You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகன் காதல் மணம் புரிந்ததால் தாயின் ஆடைகளை கிழித்து அவமானப்படுத்திய கும்பல் - எங்கே, என்ன நடந்தது?
- எழுதியவர், ரவீந்தர் சிங் ராபின்
- பதவி, பிபிசிக்காக
எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உள்ள சில விவரங்கள் சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
பஞ்சாப் மாநிலம், தர்ன் தரன் மாவட்டம், வால்டோஹா கிராமத்தில் ஒரு பெண்ணை அக்கம்பக்கத்தினர் அரை நிர்வாணப்படுத்தி அடித்ததாகக் கூறப்படும் நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த பெண் அரை நிர்வாணமாக இருக்கும் காணொளியும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தனது மகன் ஊரைவிட்டு வெளியேறி பக்கத்து வீட்டுப் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால் தான், தன்மேல் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெண்ணின் ஆடைகளை பறித்ததோடு மட்டுமல்லாது, அந்தப் பெண் அரை நிர்வாணமாக தெருவில் ஓடுவதை வீடியோவும் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வைரலான அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் தெருவில் உள்ள கடைகளில் ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறார்.
இந்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தர்ன் தரன் காவல்துறை மூத்த அதிகாரி அஸ்வினி கபூர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 3ஆம் தேதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாக அவர் கூறினார். ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் குல்விந்தர் கவுர், குர்சரண் சிங், சன்னி என்ற சரஞ்சித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஐபிசி 354, 354பி, 354டி, 323 மற்றும் 149 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67 மற்றும் 67ஏ பிரிவுகளும் பின்னர் காவல்துறையால் சேர்க்கப்பட்டன. தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் முழு பின்னணி என்ன?
இச்சம்பவம் மார்ச் 31ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, அவரது மகன் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் தாய், சகோதரர் மற்றும் இரண்டு நபர்கள் அவரது வீட்டிற்கு வந்து கூச்சலிட்டுள்ளனர். அவர் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அந்த நபர்கள், அவரை அடித்து, ஆடைகளைக் கிழித்து, அரை நிர்வாணமாக்கி, அதை வீடியோவும் எடுத்துள்ளனர்.
“இவர்களிடம் இருந்து தப்பிக்க தெருவில் இருந்த கடைகளை நோக்கி ஓடினேன், பின்னர் ஒரு கடையில் தஞ்சம் அடைந்தேன்" என்கிறார் அந்தப் பெண்.
“அந்த ஐந்து பேரும் என்னைத் தாக்கினர். அவர்கள் பேசியது ஒன்றும் புரியவில்லை. அவர்கள் என்னை மிகவும் மோசமாக நடத்தினார்கள். ஆடைகளை கிழித்துவிட்டார்கள். தெருவில் ஓடி வந்து என் உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன்” என பாதிக்கப்பட்ட பெண் கூறுகிறார்.
ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட ஐந்து பேர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், ஆனால் காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை என்றும் அந்தப் பெண் கூறினார்.
பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத்தின் தலையீடு
இந்த சம்பவத்தை அறிந்த பஞ்சாப் மாநில மகளிர் ஆணையம், "இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்து, துணை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி மூலம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநில மகளிர் ஆணையம் சார்பாக தர்ன் தரனின் துணை ஆணையர் மற்றும் மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, ஏப்ரல் 6, சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் அறிக்கையை தயார் செய்து அனுப்புமாறு மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?
இதுகுறித்து பேசிய வால்டோஹா காவல் நிலைய அதிகாரி சுனிதா பாவா, “பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் அந்தப் பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதே இந்தச் சம்பவத்திற்கு காரணம்.
பெண்ணின் பெற்றோர் பையனின் வீட்டிற்கு இதுகுறித்து கேட்கச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது. வீடியோ காட்சியில், சண்டை நடந்த போது அந்த பெண் நிர்வாணமாக இருந்ததாக தெரிகிறது’’ என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)