'சைக்கோ' கொலையாளி யார்? நடத்தைகள் அவரை நமக்கு தனியே அடையாளம் காட்டுமா?

'சைக்கோ கொலைகாரர்' எனப்படும் நபர்களின் சுபாவங்கள் என்ன? எப்படி தெரிந்துகொள்வது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மும்பையில் மனோஜ் சானே என்ற 56 வயது நபர் 32 வயதான சரஸ்வதி வைத்யாவை கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி பைகளில் போட்டு வைத்ததாக காவல்துறை தெரிவிக்கிறது. இதற்கு முன்பு டெல்லியில் இதேபோல் ஷ்ரத்தா என்ற இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கும் பூதாகரமாகக் கிளம்பியது.

இப்படியான செய்திகள் அனைத்தும் தேசிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பிட்ட கொலை குறித்த பேச்சு சற்று நீர்த்துப்போவதற்குள், அடுத்த சில மாத இடைவெளியில் அதேபோன்ற மற்றொரு செய்தி வெளியாகிவிடுகிறது.

சமீபத்திலும், தமிழ்நாட்டில் தென்காசி அருகே வாலிபர் ஒருவரைக் கொலை செய்து செப்டிக் டேங்கில் மாதக்கணக்கில் மறைத்து வைத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நடக்கும் குற்றச் சம்வங்கள் குறித்து, தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால் 2021ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 29,000 கொலைகள் நடைபெற்றுள்ளதாக இந்திய குற்றவியல் தரவுகளின் (Crime statistics of India) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது 2020ஆம் ஆண்டைவிட 0.3% அதிகம்.

செய்தியைப் படிக்கும்போதே அருவருப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய இத்தகைய கொலை சம்பவங்களைச் செய்பவர்கள் யார்?

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களா? இத்தகைய கொலையாளிகளை ’சைக்கோ’ என பொதுச் சமூகம் அழைப்பது சரியா?

’சைக்கோ’ என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா?

கொடூரமாகக் கொலை செய்பவர்கள், மோசமான சுபாவங்களைக் கொண்டிருப்பவர்கள் போன்றோரை பொதுவாகவே 'சைக்கோ' என்று அழைக்கும் வழக்கம் இங்குள்ளது.

ஆனால், "சைக்கோ என்ற வார்த்தை மனப் பிறழ்வையோ, மனச் சிதைவு நோயையோ, ஆளுமைக் கோளாறையோ குறிப்பிடும் வார்த்தை அல்ல.

இங்கே சைக்கோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யாரையுமே நம்மால் அழைக்க முடியாது," என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ’ஆல்ஃப்ரெட் ஹிட்ச்ஹாக்’ 1960களில் எடுத்த ஒரு படத்தின் பெயர்தான் சைக்கோ. "இதை சினிமாக்களும், ஊடகங்களும் தவறாகப் பயன்படுத்துகின்றன,” என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

1970களில் இந்தியாவை உலுக்கிய தொடர் கொலை சம்பவம்

பிபிசி தமிழிடம் பேசிய மனநல மருத்துவர் அசோகன், "கொலை செய்பவர்கள் அனைவரையும் நாம் ஒரே பார்வையில் பார்க்கக்கூடாது. ஒரு நபரை இன்னொரு நபர் திட்டமிட்டு ஒரு சில காரணங்களால் கொலை செய்கிறார் என்றால், அவர் ஒரு கொலைக் குற்றவாளி மட்டுமே.

ஆனால் மனநோயால் பாதிக்கப்பட்டவர் ஒருவரைக் கொலை செய்கிறார் என்றால் அது நிதானமாகச் செய்யப்படும் கொலையாக இருக்காது. அவர் கொலை செய்வதற்குக் கத்தியைப் பயன்படுத்துகிறார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கண்மூடித்தனமாக எதிரில் உள்ளவரின் உடலில் குத்துவார். அது இயல்புக்கு மாறானதாக இருக்கும்," என்கிறார்.

மனநலம், இந்தியா, குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

இப்படி "மனநல பாதிப்புகளால் கொலை செய்பவர்கள் மனநல காப்பகத்திற்குத்தான் அனுப்பப்படுவார்கள், தண்டிக்கப்பட மாட்டார்கள்."

இதற்குச் சான்றாக மருத்துவர் அசோகன் 1960களில், பம்பாய் மாநகரில் தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக நடந்த கொலைகளைக் குறிப்பிடுகிறார்.

ராமன் ராகவ் என்ற நபர் அந்த மூன்று ஆண்டுகளில் மும்பையை நடுங்க வைக்கும் அளவுக்கு கிட்டத்தட்ட 41 பேரைக் கொலை செய்தார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைகள்.

அவர்கள் நடைபாதைகளில் தூங்குபவர்களாகவோ அல்லது நகரின் வடக்குப் பகுதியில் புறநகரிலுள்ள பாழடைந்த குடிசைகள், தற்காலிக குடிசைகளில் வாழ்ந்தவர்களாகவோ இருந்தார்கள். அவரால் கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்(கைக்குழந்தைகளும்கூட) அடக்கம்.

அவர்கள் இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் "கடினமான மற்றும் மழுங்கிய கருவி" மூலம் தலை அடித்து நொறுக்கப்பட்டதால் உயிரிழந்தனர் என்று 1968இல் குற்றப்பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்ற இளம் போலீஸ் அதிகாரி ராமகாந்த் குல்கர்னி எழுதியுள்ளார். அவரது குழுவிடம் இறுதியில் 27 ஆகஸ்ட் 1968 அன்று ராகவ் பிடிபட்டார்.

மனநலம், இந்தியா, குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

விசாரணையின்போது, "அவருக்கு ’மன அழற்சி நோய்’ (schizophrenia) இருப்பது தெரிய வந்தது. இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 84 IPC-இன் கீழ் அவர் மனநல காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்," என்று கூறுகிறார் மருத்துவர்சோகன்.

கொலை செய்யும் நபர்களில் யார் குற்றவாளிகள்? யார் மன நோயாளிகள்?

இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுபவர்களை மருத்துவரீதியாக மூன்று வகையாகப் பிரிக்கலாம் என்று விவரிக்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி.

அவரது கூற்றுப்படி, மன வியாதிகள்(Psychiatric illness) என்று சொல்லக்கூடிய மனரீதியிலான பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்கள் இதுபோன்ற கொலைகளில் ஈடுபடலாம். சிலருக்குக் காதுகளில் ஏதேனும் குரல் கேட்டுக்கொண்டிருக்கும். அந்தக் குரல் என்ன சொல்கிறதோ அதைச் செய்யவேண்டிய நிலையில் அவர்கள் இருப்பார்கள். இன்னும் சிலருக்குத் தன்னைச் சுற்றி உண்மையாக என்ன நடக்கிறது என்பது தெரியாது.

"தங்களுக்குப் பிறரால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ, இவர்கள் நம்மை ஏதேனும் செய்துவிடுவார்களா என்ற அச்சம் உள்ளுக்குள் இருக்கும். இவர்களை மனப்பிறழ்வு கொண்டவர்கள்(insane) என்று குறிப்பிட முடியும். மாயத்தோற்றம், சிந்தனைப் பிறழ்வு போன்ற பிரச்னைகள் அவர்களுக்கு இருக்கும்.

எனவே இவர்களைப் பரிசோதனை செய்யும்போது, இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மாயத்தோற்றம், சிந்தனைப் பிறழ்வு ஆகியவற்றின் தன்மை எப்படியானது என்பதை அறிந்து அவர் குற்றவாளியா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும்,” என்று விளக்கமளித்தார் மருத்துவர் குறிஞ்சி.

மனநலம், இந்தியா, குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

அதிகமான போதைப் பொருட்களை எடுத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட, அதற்கு அடிமையாகிவிட்ட நபர்கள் "தங்களின் சுயக்கட்டுப்பாட்டையும், நிதானத்தையும் இழந்துவிடுகின்றனர்."

அவர்களுக்கு "தகாத நடவடிக்கைகளைச் செய்யவிடாமல் தடுக்கக்கூடிய மூளையின் ஒரு செயல்முறை வேலை செய்யாமல் போய்விடும். அதாவது நாம் இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது என சரியாக முடிவெடுக்கும் திறனை அவர்கள் இழக்கிறார்கள்," என்று கூறுகிறார் மருத்துவர் குறிஞ்சி.

