தமிழ்நாடு எப்போதுமே பாஜகவுக்கு சவாலாக இருப்பது ஏன்? திமுக, அதிமுகவுடன் அதன் கடந்த கால உறவு என்ன?

    • எழுதியவர், விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகத்தில் நரேந்திர மோதியுடன் தமது தலைவர்கள் சிரித்துப் பேசும் புகைப்படங்கள் மிகப்பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவை தர்மசங்கடத்தில் தள்ளியுள்ளன. இந்த புகைப்படங்கள் தேர்தல் பிரசார களத்தில் எதிரொலிக்கின்றன. இரு கட்சிகளும் கூட்டத்தில் கைதட்டல் பெறுவதற்கு இப்புகைப்படங்களை பயன்படுத்துகின்றன.

இந்தியாவில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்த பாஜக, மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஆனால், வட இந்தியாவில் கணிசமான வெற்றிகளை பெறும் பிரதமர் நரேந்திர மோதியுடன் தங்கள் தலைவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டுவதை கூட தற்போது திராவிட கட்சிகள் தயங்குவது ஏன்? பாஜகவுடன் ரகசியக் கூட்டணி வைத்திருப்பதாக திமுகவும் அதிமுகவும் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்வது ஏன்? தமிழ்நாடு எப்போதுமே பாஜகவுக்கு சவாலாக இருப்பது ஏன்? திமுக, அதிமுகவுடன் அதன் கடந்த கால உறவு என்ன?

அதற்கு வரலாறு மற்றும் தரவுகள் பற்றி அறிவது அவசியம்.

பாஜக தோற்றம்

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்த மகாத்மா காந்தி 1948-ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்திய அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்தது. காங்கிரஸ் அரசில் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் நிபந்தனையின்படி, ஆர்எஸ்எஸ் இந்திய அரசமைப்பை ஏற்பதாகவும், இந்திய தேசிய கொடியை ஏற்பதாகவும் ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் உறுதியளித்த பின்னர் அதன் மீதான தடையை இந்திய அரசு 1949 ஜுலையில் விலக்கிக் கொண்டது.

நேருவின் அரசில் முரண்பட்டிருந்த இந்து மகா சபையின் முன்னாள் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி 1950-ல் பதவியை ராஜினாமா செய்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கருடன் ஆலோசனை செய்த சியாமா பிரசாத் முகர்ஜி 1951-ல் பாரதிய ஜன சங்கத்தை நிறுவினார்.

இந்த கட்சி இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் மூன்று சதவீத வாக்குகளையும் மூன்று இடங்களையும் வென்றது. பின்னர், 1957-ல் நான்கு இடங்களையும், 1962-ல் 14 இடங்களையும் பெற்றது. 1967-ல் 35 இடங்களை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. பீகாரில் காங்கிரஸ் அல்லாத அரசு முதன்முறையாக ஆட்சியமைத்த போது ஜன சங்கமும் அதில் அங்கம் வகித்தது. பின்னர் பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியாணா, மத்தியபிரதேச அரசாங்கத்திலும் ஜனசங்கம் பங்கெடுத்தது.

1968-ல் ஜனசங்கத்தின் தலைவராக அடல் பிகாரி வாஜ்பேயி பொறுப்பேற்றார். 1975-ல் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்திய போது, நாடு முழுவதும் பல கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பை இந்திரா காந்தி தடை செய்தார். இந்திராகாந்தியின் நடவடிக்கை (அவசர நிலை) பல கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தது. பாரதிய ஜன சங்கம், பாரதிய லோக் தளம், ஸ்தாபன காங்கிரஸ் உள்ளிட்டவை ஒரு கட்சியாக இணைந்து ஜனதா கட்சி உருவானது.

அவசர நிலைக்குப் பிறகு நடந்த 1977 தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்றது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். இந்தியாவில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு பொறுப்பேற்றது. ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களும் அந்த அரசில் பங்கெடுத்தனர். ஆனால் இந்த அரசு நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஆர்எஸ்எஸ் மற்றும் மதச்சார்பின்மை தலைவர்களிடையே விரிசல் ஆழமாகிக் கொண்டே சென்றது.

இந்து தேசியவாத ஜன சங்க உறுப்பினர்களுடன் நெருக்கம் பாராட்டுவதாக மொரார்ஜி தேசாய் மீது மதச்சார்பின்மை மற்றும் சோஷலிச தலைவர்கள் குற்றம்சாட்டினர், சரண்சிங்கும் தனது பாரதிய லோக் தள கட்சியின் ஆதரவை விலக்கிக் கொண்டார். இதனால், மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியை விட்டு 1979 ஜுலையில் விலகினார்.

சரண் சிங் புதிய பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் அவராலும் பெரும்பான்மை பெற முடியவில்லை. மூன்றே வாரங்களில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் தேர்தல் முடியும்வரை இடைக்கால அரசை வழிநடத்தினார்.

ஜனசங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்று ஆர்எஸ்எஸ் உடனான உறவை துண்டித்துவிட்டு ஜனதா கட்சியில் நீடிக்க வேண்டும் அல்லது ஜனதா கட்சியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட, முன்னாள் ஜன சங்க தலைவர்கள் அத்வானி, வாஜ்பேயி உள்ளிட்டோர் ஜனதா கட்சியை விட்டு வெளியேறினர்.

இந்த இரு தலைவர்களும் பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில் புதிய கட்சி தொடங்கினர். ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற கட்சியாக பாஜக இருந்தது.

தமிழ்நாட்டில் தீவிர வலதுசாரி இந்துத்துவ அரசியலுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர தமிழ்நாடு மிக முக்கிய பங்கு வகித்தது சுவாரஸ்யமான வரலாறு.

தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் ஆரம்ப காலங்களில் பாஜகவை தேர்தல்களில் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், 1998-ல் நிலைமை மாறியது. முதலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால் ஏன்?

அதற்கு பாஜகவின் வளர்ச்சியையும், ஜெயலலிதாவின் வளர்ச்சியையும் பார்க்க வேண்டியது அவசியம்.

இந்திய அரசியலின் திருப்புமுனை தருணங்கள்

1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது 1988-ல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த மோதல்களை காரணம் காட்டி அப்போதைய அரசு கலைக்கப்பட்டது. ஓராண்டுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு 1989 ஜனவரியில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அதிமுக ஜானணி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக பிளவுபட்டிருந்தது. இதனால் இரட்டை இல்லை சின்னம் முடக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு மட்டுமே ஆதரவு என்று ராஜீவகாந்தி கூறிவிட்டதால் காங்கிரஸ் தனித்தே களம் கண்டது. திமுக கூட்டணி 169 இடங்களை வென்று ஆட்சி அமைத்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ்நாடு முதல்வர் ஆனார் கருணாநிதி.

படுதோல்வியை சந்தித்த நிலையில், தேர்தல் முடிந்த அடுத்த மாதமே ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா அணியுடன் தனது அணியை இணைத்துவிட்டு அரசியலை விட்டே ஒதுங்கினார். ஒருங்கிணைந்த அதிமுக பக்கம் மீண்டும் இரட்டை இலை சின்னம் வந்தது, அந்த ஆண்டு நடைபெறவிருந்த மக்களவை தேர்தலை ஒட்டி மீண்டும் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி உயிர்பெற்றது.

1989-ல் நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றது. 39-ல் 38 இடங்களை கைப்பற்றியது.

இந்த மக்களவை தேர்தலில் தான் பாரதிய ஜனதா கட்சியும் 85 இடங்களில் வென்று தேசிய அரசியலில் பெரிய கட்சியாக உருவெடுத்தது. 1984-ல் வெறும் இரண்டு தொகுதிகளில் வென்ற பாஜகவுக்கு இது மிகப்பெரிய வளர்ச்சி.

காங்கிரசுக்கு இந்த தேர்தலில் 197 இடங்கள் கிடைத்தது. பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தர ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது.

1989-ல் தொடக்கத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திமுகவுக்கு, அதே ஆண்டில் இறுதி மாதங்களில் அதிர்ச்சி காத்திருந்தது. தேசிய முன்னணியில் ஜனதா தளத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட திமுக, தமிழ்நாட்டில் அத்தனை இடங்களிலும் தோற்றது

எனினும், விபிசிங், திமுகவை தனது அரசில் பங்கெடுக்கச் சொன்னார். முரசொலி மாறனுக்கு கேபினட் அமைச்சரவையில் இடம் கிடைத்தது.

ஜெயலலிதா மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், மத்தியிலோ மாநிலத்திலோ ஆதிக்கம் செலுத்த கூடுதல் ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இலங்கைக்கு ராஜீவ் காந்தியால் அனுப்பப்பட்டிருந்த அமைதிப்படை வி.பி.சிங் ஆட்சியில் திரும்பப் பெறப்பட்டது. எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.

அதே வேளை, இந்த காலகட்டத்தில் தான் ராமர் கோவில் விவகாரம் இந்திய அரசியலில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. பாஜக தனது முக்கிய செயல் திட்டமான அயோத்தி ராமர் கோவில் திட்டத்தை கையில் எடுத்தது.

சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் விதமாக செயல்படுவதாகக் கூறி அத்வானியின் ரத யாத்திரையை நிறுத்தினார் அப்போதைய பிகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். அத்வானியை கைது செய்யும் அவரது நடவடிக்கையை அப்போதைய பிரதமர் வி.பி.சிங் ஆதரவளித்தார்.

அத்வானி கைதை தொடர்ந்து தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. இதனால் வெறும் ஓராண்டில் வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது.

ஜனதா தளத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியேறிய சந்திரசேகரின் புதிய கட்சிக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்தது. சந்திரசேகர் தலைமையில் அமைந்த புதிய ஆட்சியும் சில மாதங்கள் மட்டுமே நீடித்தது. ஆனால் அந்த குறுகிய காலத்திலும் பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறின.

அயோத்தி ரத யாத்திரை விவகாரம் சூடு பிடித்தது. தீவிர வலதுசாரி இந்துத்துவத்தின் தாக்கம் வட மாநிலங்களில் வேகம் பெறத் துவங்கியது.

சந்திரசேகர் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவும் காங்கிரசும் தமிழகத்தில் திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோரி அழுத்தம் கொடுத்தனர். ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார் சந்திரசேகர். தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஆனால் அடுத்த இரு மாதங்களிலேயே சந்திரசேகருக்கு புதிய தலைவலி ஏற்பட்டது. இந்தியாவில் பொருளாதார நெருக்கடி தீவிரமானது. இந்தியா கடன் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கிடையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டது. இரு தரப்புக்கும் இடையே பல்வேறு காரணங்களால் பிளவு அதிகரித்தது. பின்னர் ராஜீவ் காந்தி ஆதரவை வாபஸ் பெற, சந்திரசேகர் ஆட்சி கவிழ்ந்தது.

இதன்பின்னர் தேர்தல் அறிவிக்கப்பட, மக்களவைத் தேர்தலோடு சேர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் மற்றும் அதிமுக இணைந்து தேர்தலை சந்தித்தன. தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு வந்தபோது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

காங்கிரஸ் அதிமுக கூட்டணி மெகா வெற்றி பெற்றது. இதற்கு ராஜீவ் மரணம் தொடர்பான அனுதாப அலையே பிரதான காரணமாக அரசியல் விமர்சகர்கள் கூறினர். திமுக மட்டுமின்றி அதன் கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தன. மேலும், சட்டப்பேரவை தேர்தலிலும் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வென்றன.

234 தொகுதிகளில் 225 தொகுதிகளில் வென்றது காங்கிரஸ் - அதிமுக கூட்டணி. ஜெயலலிதா முதன்முறையாக தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பேற்றார்.

வி.பி.சிங் ஆட்சியில் ஒபிசி இடஒதுக்கீடு, அத்வானி ரத யாத்திரை உள்ளிட்ட விவகாரங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த தேர்தலில்தான் இந்தியாவில் பாஜகவின் தீவிர இந்துத்துவ அரசியல் ராமர் கோவில் விவகாரம் வாயிலாக ஆழமாக வேரூன்றியது.

தென் மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ராஜீவின் மரணத்தால் காங்கிரஸுக்கு வாக்குகள் குவிந்த நிலையில், இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக வலுவான வெற்றிகளை பதிவு செய்தது. மக்களவையில் 120 எம்.பிக்களை பெற்று பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது பாஜக.

இது ஒருபுறமிருக்க, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பேற்ற ஓர் ஆண்டுக்குள்ளாகவே காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையில் விரிசல் துவங்கியது.

1992 ஜூன் 22-ல் மதுரையில் நடந்த ஒரு மாநாட்டில் அதிமுக ஆட்சிக்கு வர மக்கள்தான் காரணமே தவிர, ராஜீவ் காந்தி மரண அனுதாப அலை அல்ல என ஜெயலலிதா கூறினார். 1993-ல் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்தார். நரசிம்ம ராவ் அரசாங்கம் சென்னா ரெட்டியை தமிழ்நாடு ஆளுநராக நியமித்த பிறகு தமிழ்நாடு அரசுக்கும் சென்னா ரெட்டிக்கும் இடையில் அடிக்கடி உரசல் ஏற்பட்டது. அப்ப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஜெயலலிதா பாஜக தலைவர்களுடன் குறிப்பாக அத்வானியுடன் நட்பிலேயே இருந்துவந்தார். 1996 தேர்தலில் அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைக்க அத்வானி பெரும் முயற்சிகளை எடுத்தார். ஆனால், தேர்தல் நெருங்கியபோது மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் நரசிம்மராவ். அதை எதிர்த்து, ஜி.கே.மூப்பனார் காங்கிரசில் இருந்து வெளியே வந்து தமிழ் மாநில காங்கிரசை தொடங்கினார். திமுக, தமாகா, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. ஜெயலலிதாவுக்கு எதிராக வீசிய அலையில் திமுக கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் 221 இடங்களிலும், மக்களவை தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்றயது.

1991 தேர்தலில் மெகா வெற்றி பெற்ற ஜெயலலிதா, அடுத்த ஐந்தே ஆண்டுகளில் படுதோல்வியை சந்தித்தார். வெறும் நான்கு எம்.எல்.ஏக்கள் மட்டுமே அதிமுகவுக்கு கிடைத்தார்கள். ஜெயலலிதாவும் பர்கூரில் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

1996 மக்களவைத் தேர்தலில் 161 இடங்களை பெற்று அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக பாஜக உருவெடுத்தது. வகுப்புவாத மோதல்கள், பதற்றங்கள் அதிகரித்த பகுதிகளில் பாஜக பெரும் வெற்றி பெற்றது. காங்கிரசின் வலுவான கோட்டையாக இருந்த உத்தரபிரதேசம், பிகார் உள்ளிட்டவை பாஜகவின் இடங்களை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தன. ஆனால் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லை. அப்போதைய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா வாஜ்பேயியை ஆட்சியமைக்க அழைத்தார். வாஜ்பேயும் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். மாநில கட்சிகளின் ஆதரவை பெற முயற்சித்தார். ஆனால், 13 நாட்களில் வாஜ்பேயி அரசு கவிழ்ந்தது.

வாஜ்பேயி அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக அப்போது பேசிய திமுக எம்.பி முரசொலி மாறன். “வாஜ்பேயி அவர்களே, இன்று இந்த தீர்மானத்துக்கு எதிராக நான் பேசவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. எனக்கு உங்கள் மேல் அன்பு இல்லாமல் இல்லை. ஆனால் எனது மக்கள், எனது மொழி, எனது கலாசாரம், எனது சமூகத்தின் சகோதா சகோதரிகள் மேல் இன்னும் அதிக அன்பு உள்ளது. எங்களுக்கு வாஜ்பேயி மீது மிகுந்த மரியாதை உள்ளது.

எங்கள் தலைவர் கலைஞர் கூறியது போல, அவர் ஒரு சிறந்த மனிதர். ஆனால் அவர் ஒரு தவறான கட்சியில் உள்ளார். வாஜபேயி ஒரு உயரிய நாடாளுமன்றவாதி, மிகவும் சிறப்பான குணங்களை கொண்டவர், அதுவே அவரை பிரதமர் பதவிக்கு பொருத்தமானவராக்குகிறது. ஆனால் அவரை இப்போது இங்கே கொண்டு வந்திருக்கும் சித்தாந்தம் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. அதனால் தான் இந்த நம்பிக்கை தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.

வாஜ்பேயி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் முன்னரே பதவி விலகினார். இரண்டாவதாக அதிக இடங்களை பெற்ற கட்சியாக இருந்த காங்கிரசும் ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. ஜனதா தள தலைவர் வி.பி.சிங்கும் பிரதமர் பதவியேற்க மறுத்துவிட்டார். ஜோதிபாசுவை பிரதமராக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதன்பின்னர் அப்போது கர்நாடக முதல்வர் பதவியில் இருந்த தேவேகௌட இந்திய பிரதமரானார். காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தர, திமுக, தமிழ் மாநில காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாதி உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசாங்கம் அமைந்தது.

இந்த அரசாங்கத்தில், கேபினட் அமைச்சரவையில் இரு இடங்களை பெற்றது திமுக.

முரசொலி மாறன் மற்றும் டி.ஜி.வெங்கட்ராமன் கேபினட் அமைச்சர்களாக இடம்பெற்றனர். என்.வி.என். சோமு மற்றும் டி.ஆர்.பாலுவுக்கு இணை அமைச்சர் பதவிகள் கிடைத்ததன. தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அருணாச்சலம், ப.சிதம்பரத்துக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைத்தது. தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் இணை அமைச்சர்களானார்கள்.

