அதிமுகவுக்கு இரட்டை இலை குழப்பம் - தேர்தல் முடிவுகளை சின்னம் தான் நிர்ணயிக்கிறதா?

இரட்டை இலை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இரா.சிவா
    • பதவி, பிபிசி தமிழ்

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இரண்டு துருவங்களாக பிரிந்திருக்கும் அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான கவலையில் உள்ளன. இரு தரப்பும் தங்கள் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டாலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் அல்லது யாருக்கும் கிடைக்காமல் முடக்கப்படுமா என்ற குழப்பத்துடனேயே தேர்தல் களத்தில் உள்ளன.

அதிமுகவில் அதிக செல்வாக்கு கொண்டிருக்கும் எடப்பாடி தரப்பு, ஆளும் திமுக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதை தங்களுக்கான வெற்றியாக மாற்ற முடியும் என்று நம்புகிறது.

தாங்கள்தான் உண்மையான அதிமுக, தொண்டர்களும் மக்களும் தங்கள் பக்கம் இருப்பதாக கூறிவரும் ஓபிஎஸ் தரப்பு, இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறது.

தங்களது ஒன்றரை ஆண்டு ஆட்சிக்கான மதிப்பெண்ணாக பார்க்கப்படும் இந்தத் தேர்தலில் தங்கள் கூட்டணி வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார் என்று திமுக நம்புகிறது.

ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை தேர்தலுக்கு முன்பாக, ஒருவேளை கட்சி சின்னம் முடக்கப்பட்டு வேறு சின்னம் கிடைத்து விட்டால், அது தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் ஈபிஸ், ஓபிஎஸ் ஆகிய இரு தரப்புக்கும் உள்ளது.

காரணம், அனைத்து கட்சிகளுமே சின்னத்தைதான் தங்களது பிரதான பலமாக கருதுகின்றன. கடந்தகாலங்களில் அதுதான் கள யதார்த்தமும்கூட. ஆனால், இன்றைய டிஜிட்டல் உலகிலும் அந்த நிலை தொடர்கிறதா? இன்றும் மக்கள் சின்னத்தை பார்த்துதான் வாக்களிக்கிறார்களா?

சின்னங்கள் வழங்கப்படும் விதம்

பிரிட்டிஷிடம் இருந்து விடுதலை கிடைத்த பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் 1951-1952 காலகட்டத்தில் நடந்தது.

அப்போது ஜம்மு மற்றும் காஷ்மீரை சேர்ந்தவர்கள் நீங்கலாக இந்தியாவில் 173,212,34 பேர் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக இருந்தனர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் நடந்த தேர்தல்களில் பச்சை, மஞ்சை என பல நிறங்களில் வண்ணப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதாவது, வாக்குப் பதிவு அறையில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனி நிறத்தில் ஒரு வாக்குப்பதிவு பெட்டி ஒதுக்கப்பட்டிருக்கும். தாங்கள் விரும்பும் வேட்பாளரின் பெட்டியில் மக்கள் தங்கள் வாக்கைச் செலுத்துவார்கள்.

சுதந்திர இந்தியாவில் பெரும்பாலானோர் கல்வியறிவில் பின் தங்கி இருந்ததால் அனைவரையும் வாக்களிக்க வைக்கும் பொருட்டு முதன்முறையாக சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதன் பிறகு, வண்ண வாக்குப்பெட்டியில் வேட்பாளரின் பெயரும் சின்னமும் பொறிக்கப்பட்டன. இது எளிய மக்களும் ஜனநாயக கடமையாற்ற வெகுவாக உதவியது.

அதன் பின்னர், அடுத்தடுத்த தேர்தலில் சின்னங்கள் கட்சிகளின் அடையாளங்களாக மாறின.

தற்போது ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்குகிறது.

தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) 1968ஆம் ஆண்டு ஆணையின்படி அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. அந்த கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் என மூன்று பிரிவுகளாக தேர்தல் ஆணையம் வகைப்படுத்துகிறது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தங்களுக்கென தனித்த சின்னங்களைக் கொண்டிருக்கும். அந்தச் சின்னங்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் குறிப்பிட்ட அந்தக் கட்சிகளுக்கே ஒதுக்கப்படும். இந்த அடிப்படையில்தான் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தங்களுக்கென தனித்த சின்னம் கொண்டிருக்கின்றன.

ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால் தொடர்ந்து மூன்று தேர்தலில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற வேண்டும்.

மாறிவரும் சூழல்

கடந்த காலங்களில் ஒரு கட்சியின் வெற்றியில் சின்னம் பெரிய பங்கு வகித்திருந்தாலும் தற்போது அந்த நிலை மாறிவருவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்

"கல்வியறிவு குறைந்திருந்த காலங்களில் மக்கள் எளிதாக அடையாளம் கண்டு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒரே பெயரில் நான்கைந்து வேட்பாளர்கள் இருக்கும் போது நாம் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க சின்னங்களே உதவுகின்றன. ஒரு கட்சியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பது சின்னமும் அதன் தலைவரும்தான். முன்பெல்லாம் கிராமப்புறங்களில் அதிமுக, திமுக என்று கூறுவதைவிட இரட்டை இலை கட்சி, சூரியன் கட்சி அல்லது எம்ஜிஆர் கட்சி, கலைஞர் கட்சி என்றுதான் கூறுவார்கள். ஆனால், இன்று சமூக வலைதளங்கள் வந்த பிறகு அந்த நிலை மாறிவிட்டது. யார் வேட்பாளர், அவர் பின்னணி என்ன என்று தெரிந்துகொள்கிற அளவிற்கு மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர்,"

இன்று பிரபலமாக இருக்கும் சின்னங்கள் அனைத்துமே ஒரு காலத்தில் அறிமுகச் சின்னங்கள்தான். துண்டு நோட்டீஸ்கள், சுவர் விளம்பரங்கள், பதாகைகள், திரைப்படங்கள், மேடை நாடகம் எனப் பல வழிகளில் அவை மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன. உதய சூரியன் சின்னத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்ததில் எம்ஜிஆருக்கு பெரும் பங்கு உண்டு. தணிக்கை துறையினர் கண்களில் மண்ணைத் தூவி தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக உதயசூரியன் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் எம்ஜிஆர்.

ஒரு சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வது என்பது அத்தனை எளிதானதல்ல. அதே நேரத்தில் சில சின்னங்கள் மக்களிடம் எளிமையாக சென்றடைந்த சம்பவங்களும் உண்டு

90களில் தமாகவின் சைக்கிள் சின்னம் மக்களிடம் வெகுவிரைவில் பரிட்சயம் ஆனதற்குப் பின்னணியில் ஒரு சுவாரசியக் கதை உள்ளது. 1996இல் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிட்டதை விரும்பாத மூப்பனார், காங்கிரஸில் இருந்து வெளியேறி தமாக என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போது சோ, ரஜினிகாந்த் ஆகியோரின் ஆதரவு மூப்பனாருக்கு இருந்தது. என்ன சின்னத்தை தேர்ந்தெடுக்கலாம் என்ற யோசனை வந்த போது சோ கொடுத்த ஆலோசனையில் சைக்கிள் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வெளியான அண்ணாமலை படத்தில் ரஜினி சைக்கிளில் வருவார். அதனால் அந்தச் சமயத்தில் மக்களிடம் சைக்கிள் மிகவும் பிரபலமாக இருந்தது. அதனால் மக்களிடம் சின்னத்தை கொண்டு செல்வது மூப்பனாருக்கு கடினமாக இல்லை. அந்தத் தேர்தலில் மூப்பனார் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தினார்.

கடந்த தலைமுறையிடம் மாற்றம் இல்லை

எனினும், சின்னத்தை பார்த்து மக்கள் வாக்களிக்கும் முறை மாற வேண்டும் என்கிறார் பொறியல் பட்டதாரியான ஜெயப்பிரகாஷ்.

