பிறந்த தேதியில் ஏற்பட்ட பிழையால் 12 வயதில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபர், 28 ஆண்டுகள் சிறைக்குப் பிறகு தப்பியது எப்படி?

25 ஆண்டுகளுக்கு முன்பாக கொலை குற்றம் தொடர்பான வழக்கில் சிறுவன் ஒருவனை 18 வயதை பூர்த்தியடைந்தவர் என்று தவறுதலாக கருதி மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற போது அவர் சிறுவன் தான் என்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் அவரின் தண்டனையை ரத்து செய்து மார்ச் மாதம் உத்தரவிட்டது.
தற்போது 41 வயதாகும் அந்த நபரை சந்திப்பதற்காக பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாப்சர் கிராமத்துக்கு பயணித்தார்.
இந்தியாவின் மேற்கு நகரான நாக்பூரில் உள்ள சிறைச்சாலையில் மரண தண்டனையிலிருந்து நிரனராம் சேதன்ராம் சௌத்ரி விடுவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது.
12க்கு 10 அடியில் இருக்கும் அந்த அறையில் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் புத்தகங்களை படித்தும், 18 வயது ஆவதற்கு முன்பே தன்னை குற்றவாளி என்று கருதி தண்டனை வழங்கிவிட்டனர் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் அவர் தனது வாழ்நாளில் 28 ஆண்டுகள், ஆறு மாதங்கள் மற்றும் 23 நாட்களை கழித்துள்ளார். மொத்தம் 10,431 நாட்கள்.
1994 ஆம் ஆண்டு புனே நகரில் ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேரைக் கொன்றதற்காக நிரனராமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ராஜஸ்தானில் உள்ள தனது கிராமத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்களுடன் அவரும் கைது செய்யப்பட்டார். அவருக்கு 20 வயது என்று கருதி 1998 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்று நீதிமன்றங்கள், எண்ணற்ற விசாரணைகள், மாறுதல் சட்டங்கள், மேல்முறையீடுகள், கருணை மனு, வயது நிர்ணயச் சோதனைகள் மற்றும் அவரது பிறந்த தேதித் தாள்களைத் தேடுதல் என 30 ஆண்டுகளாக நீடித்த நிரனராமின் துன்பத்தை மார்ச் மாதத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டு வந்தது.
குற்றம் நடந்தபோது நிரனராமிற்கு 12 வயது 6 மாதங்கள் மட்டுமே நடந்துவந்தது என்றும் அவர் சிறார் என்றும் நீதிபதிகள் முடிவு செய்தனர். இந்திய சட்டங்களின்படி, சிறார்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது. அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும்.)
ஒரு இளைஞனை மரண தண்டனைக்கு உட்படுத்தும் விதத்தில் இவ்வளவு மோசமாக நீதி தவறியது எப்படி?
நிரனராம் கைது செய்யப்பட்டபோது, முற்றிலும் தெளிவாகத் தெரியாத காரணங்களுக்காக, காவல்துறை அவரது வயதையும் பெயரையும் தவறாக பதிவு செய்திருந்தது.

அதாவது, கைது செய்யப்பட்ட போது போலீசார் தயாரித்த குறிப்பில் அவரது பெயர் நாராயண் என தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. தவறான வயது எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து யாருக்கும் தெரியாது. "அவர் கைது செய்யப்பட்டது தொடர்பான பதிவுகள் மிகவும் பழமையானவை. அசல் விசாரணை ஆவணங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு கூட வரவில்லை" என்று டெல்லியின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நீதித் திட்டமான ப்ராஜெக்ட் 39A இன் ஸ்ரேயா ரஸ்தோகி கூறினார். (இந்த திட்டத்தின் கீழ் 9 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சியின் பலனாகவே நிரனராம் விடுதலை செய்யப்பட்டார்.)
இந்த வழக்கில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், அவரது பிறந்த தேதியில் உள்ள தவறு மற்றும் சிறார் என்ற கோரிக்கையை நீதிமன்றங்கள், வழக்குரைஞர்கள் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் 2018 வரை எழுப்பவில்லை. இந்தியாவின் கிராமப்புறங்களைச் சேர்ந்த பலருக்கும் அவர்களின் பிறந்ததேதி தெளிவாக தெரியாது, அதனால் பிறந்த சான்றிதழை பெறாமல் இருப்பார்கள் அவர்களில் நிரனராமும் ஒருவர்.
அவரது கிராமப் பள்ளியில் உள்ள பழைய பதிவேட்டில் அவரது பிறந்த தேதி 1 பிப்ரவரி 1982 என குறிப்பிடப்பட்டிருந்தது. இறுதியில் இதுதான் அவரை காப்பாற்றியது. அவர் பள்ளியில் சேர்ந்த மற்றும் வெளியேறிய தேதிகளுடன் கூடிய பள்ளி மாற்றுச் சான்றிதழும், நாராயணனும் நிரனராமும் ஒரே நபர்தன் என்பதற்கு ஆதாரமாக கிராமசபைத்தலைவரின் சான்றிதமும் இந்த வழக்கில் முக்கிய பங்காற்றியது.
"வழக்குரைஞர்கள், எதிர்தரப்பு வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள், புலனாய்வாளர்கள் என ஒட்டுமொத்த அமைப்பும் தோல்வியடைந்தது. . சம்பவத்தின் போது அவருக்கு எவ்வளவு வயது என்பதை சரிபார்க்க நாம் தவறிவிட்டோம் ," என்று ரஸ்தோகி கூறினார்.
கடந்த வாரம், ராஜஸ்தானின் பிகானேரில் 600 வீடுகள் மற்றும் 3,000 மக்கள் வசிக்கும் கிராமமான ஜலப்சரை அடைய மணல் அடுக்குகள், புதர்கள் மற்றும் வாடிய மரங்கள் நிறைந்த வெப்பமான, வறண்ட நிலப்பரப்பு வழியாக நாங்கள் சென்றோம். விவசாய தந்தைக்கு பிறந்த நிரனராம், தனது 4 சகோதரர்கள், அவர்களது மனைவிகள், பிள்ளைகள் என்ற பெரிய கூட்டுக்குடும்பத்துடன் வசிக்க திரும்பியுள்ளார்.

பட மூலாதாரம், AFP
குன்றுகள் ஆக்கிரமிப்பு, பரந்து விரிந்த பண்ணைகளுக்கு மத்தியில் அந்த கிராமம் செழிப்பானதாகத் தோன்றியது. வீதிகள் வெறிச்சோடியும் ஆளரவமின்றியும் காணப்பட்டன. சாட்டிலைட் ஆண்டனாக்கள், தண்ணீர் தொட்டி ஆகியவற்றுடன் கூடிய வீடுகள் தெருமுழுவதும் இருந்தன. உள்ளூர் பள்ளியின் சுவர்களில் பணம் மற்றும் பொருட்களை நன்கொடையாக வழங்கிய கிராமவாசிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
"எனக்கு ஏன் இது நடந்தது? ஒரு எளிய தவறு காரணமாக நான் என் வாழ்க்கையின் முக்கியமான பகுதியை இழந்தேன்," என்று குழி விழுந்த கண்களுடன் உயரமாக இருந்த நிரனராம் என்னிடம் கூறினார்.
இதற்கெல்லாம் யார் ஈடு செய்வார்கள் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்கள். நடந்த தவறுக்கு அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை.
1998, நிரனராம் மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும்போது, இந்த வழக்கு அரிதினும் அரிதானது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
26, ஆகஸ்ட் 1994ல் பூனேவில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை முயற்சி காரணமாக ஒரே குடுமத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டு கிடந்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கு சொந்தமான இனிப்புக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். கொலை சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அவர் வேலையில் இருந்து நின்றுள்ளார். (பின்னர் அந்த நபர் அப்ரூவராக மாறியதோடு வழக்கு விசாரணைக்கும் உதவியதால் விடுவிக்கப்பட்டார்.)
நிரனராம் உட்பட குற்றச்சாட்டப்பட்ட மற்ற இருவரையும் கொலையான குடும்பத்தினருக்கு தெரியாது. “கொள்ளையடிப்பது அவர்களின் நோக்கமாக இருந்தால் அனைவரையும் கொல்ல என்ன அவசியம் ஏற்பட்டது?” என பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் ரதி கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.

உள்ளூர் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பை முடித்ததுமே வீட்டைவிட்டு ஓடிவந்துவிட்டதாக என்னிடம் நிரனராம் தெரிவித்தார்.
ஏதற்காக வீட்டைவிட்டு ஓடி வந்தீர்கள் என்று நான் அவரிடம் கேட்டபோது, “எனக்கு சரியாக நினைவு இல்லை. யாருடன் நான் ஓடிவந்தேன் என்பதும் நினைவில் இல்லை. வீட்டைவிட்டு ஓடி வந்த நான் புனேவை அடைந்தேன். அங்கு தையல் கடையில் வேலைக்கு சேர்ந்தேன்” என்றார்.
நிரனராம் ஏன் வீட்டைவிட்டு சென்றார் என்பது குறித்து அவரது குடும்பத்தினருக்கும் நினைவு இல்லை.
கொலை குறித்து என்ன கூறுகிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, “குற்றங்கள் குறித்து எனக்கு எதுவும் நினைவில் இல்லை. எதற்காக போலீசார் என்னை அழைத்து சென்றனர் என்று தெரியவில்லை. கைது செய்யப்பட்டபின்னர் அவர்கள் என்னை தாக்கியது நினைவு இருக்கிறது. எதற்காக என்னை அடிக்கிறீர்கள் என்று நான் அவர்களிடம் கேட்டபோது, மராத்தியில் எதோ கூறினார்கள். அப்போது அது குறித்து நான் அறிந்திருக்கவில்லை” என்று பதிலளித்தார்.
நீங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டீர்களா?
“எனக்கு நினைவு இல்லை. ஆனால், நிறைய பேப்பர்களில் கையெழுத்து போடும்படி போலீசார் என்னிடம் தெரிவித்தார்கள். நாம் மிகவும் சிறுவனாக இருந்தேன். நான் நியாயமற்றவொன்றில் சிக்கியிருப்பதாக நினைத்தேன்”
அப்படியானால், நீங்கள் குற்றம் செய்தீர்கள் என்று சொல்லப்படுவதை மறுக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது, நான் குற்றங்களை மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. என் நினைவுகள் சரியாக இருந்தால் இது தொடர்பாக நான் மேலும் கூற முடியும். ஆனால், எனக்கு எதுவும் நினைவில் இல்லை என்று நிரனராம் பதிலளித்தார்.

கடந்த மாதம் அவரை விடுதலை செய்யும்போது, 12 வயது சிறுவன் இத்தகைய கொடூர குற்றத்தை செய்திருக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றம் ஊகித்தது.
“இது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும், எங்கள் தீர்ப்பு செயல்முறையை மூடிமறைக்க இதுபோன்ற ஊகங்களை நாங்கள் பயன்படுத்த முடியாது. இந்த காரணியை கணக்கில் எடுத்துக்கொள்ள குழந்தை உளவியல் அல்லது குற்றவியல் பற்றி எங்களுக்கு எந்த அறிவும் இல்லை...” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
“ தன்னை கொடுமைப்படுத்திய சக கைதிகள் மற்றும் அதிகாரிகளை தவிர சிறை தொடர்பாக பிற எதுவும் எனக்கு நினைவில் இல்லை ” என்று தரையில் அமர்ந்திருந்தப்படி நிரனராம் நம்மிடம் தெரிவித்தார்.
பூனே சிறையில் அவர் சில காலம் இருந்தாலும் நாக்பூர் சிறையில் 7322 என்ற எண் கொண்ட கைதியாக இருந்த நாட்களை அவரால் நினைவில்கொள்ள முடிகிறது.
‘நான் மிகவும் பயந்து இருந்தேன் என்பதால் சக கைதிகளுடன் என்னால் நட்பை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. கற்பதில் கவனம் செலுத்துவது மூலம் தனிமையை எதிர்த்து போராடினேன்` கூறும் அவர், சிறையில் இருக்கும்போது தொடர்ச்சியாக படித்துவந்தத்தோடு தேர்வு எழுதி பள்ளி வகுப்பையும் முடித்தார்.
சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள அவர், சிறையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அரசியல் அறிவியலில் பட்டம் படிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.
சிறையில் இருந்து ஒருநாள் விடுதலை செய்யப்பட்டால், இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக சுற்றுலா தொடர்பான 6 மாதப் படிப்பை அவர் மேற்கொண்டார். காந்திய சிந்தனைகள் தொடர்பான படிப்பிலும் கவனம் செலுத்திய அவர், “சிறையில் இருக்கும்போது புத்தகங்கள் தான் உங்களின் சிறந்த நண்பன்” என்று தெரிவித்தார்.

காந்தியின் படைப்புகள், சேத்தன் பகத், துர்ஜாய் தத்தா போன்றபிரபல எழுத்தாளர்கள் சிட்னி ஷெல்டனின் திரில்லர்கள் போன்றவற்றை அவர் ஆர்வத்துடன் படித்தார். அவர் ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நூலை விரும்பி படித்தார். ஜான் க்ரிஷாமின் தி கன்ஃபெஷன் என்ற நாவல் அவருக்குப் பிடித்த நாவல். இது தனது சொந்த விதியை பிரதிபலிப்பதாக அவர் நினைத்தார்.
வெளி உலகத்துடனான தனது தொடர்பு ஒன்றிரண்டு ஆங்கில செய்தித்தாள்கள் மட்டுமே என்று நிரனராம் கூறினார். அவர் அவற்றை முதல் பக்கத்திலிருந்து கடைசி வரை படித்தார். நாளிதழில் ஹாலிவுட் நடிகர் வின் டீசலில் புகைப்படத்தை பார்த்த அவர் தனது தலைமுடியையும் மொட்டையடித்துகொண்டார். யுக்ரேன் போர் தொடர்பான செய்திகளையும் அவர் படித்தார். “இரு நாடுகளுக்கு இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் அளவுக்கு உலகளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைமையின் பற்றாக்குறையை இன்றைய உலகம் எதிர்கொள்கிறது என்பதையே இது காட்டுகிறது” என்று சிறையில் இருந்தபோது ரஸ்தோகிக்கு எழுதிய கடிதத்தில அவர் குறிப்பிட்டிருந்தார்.
"நீங்கள் படிக்கிறீர்கள், எழுதுகிறீர்கள், பிறகு உங்களுக்கு சலிப்பும் ஏற்படும்" என்று அவர் கூறினார்.
சிறையில் இருந்த நாட்களில் அவர் பிற மொழிகளையும் கற்கத் தொடங்கினார். மராத்தி, ஹிந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளை கற்றுகொண்ட அவர் மலையாளம் கற்கத் தயாராகி வந்தார். ஆனால் ராஜஸ்தானில் பேசப்படும் தனது சொந்த தாய்மொழியை அவர் மறந்துவிட்டார் .

நீண்ட நாட்களுக்கு பின் வீட்டுக்கு திரும்பும் தன் மகனின் வருகைக்கு முந்தைய நாள் இரவில், 70 வயதை கடந்த நிரனராமின் அம்மா , ஆட்டம் பாட்டம் போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். ஆனால் தனது மகனை முகத்துக்கு நேராக பார்த்தபோது அன்னி தேவியின் கண்ணில் கண்ணீர் வழிந்தது - மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை ( நிரனராமின் தந்தை 2019ல் காலமானார்.)
"நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். என் அம்மா நிறைய மாறிவிட்டார்" என்று நிரனராம் கூறினார்.
சிறையில் இருந்து மார்ச் மாதம் விடுதலையான நிரனராம், “இந்தியா எவ்வளவு மாறியுள்ளது” என்பதை உணரத்தொடங்கினார்.
“ சாலைகளில் புதிய வகை கார்கள் செல்கின்றன. மக்கள் பகட்டான ஆடைகளை அணிகின்றனர். சாலைகள் மிகவும் தரமானதாக உள்ளன. சினிமா நடிகர்கள் மட்டுமே வாங்க முடியும் என்று நினைத்த ஹயபுஸா பைக்கை சிறுவர்கள் வேகமாக ஓட்டி செல்கிறார்கள். இந்த நாடு நிறைய மாறிவிட்டது ” என்று சிரித்தப்படியே கூறினார்.
வீட்டுக்கு திரும்பிய பின்னர், மற்றவர்களுடன் சகஜமாக பேச மொழி அவருக்கு தடையாக இருந்தது. தற்போது அவருக்கு இந்தி, ஆங்கிலம், மராத்தி ஆகிய மொழிகள் தெரியும். ஆனால், அவரது குடும்பத்தினருக்கும் கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஆங்கிலமும் மராத்தியும் தெரியாது. இந்தியை கஷ்டப்பட்டு புரிந்துகொள்கிறார்கள். தினமும் சில மணி நேரம், நிரனராமும் அவரது அம்மாவும் இந்தி மொழி தெரிந்த குடும்ப உறுப்பினரின் உதவியுடன் பேசிகொள்கின்றனர்.

`சில நேரங்களில் என் வீட்டிலேயே என்னை அந்நியனாக நான் உணர்கிறேன்` என்று அவர் கூறுகிறார்.
பொது இடங்களில் மக்களுடன் சகஜமாக பேசுவது என்பது எனக்கு அச்சம் தரக்கூடியது. நான் சிறையிலும் சிறு அறையில் இருந்து பழக்கப்பட்டவன். அந்த கடுமையான தனிமை உங்களை இயல்பாகவே சமூகத்திடம் ஒன்றியிருக்க செய்யாது. நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுதந்திர மனிதனாக எப்படி வாழ்வது என்பது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நிரனராம் தெரிவித்தார்.
“மக்களிடம் எப்படி பழக வேண்டும் என்பது எனக்கு தெரியாது. குறிப்பாக பெண்களிடம் என்று கூறும் அவர், பெண்களிடம் எப்படி பழக வேண்டும் பேச வேண்டும் என்று எனக்கு தெரியாது. பெண்களிடம் பேசுவது எப்படி என்று எனக்கு கற்றுக்கொடுங்கள் என நான் எப்படி பிறரிடம் கேட்க முடியும்? மற்றவர்களிடம் பேசுவதற்கு முன்பாக ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துக்கொள்வேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால், புதிய வாழ்க்கையை தொடங்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். அவரது குடும்பத்தினர் நிரனராமுக்கு மொபைல் போனை வழங்கியுள்ளனர். அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவர் கற்றுக்கொண்டு வருகிறார். அவரது சகோதர்களின் குழந்தைகள் நிரனராமிற்கு ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் கணக்குகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். குடும்பத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தில் அவரது சகோதரர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், சட்டம் படிக்க வேண்டும் என்றும் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் விரும்புவதாக கூறும் நிரனராம், நான் அனுபவித்தது போன்ற நிலையை அனுபவிக்கும் சிறை கைதிகளுக்கு உதவ விரும்பவதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது, கிராமத்தில் நிரனராம் குறித்துதான் அனைவரும் பேசுவதாக அவரது உறவினர் ராஜு சௌத்ரி கூறுகிறார். “மரணத்தில் இருந்து தப்பிய நபரை பார்ப்பதற்காக உறவினர்கள் உட்பட தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
நிரனராம் தனது அண்ணன் வீட்டில் ஒரு தனி அறையில் தங்கி, அவர்களின் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறார். சிறைச்சாலைகளின் "மெதுவான வேகத்துடன்" ஒப்பிடும்போது சுதந்திர உலகத்தின் வேகத்துக்கு பழகுவதற்கு நேரம் எடுக்கும் என்று நிரனராம் கூறுகிறார்.
"நான் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் ஊசலாடுகிறேன். நான் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். வரவிருப்பதைப் பற்றி நான் பதற்றமாக உணர்கிறேன். இது ஒரு விசித்திரமான உணர்ச்சிகளின் கலவையாகும்." என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