அதேபோல், அவர்களுக்கு "தயக்கம், கூச்சம் ஆகிய குணாதிசியங்கள் போய்விடும். அதனால்தான் போதைக்கு அடிமையானவர்கள் பொது இடங்களில் தகாத முறையில் நடந்து கொள்கிறார்கள். இதை ’தடுப்பு விளைவு(disinhibition effect)’ என்று குறிப்பிடுவோம். இப்படியான நிலையில் இருப்பவர்கள் போதையில் கொலை செய்யும் அளவிற்கும்கூடச் செல்வார்கள்."

சமூக விரோத ஆளுமை(Antisocial Personality): "மனநோய், போதைப் பழக்கம் போன்ற எந்தப் பிரச்னையும் ’சமூக விரோத ஆளுமை’ உடையவர்களுக்கு இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அவர்கள் இயல்பாகவே மூர்க்கமானவர்களாகக் காணப்படுவார்கள். இது ’ஆளுமைக் கோளாறு’ (Personality disorder) என்ற பிரச்னையில் இருக்கும் வகைகளில் ஒன்று," என்று விவரிக்கிறார் குறிஞ்சி.

மனநலம், இந்தியா, குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

இவர்கள் எப்போதும் "தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். கொலை, பலாத்காரம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் பெரும்பாலானோருக்கு" இத்தகைய ’ஆளுமைக் கோளாறு’ பிரச்னை இருக்கும்.

மருத்துவர் குறிஞ்சியின் கூற்றுப்படி, ஆளுமைக் கோளாறு உடையவர்களைச் சிறு வயதிலேயே அடையாளம் காண முடியும். சிறுவயதில் விளையாடுவதைவிட பூச்சிகள், பட்டாம்பூச்சிகளைப் பிடித்துக் கொல்வது, திருடுவது, அதிகமாகப் பொய் சொல்வது போன்ற செயல்களைச் செய்வார்கள். பெற்றோர்கள் இதுபோன்ற குழந்தைகளைச் சிறுவயதிலேயே அடையாளம் கண்டு, சரி செய்வதற்கான முயற்சிகளை எடுக்கலாம்.

ஒருவேளை கவனிக்கவில்லை என்றால் பின்னாளில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் குறிஞ்சி.

"இவர்களைப் போன்றோர் ’சீரியல் கில்லிங்’ என்று அழைக்கப்படும் தொடர் கொலைச் சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஆளுமைக் கோளாறு உடையவர்களுக்குப் போதை பழக்கமும் இருந்தால், அவர்கள் இந்தச் சமூகமே பார்த்து அச்சப்படும் அளவுக்கு ஆபத்தான மனிதராகக்கூட மாறலாம்,” என்று குற்றவாளிகளுக்கும் மனநல நோயாளிகளுக்கும் உள்ள வேறுபாட்டை விவரிக்கிறார்.

ஆளுமைக் கோளாறு உடையவர்கள் குறித்து மருத்துவர் அசோகன் பேசும்போது, "இவர்கள் பல்வேறுபட்ட எதிர்மறையான குணாதிசயங்கள் கலந்த ஒரு மனிதராக இருப்பார்கள். இவர்களுக்குப் பிற உயிர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை இருக்காது.

சாதாரண கொலைக் குற்றவாளிகளுக்குக் கூட சிறிது குற்றவுணர்ச்சி இருக்கும். ஆனால் ஆளுமை கோளாறு உடையவர்கள் எதற்கும் தயங்க மாட்டார்கள். கொலைசெய்துவிட்டால்கூட எதுவும் நடக்காதது போல் இயல்பாகச் சிரித்துக்கொண்டு செல்வார்கள்,” என்று குறிப்பிடுகிறார்.

மனநல பாதிப்பு ஏற்பட்டவர்கள் ( Psychiatric illness), போதைக்கு அடிமையானவர்கள் போன்றோருக்கு சிகிச்சையளிக்க முடியும் எனக் கூறும் மருத்துவர்கள், சமூக விரோத ஆளுமை மனோபாவம் கொண்ட ’ஆளுமைக் கோளாறு’ பிரச்னை உடையவர்களை மாற்ற முடியாது என்கின்றனர்.

சிறுவயதில் சந்திக்கும் பிரச்னைகள் மனநல பாதிப்பை ஏற்படுத்துமா?

சிறுவயதில் ஒருவர் தங்களுடைய வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகள் அவருக்கு மனச் சிதைவு நோய்களை ஏற்படுத்தி, அவர்களின் ஆளுமையிலும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியை பிபிசி தமிழ் முன்வைத்தபோது, “அது முற்றிலும் ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்தது” என்று பதில் கூறினார் மருத்துவர் அசோகன்.

மருத்துவர் குறிஞ்சி இதுகுறித்துப் பேசும்போது, “சிறுவயதில் ஒருவர் சந்திக்கும் மோசமான நிகழ்வுகள் அவருக்கு மனரீதியாக சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இங்கே நாம் ’சைக்கோ’ (psychopath) என்ற ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.

இது ஒரு நோயியல் பிரச்னை. சிறுவயதில் அவர்கள் சந்தித்த சில பிரச்னைகள் மனதில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம். அதன் விளைவாக அவர்களுக்குக் குறிப்பிட்ட விஷயங்களின் மீது முழுக்க முழுக்க தவறான புரிதல் ஏற்பட்டிருக்கும். அவர்களை மாற்றுவது மிகக் கடினம். வெளியில் மிகவும் சாதாரணமாகத்தான் காணப்படுவார்கள் ஆனால் அவர்களுக்குள் பயங்கரமான ரகசியங்களும், காயங்களும் இருக்கும்," என்று விளக்கினார்.

மனநலம், இந்தியா, குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

எடுத்துக்காட்டாக, "ஒருவர் தன் தாய் வேறு ஒருவருடன் உறவில் இருப்பதைப் பார்த்து, அதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டார் என்றால், அவருக்குப் பெண்கள் அனைவரின் மீதும் வெறுப்பு வரலாம்.

சமூகத்தால் மோசமான அனுபவங்களை எதிர்கொண்டவர்கள், பின்னாளில் சமூகத்தின் மீது அதிகப்படியான வெறுப்புகளை வளர்த்திருக்கலாம்." இதைத்தான் சைக்கோபாத் எனக் கூறுவதாக விளக்குகிறார் மருத்துவர் குறிஞ்சி.

ஆனால் "இரண்டுமே சிறு வயதிலிருந்து இருக்கும் பாதிப்பு என்பதற்காக சைக்கோபாத், சமூக விரோத ஆளுமை ஆகிய இரண்டையும் ஒப்பிடக் கூடாது,” என்று குறிப்பிடுகிறார்.

மனநல பாதிப்பு - தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

மருத்துவரீதியாக மனநல பாதிப்பை ‘மன வியாதிகள் மற்றும் நரம்பியல் வியாதிகள்’ என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

இதில் "மன வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் எந்த அளவுக்கு தங்கள் வாழ்க்கையில் நடக்கும் உண்மையான நிகழ்வுகளை உணர்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு மாயத் தோற்றம், சிந்தனைப் பிறழ்வு போன்ற பிரச்னைகள் இருக்கும். மேலும் மனச் சிதைவு, இருமுனைக் கோளாறு (Bipolar disorder) போன்ற நோய்களால் இவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

அதேபோல் நரம்பியல் பாதிப்பு உடையவர்கள் மன அழுத்தம், மன பதற்றம் போன்ற ஏதாவது ஒரு பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் தெளிவும், புரிதலும் இருக்கும்” என்று மருத்துவர் குறிஞ்சி விளக்குகிறார்.

மனநல பாதிப்பு எந்த வகையில் ஏற்பட்டிருந்தாலும், அவர்களை உடனிருப்பவர்கள் கவனித்து மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

அதேபோல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இதுபோன்ற கொலைச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டிருப்பவர்கள், எந்த நோக்கத்திற்காக அல்லது என்ன மாதிரியான மனநிலையில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதைத் தீவிர விசாரணையில்தான் உறுதிப்படுத்த முடியும் எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: