உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவய் மீது நேற்று (திங்கட்கிழமை) தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.

நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர் அனாஸ் தன்வீர் பிபிசியிடம் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்து பகிர்ந்த அனாஸ் தன்வீர், "இன்று வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அந்த வழக்கறிஞரை வெளியேற்றியபோது அவர், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது' எனக் கூச்சலிட்டார்." என்றார்.

இந்த சம்பவத்தின்போது நீதிபதி கவய் பொறுமையாக எந்த பரபரப்பும் இன்றி தொடர்ந்து வாதங்களை கேட்கத்தொடங்கியதாக தன்வீர் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சங்கம் (SCAORA), காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோதி கண்டனம்

இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி தலைமை நீதிபதி கவயிடம் பேசினார். இதுகுறித்து பிரதமர் மோதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவய் உடன் பேசினேன். இன்று காலை உச்சநீதிமன்ற வளாகத்தில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஒவ்வொரு இந்தியரும் கோபமடைந்துள்ளார். இத்தகைய கண்டனத்திற்குரிய செயல்களுக்கு நம் சமூகத்தில் இடமில்லை. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் "இதுபோன்ற சூழ்நிலையில் நீதிபதி கவய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன். நீதியின் மாண்புகள் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான அவரது உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது." என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

நீதிமன்றத்திற்குள் என்ன நடந்தது?

தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வழக்குகளை விசாரித்தபோது இந்த சம்பவம் நடந்ததாக பார் அண்ட் பெஞ்ச் குறிப்பிட்டுள்ளது.

"வழக்கறிஞர் நீதிபதியின் அருகே சென்று தனது காலில் அணிந்திருந்த ஷூவை அவர் மீது எறிய முயன்றதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும் உரிய நேரத்தில் அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்" என பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

அங்கிருந்த சிலர் காலணி எறியப்பட்டதாகவும், சிலர் காகித பண்டல் வீசப்பட்டதாகவும் கூறுவதாக லைவ் லா கூறுகிறது.

நீதிமன்ற எண் 1-ல் காலை 11.35 மணியளவில் விசாரணை நடந்தபோது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் தனது ஷூவை எடுத்து நீதிபதியை நோக்கி எறிந்ததாக ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் பிபிசி இந்த தகவலை சுயாதீனமாக சரிபார்க்க இயலவில்லை.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் செயல் அதிகாரி ரோகித் பாண்டே ஏஎன்ஐ செய்தியிடம் பேசுகையில், "இது மிகவும் துயரமான சம்பவம். தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் 2011ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். கடவுள் விஷ்ணு குறித்து தலைமை நீதிபதி தெரிவித்த கருத்தால் அவர் புண்பட்டு இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது" என்றார்.

"அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்"

கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி தலைமை நீதிபதி பிஆர் கவய் மற்றும் வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு, மத்திய பிரதேசத்தின் கஜுராஹோவில் உள்ள ஒரு கோவிலில் உடைந்த விஷ்ணு சிலையை பழுதுபார்த்து பராமரிக்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரம் இந்திய தொல்லியல் துறையின் கீழ்தான் வரும், நீதிமன்றத்தின் கீழ் வராது என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதை விளம்பரம் தேடிக்கொள்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனு எனவும் நீதிமன்றம் கூறியது. "மனுதாரர் உண்மையிலேயே விஷ்ணுவின் பக்தராக இருந்தால், அவர் கடவுளை பிரார்த்தித்து, தியானம் செய்ய வேண்டும்" எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தலைமை நீதிபதியின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) இவர் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் தெரிவித்தனர்.

பின்னர், விஷ்ணு சிலையை பழுதுபார்க்கக் கோரிய மனுவின் விசாரணையின் போது தான் தெரிவித்த கருத்துக்களைக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, "இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் எதுவும் நடக்கலாம். நேற்று முன்தினம், நீங்கள் இழிவாகப் பேசிவிட்டீர்கள் என ஒருவர் என்னிடம் கூறினார்" என்று அவர் தெரிவித்தார்.

"எனக்கு அனைத்து மதத்தின் மீதும் நம்பிக்கை உள்ளது, அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்" எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, "எனக்கு தலைமை நீதிபதியை 10 ஆண்டுகளாக தெரியும். அவர் கோவிலுக்கு செல்வார், பல மத வழிபாட்டு தலங்களுக்கு பக்தியுடன் செல்வார்" என்றார்.

கோவில், தொல்லியல் துறையின் அதிகார வரம்பிற்குள் வருகிறது என்ற ரீதியில் மட்டுமே இந்த கருத்தை தெரிவித்ததாக தலைமை நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

வலுக்கும் கண்டனங்கள்

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவத்துள்ளார். தனது X பக்கத்தில், "தலைமை நீதிபதி பிஆர் கவயிடம் பேசினேன். இன்று அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அனைத்து இந்தியர்களையும் கோபப்படுத்தியுள்ளது. இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்களுக்கு நம் நாட்டில் இடமில்லை. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது" என பதிவிட்டுள்ளார்.

"இதை பொறுமையாக கையாண்ட கவயை பாராட்டுகிறேன். இது நீதியின் மதிப்புகள் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை காட்டுகிறது" எனவும் கூறியுள்ளார்.

"தலைமை நீதிபதி மீதான தாக்குதல், நமது நீதித்துறையின் மாண்பு மற்றும் அரசியலமைப்பின் ஆன்மா மீதான தாக்குதல் ஆகும்." என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"இத்தகைய வெறுப்புக்கு நமது நாட்டில் இடமில்லை. இது கண்டனத்திற்குரியது" என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் தலைமை நீதிபதி பிஆர் கவய் மீது நடந்த தாக்குதல் வெட்கக்கேடானது. இது நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித்துறை மீதான தாக்குதல், இது கடுமையான கண்டனத்திற்கு உரியது." என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது X தளத்தில், "இந்த சம்பவத்தின்போது தலைமை நீதிபதி, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம் இந்த துறையின் வலிமையைக் காட்டுகிறது.

ஆனால் இந்த சம்பவத்தை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தாக்குதல் நடத்தியவர் தனது செயலுக்கான காரணத்தை வெளிப்படுத்தியிருப்பது, நமது சமூகத்தில் அடக்குமுறை மற்றும் ஆதிக்க மனநிலை இன்னும் எவ்வளவு ஆழமாக நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது." எனப் பதிவிட்டுள்ளார்.

"இது இந்திய தலைமை நீதிபதி மற்றும் சக நீதிபதிகளின் பதவி மற்றும் அதிகாரத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. வழக்கறிஞரின் செயலுக்கு நாங்கள் ஒருமனதாக எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறோம்." என உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

"இதுபோன்ற நடத்தை வழக்கறிஞர் சங்க உறுப்பினருக்கு தகாதது. இது நீதித்துறைக்கும் சட்டத் தொழிலுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதையின் அடித்தளத்தையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது." எனத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று SCAORA தெரிவித்துள்ளது.

"ஏனெனில் இது உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் கெடுக்கவும், பொதுமக்களின் பார்வையில் அதன் நற்பெயரைக் குறைக்கவும் வேண்டுமென்றே செய்யப்படும் முயற்சி" என தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளது.

நீதிக்கான ஆலயத்தில் இப்படி ஓர் சம்பவம் நடந்திருப்பது வெட்கக் கேடானது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் ஏஎன்ஐ-யிடம் பேசுகையில், "மக்கள் உச்ச நீதிமன்றத்தை கோவிலாக பார்க்கின்றனர். இதுபோன்ற நிகழ்வு வெட்கக்கேடானது. சில நாட்களுக்கு முன்பு, நாடு சட்டத்தால் இயற்றப்பட வேண்டுமே தவிர புல்டோசர்களால் அல்ல என தலைமை நீதிபதி கூறியிருந்தார். அதனால் இது ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் நிகழ்ந்த அவமானம்" என்றார்.

மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் இந்த சம்பவத்தை நீதித்துறை மீதான தாக்குதல் எனக் குறிப்பிடுகிறார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு