You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க கப்பல் விபத்து: ஒரு வாரமாகியும் இந்திய மாலுமிகள் 20 பேரும் வெளியேற முடியாதது ஏன்?
- எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மன் ஜூனியர்
- பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்டன்
அமெரிக்காவின் பால்டிமோர் நகரின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது ஒரு கப்பல் மோதிய விபத்து நடந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது.
ஆனால் விபத்தில் சிக்கி நதியில் நின்றுகொண்டிருக்கும் அக்கப்பலில் இருக்கும் சுமார் 20 இந்திய மாலுமிகள் இன்னும் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் எப்போது கப்பலை விட்டு வெளியேற முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
948 அடி நீளமுள்ள டாலி என்ற அந்த சரக்குக் கப்பலின் பெரும்பாலான பணியாளர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
பாலத்தில் கப்பல் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பதைத் தீர்மானிக்கும் பணி நடந்துவருகிறது.
கப்பலில் இருக்கும் பணியாளர்களின் தற்போதைய நிலைமையைப் பற்றி நாம் இதுவரை அறிந்தது என்ன?
கப்பலில் இருப்பவர்களைப் பற்றி இதுவரை தெரிந்தது என்ன?
டாலி கப்பல் விபத்துக்கு உள்ளானபோது அதில் மொத்தம் 21 பணியாளர்கள் இருந்தனர்.
அக்கப்பல் 27 நாள் பயணமாக இலங்கை செல்லவிருந்தது. ஆனால் கிளம்பி சில நிமிடங்களிலேயே விபத்து நடந்தது.
அதில் இருந்த 20 பேர் இந்திய குடிமக்கள் என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது. அதில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று அமெரிக்கக் கடலோர காவல்படை த்ரிவித்துள்ளது.
உலகளாவிய கடல்சார் வணிகப் போக்குவரத்துத் தொழிலில் 3,15,000 இந்தியர்கள் வேலை செய்வதாக இந்திய அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மொத்த கடல்சார் தொழிலில் சுமார் 20% ஆகும். இந்தத் துறையில் பிலிப்பைன்ஸுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
கடந்த வாரம் இந்திய அதிகாரி ஒருவர், கப்பலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும், சிறிய காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்ட ஒருவரும் நலமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தவிர கப்பலில் உள்ள பணியாளர்களின் பின்னணி பற்றி அதிகம் அறியப்படவில்லை.
கப்பலில் உள்ளவர்கள் எப்படி இருக்கிறார்கள்?
கப்பலில் சிக்கியுள்ள பணியாளர்களை வெகு சிலரே இதுவரை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஜோசுவா மெசிக். இவர் கப்பல் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் பணிசெய்யும் பால்டிமோர் சர்வதேச கடற்படை மையத்தின் நிர்வாக இயக்குனர்.
வைஃபை ஹாட்ஸ்பாட் சாதனங்களை கப்பலுக்கு அனுப்பி வைத்தபின், கப்பல் பணியாளர்களுடன் வாட்ஸ்அப் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டதாக மெசிக் பிபிசியிடம் தெரிவித்தார்.
அவர்கள் பதற்றமாக இருப்பதாகவும், விசாரணை நடந்துகொண்டிருப்பதால் அவர்கள் தஙகள் நிலைமை குறித்து எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதாகவும் மெசிக் தெரிவித்தார்.
"அவர்களுடன் தொடர்பில் இருக்கும் யாரிடமும் அவர்கள் அதிகம் பேசவில்லை," என்று மெசிக் கூறினார்.
மேலும் பேசிய மெசிக், அவர்களுக்கு கடந்த சனிக்கிழமை (மார்ச் 30) வரை வைஃபை வசதி இல்லை என்றார். “வெளி உலகில் என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள்மீது குற்றம் சாட்டப்படுகிறதா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. என்ன எதிர்பார்ப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை," என்றார்.
மேலும் பேசிய அவர், அந்தப் பணியாளர்கள் என்ன சொன்னாலும் அது அவர்களது நிறுவனத்தை பாதிக்கக் கூடும் என்பதால் தற்போதைக்கு அவர்கள் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று ஊகிப்பதாகக் கூறினார்.
20 இந்திய மாலுமிகளும் வெளியேற முடியாதது ஏன்?
இப்போதைக்கு, கப்பலைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை வெளியேற்றும் திட்டம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கப்பல் நகர்த்தப்படும் வரை அவர்கள் அதை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை, என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அது ஒரு சிக்கலான நீண்ட பணி.
கடந்த வெள்ளியன்று (மார்ச் 29), பால்டிமோரின் கடலோர காவல்படை அட்மிரல் ஷானன் கில்ரேத், பால்டிமோர் துறைமுகத்தையும் கப்பல் தடத்தையும் மீண்டும் திறப்பதற்குத்தான் அவர்கள் முன்னுரிமை அளிப்பதாகவும், அதன்பிறகே கப்பலை நகர்த்துவதுபற்றி சிந்திக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
சாதாரண சூழ்நிலைகளில் கூட, அமெரிக்கத் துறைமுகங்களில் உள்ள கப்பல்களில் இருந்து வெளிநாட்டுப் பணியாளர்கள் தரை இறங்குவதற்கு மிக அதிகமான ஆவணங்கள் தேவைப்படும்.
விசா மட்டுமல்ல, கப்பலில் இருந்து பணியாளர்கள் இறங்க அவர்கள் கடற்கரை பாஸ்களை வைத்திருக்க வேண்டும். கப்பலில் இருந்து டெர்மினல் வாயில் வரை அவர்களை அழைத்துச் செல்ல எஸ்கார்ட் ஆட்கள் தேவை. ஆனால், அப்பகுதியில் உள்ள கடற்படை தன்னார்வலர்கள் அவர்களை அழைத்துச் செல்லலாம்.
டாலி கப்பலின் பணியாளர்களிடம் தரை இறங்குவதற்குத் தேவையான ஆவணங்கள் உள்ளனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கப்பல் விபத்தின் விளைவுகளை மேற்பார்வையிடும் அதிகாரிகள் குழு ‘விசாரணை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை என்றும், அது முடியும் வரை, பணியாளர்கள் கப்பலில்தான் இருக்க வேண்டும் என்றும்’ பிபிசியிடம் கூறியது.
‘சில மாதங்கள் ஆகலாம்’
இந்தியாவைச் சேர்ந்த மூத்த மாலுமியும், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச கடற்படை நலன் மற்றும் உதவி வலையமைப்பின் சர்வதேச செயல்பாட்டு மேலாளருமான சிராக் பாஹ்ரி, டாலி கப்பலில் உள்ள பணியாளர்கள் அனைவரும் நாடு திரும்புவதற்கு சில மாதங்கள் ஆகலாம் என்று கூறினார்.
"சில வாரங்களுக்குப் பிறகு, சில இளம் பணியாளர்கள் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பப்படலாம்," என்று அவர் கூறினார்.
"ஆனால், மூத்த பணியாளர்கள், முறையான விசாரணை முடியும்வரை அமெரிக்கவில் இருக்க வைக்கப் படலாம்,” என்றார்.
கப்பலில் உள்ள பணியாளர்களுக்கு இப்போது என்ன தேவை?
கப்பலில் உள்ள பணியாளர்களிடம் உணவு, தண்ணீர், மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன. இவை அவர்களது இலங்கை பயணத்திற்காக அவர்கள் எடுத்துச் சென்றது.
கப்பல் பணியாளர்களுக்காகச் சேவை செய்யும் தன்னார்வத் தொன்டு நிறுவனத்தினரிடமிருந்து அவர்கள் தேவையான பொருட்களைப் பெற முடியும். இதில் உணவுப் பொருட்களும் அடங்கும் என்று மெசிக் கூறினார்.
ஆனால் இப்பொது கப்பலில் இருப்பவர்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது உளவியல் ரீதியான உதவி என்று மெசிக் மற்றும் பாஹ்ரி கூறுகிறார்கள்.
கப்பலில் வேலை செய்பவர்கள் நீண்ட காலம் கடலில் தனிமையில் இருக்க நேரிடும். அவர்கள் வேலை செய்யாமல் இருக்கும்போது, அவர்களுக்குத் தீவிரமான சோர்வும் சலிப்பும் ஏற்படும் என்று மெசிக் கூறினார். இதனால் பல கப்பல்களில் பணிசெய்யும் பல இளம் மாலுமிகள் நேரத்தை கடத்த வீடியோ கேம்கள் மற்றும் சமூக ஊடகங்களை நாடுகிறார்கள்.
"சில கப்பல்களில் பணியாளர்கள் ஒன்றாகக் கூடி தங்களது நேரத்தைச் செலவிடுவார்கள். ஆனால் அது அரிதானது,” என்று மெசிக் கூறினார்.
நடந்த விபத்து, அதைத் தொடர்ந்த ஊடக கவனம் ஆகியவற்றைத் தொடர்ந்து, கப்பலில் உள்ள பணியாளர்களுக்கு மனநல ஆதரவு தேவைப்படும் என்று பாஹ்ரி கூறினார்.
மேலும் பேசிய அவர், “எல்லோரும் இப்போது இந்த விபத்து எப்படி நடந்தது என்பதைப் பற்றியே பேசுகிறார்கள். அது முதலில் நிறுத்தப்பட வேண்டும்," என்று பாஹ்ரி கூறினார்.
"மாலுமிகள் ஏற்கனவே மிகுந்த மன உளைச்சல், மன அழுத்தம் ஆகியவற்றுக்கு ஆளாகியிருக்கலாம். அவர்கள் இன்னும் வெளிநாட்டில் ஒரு கப்பலில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நாம் அவர்களுக்கு ஆதரவாக நின்று, அவர்கள்மீது பழி சொல்லப்பட மாட்டாது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)