இனப் படுகொலையால் ரத்தக்களரியான இடம் 30 ஆண்டுக்குப் பின் எப்படி உள்ளது? பிபிசி செய்தியாளரின் அனுபவம்

    • எழுதியவர், விக்டோரியா உவோன்குண்டா
    • பதவி, பிபிசி நியூஸ், கிகாலி

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் வரும் சில தகவல்கள் உங்களை சங்கடப்படுத்தலாம்.

நான் 30 ஆண்டுகளுக்கு முன்பு 12 வயதில் எனது பிறந்த நாட்டையும் வீட்டையும் விட்டு வெளியேறினேன். அப்போது 1994 ஆம் ஆண்டு ருவாண்டாவில் நடந்த கொடூரமான இனப் படுகொலையின் போது நானும் எனது குடும்பமும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம்.

அதன் பிறகு கென்யாவிலும், நார்வேயிலும் வளர்ந்து லண்டனில் குடியேறி விட்டேன். ருவாண்டா மக்கள் அந்த மோசமான நிகழ்விலிருந்து மீண்டுவிட்டார்களா என்று திரும்பிச் சென்று பார்த்தால் எப்படி இருக்கும் என்று அடிக்கடி நான் யோசித்ததுண்டு.

அப்படியிருக்க அதே மக்களை பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க அங்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்த போது, ​​நான் உற்சாகமடைந்தேன். அதே சமயம், அங்கு செல்லும் போது நான் என்னவெல்லாம் எதிர்கொள்வேன் மற்றும் என்னுடைய எதிர்வினை என்னவாக இருக்கும் என்றும் எனக்குள் கவலை இருந்தது.

இந்த மோசமான நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்ச்சி (PTSD) தந்த உணர்ச்சிமிக்க ஆறா ரணங்களுடன் நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.

நாட்டை விட்டு வெளியேறுவதன் வலி

ருவாண்டாவின் பல மக்களைப் போலவே, நானும் எனது குடும்ப உறுப்பினர்களில் பலரை இழந்தேன். வெறும் 100 நாட்களில், பழங்குடியின ஹுட்டு தீவிரவாதிகள், சிறுபான்மை துட்சி சமூகத்தைச் சேர்ந்த எட்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களைக் கொன்றனர்.

அவர்கள் இனப் பாகுபாடு இன்றி தனது அரசியல் எதிரிகளை இலக்கு வைத்து கொன்று குவித்தனர்.

இந்தப் படுகொலைக்குப் பிறகு, துட்சிப் படைகள் ஆட்சியைப் பிடித்தன. இவர்கள் மீதும் ருவாண்டாவில் ஆயிரக்கணக்கான ஹுட்டு மக்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

தலைநகர் கிகாலியை நான் அடைந்தபோது, எனது உணர்ச்சிகள் அதிகரித்தன.

என்னைச் சுற்றிலும் எனது சொந்த மொழியான கிண்ணியா மொழி பேசப்படுவதைக் கேட்பதில் தனி மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் கடைசியாக நான் இந்த நகரத்தில் இருந்தபோது, ​​​​இங்கு குழப்பமான சூழல் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. லட்சக்கணக்கானோர் எங்களது உயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருந்தோம்.

எனது குறுகிய பயணத்தின் போது நான் பார்க்க விரும்பிய இடங்களில் எனது ஆரம்பப் பள்ளியும், ஏப்ரல் 6, 1994 அன்று எனது உறவினர்களுடன் இரவு உணவுக்காக நான் மேசையில் அமர்ந்திருந்த எனது கடைசி இல்லமும் அடங்கும். அது கிகாலியில் உள்ளது.

அந்த சமயத்தில் அதிபரின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கேள்விப்பட்டோம். அன்று இரவு வந்த ஒரே தொலைபேசி அழைப்பு எங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிவிட்டது.

எப்படி வீட்டை கண்டுபிடிப்பது?

எனது குடும்பத்தின் பழைய வீட்டைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. நான்கு முறை முயற்சி செய்து விட்டேன். அதனால் நார்வேயில் உள்ள எனது அம்மாவை அழைத்தேன், அவர் எனக்கு வழிகாட்டினார்.

இறுதியாக, மூடிய வாயிலின் முன் நின்ற போது பழைய நினைவுகள் கதவைத் தட்டின. மொட்டை மாடியில் அமர்ந்து கவலையின்றிப் பேசிக் கொண்டிருந்த வெயில் மதியங்கள் என் நினைவில் வர நான் திணறிப்போனேன்.

அப்போது எங்களை மூன்று ஜோடி உடைகளை அணிந்து கொள்ள சொன்னார்கள். ஒரு காரில் ஏற சொன்னார்கள். நாங்கள் கனவில் கூட கற்பனை செய்திறாத ஒரு பயணத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்று அப்போது தெரியாது.

குழந்தைகள் அனைவரும் அப்போது பசியுடனும், ஒருவரோடு ஒருவர் இறுக்கமாக அணைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாலும் அன்று நாங்கள் யாரும் பேசியதாகவோ அல்லது புகார் தெரிவித்ததாகவோ எனக்கு ஞாபகம் இல்லை.

ஆறாவது நாளில், கிகாலியில் பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தோம். அதற்குப் பிறகு தப்பி ஓடியவர்களுடன் நாங்கள் சேர்ந்துகொண்டோம். ஒட்டுமொத்த கிகாலியுமே ஒரே நேரத்தில் கால் நடையாக, பைக்குகளில், கார்களில், லாரிகளில் ஊரை காலிசெய்துக் கொண்டு போவது போல் நாங்கள் உணர்ந்தோம்.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகிலிருந்த கிசெனியில் உள்ள எங்கள் குடும்ப வீட்டிற்கு நாங்கள் சென்றோம். இது தற்போது ருபாவு மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இம்முறை நான் பயணித்தபோது, ​​போக்குவரத்து சீராக இருந்தது. தோட்டாக்களின் சத்தமோ, சாலைகளில் மக்கள் வரிசையாகத் தப்பியோடவோ இல்லை. இந்த முறை ஒரு அமைதியான, பிரகாசமான மற்றும் அழகான நாள் அது.

இனப் படுகொலை நடந்த மூன்று மாதங்களில் சுமார் 40 பேருக்கு அடைக்கலம் கொடுத்த எங்கள் மூன்று படுக்கையறை கொண்ட வீட்டை நான் கண்டடைந்தேன். ஜூலை 1994 இல் நாங்கள் வெளியேறியதிலிருந்து அது காலியாக இருந்த போதிலும் கூட இன்றும் நிலைத்து நிற்கிறது.

உயிர் பிழைத்த உறவினர்களோடு சந்திப்பு

அந்த மோசமான இனப் படுகொலையில் இருந்து உயிர் பிழைத்த எனது உறவினர்கள் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களில் எனது உறவினர் அகஸ்டினும் ஒருவர். நான் அவரை கடைசியாக கிசெனியில் பார்த்தபோது அவருக்கு வயது 10.

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவரை கட்டிப்பிடிப்பது ஏதோ ஒரு கனவு போல் இருந்தது. அப்போது வரப்போகும் ஆபத்தை அறியாமல், ஈஸ்டர் விடுமுறையை ரசித்தவாறு, அருகில் இருந்த காய்கறி வயல்களில் அவருடன் ஓடி விளையாடியது அவரைப் பற்றி எனக்கு பிடித்த நினைவுகள்.

அவர் இப்போது நான்கு குழந்தைகளின் தந்தை, ஆனாலும், நாங்கள் இங்கிருந்து தப்பி செல்வதற்கு முன்பு எப்படி இருந்தோமோ அங்கிருந்தே தொடங்கினோம்.

"நான் என் பெற்றோர் இல்லாமல், கிராமங்கள் வழியாக தனியாக ஓடிவிட்டேன், அதே நேரத்தில் என் பெற்றோர் கிசெனி நகரம் வழியாக கோமாவுக்கு (காங்கோவின் எல்லையில் உள்ள நகரம்) சென்றனர்" என்று அகஸ்டின் என்னிடம் கூறினார்.

கிபும்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பெற்றோர்கள் இல்லாமல் தனியாக இருக்கும் சிறுவனுக்கு அது எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. நாங்கள் இங்கிருந்து வெளியேறிய போது குறைந்தபட்சம் எனது குடும்பத்தினர் என்னுடன் இருந்தனர்.

நல்ல வேளையாக அகஸ்டினின் முன்னாள் பக்கத்து வீட்டுக்காரர் அவரை பற்றி அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்க அவர்கள் அனைவரும் கிபும்பாவில் இரண்டு ஆண்டுகள் தங்கியுள்ளனர்.

"தொடக்க காலங்களில், அங்கு வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது. அங்கு காலரா பரவியது மற்றும் மக்கள் நோய்வாய்ப்பட்டனர். அழுக்கு மற்றும் சத்தான உணவு இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் நோயால் இறந்தனர்" என்று என்னிடம் கூறினார் அகஸ்டின்.

அகஸ்டினின் கதை என்னுடைய கதையைப் போலவே இருக்கிறது. கோமாவில் அகதியாக இருந்த அந்த முதல் வாரங்கள் எனக்கு நினைவிருக்கிறது. என் குடும்பம் கென்யாவில் நிரந்தரமான அடைக்கலத்தை கண்டடைவதற்குள் நகரத்தில் பலரும் இறந்திருந்தனர்.

இரண்டு மோசமான தாக்குதல்களில் இருந்து தப்பித்த உயிர்கள்

ருவாண்டாவில் நடந்த தாக்குதல்களில் இருந்து 13 வயதான கிளாடெட் முகாறுமுன்சி தப்பித்திருந்தார்.

அவருக்கு இப்போது 43 வயது. அவருக்கு பேரக்குழந்தைகள் கூட உள்ளனர். அவர் தன்னுடைய சில அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டார். அதோடு சேர்த்து, தனது காயங்களுக்கு காரணமானவர்களில் ஒருவரைப் பற்றியும் கூற ஒப்புக்கொண்டார்.

அவர் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட தாக்குதல்களில் ஒன்று, நாங்கள் சந்தித்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில், தென்கிழக்கு ருவாண்டாவில் உள்ள ஒரு நகரமான நியாமடாவில் நடந்தது.

இது ஒரு கத்தோலிக்க தேவாலயமாக இருந்தது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்தனர். ஆனால் அவர்கள் வேட்டையாடப்பட்டு கத்தியால் கொல்லப்பட்டனர்.

"தேவாலயத்திற்குள் நின்று கொண்டிருந்த போது அவன் என்னைத் தாக்கினான். ஏதோ ஒரு பாடலை பாடிக்கொண்டே அதை செய்தான். என் முகத்தில் தாக்கியதால் இரத்தம் வழிவதை என்னால் உணர முடிந்தது," என்று அவர் கூறினார்.

"கீழே குனிந்து படுக்குமாறு அவன் எனக்கு உத்தரவிட்டான். பின் ஈட்டியால் முதுகில் குத்தினான். அந்த தழும்புகள் இன்றும் கூட உள்ளன" என்று கூறினார்.

“அவன் என்னை ஈட்டியை கொண்டு பலமாக தாக்கினான். பின்னர் ஈட்டி ஆழத்தை எட்டிவிட்டது என்று நினைத்துக் கொண்டு அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.”

தனது முதுகில் ஆழமாக சொருகியிருந்த ஈட்டியை பிடுங்கி எறிந்துவிட்டு அங்கிருந்து ஓடிட்டிவிட்டார் முகாறுமுன்சி. பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி தனது பக்கத்து வீட்டுக்காரர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

ஆனால் அந்த சமயத்தில் அங்கு 26 வயதான போலீஸ் அதிகாரியாக இருந்த ஜீன்-கிளாட் என்டாம்பராவை அவர் சந்திக்க நேர்ந்தது.

காவல்துறை அதிகாரியின் கொலை முயற்சி

"அவள் ஒளிந்திருந்த வீட்டின் உரிமையாளர் எங்களை அழைத்தார். 'இன்யென்ஜி' இருப்பதாக தொலைபேசியில் சொன்னார், " என்று டாம்பரா என்னிடம் கூறினார்.

'இன்யென்ஜி' என்றால் 'கரப்பான் பூச்சி'. ஹுட்டு தீவிரவாதிகள் மற்றும் செய்திகளில் துட்சி மக்களை விவரிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

"ஏற்கனவே பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் படுக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவரை கொன்று விடுவதற்காக தோளில் சுட்டேன்," என்று டாம்பரா கூறினார்.

"யாரையும் மிச்சம் விட்டுவைக்க கூடாது என்று எங்களுக்கு உத்தரவு. நான் அவரைக் கொன்றுவிட்டேன் என்று நினைத்தேன்."

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவள் வீட்டை விட்டு வெளியேறி , அவருக்குத் தெரிந்த ஒருவரைச் சந்திக்கும் வரை தனியாக அலைந்து திரிந்திருக்கிறார் முகாறுமுன்சி.

வியக்கத்தக்க வகையில் பிழைப்பதற்கான வழியைக் கண்டுபிடித்தவர்களில் முகாறுமுன்சியும் டாம்பராவும் அடங்குவர்.

நான் அவர்களை நோக்கி சென்றபோது , ​​​​ஒரு மரத்தின் நிழலில் அவர்கள் ஒன்றாகச் சிரித்துக் கொண்டிருந்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால் அவர்களது சிரிப்பு இந்த செயல்முறை எவ்வளவு கடினமானது என்பதை நிரூபித்தது.

படுகொலையின் போது அவர் எத்தனை பேரைக் கொன்றுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா என்று முன்னாள் காவல் அதிகாரியிடம் நான் கேட்டபோது. இந்தக் கேள்விக்கு மௌனமாகத் தலையை அசைத்தார்.

அந்த இளைஞன் படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதன் பேரில், அவருக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்கு பதிலாக, அவர் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதற்கான தனது விருப்பத்தை தெரிவித்து சமூக சேவையில் ஈடுபட்டார்.

அவர் முகாறுமுன்சியைத் தேடினார். அப்படி கண்டுபிடித்து ஏழு முறைக்கு பிறகே , அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்ள அவர் ஒப்புக்கொண்டார் முகாறுமுன்சி.

சமூகத்தின் மீது நம்பிக்கை இல்லாமை

அலெக்ஸாண்ட்ரோஸ் லார்டோஸ், ஒரு உளவியலாளர். ருவாண்டாவில் பணிபுரிந்துள்ளார்.

“தனிப்பட்ட முறையில் சிகிச்சையைத் தொடங்க வேண்டுமெனில், கூட்டு சிகிச்சை முறை தேவை” என்று அவர் கூறுகிறார்.

"வன்முறை மிகவும் பரவலாக இருந்தது, அக்கம்பக்கத்தினர் அண்டை வீட்டாரைத் தாக்கினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குடும்ப உறுப்பினர்களையே தாக்கினர்," என்று என்னிடம் கூறினார் அவர்.

"எனவே யாரை நம்பலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை."

முகாறுமுன்சியை பொறுத்தவரை, அது அவரது சொந்த குடும்பத்திற்கு அதிக கவலையாக இருந்தது.

"நான் அவரை மன்னிக்காமல் இறந்தால், என் குழந்தைகள் மீது அந்த சுமை விழும் என்று நான் உணர்ந்தேன். நான் இறந்து அந்த வெறுப்பு தொடர்ந்தால், என் குழந்தைகளுக்கு நான் விரும்பும் ருவாண்டாவை உருவாக்கி தர முடியாது. நான் வளர்ந்த அதே ருவாண்டாவாகவே இருக்கும்” என்று கூறினார் அவர்.

“எனவே இதை என் பிள்ளைகளுக்கும் விட்டு செல்ல முடியாது.”

நல்லிணக்க முயற்சிகள்

படுகொலைகளுக்கு பின்பு நல்லிணக்கத்தை கொண்டு வருவதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று கிறிஸ்தவர்கள் தலைமையிலான திட்டம். இது விலங்குகள் வழியாக ருவாண்டா சமுதாயத்தில் குற்றவாளிகளையும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களையும் ஒன்றிணைக்கிறது.

பசுக்களை ஒன்றாகப் பராமரிப்பதன் மூலம், நல்லிணக்கம் மற்றும் மன்னிப்பு குறித்த உரையாடல்களில் ஈடுபடுவதன் வழியாக, ஒன்றாக இணைந்து அவர்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள்.

இன அடிப்படையில் பிளவுபட்டுள்ள நாட்டை மீண்டும் ஒன்றிணைக்கும் நோக்கில் ருவாண்டா நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது இங்கு இனம் பற்றி பேசுவது சட்டவிரோதமானது.

இருப்பினும், கருத்து வேறுபாடுகளை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளவில்லை, நீண்ட கால முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சுதந்திரங்கள் குறைவு என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த சமரச நிலையை அடைய ருவாண்டா மக்களுக்கு முப்பது ஆண்டுகள் ஆனது. முகாறுமுன்சியும் டாம்பராவும் மீண்டும் அண்டை வீட்டாராக சேர்ந்து வாழ்வார்கள்.

எப்போதும் என் இதயத்தின் ஒரு பகுதியாக இருந்த ருவாண்டா இனி ஒருபோதும் எனது வீடு என்ற உணர்வை தராது என்ற அதிர்ச்சிகரமான புரிதலை நான் தெரிந்துக் கொண்டேன்.

ஆனால், இந்த பயணம் எனக்குள் அமைதியை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய காயங்கள் ஆறுவதற்கும் உதவி செய்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)