பாலியல் வன்கொடுமை நிகழ பெண்ணே காரணம் - அலகாபாத் உயர்நீதிமன்ற கருத்தால் சர்ச்சை

அலகாபாத் உயர் நீதிமன்றம், முக்கிய செய்திகள், பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,

பட மூலாதாரம், Getty Images

தன்னுடைய சர்ச்சைக்குரிய முடிவின் காரணமாக மீண்டும் ஒரு முறை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் பெயர் செய்திகளில் அடிபடுகிறது.

பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் அந்த நீதிமன்றம் எடுத்த முடிவே இத்தகைய சர்ச்சைக்குக் காரணம்.

ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று, பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம், அந்த பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு அந்த பெண்ணே காரணம் என்றும், அவர் தான் தனக்குத் தானே பிரச்னையை ஏற்படுத்திக் கொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்த மாணவி அவருக்கு தெரிந்த ஆண் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்று புகார் அளித்தார். அந்த வழக்கு நீதிபதி சஞ்சய் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.

நடந்தது என்ன?

சட்டம் மற்றும் நீதிமன்ற விவகாரங்கள் தொடர்பாக செய்தியை வெளியிடும் இணைய தளமான 'பார் அண்ட் பெஞ்ச்' வெளியிட்டுள்ள செய்தியின்படி, பாதிக்கப்பட்ட மாணவி அவருடைய மூன்று பெண் தோழிகளுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் உள்ள மதுபான விடுதிக்கு சென்றுள்ளார். அங்கே அவர்களுக்கு தெரிந்த சில ஆண்களை சந்தித்துள்ளனர்.

அதில் ஒருவர் தான் இந்த மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின்படி, பாதிக்கப்பட்ட மாணவி மது போதையில் இருந்தார் என்றும், அடுத்த நாள் அதிகாலை மூன்று மணி வரை 'பாரில்' இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஆண், அப்பெண்ணை வீட்டிற்கு வரும்படி தொடர்ச்சியாக வற்புறுத்தியுள்ளார். தொடர்ச்சியாக அழைப்பு விடுத்த சூழலில் ஓய்வெடுக்க அந்த பெண், அவருடைய வீட்டிற்கு செல்ல ஒப்புதல் அளித்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட நபர், நொய்டாவில் உள்ள அவருடைய வீட்டிற்கு அப்பெண்ணை அழைத்துச் செல்வதற்கு பதிலாக தன்னுடைய உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அங்கே அந்த பெண் மீது பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் அந்த ஆண்.

இதைத் தொடர்ந்து அந்த பெண் காவல்துறையில் புகார் அளிக்க, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த காவல்துறையினர், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை டிசம்பர் மாதம் கைது செய்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் தன்னுடைய பிணை மனுவில், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அப்பெண்ணுக்கு உதவி தேவையாக இருந்தது என்றும் அதனால்தான் அந்த பெண் தானாக விரும்பி தன்னுடன் வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற உறவானது இருவரின் சம்மதத்துடன் நடைபெற்றது என்றும் கூறியுள்ளார்.

அலகாபாத் உயர் நீதிமன்றம், முக்கிய செய்திகள், பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்

நீதிமன்றம் கூறியது என்ன?

அவரின் பிணை மனுவை விசாரித்த நீதிமன்றம், "பாதிக்கப்பட்ட பெண் கூறுவது உண்மை என்று நீதிமன்றம் நம்பினாலும் கூட, அவருக்கு ஏற்பட்ட பிரச்னையை அவரே தேடிக் கொண்டார். அவருக்கு ஏற்பட்ட நிகழ்வுக்கு அவரே காரணம். பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய வாக்குமூலத்தில் இதே நிகழ்வைத்தான் குறிப்பிட்டுள்ளார். அவருடைய மருத்துவ பரிசோதனை அறிக்கையிலும் கூட பாலியல் வன்கொடுமை தொடர்பாக மருத்துவர் ஏதும் தெரிவிக்கவில்லை," என்று குறிப்பிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு பேசிய நீதிபதி சஞ்சய் குமார், பாதிக்கப்பட்ட பெண் ஒரு பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவி, அவருக்கு அறநெறிகள் என்ன, நடத்தையின் முக்கியத்துவம் என்ன என்பதை புரிந்து கொள்ளும் திறன் உள்ளது என்று குறிப்பிட்டார்.

"உண்மை மற்றும் புறச்சூழல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், நிகழ்ந்த குற்றம் மற்றும் இரண்டு தரப்புகளிடம் இருந்தும் பெறப்பட்ட ஆதாரங்கள், அறிக்கைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் பிணை கோரிய மனுதாரர் பிணை பெறுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார் என்று நம்புகிறேன். அவருக்கு பிணை வழங்கப்பட்டது," என்று நீதிமன்றத்தில் சஞ்சய்குமார் அறிவித்தார்.

அலகாபாத் உயர் நீதிமன்றம், முக்கிய செய்திகள், பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ''பாதிக்கப்பட்ட பெண் கூறுவது உண்மை என்று நீதிமன்றம் நம்பினாலும் கூட, அவருக்கு ஏற்பட்ட பிரச்னையை அவரே தேடிக் கொண்டார். அவருக்கு ஏற்பட்ட நிகழ்வுக்கு அவரே காரணம்'' என நீதிமன்றம் கருத்து

ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்திய அலகாபாத் நீதிமன்றம்

இந்த ஆண்டு மார்ச் 17 அன்று இதே நீதிமன்றம் ஒரு போக்சோ வழக்கு விசாரணையின் போது சர்ச்சைக்குரிய முடிவை எடுத்தது.

பெண்களின் மார்பகங்களைத் தொடுதல், கீழ்சட்டையை அவிழ்க்க முயல்தல் போன்றவை பாலியல் வன்கொடுமை செய்வதற்கான முயற்சிகளாக பார்க்க இயலாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள படியாலி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை விசாரித்த போதுதான் நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா அடங்கிய அமர்வு இத்தகைய கருத்துகளை தெரிவித்தது.

பாலியல் வன்கொடுமை செய்வதற்கான முயற்சி நிகழந்தது என்பதை நிரூபிக்க, குற்றம் செய்வதற்கான முகாந்திரம் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் இருந்தது என்பதை விசாரணை வாயிலாக காட்ட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இருப்பினும் மார்ச் 26 அன்று உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய முடிவுக்கு தடை விதித்து அறிவித்தது. நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் ஏ.ஜி.மசி அடங்கிய அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முடிவானது மனிதத்தன்மையற்றது என்று கூறி அதற்கு தடை விதித்தது.

அலகாபாத் உயர் நீதிமன்றம், முக்கிய செய்திகள், பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,

பட மூலாதாரம், www.allahabadhighcourt.in

படக்குறிப்பு, நீதிபதி சஞ்சய் குமார்

யார் இந்த சஞ்சய் குமார்?

நீதிபதி சஞ்சய் குமார் 1969-ஆம் ஆண்டு பிறந்தார். 1992-ஆம் ஆண்டு கான்பூரில் அமைந்திருக்கும் தயானந்த் சட்டக் கல்லூரியில் சட்டப் பிரிவில் பட்டம் பெற்றார். 1993-ஆம் ஆண்டு அவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பார் கவுன்சில் உறுப்பினராக இணைந்தார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ஆம் தேதி அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி அன்று அவர் அலகாபாத் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு