மூன்று திருமணம் செய்த பவன் கல்யாணை ஜெகன்மோகன் குறிவைத்து விமர்சிப்பது ஏன்?

பட மூலாதாரம், TWITTER/CMO ANDHRA PRADESH
- எழுதியவர், சங்கர் வடிஷெட்டி
- பதவி, பிபிசி நியூஸ்
ஆந்திராவில் ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் திருமணம் குறித்து மீண்டும் மீண்டும் பேசப்பட்டு வருகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நீண்ட நாட்களாக இது குறித்து விமர்சித்து வருகின்றனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சருமான ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி,பொதுக்கூட்டங்களில் பவன் கல்யாணின் திருமணங்கள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அம்மா வோடி (Amma Vodi ) திட்ட நிதியை விடுவிப்பதற்காக மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் நடத்திய கூட்டத்திலும் இந்த விஷயத்தை முதல்வர் குறிப்பிட்டார்.
பவன் கல்யாண் தனது திருமணங்கள் குறித்த விமர்சனங்களுக்கு பலமுறை பதிலளித்துள்ளார். சில சமயங்களில் எதிர் தாக்குதல் நடத்தவும் முயன்றார். ஆனாலும் விமர்சனங்கள் நிற்கவில்லை.
பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது எதிர்ப்பாளர்களால் குறிப்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரால் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது.
விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்து கொள்வது குற்றம் என்ற ரீதியில் இந்த விமர்சனங்கள் உள்ளன. திருமண விவகாரத்தில் பவன் கல்யாண் மீது எந்த புகாரும் இல்லை என்றாலும், அவரை எதிர்ப்பவர்கள் ஏன் தொடர்ந்து விமர்சிக்கிறார்கள் என்பதே தற்போது விவாதப் பொருளாகி வருகிறது.
அரசியல் நோக்கத்துடன் இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.
இந்த சர்ச்சையின் பின்னணியில் விவாகரத்து-திருமணம் பற்றி சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய விவாகரத்துச் சட்டம்-1869ன் படி பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து வழங்கப்படலாம். திருமணமான தம்பதியினரின் சம்மதத்துடன் அவை வழங்கப்படுகின்றன. இருவரில் ஒருவர் விவாகரத்து கோரலாம்.
விவாகரத்து, திருமணம் போன்ற விஷயங்களில் இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ தம்பதிகளுக்கு தனித்தனி சட்டங்கள் உள்ளன.
விவாகரத்து வழங்கும் போது, குழந்தைகள் இருந்தால் அவர்களின் பராமரிப்பு உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு ஜீவனாம்சமும் முடிவு செய்யப்படுகிறது. விவாகரத்து உடன்பாடு ஏற்பட்ட பிறகு கணவனும், மனைவியும் பிரிந்து செல்வது சகஜம்.
சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை இப்படி விவாகரத்து செய்தவர்கள் இருக்கிறார்கள்.
அரசியல் தலைவர்களும் விவாகரத்து பெற்று புதிய வாழ்க்கையை தொடங்கியதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

பட மூலாதாரம், TWITTER/JANASENA PARTY
பவன் கல்யாண் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டு தற்போது மூன்றாவது மனைவியுடன் வசித்து வருகிறார்.
பவன் கல்யாணை விமர்சிப்பதற்காக பலமுறை எதிரணியினர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கின்றனர். இருப்பினும், சமூக ஊடகங்களில், ஒருவரைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க ஒரு வரம்பு உள்ளது. இதற்கிடையே, சமீபத்தில், ஜனசேனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட புகைப்படம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்ய முயற்சிப்பதாக ஒரு பிரிவு ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதன் பின்னணியில் பவன் கல்யாண் தனது மனைவியுடன் யாகம் நடத்தியதாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து வளர்ந்து வரும் விமர்சனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், TWITTER/CMO ANDHRA PRADESH
ஜெகனின் கருத்துக்குப் பிறகு பவன் மீதான விமர்சனங்கள் அதிகரிப்பு
அரசியல் ரீதியாக, ஆரம்பம் முதலே ஒய்எஸ் குடும்பத்துடன் பவன் கல்யாண் மோதி வருகிறார். பத்து வருடங்களாக ஜெகனை அவர் விமர்சித்து வருகிறார்.
சமீபகாலமாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் வளர்ப்பு மகன் என பவன் பெயரை குறிப்பிடாமல் ஜெகன் விமர்சித்து வருகிறார்.
2019 தேர்தலுக்கு முன்பு ஒருமுறை, பவன் கல்யாண் காரின் டயர்களை மாற்றுவது போல மனைவிகளை மாற்றியதற்காக விமர்சித்தார்.
ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சர் பதவி ஏற்ற பின்னரும் தொடர்ந்து பவன் கல்யாண் மீது விமர்சனங்களை வைத்து வரும் அவர், தற்போது பவன் கல்யாண் "நான்கு திருமணங்கள் செய்தவர்" என விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில், குருபம் தொகுதியில் பேசிய முதலமைச்சர், "அவர்களைப் போல் மீசையை முறுக்கவும், சத்தியம் செய்யவும் நம்மால் முடியாது. அதே போல் 4 பேரை திருமணம் செய்யவும் முடியாது, நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மனைவியை மாற்றவும் முடியாது," என்றார்.
இது போன்ற கருத்தை ஜெகன் தெரிவித்த பின், அவரைப் பின்தொடர்பவர்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவினரும் பவன் கல்யாணின் திருமணங்களை மிகவும் தீவிரமாக விமர்சித்து வருகின்றனர்

பட மூலாதாரம், JANASENA PARTY/FACEBOOK
திருமணத்தை முன்னிறுத்தி விமர்சிப்பது ஒரு அரசியல் உத்தியா?
கடந்த காலங்களில் திருமணங்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது பவன் கல்யாண் பல முறை பதிலளித்துள்ளார். மேலும், சில சூழ்நிலைகளில் சட்டப்படி மட்டுமே தான் செயல்பட்டதாகவும், யாரையும் ஏமாற்றவில்லை என்றும் கூறியிருந்தார். “வேண்டுமானால் நீங்களும் செய்யலாம்,” என்றும் அவர் கூறியிருந்தார்.
இருப்பினும், பவன் திருமணங்களைச் சுற்றியுள்ள அரசியல் குழப்பம் இன்னும் நீங்கவில்லை.
“இதெல்லாம் ஏதோ ஒரு வியூகத்துக்காக நடப்பது போல் தெரிகிறது. தனிப்பட்ட பிரச்சினைகளை பேசி உண்மையான பிரச்சினைகளை மறைக்கும் முயற்சியாகவே பார்க்க வேண்டும். அரசின் தோல்விகளை பவன் கல்யாண் விமர்சிக்கிறார். அவரது திருமணங்களை முதலமைச்சர் விமர்சிக்கிறார். இதனால் உண்மையான பிரச்சினை திசைதிருப்பப்படுகிறது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் vs ஜன சேனா என்பது போல, சமூக ஊடகங்கள் திருமணங்களைச் சுற்றி பரபரப்பாக விவாதித்து வருகின்றன. இது அரசின் உத்தியின் ஒரு பகுதி. இதை பவன் கல்யாண் உணர்ந்து கொண்டதாக தெரிகிறது. ஆனால், இந்த வெகுஜன தாக்குதலை சகித்துக்கொள்ள முடியாத நிலைக்கு ஜனசேனா சென்று கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, அது பதில் சொல்ல வேண்டிய நிலைக்குச் செல்கிறது," என அரசியல் பார்வையாளர் ராமாஞ்சநேயு தெரிவித்தார்.
பவன் கல்யாணை தார்மீக ரீதியில் விமர்சித்து கட்டுக்குள் கொண்டுவர முதல்வர் இதுபோன்ற முயற்சியை மேற்கொள்கிறார் என்று நினைக்க வேண்டும் என அவர் பிபிசியிடம் கூறினார்.
மூன்று திருமணம் செய்த தலைவரை நான்கு திருமணம் செய்தவர் என முதல்வர் மீண்டும் மீண்டும் விமர்சிப்பது ஒரு உத்தி ரீதியான தாக்குதலாகவே கருதப்பட வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் எம்.விஜய் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், @JANASENAPARTY
"இன்றும் இந்திய சமூகத்தில் திருமணங்கள் தொடர்பாக சில விதிமுறைகள் உள்ளன. சமூகம் என்ன நினைக்கும் என்ற பயத்தில் தான் பலர் ஒரே திருமணம் செய்துகொள்கின்றனர். இந்நிலையில், ஒரு நல்ல தலைவரின் மூன்று திருமணங்கள் பழமைவாதிகளுக்கு பிடிக்காது. எனவே பவன் கல்யாணின் திருமணங்கள் குறித்த விஷயங்களை முதலமைச்சர் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார். அவரை சிக்கலில் தள்ளுவதற்காகவே ஜெகன் இந்த உத்தியைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று கருத வேண்டும்," என்று விஜய் குமார் கூறினார்.
கடந்த காலத்திலிருந்து அரசியலில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனங்கள் இருந்து வந்தாலும், முதலமைச்சர் மட்டத்தில் உள்ள தலைவர் ஒருவர் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதன் மூலம் தனது நிலையை மறந்து செயற்படுவதாகவே கருத வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான சமூக ஊடகத் தாக்குதல்கள்
பவன் கல்யாண் திருமணங்களைச் சுற்றி நடக்கும் விவாதம் என்ற பெயரில் பெண்களின் ஆளுமை கிண்டலுக்கும் கேலிக்கும் உட்படுத்தப்படுவதாக சமனவிதா சன்ஸ்தாவின் பிரதிநிதியான எழுத்தாளர் தத்தா சமந்தக மணி கருத்து தெரிவித்துள்ளார்.
"சமூக வலைதளங்களில் பெண்கள் மீதான தாக்குதல் மூன்றாம் தரத்தில் உள்ளது. பிரிந்து வாழ்பவர்களை கூட பவன் கல்யாண் என்ற பெயரில் சர்ச்சையில் இழுக்கிறார்கள். அரசியல் நோக்கத்திற்காக பெண்களை துன்புறுத்துவது என்ன நெறிமுறை? அதை கட்டுப்படுத்த வேண்டும். ஒருவரின் தனியுரிமையை சீர்குலைப்பது ஏற்புடையதல்ல" என்று அவர் பிபிசியிடம் கூறினார். இவ்வாறான விஷயங்களில் சட்ட நடவடிக்கை தேவை என அவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள தலைவர்கள் பொறுமை இழந்துவிட்டனரா?
சட்ட நடவடிக்கையை மீறி பவன் கல்யாண் திருமணங்கள் குறித்த விவரங்களை அப்படியே சமூக வலைதளங்களில் விமர்சிப்பது ஆளுங்கட்சியினரின் தவறான போக்கையே காட்டுகிறது என பார் கவுன்சில் உறுப்பினர் முப்பள்ளா சுப்பாராவ் கூறினார்.
“பவன் கல்யாண் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தால், அதற்கு எதிராக அவரது தனிப்பட்ட விஷயங்களைக் குறிப்பிடுவது சரியல்ல. ஆந்திர அரசியல் தலைவர்கள் தன்னடக்கத்தை விட்டுவிட்டார்கள். சில நேரம் பொதுக்கூட்டங்களில் பேசும்போது அவர்கள் பயன்படுத்தும் மொழியையும், ஊடகங்களின் முன்னால் அவர்கள் எழுப்பும் சத்தங்களையும் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. வாயை திறந்தால் முதல்வர் தன் நிலை மறந்து இளைஞர்களிடம் பேசுகிறார். "இவர்கள் கற்றது எதையும் பின்பற்றுவதில்லை. ட்ரோலிங் கும்பல்கள் முதலமைச்சரையும், அவரது ஆதரவாளர்களையும் பார்த்து மேலும் கீழ்த்தரமாக செயல்படுகின்றன," என்று கவலை தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இந்தப் போக்கைத் தவிர்க்க வேண்டும் என்றும், இது முதலமைச்சரிடமிருந்து தொடங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
மேலும், எதிர்க்கட்சிகள் மட்டுப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பது அதன் பின்னரே தெரியவரும் என்பது சுப்பாராவ் கருத்து. ஆனால் ஆளுங்கட்சியும், முதல்வர் நிலையில் இருக்கும் நபர்களும் இதுபோன்ற குறுகிய கண்ணோட்டத்திலான கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
எங்கள் கட்சி அப்படி செயல்படாது: சஜ்ஜலா ராமகிருஷ்ண ரெட்டி
இது போன்ற விமர்சனங்களுக்குப் பதில் அளித்துப் பேசிய அரசு ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ண ரெட்டி, யாரையும் தனிப்பட்ட முறையில் ஒய்சிபி தாக்காது என்றார்.
“கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் யாரையும் தாக்கிப் பேசுவது எங்கள் கட்சியின் கோட்பாடு அல்ல. இதுபோன்ற தனிப்பட்ட விமர்சனங்களில் நாங்கள் ஒருபோதும் ஈடுபடுவதில்லை. உண்மையில் அந்த பழக்கம் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது. ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி குடும்ப விழுமியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால் எங்கள் கட்சியினர் அப்படி தவறாக நடந்து கொள்வதில்லை. 'அரசியலை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் தத்துவம்' என்று அவர் சனிக்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