ஆனால் இந்த அரசுக்கும் சிக்கல் ஏற்பட்டது. தேவேகௌடவுடன் காங்கிரசுக்கு முரண் ஏற்பட, ஓராண்டுக்குள்ளேயே அவருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டது காங்கிரஸ். இதையடுத்து 1997-ல் ஐ.கே. குஜ்ரால் பிரதமர் பதவி ஏற்றார். அவருக்கும் காங்கிரஸ் குடைச்சல் கொடுத்தது.

ராஜீவ் காந்தி படுகொலை விவகாரத்தில் ஜெயின் கமிஷன் அறிக்கையை காரணம் காட்டி திமுகவை அமைச்சரவையில் இருந்து நீக்கச் சொன்னது காங்கிரஸ் கட்சி. ஆனால் குஜ்ரால் மறுக்க, காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டது. குஜ்ரால் அரசும் கவிழ, 1997 டிசம்பர் 4-ஆம் தேதி மக்களவை கலைக்கப்பட்டது.. புதிய தேர்தலுக்கு தயாரானது இந்தியா.

மத்தியில் இந்த நிகழ்வுகள் ஒருபுறம் இருக்க, மாநிலத்தில் திமுக - அதிமுக மோதல் உச்சகட்டத்தை எட்டியது. 1996-ல் வென்ற பின்னர் திமுக வாக்குறுதி கொடுத்தபடி ஜெயலலிதாவின் மீதான ஊழல் விவகாரங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜெயலலிதா மீது வெவ்வேறு ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. சுப்ரமணியன் சுவாமி, ஜெயலலிதா அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்து சேர்த்ததாக நீதிமன்றத்தில் தனி புகார் கொடுத்தார்.

1996 இறுதியில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். நீதிமன்ற நடைமுறைகளை விரைவுபடுத்த ஜெயலலிதா மற்றும் அவரது ஆட்சியின் 12 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அவரது வீட்டில் இருந்து 28 கிலோ தங்கம், 800 கிலோ வெள்ளி, 750 ஜோடி செருப்பு, 10500 சேலைகள் உள்ளிட்டவை சோதனையில் கைப்பற்றப்பட்டன. 1997-ல் ஊழல் வழக்குகள் அதையொட்டிய போராட்டங்களிலேயே அதிமுகவுக்கு நாட்கள் கழிந்தன .

இந்த சமயத்தில் வாஜ்பேயி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிக் கொண்டிருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் நாடு முழுக்க பல்வேறு கட்சிகளை கூட்டணியில் இணைக்க பாஜக தீவிர முயற்சி எடுத்தது. ஐக்கிய முன்னணி மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக பாஜக வேகமாக வளர்வதை தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகள் கவனிக்கத் தவறவில்லை.

திமுக, பாஜக அரசியலை தொடர்ந்து எதிர்த்து வந்தாலும், வாஜ்பேயுடன் நட்பிலேயே இருந்தது. மறுபுறம் ஜெயலலிதா வாஜ்பேயுடன் நெருக்கமான உறவில் இல்லாவிட்டாலும் பாஜகவின் கொள்கைகளில் இருந்து தீவிரமான எதிர் நிலைப்பாடுகளை எடுக்கவில்லை, தவிர அத்வானியுடனான நட்பும் தொடர்ந்தது.

இந்த நிலையில் 1997 டிசம்பர் மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க ஜெயலலிதா விரும்பவில்லை என்பது தெளிவானது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதாக விமர்சித்த ஜெயலலிதா, கூட்டணி பேச்சுவார்த்தைக்காக போயஸ் கார்டன் வந்த காங்கிரஸ் தலைவர் விஜயபாஸ்கர ரெட்டியிடம் காங்கிரசின் நிலைமைக்கு ஒரு இடம் தான் தர முடியும், ஆனால் பழைய நட்பை கருத்தில் கொண்டு இரண்டு சீட் தருகிறேன் என கூறியதாக இந்தியா டுடே இதழில் செய்தி வெளியானது. காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்குள் பாஜக - அதிமுக கூட்டணி உறுதியானது. மேலும் பாமக, மதிமுக, சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சி உள்ளிட்டவையும் அதிமுக கூட்டணியில் சேர்ந்துகொண்டன. பாஜகவுக்கு ஐந்து இடங்களை ஒதுக்கினார் ஜெயலலிதா.

காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து விடப்பட்ட நிலையில், இந்தியாவில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதை முடிவு செய்யப்போகும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு பார்க்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த மற்றுமொரு முக்கியமான விஷயம் உள்ளது.

தமிழ்நாட்டில் வகுப்புவாத வன்முறை

1997-ல் வகுப்புவாத வன்முறை தமிழகத்தில் நடந்தது. 1990களில் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகளும், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கும் களமாக கோயம்புத்தூர் அமைந்தது. 1997 நவம்பர் இறுதியில், காவலர் செல்வராஜ் கொலையை தொடர்ந்து, இரு அடிப்படைவாத மத அமைப்புகளிடையே வெடித்த மோதலில் இரு தரப்பிலும் பல உயிர்கள் பலியாயின. கருணாநிதி ஆட்சி மீது விமர்சனம் எழுந்தது. அந்த சூடு தணிவதற்குள் அடுத்த பயங்கரம் அடுத்த இரு மாதங்களில் நடந்தது.

1998 பிப்ரவரி 14-ம் தேதி மாலை கோவை நகரில் பாஜக தலைவர் அத்வானியின் பொதுக்கூட்டம் நடக்க இருந்தது. அன்று காலை முதல் மாலை வரை சுமார் 12 கிலோ மீட்டர் பகுதிக்குள் 11 இடங்களில் 12 குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நிகழ்ந்தன. பல இடங்களில் குண்டுகள் வெடிக்கத் தவறின.

இந்த கொடிய தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக இருநூறுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் நடந்த சில மணிநேரங்களில் தமிழ்நாடு அரசு அல் உம்மா அமைப்பை தடை செய்தது. கோவை தொடர் குண்டுவெடிப்பு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது. ஜெயலலிதா, கருணாநிதி அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.

1997 நவம்பர் இறுதி முதல் 1998 பிப்ரவரி வரை நடந்த சம்பவங்கள் தேர்தலில் எதிரொலித்தன. பிப்ரவரி 16, 22,தேதிகளில் தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. கோயமுத்தூரில் மட்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேர்தல் நடந்தது. பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் 30 மக்களவை தொகுதிகளை அதிமுக - பாஜக கூட்டணி வென்றது. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இருந்து மூன்று உறுப்பினர்கள் கிடைத்தார்கள். கோவை, நீலகிரி, திருச்சி மக்கள் முதன்முறையாக தமிழ்நாட்டில் இருந்து பாஜகவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்க உதவினார்கள்.

கொங்கு மண்டலத்தில் திமுக பெரும் தோல்வியை சந்தித்தது, சென்னை, திருப்பத்தூர், தஞ்சாவூர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் மட்டுமே திமுக வென்றது. 1989-ஐ தொடர்ந்து 1998 தேர்தலிலும் ஆட்சியில் இருக்கும்போது மக்களவை தேர்தலில் திமுக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக கூட்டணிக்கு அரசுக்கு முதல் ‘பெரும்பான்மை’ ஆதரவு

இந்திய அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 182 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. எனினும் அதன் கூட்டணிக்கு 261 இடங்கள் கிடைத்தன. இதனால், தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த வாழப்பாடி ராமமூர்த்தி, சேடப்பட்டி முத்தையா, தம்பிதுரைக்கு கேபினட்டில் இடம் கிடைத்தது. பாமகவைச் சேர்ந்த தலித் எழில்மலைக்கு கேபினெட்டில் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி கிடைத்தது. அதிமுகவைச் சேர்ந்த ஆர்.கே.குமார், கடம்பூர் ஜனார்த்தனம் ஆகியோருக்கும் இணை அமைச்சர் பதவி கிடைத்தது.

ஜெயலலிதா அதிமுக தலைமைப் பொறுப்புக்கு வந்த பிறகு பின்னர் மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தது இதுவே முதல்முறை. ஆனால் ஜெயலலிதா வாஜ்பேயி அரசாங்கத்துக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தார். ஜெயலலிதாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் வாஜ்பேயி அரசு நெருக்கடியை சந்தித்தது.

சுப்ரமணியன் சுவாமியை நிதியமைச்சராக்க ஜெயலலிதா கடும் அழுத்தம் கொடுத்ததாகவும் வாஜ்பேயி அதற்கு இசைவு தெரிவிக்கவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டன.

அதுமட்டுமின்றி, திமுக அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் வாஜ்பேயி அரசாங்கம் அதை நிறைவேற்றவில்லை.

ஜெயலலிதாவின் கோரிக்கையை நிறைவேற்ற பாஜக நினைத்திருந்தால் கூட, அப்போது மாநில அரசை மத்திய அரசு கலைப்பதாய் இருந்தால், அது நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என 1994-ல் உச்சநீதிமன்றம் அளித்திருந்த ஒரு மிக முக்கியமான தீர்ப்பு தடையாகவே இருந்ததும் கவனிக்கத்தக்கது.

தொடர்ந்து ஜெயலலிதா - வாஜ்பேயி இடையிலான உறவுகள் கசந்துவந்த நிலையில், சுப்ரமணியன் சுவாமி எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க ஏற்பாடு செய்த ஒரு தேநீர் விருந்தில் ஜெயலலிதாவும் சோனியா காந்தியும் பங்கேற்றனர். மிகவும் புகழ்பெற்ற அந்த தேநீர் விருந்துக்கு பிறகு இரு வாரங்களில் ஜெயலலிதா ஆதரவை விலக்கிக் கொள்ள, அது வாஜ்பேயி, ஓராண்டிலேயே ஆட்சியை இழக்க வழிவகுத்தது.

இதையடுத்து மீண்டும் 1999-ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் காட்சிகள் மாறின.

திமுக - பாஜக கூட்டணியின் கதை

அதிமுகவின் எதிராளியான திமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. ஜெயலலிதா சோனியா காந்தியுடன் இணைய மீண்டும் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி மலர்ந்தது.

தமிழகத்தில் பாஜகவுடன் திமுக, பாமக, பாஜக, மதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. கார்கில் போர் பின்னணியில் நடந்த இந்த தேர்தலில் மீண்டும் 182 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக.

இந்த முறை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 26 இடங்கள் கிடைத்தன. பாஜக வேட்பாளர்கள் ஆறு இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வென்றனர். நீலகிரி, கோயம்புத்தூர், திருச்சியோடு சேர்த்து நாகர்கோவிலிலும் வென்றது பாஜக. திமுக 12 இடங்களில் வென்றது. மதிமுக போட்டியிட்ட ஐந்து இடங்களில் நான்கில் வென்றது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 299 எம்பிக்கள் கிடைத்தனர். வாஜ்பேயி அமைச்சரவையில் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு கேபினட் தனிப்பொறுப்பு இணை அமைச்சராக கண்ணப்பன் பங்கெடுத்தனர். ஆ.ராசா, இணை அமைச்சராக பொறுப்பேற்றார். மதிமுகவின் செஞ்சி ராமச்சந்திரன், பாமகவின் பொன்னுசாமி, என்.டி.சண்முகம், ஏ.கே.மூர்த்தி, தமிழகத்தில் இருந்து பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்னண், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இணையமைச்சர்களாக வாஜ்பேயி ஆட்சியில் வலம்வந்தனர்.

முதன் முறையாக ஐந்து ஆண்டுகால பதவிக்காலத்தை நிறைவு செய்தது பாஜக கூட்டணி. சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு பிரதமர் ஐந்தாண்டு காலம் முழுமையாக நிறைவு செய்தது இதுவே முதல் முறை.

ஆக, பாஜகவின் ஆட்சி கனவு நிறைவேறவும், வாஜ்பேயி இரண்டு முறை பிரதமராகவும் தமிழகம் முக்கிய பங்கு வகித்ததும். அதில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் பெரும் பங்காற்றின என்பதும் வரலாறு.

ஆனால் பாஜக - திமுக உறவு என்பது எப்போதுமே தேசிய அளவில் தலைப்புச் செய்தியாவே இருந்தது. பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து அப்போதைய திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்தபோது, "பாஜக தலைமையிலான அரசாங்கத்தில் திமுக இருப்பது என்பது பாஜகவுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையில் உறவுகளை ஏற்படுத்தவே உதவும். மோதல் போக்கை கடைபிடிப்பதை விட இரு தரப்பும் இணைய உதவக்கூடும். அது நாட்டுக்கு நல்லது" என்றார்.

அது மட்டுமின்றி, நிலையற்ற அரசு அமைவது குறித்தும் பேசினார். ஏனெனில், 1996 முதல் 1999 வரையில் மூன்று அரசுகள் அப்போது மாறியிருந்தது.

“எங்களுக்கு எதிரான கொள்கை கொண்ட அரசாக இருந்தாலும் கூட, ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கவிட வேண்டும் என்பதே எனது பார்வை. ஏனெனில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தபிறகே மாநில அரசு அதற்கேற்ப செயல்பட முடியும். மத்திய அரசு கவிழ்ந்தால், அது மாநில அரசுகளையும் பாதிக்கும். நிர்வாகம் சரியாக செயல்பட முடியாது. நாம் பாதிக்கும் அதிமான நேரங்களை தேர்தலில் செலவு செய்து கொண்டிருந்தால், மக்களுக்கான புதிய திட்டங்களை கொண்டுவரவோ செயல்படுத்தவோ முடியாது” என்றார்.

மேலும், “மொராஜி தேசாய் பிரதமராக இருந்தபோது ஜனதா கட்சி கூட்டணியில் எங்களோடு, வாஜ்பேயின் ஜனசங்கம் இருந்தது. பின்னர் வி.பி.சிங் அரசில் நாங்கள் அங்கம் வகித்த போது வெளியில் இருந்து பாஜக ஆதரித்தது.

அதனால் வாஜ்பேயி தலைமையிலான முன்னணியில் நாங்கள் பங்கேற்றால் அது ஒன்றும் புதிய விஷயமாக இருக்கப் போவதில்லை” என்றார் கருணாநிதி.

தேசிய ஜனநாயக கூட்டணியில் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டு திமுக ஆட்சியில் நீடித்தது. இந்த காலகட்டத்தில் பாஜக தனது தீவிர இந்துத்துவ கொள்கைகளை செயல்படுத்துவதை மட்டுப்படுத்தியிருந்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான விஷயங்களில் பாஜகவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக திமுக தொடர்ந்து கூறி வந்தது.

அதே சமயம், பாஜகவின் தீவிர இந்துத்துவ உறுப்பினர்களிடையே ஆட்சியை பிடித்தபின் கட்சியின் கொள்கைகளை நிறைவேற்றவில்லை எனில் என்ன பயன் என பாஜகவுக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், 2001 சட்டப்பேரவை தேர்தலில், திமுக ஆட்சியை இழந்தபோது மெல்லமெல்ல காட்சிகள் மாறின. ஆட்சி மாறியதும், அப்போதைய முன்னாள் முதல்வர் கருணாநிதியை நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் வீடு புகுந்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றது தமிழ்நாடு போலீஸ். இந்த நிகழ்வு தமிழ்நாடு முழுக்க திமுக ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரையும் கைது செய்தது ஜெயலலிதா அரசு.

மறுநாளே இந்தியா முழுவதும் இருந்து ஜெயலலிதாவுக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளும் ஜெயலலிதா அரசை கண்டித்தன. தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தலைமை செயலரிடம் இருந்து கைது குறித்து அறிக்கை கேட்டார் அப்போதைய பிரதமர் வாஜ்பேயி.

தமிழ்நாடு பாஜகவுக்கு சவாலான மாநிலமானது எப்படி?

அமெரிக்காவில் நடந்த 2001 செப்டம்பர் 11 தாக்குதல், அதன்பின்னர் இந்தியாவில் அதே ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த டிசம்பர் 13 தாக்குதல் இந்திய அரசியலின் போக்கில் தாக்கம் ஏற்படுத்தின.

2002-ல் பிப்ரவரியில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த குஜராத் கலவரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை, பெரும்பாலும் முஸ்லிம்களின் உயிரை பறித்தது.

குஜராத்தில் நடந்த மிகமோசமான கலவரத்திற்கு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோதி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் பாஜக தலைமை மோதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதுமட்டுமல்ல கலவரம் நடந்த இரு மாதங்களுக்கு பிறகு கோவாவில் ஒரு கூட்டத்தில் அப்போதைய பிரதமர் வாஜ்பேயி பேசியபோது முஸ்லிம்கள் குறித்து மிகவும் சர்ச்சைக்குள்ளான கருத்துகளை தெரிவித்தார். பிரதமரே வெறுப்பு பேச்சை வெளிப்படுத்தும் விதமாக உரையாற்றலாமா என ஊடகங்களில் விமர்சனம் எழுந்ததும் நான் அனைத்து முஸ்லிம்களையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, தீவிரவாத முஸ்லிம்களை பற்றியது என வாஜ்பேயி விளக்கமளித்தார்.

2002 குஜராத் கலவரம் மற்றும் அதையொட்டி எழுந்த அரசியல் சூழலிலும் பாஜக கூட்டணி அரசாங்கத்தில் திமுக தொடர்ந்தது. இதற்கு எதிராக தமிழகத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார் கருணாநிதி.

அதே சமயம் ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள மத்திய அரசில் தமது இருப்பை தக்க வைப்பது உத்தி ரீதியில் முக்கியமான முடிவாக திமுக பார்க்கிறது என அரசியல் கூர்நோக்கர்கள் அப்போது ஊடகங்களில் தமது கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தனர்.

இவை ஒருபுறமிருக்க, மாநிலத்தில் அதிமுகவும் - தமிழ்நாடு பாஜகவும் மிகவும் நெருக்கமாக இணைந்தன. திமுக தமிழ்நாடு பாஜகவை எதிர்ப்பதாகவும் ஆனால் மத்தியில் ஆதரிப்பதாகவும் வெளிப்படையாக கூறியது. இதை தமிழ்நாடு பாஜக தலைவர்கள் கிண்டலடித்தனர். எனக்கு தலை வேண்டும் ஆனால் வால் வேண்டாமென நீங்கள் சொல்லமுடியாது என அப்போதைய பாஜக தலைவர் எல்.கணேசன் கருத்து தெரிவித்தார். ஜெயலலிதாவின் மத மாற்ற தடைச் சட்டம், கோவில் அன்னதானம் உள்ளிட்டவை பாஜகவின் சித்தாந்தத்துக்கு அதிமுகவே ஒரு இயல்பான கூட்டாளியாக பார்க்கப்பட்டது.

மதிமுக ஆட்சியில் அங்கம் வகிக்கும் வாஜ்பேயி அரசில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான பொடா சட்டத்தின் கீழ் வைகோவை கைது செய்தது ஜெயலலிதா அரசு. இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாக கூறி, வைகோ பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சுமார் 20 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

பொடா சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத செயலில் ஈடுபட்ட இந்து தேசியவாத குழுக்கள் மீதும் பொடா சட்டம் பாயவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

திமுக தலைவர் கருணாநிதி 2003 டிசம்பரில் தனது அமைச்சர்களை திரும்பப் பெற்றார். மதிமுகவும் தமது அமைச்சர்களை திரும்பப் பெற்றது. எனினும், பாஜக அரசுக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடியும் வரை நெருக்கடி நேர ஆதரவு தருவது குறித்து, ஒவ்வொரு விவகாரத்தையும் பொறுத்து முடிவெடுப்போம் என திமுக கூறியது.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் திமுக, அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையே அரசியல் லாபங்கள் இருந்தது வரலாறு. ஆனால், இது எல்லாம் 2004-ல் இருந்து மாறத் தொடங்கியது.

2004 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தமிழகத்தில் தேர்தலை எதிர்கொண்டது பாஜக. இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. கருணாநிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணி, புதுச்சேரி உள்பட போட்டியிட்ட 40 இடங்களிலும் வென்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் திமுக பல முக்கிய அமைச்சர் பதவிகளை பெற்றது. தேர்தல் தோல்வியுடன் பாஜக - அதிமுக உறவு உடனேயே முறிந்தது. இரு கட்சிகளிடையே இருந்தது தேர்தல் நேர உறவு என கூட்டணி முறிவு குறித்து பாஜக கூறியது.

2009-ல் பாஜக இரு பெரும் திராவிட கட்சிகளால் தனித்துவிடப்பட்டது. திமுக காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து, மூன்றாவது அணியில் பாமக,மதிமுக மற்றும் கம்யூனிஸ்டுகளுடன் அதிமுக போட்டியிட்டது. கடந்த முறை ஒரு எம்பி கூட கிடைக்காத அதிமுகவுக்கு இந்த தேர்தலில் 9 இடங்கள் கிடைத்தன. திமுக கூட்டணி 27 இடங்களில் வென்றது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப் போருக்கு காங்கிரஸ் அரசை காரணம் காட்டி, மத்திய அரசுக்கு திமுக ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி 2ஜி ஊழல் என குற்றம் சாட்டப்பட்ட விவகாரம் மற்றும் சில விஷயங்கள் காரணமாக திமுக - காங்கிரஸ் இடையே உரசல் நீடித்து வந்தது.

இலங்கை தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அட்டூழியங்களை ஐநாவில் இந்தியா கண்டிக்கவில்லை என குற்றம்சாட்டிய கருணாநிதி, காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பு, அதாவது 2013 மார்ச்சில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டார் .1996 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில், வாஜ்பேயி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி வகித்த 13 மாதங்கள் தவிர்த்து, சுமார் 16 ஆண்டுகள் வரை மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

2014 தேர்தலில் காங்கிரஸ், பாஜக என இரு தேசிய கட்சிகளையும் அதிமுக, திமுக புறக்கணித்தன. நரேந்திர மோதியை பிரதமர் முகமாக முன்னிறுத்தியது பாஜக. தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது பாஜக. காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணி இன்றி தனித்து போட்டியிட்டன.

இந்த தேர்தலில் குஜராத் அரசின் செயல் திறனையும், தமிழக அரசின் செயல் திறனையும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒப்பிட்டு பேசினார் ஜெயலலிதா. குஜராத்தின் மோடியா? தமிழகத்தின் லேடியா எனும் ஒற்றை கேள்வியுடன் சூறாவளி பிரசாரம் செய்தார். இந்த தேர்தலில் அதிமுக பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. 37 தொகுதிகளை வென்றார் ஜெயலலிதா. திமுக, காங்கிரஸ் உள்ளிட்டவற்றுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. மக்களவை தேர்தல் வரலாற்றில் அதிமுக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. தமிழகத்தில் தனி ஒரு கட்சி மக்களவை தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது இதுவே முதல்முறை.

நரேந்திர மோதியை முன்னிறுத்திய பாஜக, இந்திய அளவில் தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், தமிழகத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. அதன் கூட்டணிக்கு தமிழகத்தில் மொத்தமாக இரு இடங்கள் மட்டுமே கிடைத்தன.

ஜெயலலிதா இறந்த பிறகு, மோதி அரசுடன் அதிமுக நெருங்கியது. 2019 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது பாஜக. இதில் திமுக கூட்டணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது அதிமுக.

பாஜகவின் அரசியல் வரலாற்றில் மிகச்சிறப்பான வெற்றியாக கருதப்படும் 2019 மக்களவை தேர்தலில், தமிழகத்தில் இருந்து ஒரு தொகுதி கூட பாஜகவுக்கு கிடைக்கவில்லை.

2004 மக்களவை தேர்தல், அதைத்தொடர்ந்து 2009, 2014, 2019 மக்களவை தேர்தல்களில் தமிழகமும் பாஜகவுக்கு உதவவில்லை; பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளும் தோல்வியையே கண்டன.

கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு எம்.பி தொகுதி மட்டுமே பாஜகவுக்கு தமிழகத்தில் இருந்து கிடைத்துள்ளது.

மக்களவை தேர்தல் ஒருபுறமிருக்க சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜகவுக்கு தமிழ்நாடு இதுவரை கைகூடவில்லை.

1996-ல் தான் முதன்முறையாக ஒரு எம்.எல்.ஏ பாஜகவுக்கு கிடைத்தது. பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வேலாயுதம் வென்றார்.

2001க்கு முன்புவரை வரை தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் பாஜகவை கூட்டணியில் இணைத்துக் கொள்ளவில்லை. இதனால் பாஜக இந்த தேர்தல்களில் போட்டியிட்ட தொகுதிகளில் 90 - 95 சதவீதத்துக்கும் அதிகமான தொகுதிகளில் டெபாசிட் கூட பெறவில்லை.

ஆனால் 2001-ல் நிலைமை மாறியது. 1999 மக்களவை தேர்தலை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக பாஜகவுடான கூட்டணியை தொடர்ந்தது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக காரைக்குடி, மயிலாடுதுறை, மயிலாப்பூர், தளி உள்ளிட்ட தொகுதிகளில் 4 தொகுதிகளில் வென்றது. ஆனால் திமுக கூட்டணி 2001 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது.

2006 மற்றும் 2011 சட்டப்பேரவை தேர்தல்களில் பெரிய கட்சிகளுடன் கூட்டணியின்றி, தனித்தே போட்டியிட்டது பாஜக. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாகவே முறையே சுமார் 6.5 லட்சம் மற்றும் 8 லட்சம் வாக்குகளே கிடைத்தன.

2016 தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. இதில் பாஜகவுக்கு ஒட்டுமொத்தமாக சுமார் 12 லட்சம் வாக்குகள் கிடைத்தன. இந்த மூன்று தேர்தல்களிலும் (2004,2011,2016) பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட கிடைக்கவில்லை.

2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களை பெற்றது பாஜக. இம்முறை நான்கு எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு கிடைத்தார்கள். அதிமுக ஆட்சியை இழந்தது.

சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் பாஜக தனித்து போட்டியிட்டு ஒட்டுமொத்தமாகவே இதுவரை ஒரு தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேர்தல்களில் தலா நான்கு எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். ஆனால் அந்த இரு முறையும் திமுக அதிமுக ஆட்சியை இழந்தன. 1999 மக்களவை தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்பது தரவுகள் சொல்லும் உண்மை. எனினும், பாஜகவுடனான கூட்டணி மட்டுமே தோல்விக்கான முக்கியமான காரணமாக இல்லாமலும் இருக்கலாம்.

திமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகு 2001 சட்டப்பேரவை தேர்தலில் தோற்றது. அதிமுக பாஜகவுடன் சேர்ந்த பிறகு 2004 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோற்றது.

2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு, திமுகவை விட அதிக இடங்களில் வென்று, சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்த விஜயகாந்தின் தேமுதிக, 2014 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. அதன்பின்பு ஒரு நாடாளுமன்ற தொகுதியையோ, ஒரு சட்டப்பேரவை தொகுதியையோ கூட 2014,2016,2019,2021 தேர்தல்களில் அக்கட்சியால் வெல்ல முடியவில்லை. வாக்கு சதவீதமும் கரைந்தது.

2014-ல் மெகா வெற்றி பெற்று 37 உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்பிய அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு 2019 தேர்தலில் வெறும் ஒரு தொகுதியை மட்டுமே வென்றது, மேலும் 2021-ல் ஆட்சியை இழந்தது.

ஆக, இரு பெரும் திராவிட கட்சிகளுக்கும் பாஜகவுடன் கூட்டணி வைப்பது கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக எவ்வித சாதகத்தையும் தரவில்லை என்பதைத்தான் தரவுகள் உணர்த்துகின்றன.

இந்தச் சூழலில் தான் இம்முறை அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. எனினும், திமுக தலைவர் ஸ்டாலின் பாஜக - அதிமுக மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார். அதற்கு அதிமுக தரப்பு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜகவை கடுமையாக எதிர்த்து பேச தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஏன் நரேந்திர மோதியை எதிர்த்து இதுவரை ஒருமுறை கூட பேசவில்லை என சந்தேகம் எழுப்புகிறார் ஸ்டாலின்.

நரேந்திர மோதி 2014-ல் இருந்து இந்திய பிரதமராக இருக்கிறார். இந்த காலகட்டத்தில் பல முறை தமிழகம் வந்து சென்றபோதிலும், தமிழ் மொழியை பெருமைப்படுத்தி பல மேடைகளில் அவர் தொடர்ந்து பேசிய வந்தபோதும் 39 தொகுதிகளை கொண்ட, பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு அவருக்கு சவாலாகவே இருக்கிறது.

இந்த முறை அதிமுக நரேந்திர மோதியுடன் இல்லை. மறுபுறம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்ட முடியும் என்றும் அதிக இடங்களில் வெல்ல முடியும் என்றும் பாஜக நம்புகிறது.

அதிமுக பாஜக கூட்டணியை விட்டு வெளியேற அண்ணாமலையின் பேச்சுக்களை பாஜக கண்டிக்காததை ஒரு காரணமாக குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது. அண்ணாமலை பாஜகவின் கனவுகளை நிறைவேற்றுவார் என மோதி - அமித் ஷா கூட்டணி நம்புகிறது .

இந்நிலையில், பாஜக தலைமையில் தமிழ்நாட்டில் தற்போது உருவாகியுள்ள கூட்டணியில் அமமுக, பாமக, தமாக, ஓபிஎஸ் அணி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. பாஜக தரப்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன், ஏற்கனவே மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட எல்.முருகன், ஏற்கெனவே எம்.எல்.ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகிறன்றனர். அதன் கூட்டணியின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா, டிடிவி தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இப்படி நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கியுள்ள பாஜவுக்கு இது ஒரு திருப்புமுனை தேர்தலாக அமையுமா? அல்லது தமிழ்நாடு பாஜகவுக்கு வழக்கமான பாணியில்தான் பதில் சொல்லப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)