"ஒரு காலத்தில் எங்கள் மொத்த ஊருமே குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள். ஆனால், இன்று அந்த நிலை இல்லை. நான் வாக்குச் செலுத்தும் போது கட்சி வேறுபாடு பார்க்காமல் யார் நமக்கான வேட்பாளர் என்று யோசித்து வாக்களிப்பேன். நான் முதன்முறை செலுத்திய வாக்குகூட எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒரு சுயேட்சை வேட்பாளருக்குத்தான்," என்கிறார் ஜெயப்பிரகாஷ்.

வாக்குப்பதிவு

பட மூலாதாரம், AFP

ஆனால், இன்றைய தலைமுறை ஓரளவு மாறிவிட்டாலும் சின்னம் பார்த்து வாக்களிக்கும் பழக்கம் கடந்த தலைமுறையிடம் இன்னும் தொடர்வதாகக் கூறுகிறார் வாக்குச்சாவடி அலுவலராகப் பணியாற்றிய ஜஸ்டின் தங்கராஜன்.

"நான் வாக்குச் சாவடி அலுவராக இருந்த மையத்திற்கு 70 வயது மூதாட்டி வாக்களிக்க வந்தார். அவர் காலங்காலமாக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கூடியவராம். ஆனால், அந்தத் தொகுதியில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் உதய சூரியன் சின்னம் இல்லை என்றதும் வாக்களிக்க மாட்டேன் என்று திரும்பிச் சென்றுவிட்டார். வாக்களிக்க வருவதற்கு முன்னரே காங்கிரஸ் சின்னம்தான் இருக்கும் என்று சொல்லி அவர் குடும்பத்தினர் அழைத்து வந்துள்ளனர். ஆனாலும், வாக்களிக்க மாட்டேன் என்று அவர் திரும்பிச் சென்றுவிட்டார்," என்கிறார் ஜஸ்டின் தங்கராஜன்.

அடையாளம் மட்டுமே

சின்னம் என்பது கட்சிக்கான அடையாளமேயொழிய வெற்றிக்கான காரணி அல்ல என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமி.

``இரட்டை இலை சின்னத்தில்தான் ஜெயலலிதா டெபாசிட் இழந்தார். உதய சூரியன் சின்னத்தில்தான் அண்ணாத்துரை தோல்வியடைந்தார். எனவே சின்னம் என்பது அடையாளம் மட்டுமே. கட்சி ஒற்றுமையாக உள்ளது என்று காட்டிக் கொள்ளத்தான் சின்னம் பயன்படும். இப்போது இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால் அதிமுகவின் ஒற்றைத்தலைமையாக ஈபிஎஸ்ஸை பார்க்க மாட்டார்கள் என்பதால்தான் இரட்டை இலை கிடைத்தே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி`` என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.

அநீதியாக கருதும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள்

ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முன் புதிய சின்னம் வழங்கப்படும் போது அதை மக்களிடம் கொண்டு செல்ல அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பெரும் சிரமப்படுகின்றன. 2016 சட்டமன்றத் தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தோடு களமிறங்கியது நாம் தமிழர் கட்சி. இந்தச் சின்னத்தை அக்கட்சியினர் மக்களிடம் வெகுவாக கொண்டு சேர்த்திருந்த நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தச் சின்னம் மறுக்கப்பட்டது. அதன் பின்னர், கரும்பு விவசாயி சின்னம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதேபோல, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் சுயேட்சையாக டிடிவி தினகரன் போட்டியிட இருந்தார். பின்னர், அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அறிவிக்கப்பட்ட போது அவருக்கு குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்டது. குக்கர் சின்னத்தில் தினகரன் வெற்றிபெற்றதையடுத்து, அந்தச் சின்னம் அவருக்கான அடையாளமானது. அதன் பிறகு அவர் தொடங்கிய அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் வாங்க பெரும் சட்டப் போராட்டத்தையே நடத்தினார் தினகரன். அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வளர்ச்சியை முடக்க சின்னத்தை பயன்படுத்த முடியும் என்பதால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே நிரந்தர சின்னம் என்பதை அநீதியாகவே கருதுகின்றன அங்கீகரிக்கப்படாத கட்சிகள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: