம் எழுகின்றது. அமலாக்கத் துறை தோன்றிய காலத்திலிருந்து சோதனை நடத்தியதில் 0.5% தான் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்திற்கு சாதகமாக வருகின்ற செய்திகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்த சோதனை நடத்தப்படுகிறது. காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் அதிகாலை 3 மணிக்கு வந்து வீட்டுக் கதவைத் தட்டினால் சந்தேகம் எழத் தான் செய்யும்.

கரூரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த சதித்திட்டமோ என சந்தேகம் எழுகின்றது. அங்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சீமான் பேசுவதற்கு எல்லாம் பதில் கூற முடியாது,” என்றார்.

"முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளோம்"

வருமான வரித்துறை சோதனை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”இன்று காலை தொடங்கி வருமான வரித்துறை சோதனை என் சகோதரர், உறவினர், நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வருகிறது. என்னுடைய வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை,” என்று கூறினார்.

மேலும், “சோதனை எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இதுதொடர்பாக எங்கள் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரூரில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் பற்றி அவரும் விளக்கம் அளித்துள்ளார். இத்தகைய சோதனைகள் நாங்கள் புதிதாக எதிர்கொள்வது அல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும் இதேபோன்ற சோதனையை மேற்கொண்டார்கள். எங்களுடைய பிரசாரத்தை முடக்க நேரில் வரச் சொன்னார்கள்.

இப்போது எனது வீட்டைத் தவிர பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று சோதனை நடத்தும் பெரும்பாலான இடங்களில் அனைவரும் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள். நான் கரூருக்குத் தொடர்புகொண்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளேன்.

எத்தனை இடங்களில், எவ்வளவு நாட்கள் சோதனை நடத்தினாலும் அனைத்து ஆவணங்களையும் முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறோம். சோதனை குறித்து முழுமையாக அறிந்துகொண்டு கருத்துகளைப் பகிர்ந்து சொல்வதுதான் சரியாக இருக்கும். சோதனை முடிந்த பிறகு நான் மீண்டும் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்.

வருமான வரித்துறையினர் அதிகாலை நேரத்தில் காத்திருக்காமல் கதவை ஏறிக் குதித்து உள்ளே சென்ற வீடியோ எனக்குக் கிடைத்துள்ளது. சோதனை முடிந்த பிறகு முழுமையாக விசாரித்துவிட்டுப் பேசுகிறோம்.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம், Getty Images

எனக்குத் தெரிந்த வரை 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாகச் சொல்கிறார்கள். வாகன சேதம் தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

சி.ஆர்.பி.எஃப். அனுப்ப வேண்டும் என ஆளுநருக்கு அதிமுக கோரிக்கை வைக்கிறது. விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நடைபெற்ற உடன் எங்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் அங்கிருந்து அனுப்பிவிட்டோம்.

ஆனால் அதிமுக சோதனைகளின்போது தங்கள் ஆதரவாளர்களை வர வைத்து சாப்பாடு வழங்கி பந்தல் அமைத்துத் திரட்டினார்கள். யார் நேர்மையான ஒத்துழைப்பு வழங்குகிறார்கள் என்பது இதிலிருந்து தெரியும்.

நாங்கள் வரி ஏய்ப்பு நடந்தியிருந்தால் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. அதேநேரம் சுவர் ஏறிக் குதித்துச் செல்வது போன்ற விரும்பத்தகாத செயல்கள் சரியானவை அல்ல.

2006 சட்டமன்ற தேர்தலில் நான் தாக்கல் செய்த வேட்பு மனுவில் கொடுத்துள்ள சொத்துகளில் ஒன்றை மட்டுமே விற்றுள்ளேன். அதைத் தவிர்த்து நானும் என் குடும்பத்தினரும் ஒரு சொத்துகூட வாங்கவில்லை. நாங்கள் வாங்கப் போவதும் இல்லை. ஆனால் தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன,” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: