You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேர்தல் பத்திர வழக்கில் அடுத்து என்ன நடக்கும்? யாரெல்லாம் சிறைக்குச் செல்ல வாய்ப்புள்ளது?
- எழுதியவர், உமாங் போட்டார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் பொதுவெளியில் வெளியானதையடுத்து, பல எதிர்க்கட்சிகளும், சட்ட வல்லுனர்களும் அது குறித்து விசாரணையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொண்டு அதற்கு ஈடாக மத்திய அல்லது மாநில அளவில் அரசு ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளனவா என்ற கோணத்தில் இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி, தேர்தல் பத்திரங்கள் பரிமாற்றத்தில் மத்திய அரசுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தவிர, கபில் சிபல் போன்ற சட்ட நிபுணர்கள் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் போன்ற அமைப்புகளும் இதேபோன்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
எப்படி இந்த விசாரணை நடக்கும்? இதற்கு என்னதான் தீர்வு கிடைக்கப்போகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரை மூலம் விடை தேடலாம்.
தேர்தல் பத்திர விவரங்களில் தெரியவந்தது என்ன?
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக தேர்தல் பத்திர நன்கொடை வழங்கப்பட்டுள்ள நேரம் சந்தேகத்தை எழுப்புவதாக பல செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.
உதாரணத்திற்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் கூற்றுப்படி , அரசு விசாரணை முகமைகளால் விசாரணையை எதிர்கொண்டுள்ள 26 நிறுவனங்களில், 16 நிறுவனங்கள் விசாரணைக்கு பிறகு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளன. அதிலும் ஆறு நிறுவனங்கள் விசாரணைக்குப் பிறகு அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன.
தேர்தல் பத்திர வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண் இதுகுறித்து கூறுகையில், 33 நிறுவனங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு சுமார் 1,750 கோடி ருபாய் நன்கொடை வழங்கியுள்ளன. அதே சமயம் இந்த நிறுவனங்கள் 3.7 லட்சம் கோடி ருபாய் மதிப்பிலான அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் 30 ஷெல் நிறுவனங்கள் சுமார் ரூ.143 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வழங்கியுள்ளதாகவும் பிரசாந்த் பூஷன் கூறுகிறார்.
ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் செய்தி நிறுவனத்தின்படி , தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய முதல் 200 நன்கொடையாளர்களில் 16 பேர், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அவர்களது நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்த போதிலும் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் டெலிகாம் போன்ற பல்வேறு துறைகளில் தனிநபர் செலுத்திய பணங்கள் குறித்தும் தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளது.
மொத்தம் ரூ.16,500 கோடிக்கு (16,492) வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில், பாஜக ரூ.8,252 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.2,000 (1,952) கோடியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ரூ.1,705 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் பெற்றுள்ளன.
சட்டத்திற்கு புறம்பாக நடந்தது என்ன?
தேர்தல் பத்திரங்களை வாங்குவது சட்டவிரோதமானது அல்ல, ஏனெனில் அவை வாங்கப்படும்போது சட்டபூர்வமான திட்டமாகவே இருக்கின்றன.
மூத்த வழக்கறிஞரும், குற்றவியல் சட்ட நிபுணருமான சித்தார்த் லுத்ரா இதுகுறித்து கூறுகையில், "சட்டபூர்வமான திட்டத்தின் கீழ் பெறப்படும் எந்த பணத்தையும், ஊழலாக கருத முடியாது" என்கிறார்.
“ஆனால், ஒரு நபர் அல்லது நிறுவனம் ஒரு கட்சிக்கு நன்கொடை அளிக்கும்போது , அதற்கு பதிலாக அந்த கட்சி அந்த நபரின் நலனுக்காக ஏதாவது செய்தால் அது சட்டவிரோதமானது.”
மேலும் "அப்படி நடக்கிறது என்றால் அது உண்மையில் ஒருவரது நலனுக்காகவே செய்யப்படுகிறது என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும். இதற்கு, ஒரு அரசியல் கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் அல்லது அது ஒருவருக்கு பலனளிக்க கூடிய முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்."
அதே சமயம் இந்த விவகாரம் குறித்து "ஒரு முழுமையான விசாரணை" நடக்க வேண்டும், ஏனெனில் "யாரும் தானாகவே முன்வந்து தவறான வழியில்தான் தேர்தல் பத்திரங்களை கொடுத்ததாகவோ அல்லது ஏற்றுக்கொண்டதாகவோ ஒப்புக்கொள்ள மாட்டார்கள்" என்கிறார் சமூக செயற்பாட்டாளரான அஞ்சலி பரத்வாஜ்.
நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்களை வாங்குவதற்கு மத்திய அரசு முகமைகள் பயன்படுத்தப்பட்டதா, அல்லது விசாரணை நடத்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் பத்திரங்களை வாங்கவில்லை என்பதால், பின்னர் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
மேலும், தேர்தல் பத்திரங்களை வழங்கப்பட்டதற்கு ஈடாக அவர்களுக்கு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டதா என்பது போன்ற பரிவர்த்தனைகள் பற்றிய புகார்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார் அஞ்சலி பரத்வாஜ்.
இந்த வழக்கை விசாரிப்பது எப்படி?
இந்த விவாகரம் குறித்து விசாரணை செய்ய இரண்டு வழிகள் இருக்கலாம்: அமலாக்கத் துறை (ED) போன்ற மத்திய அமைப்புகள் பணமோசடி அல்லது லஞ்சம் தொடர்பான புகார்கள் ஏதேனும் உள்ளதா என விசாரிக்கலாம். மற்றொரு வழி, இந்த வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் போன்ற நீதித்துறை நிறுவனத்தால் சிறப்பு புலனாய்வுக்குழு(SIT) அமைக்கப்படலாம்.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மதன் லோகுர், " இதற்கு சிறப்பு புலனாய்வுக்குழுவே அமைக்க வேண்டும். அரசால் தன்னிச்சையாக இந்த பணியை செய்ய முடியாது. எனவே, நீதிமன்றம் மூலம் தான் செய்ய வேண்டும்" என்கிறார்.
இது குறித்து நிச்சயமாக “யாராவது ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அணுகுவார்கள்” என்றும் தெரிவித்துள்ள அவர், மேலும், இது விசாரிக்க வேண்டிய முக்கியமான வழக்கு என்றும் கூறுகிறார்.
நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி மதன் லோகுர், "ஜெயின் ஹவாலா வழக்கிலிருந்து இதுபோன்ற விசாரணைகள் பல முறை நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த வழக்கில் அதிகம் சூழ்நிலை சார்ந்த ஆதாரங்கள் உள்ளன" என்கிறார்.
ஜெயின் ஹவாலா வழக்கில், கேபினட் அமைச்சர்கள் உட்பட பல தலைவர்கள் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வந்தது.
இது தவிர, 2ஜி உரிமம் வழங்குவது போன்ற பல வழக்குகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வந்தது.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர், பாஜகவுக்கு 55 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வழங்கியது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாதிட்டார் .
இறுதியில், தொழிலதிபர் ஷரத் ரெட்டி அரசு சாட்சியாக மாறி டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.
யாரெல்லாம் தண்டிக்கப்படுவார்கள் மற்றும் தண்டனை என்னவாக இருக்கும்?
கொடுக்கப்பட்டுள்ள லஞ்சத்தின் தன்மையைப் பொறுத்து, பல்வேறு நபர்கள் தண்டிக்கப்படலாம்.
சட்ட வல்லுனர்களின் கூற்றுப்படி, இதில் நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் தனிநபர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தனிநபர்கள், சலுகைகளை வழங்கும் அதிகாரம் கொண்ட அரசு அதிகாரிகள் மற்றும் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள பிற நபர்கள் அடங்குவர்.
பிரசாந்த் பூஷன் கூறுகையில், “நிறுவனங்களின் சில அதிகாரிகள், அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர், அரசாங்கத்தை சேர்ந்த சிலர் மற்றும் இந்த முகமைகளில் இடைத்தரகர்களாக செயல்பட்ட சில அதிகாரிகள்’’ ஆகியோரை குறிப்பிடுகிறார்.
சித்தார்த் லூத்ராவின் கூற்றுப்படி, நன்கொடைகள் தவறான காரணத்திற்காகவே வழங்கப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டு விட்டால் பின்வரும் நபர்கள் மீது வழக்குத் தொடரலாம்: "பொருளாளர், கட்சித் தலைவர் அல்லது பணம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட நபருக்கு பலனளிக்கும் சலுகையை வழங்கிய அரசு அதிகாரி."
பணமோசடி தடுப்புச் சட்டம் 70வது பிரிவின் கீழ் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீதும் குற்றம் சாட்டலாம்.
இந்நிலையில், "விதிமீறல் நடந்த நேரத்தில் அந்த நிறுவனத்தின் வணிக செயல்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்த ஒவ்வொரு நபரும்" பணமோசடி குற்றத்திற்கும் பொறுப்பாவார்கள்.
சித்தார்த் லூத்ராவின் கூற்றுப்படி, இந்த விதிகளின் கீழ் ஒரு அரசியல் கட்சியையும் குற்றம் சாட்டலாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு கட்சி குற்றம் சாட்டப்பட்டால், அதன் தலைவர், அல்லது பொறுப்பாளர் அல்லது இந்த விதிமீறலில் ஈடுபட்டவர் மீது வழக்குத் தொடரலாம்" என்கிறார்.
டெல்லி மதுபான வழக்கில், ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளராக உள்ள அரவிந்த் கேஜ்ரிவால் மூலம் பணமோசடி குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வாதிட்டது.
இதுபோன்ற வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(PMLA) கீழ், ஒரு நபருக்கு அபராதத்துடன் கூடிய ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இருப்பினும், இதில் ஒரு அரசியல் கட்சியை குற்றம் சாட்ட முடியுமா இல்லையா என்பது தொடர்ந்து விவாதத்திற்கு உட்பட்டது மற்றும் இன்னும் முடிவு செய்யப்படாத ஒன்று.
ஆனால் இந்த பரிவர்த்தனைகளை மேற்கொண்ட கட்சியின் பொறுப்பாளர்களை இதற்கு பொறுப்பேற்க செய்ய முடியும்.
சித்தார்த் லுத்ரா கூறுகையில், இதில் 70-ஆவது பிரிவு பயன்படுத்தப்படவில்லை என்றால், பணம் பெற்று முடிவெடுப்பதில் செல்வாக்கு செலுத்திய எந்த நபரையும் பொறுப்பாக்க முடியும்,'' என்கிறார்.
இது தவிர, இந்த வழக்கில் ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவுகளும் பொருந்தும்.
இந்த சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், லஞ்சம் கொடுப்பவர்கள், லஞ்சத்தை பெற்றுத்தரும் இடைத்தரகர்கள் ஆகியோரை தண்டிக்க வழி உண்டு.
இந்த பிரிவின் படி, அபராதம் மற்றும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த விவகாரத்தில், "குறிப்பிட்ட நிறுவனங்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்" என்கிறார் முன்னாள் நீதிபதி மதன் லோகுர்.
இதுபோன்றதொரு வழக்கில், 1993 முதல் 2010 வரை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை 2014ல் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)