ஆந்திர அரசு இளைஞர்களிடம் நடத்தும் திறன் கணக்கெடுப்பு என்றால் என்ன? எப்படி பலனளிக்கும்?

ஆந்திரா

பட மூலாதாரம், I&PRC

    • எழுதியவர், சங்கர் வடிஷெட்டி
    • பதவி, பிபிசிக்காக

ஆந்திராவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சந்திரபாபுவின் அரசு திறன் கணக்கெடுப்பு (Skill Census) என்ற புதிய கணக்கெடுப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளது. சந்திரபாபு கையெழுத்திட்ட முதல் 5 கோப்புகளில் இதற்கான கோப்பும் ஒன்று.

மேலும் அதில் ஓய்வூதிய உயர்வு, நில உரிமைச் சட்டம் ரத்து, டிஎஸ்சி அறிவிப்பு, அண்ணா கேன்டீன்கள் மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான கையெழுத்துகளும் அடங்கும்.

முதல்வர் உத்தரவின்படி, இதற்கான அரசாணை எண் 13ஆம் வெளியிடப்பட்டது. திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் துறை சார்பில் ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட வீடியோ வழியாக திறன் கணக்கெடுப்புக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் திறன் கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திராவின் திறன் மேம்பாட்டுக் கழகமே, இந்தத் திறன் கணக்கெடுப்புக்கான நோடல் ஏஜென்சி என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், 'திறன் கணக்கெடுப்பு' நடத்துவோம் என்று கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது ஆந்திர அரசு.

இந்தத் திறன் கணக்கெடுப்புக்கு ஜூன் 24 அன்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திர இளைஞர்களின் திறன்களைக் கண்டறிவதற்காக இந்தத் திறன் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திறன் கணக்கெடுப்பு என்றால் என்ன, அதனால் என்ன பயன், எதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

யாருக்காக இந்தத் திறன் கணக்கெடுப்பு?

ஆந்திரா

பட மூலாதாரம், I&PRC

படக்குறிப்பு, தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பு 2022-23இன் படி, ஆந்திராவில் நிலவும் வேலையின்மை தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.

இளைஞர்கள் அதிகமாக உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னணியில் உள்ள அதேநேரத்தில், இந்தியாவில் வேலையின்மை பிரச்னையும் அதிகமாக உள்ளது.

வேலை செய்யும் திறன் இருந்தும், வேலை வாய்ப்பு திறமைக்கு ஏற்றதாக இல்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. இதோடு சேர்த்து, இளைஞர்களின் திறமையை அதிகரிக்க திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் சில காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆந்திர பிரதேசமும் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ளது. தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பு 2022-23இன் படி, ஆந்திராவில் நிலவும் வேலையின்மை தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது. மாநிலத்தில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே வேலையின்மை 4.1 சதவீதமாக உள்ளது என்று இதில் தெரிய வந்துள்ளது. ஆனால், தேசிய சராசரி 3.9 சதவீதம் ஆகும்.

அதேநேரம், பிகாரில் 3.9 சதவீதமாகவும், உத்தர பிரதேசத்தில் 2.4 சதவீதமாகவும், மத்திய பிரதேசத்தில் 1.6 சதவீதமாகவும் உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 10 சதவீதம் என்றால், அது ஆந்திராவில் 15.7 சதவீதமாக இருக்கும். பட்டதாரிகளைப் பொறுத்தவரை ஆந்திராவில் 24%, பிகாரில் 16.6% , உ.பி.யில் 11% , மத்திய பிரதேசத்தில் 9.3% , ராஜஸ்தானில் 23.1% பேர் வேலையில்லாமல் உள்ளனர்.

அதாவது தென் மாநிலங்கள் மட்டுமின்றி, வடக்கில் பின்தங்கிய மாநிலங்கள் என்று கூறப்படும் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ​​ஆந்திராவில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளைஞர்களின் திறன்களை அறிந்து அதற்கேற்ப வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், இந்தத் திறன் கணக்கெடுப்பு தொடங்கப்படுவதாக ஆந்திர அரசு கூறுகிறது.

திறன் கணக்கெடுப்பு ஏன் முக்கியம்?

ஆந்திரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆந்திர மாநிலத்தில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 4.4 லட்சம் பேர் கல்வி நிறுவனங்களில் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள்.

முதன்முதலில் 2018ஆம் ஆண்டுதான் முதல் திறன் கணக்கெடுப்பு, 'இந்தியாவின் திறன் முரண்பாடு' என்ற பெயரில் தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலால் (NCER) வெளியிடப்பட்டது.

விவசாயத் துறை, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய்ந்து, அதற்கேற்ப அவற்றை மாற்றியமைக்க இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பது முக்கியம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் திறன் கணக்கெடுப்பு-2024ஐ ஆந்திர அரசு தொடங்கியுள்ளது.

மாநிலத்தில் 310 பொறியியல் கல்லூரிகள், 1,400 கலை அறிவியல் கல்லூரிகள், 267 பாலிடெக்னிக் கல்லூரிகள், 516 தொழிற்கல்வி மற்றும் ஐடிஐ கல்லூரிகள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 4.4 லட்சம் பேர் இந்தக் கல்வி நிறுவனங்களில் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால் ஆந்திர மாநிலம் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஆந்திர தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் கொலுசு பார்த்தசாரதி, "சந்தையின் தேவை மற்றும் விநியோகச் சங்கிலியின் அடிப்படையிலான பயிற்சிகளை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். தற்போது திறமையான இளைஞர்களுக்குப் பற்றாக்குறை இல்லை. ஆனால், பல துறைகளில் வல்லுநர்கள் பற்றாக்குறை உள்ளது. அதேநேரம் இளைஞர்களிடையே திறன் இடைவெளியும் காணப்படவில்லை. அதனால்தான் திறன் இடைவெளியை மதிப்பீடு செய்ய முடிவு செய்துள்ளோம், இது இளைஞர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவிற்குத் தயார்படுத்த உதவும்" என்று கூறினார்.

மேலும், தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள், விவசாயத் துறை, மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் தேவைகளை மனதில் கொண்டு ஆந்திர இளைஞர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டால் அவர்களுக்குப் பல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

அது எப்போது செய்யப்படும்?

ஆந்திரா

இந்தத் திறன் கணக்கெடுப்பை மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

'எந்தெந்த திறன்களுக்குத் தேவை இருக்கிறது? எத்தனை பேருக்கு அந்தத் திறன் இருக்கிறது? தேவைக்கும், தற்போது இருக்கும் திறன்களுக்கும் இடையே உள்ள இடைவெளி என்ன?' என்பனவற்றைக் கணிக்க முடியும் என்று அரசு கூறுகிறது. அதற்கேற்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வடிவமைக்க இந்தக் கணக்கெடுப்பு உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்துப் பேசியுள்ள முதல்வர் சந்திரபாபு, “திறன் கணக்கெடுப்பு மூலம் இளைஞர்களின் திறன்களைக் கண்டறிந்து, அவர்களைத் தேவைக்கேற்ப மேம்படுத்துவோம். இதனால் வேலை வாய்ப்புகளைப் பெருக்குவோம். அதுதான் உண்மையான வளர்ச்சி. உண்மையான நலன்.

இளைஞர்கள் தங்களது சொந்தக் காலில் எழுந்து நிற்கும் வகையில் இந்தத் திட்டத்தை வடிவமைத்துள்ளோம். ஏஐ (AI), ரோபோட்டிக்ஸ், பிளாக் செயின் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படும்போது இளைஞர்கள் தற்போதைய சூழலுக்கு ஏற்ப முன்னேறுவார்கள்” என்று கூறினார்.

மேலும், இந்தக் கணக்கெடுப்பு மூலம் திறன் குறித்த தரவுகளைச் சேகரிக்கும்போது, அது சிறந்த முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கணக்கெடுப்பின் செயல்முறைகள்

“இந்தத் திறன் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இளைஞர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் கல்வித் தகுதி மற்றும் திறன்கள் பரிசீலிக்கப்படும். இதன் வழியாக அவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக் கொள்வார்கள்" என்று ஆந்திர மாநில திறன் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் கூறுகின்றனர்.

"திறன் கணக்கெடுப்புக்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கணக்கெடுப்புப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். அதற்கேற்ற வகையில் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் இந்தத் தரவுகளை யார், எங்கு, எப்போது கணக்கீடு செய்வது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும்” என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, அரசுடன் கலந்தாலோசித்து இந்தக் கணக்கெடுப்பு குறித்தான செயல்முறைகள் வெளியிடப்படும் என்று அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

'சிறப்பான திட்டம், ஆனால் சரியாகச் செயல்படுத்த வேண்டும்'

இந்தக் கணக்கெடுப்பு குறித்துப் பேசிய ஓய்வுபெற்ற பேராசிரியர் ஏ ரங்கநாத், ஆந்திர அரசின் திறன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நம்பிக்கையளிக்கிறது என்று கூறியுள்ளார்.

“இளைஞர்களின் திறன் மதிப்பீட்டிற்கான முயற்சி வரவேற்கத்தக்கது. ஆனால் அது முழுவதுமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். துண்டு துண்டாகச் செய்தால் பலன் இருக்காது. தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க இதுபோன்ற முயற்சி உதவும்.

கடந்த காலத்தில் இதுபோன்ற திறன் மேம்பாடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும், அவை பெரியளவில் பலனளிக்கவில்லை. ஒரு சில அளவீடுகளுடன் அவை நிறைவடைந்து விட்டன. ஆனால், எதிர்கால இளைஞர்களை முழுமையாக வடிவமைத்தால் மட்டுமே, இலக்கை அடைய முடியும்” என்று கூறுகிறார் அவர்.

மாநிலத்தில் 15 முதல் 30 வயதுக்குட்பட்ட சுமார் 20 லட்சம் இளைஞர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரின் விவரங்களையும் சேகரித்து அரசு தேவையான முடிவுகளை எடுக்க முடியும் என்றும் பேராசிரியர் ரங்கநாத் கூறுகிறார்.

ஆந்திராவில் இருந்து மக்கள் பல்வேறு நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் வேலைவாய்ப்பிற்காக இடம்பெயர்ந்து வரும் இந்த நேரத்தில் இதுபோன்ற முயற்சி ஆறுதல் அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)