குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000: திமுக அரசின் அறிவிப்பும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும்

எதிர்க்கட்சிகள்

தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்திற்காக ரூ.7,000 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த தினமான செப்டம்பர் 15ஆம் தேதி இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்

எரிவாயு மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயனம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது திமுக.

இந்தத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.

பதவியேற்றவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தது, பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம், குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 2,000 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

ஆனால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் என்பதைத் தனது பத்தாண்டு கால லட்சியத்தின் ஒரு பகுதியாக திமுக அறிவித்திருந்தாலும், இதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்தன.

2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் உட்பட அனைத்து தேர்தல் பிரசாரத்திலும் இந்த வாக்குறுதியைக் குறிப்பிட்டு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்தன. அதேபோல, மக்களிடமும் இந்த வாக்குறுதி குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அறிவிப்பை வெளியிட்ட நிதி அமைச்சர்

இத்தகைய சூழலில், இன்று 2023-2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூடியது.

இரண்டு மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர், 145வது அறிவிப்பாக மகளிர் உரிமைத்தொகை குறித்த தகவலை வெளியிட்டார்.

"சமூகத்தின் சரிபாதியான பெண்ணினத்தை சரிநிகர் சமமாக உயர்த்த திட்டமிட்டு இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" எனக் குறிப்பிட்ட பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்தார்.

ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள எரிவாயு விலை மற்றும் விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவு போன்றவற்றால் அவதிப்படும் குடும்பத் தலைவிகளுக்கு இந்த ஆயிரம் ரூபாய் பேருதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்ட பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வகுக்கப்பட்டு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

பட மூலாதாரம், TNDIPRNEWS

விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்

ஆனால், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே ரூ.1,000 வழங்கப்படும் என்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ’’அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்று அறிவித்து, மக்களின் வாக்குகளைப் பெற்று திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே 1,000 ரூபாய் வழங்கப்படும் என அந்தர் பல்டி அடித்துள்ளனர்.

அதேபோல, இந்தத் திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளனர். அப்படியென்றால் ஒரு கோடி பேருக்குகூட கொடுக்க முடியாது. இது ஒட்டு மொத்தமாக மக்களை ஏமாற்றும் பட்ஜெட்’’ என்று விமர்சித்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

அதோடு, 23 மாத ஆட்சியிலேயே ஒன்றரை லட்சம் கோடிவரை திமுக கடன் வாங்கியுள்ளதாகவும், இந்த ஆண்டு மேலும் 91,000 கோடி கடன் வாங்க உள்ளதாகவும், ஆனால், எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை எனவும் திமுக அரசின் செயல்பாட்டை எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

திமுக அரசின் இந்த அறிவிப்பு குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘’ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து 29,000 ரூபாயாக வழங்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தகுதியுடைய மகளிருக்கே 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: