கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் கொலையில் கைதான 3 இந்தியர்களும் யார்? இந்தியா கூறுவது என்ன?

பட மூலாதாரம், RCMP HANDOUT
- எழுதியவர், ககன்தீப் சிங் ஜசோவால் மற்றும் குர்பிரீத் சிங் சாவ்லா
- பதவி, பிபிசி பஞ்சாபி
காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்களை கனடா காவல்துறையிநர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தனர்.
18 ஜூன் 2023 அன்று, குருத்வாராவின் வாகன நிறுத்துமிடத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். நிஜ்ஜார், கனடாவின் வான்கூவரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் இருந்தார்.
கனடாவின் கொலைக் குற்றங்களுக்கான ஒருங்கிணைந்த விசாரணைக் குழு, குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை மே 3 அன்று கைது செய்தது. அவர்கள் இந்தியர்களான கரண் பிரார், கரண்ப்ரீத் சிங் மற்றும் கமல்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மூவரின் குடும்பப் பின்னணியை அறிய பிபிசி பஞ்சாபி முயற்சி செய்தது.

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாபைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள்
கரண் பிரார் பஞ்சாபின் ஃபரித்கோட்டை சேர்ந்தவர், கரண்ப்ரீத் குர்தாஸ்பூரைச் சேர்ந்தவர், கமல்ப்ரீத் ஜலந்தர் மாவட்டத்துக்காரர்.
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் ஏஜென்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
ட்ரூடோ செப்டம்பர் 2023-இல் கனடாவின் நாடாளுமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் இந்திய அரசு இந்த குற்றச்சாட்டுகளை 'அடிப்படையற்றது' என்று கூறியது.
கரண் பிரார் கல்விக்கான விசா மூலம் கனடா சென்றிருந்தார். பஞ்சாப் போலீஸ் வட்டாரங்களின்படி, கரண் ப்ரார் ஃபரித்கோட் மாவட்டத்தின் கோட்காபுரா நகரில் வசிப்பவர். இவர் இந்தப் பகுதியைச் சேர்ந்த கோட் சுகியா கிராமத்தைச் சேர்ந்தவர்.
பஞ்சாப் போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கரண் பிரார் தனது பள்ளிப்படிப்பை கோட்காபுராவில் முடித்தார், பின்னர் அவர் 2020-இல் கல்விக்கான விசா மூலம் கனடா சென்றார்" என்றார்.
கரண் ஒரு நிலப்பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று காவல்துறை கூறுகிறது. அக்கம்பக்கத்தினர் மற்றும் அருகிலுள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, கரணின் தாத்தா பல்பீர் சிங் பிரார் ஒரு உள்ளூர் தொழிலதிபர்.
கரண் அவரது பெற்றோருக்கு ஒரே மகன். கரண் பிராரின் தாயார் ராமன் பிரார் வேலை நிமித்தமாக சிங்கப்பூரில் வசிப்பதாக அவருக்கு பரிட்சயமானவர்கள் தெரிவித்தனர். கரண் ப்ராரின் தந்தை மன்தீப் பிரார் கடந்த மாதம் 18ஆம் தேதி காலமானார், இதன் காரணமாக கரணின் தாயும் இந்தியா வந்தார்.

கரண் பிராரின் பின்னணி
ஃபரித்கோட் எஸ்பி ஜஸ்மீத் சிங் கூறுகையில், "கரண் பிராருக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை." என்றார்.
இருப்பினும், கரணின் தந்தை மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிபிசி பஞ்சாபிக்கு கிடைத்த எஃப்ஐஆர் படி, கரணின் தந்தை மன்தீப் சிங் ப்ரார் மீது ஃபரித்கோட் மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 பிரிவின் கீழ் ஏப்ரல் 1, 2024 அன்று கோட்புரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ரவீந்தர்பால் சிங் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ஃபரித்கோட் மாவட்டத்தில் உள்ள கோட்கபுரா காவல் நிலையத்தில் மன்தீப் சிங் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
எஃப்ஐஆர் தகவலின்படி, ரவீந்தர்பால் சிங் 2018ஆம் ஆண்டில் கனேடிய விசாவைப் பெறுவதற்காக மன்தீப் சிங்குக்கு ரூபாய் 2.5 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் விசாவும் கிடைக்கவில்லை, பணத்தையும் மன்தீப் சிங் திரும்பக் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

கரண் ப்ரீத்தின் பின்னணி
குர்தாஸ்பூரின் பிபிசி நிருபர் குர்ப்ரீத் சிங் சாவ்லா கூறுகையில், கரண்ப்ரீத் சிங் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சுண்டல் கிராமத்தில் வசிப்பவர்.
கரண்ப்ரீத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை துபாயில் லாரி ஓட்டி வருகிறார். கரண்ப்ரீத் சிங்கின் மாமாவும் கிராம சர்பஞ்சின் மகனுமான ரஞ்சித் சிங் ராணா, கரண்ப்ரீத் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று கூறுகிறார்.
ஆரம்பக் கல்வியை முடித்த கரண்ப்ரீத் 2016-இல் துபாய்க்குச் சென்றதாகவும், அங்கு தனது தந்தையுடன் சுமார் நான்கு ஆண்டுகள் டிரக் டிரைவராகப் பணிபுரிந்ததாகவும் ரஞ்சித் சிங் கூறினார்.
கரண்ப்ரீத் கனடா சென்றது குறித்து ரஞ்சித் சிங் கூறுகையில், “வேலைக்கான விசா மூலம் கனடா சென்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாவில் தங்கி, டிரக் ஓட்டிக் கொண்டிருந்தார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கரண்ப்ரீத் மீது பஞ்சாப்பில் எந்த குற்றப் பதிவும் இல்லை. அவரது மிகவும் நட்பாக பழகக்கூடியவர். அதனால், அவர் கைது செய்யப்பட்டதையடுத்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கரண்ப்ரீத் தனது பள்ளிப் படிப்பை எங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள பள்ளியில் முடித்தார், அவர் பஞ்சாபில் வசிக்கும் போது குற்றச் செயலிலும் ஈடுபட்டதற்கான எந்தத் தகவலும் இல்லை” என்று அவர் கூறினார்.
தங்கள் மகன் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டதை நம்ப முடியவில்லை என கரண்ப்ரீத்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர். கரண்ப்ரீத்துக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர், இருவரும் திருமணமானவர்கள்.
சில நாட்களுக்கு முன்பு தான் கரண்ப்ரீத் சிங் தனது குடும்பத்தினருடன் பேசியதாகவும், அப்போது அவர்கள் வழக்கம் போல் உரையாடியதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
கரண்பிரீத்தை கனடாவுக்கு அனுப்ப, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கடன் பெற்று, ஏற்பாடு செய்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். கரண்ப்ரீத் பற்றிய கூடுதல் தகவல்களைப் பகிர அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

கமல்பிரீத் சிங்கின் பின்னணி
சந்தேக நபர்களில் ஒருவரான கமல்பிரீத் சிங் ஜலந்தர் மாவட்டத்தின் நாகோதர் துணைப்பிரிவின் சக் கலான் கிராமத்தில் வசிப்பவர் என்று பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
கமல்பிரீத் சிங் நகோதரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். 2019ஆம் ஆண்டில், அவர் தனது 12ஆம் வகுப்பை முடித்தார். அதன் பிறகு கல்விக்கான விசாவில் கனடா சென்றார்.
அவரது தந்தை சத்னம் சிங் வேலையில் இருப்பதாலும், கிராமத்தில் சொந்தமாக ஓரளவு நிலம் உள்ளதாலும் கமல்ப்ரீத்தின் குடும்பம் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது.
கமல்ப்ரீத்தின் சகோதரியும் கனடாவில் வசிக்கிறார் என்று பஞ்சாப் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார், அதேபோல அவரது தாயும் 2022இல் அவரைச் சந்திக்க கனடா சென்றார்.
"நாங்கள் விசாரித்த வரையில், ஜலந்தர் மாவட்டத்தில் கமல்ப்ரீத் சிங்குக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை" என்று ஜலந்தர் கிராமப்புற மூத்த போலீஸ் கேப்டன் அங்கூர் குப்தா பிபிசியிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
கமல்ப்ரீத்தின் தந்தை சத்னம் சிங் பிபிசி பஞ்சாபியிடம் கூறுகையில், "எங்கள் மகன் கைது செய்யப்பட்ட தகவல், செய்திகள் மூலம் தான் எங்களுக்குத் தெரிய வந்தது. எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. கமல்ப்ரீத் 2019-ஆம் ஆண்டு கல்வி விசாவில் கனடாவுக்குச் சென்றார். அங்கு அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக குர்தாஸ்பூரைச் சேர்ந்த கரண்ப்ரீத்துடன் வசித்து வந்தார். ஆனால் மற்றொரு நபரான கரண் பிரார் என்பவரைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை.” என்று கூறினார்.

பட மூலாதாரம், ANI
இந்திய அரசின் பதில் என்ன?
செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள் பற்றிய தகவல்களை கனடா காவல்துறை பகிர்ந்து கொள்ளும் வரை இந்தியா காத்திருக்கும் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
“இந்த நபர்கள் சார்ந்த கிரிமினல் கும்பல் அங்கு செயல்பட்டதா, அது பற்றி கனடா காவல்துறை எங்களிடம் தெரிவிக்கும் வரை நாங்கள் காத்திருப்போம். இந்தியாவிலிருந்து, குறிப்பாக பஞ்சாபிலிருந்து கனடாவிற்குள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற அமைப்புகளை அனுமதித்தது அவர்கள் தான் என நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்" என்று வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கனடாவிற்கான தூதரக உயரதிகாரி (ஹைகமிஷனர்) சஞ்சய் வர்மா கூறுகையில், இந்த மூன்று இந்தியர்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் கனடா அதிகாரிகளிடமிருந்து விரைவில் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
"இந்தக் கைதுகள் கனடா விசாரணையின் விளைவு என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இது கனடாவின் உள்விவகாரம், எனவே இது குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை" என்றார் சஞ்சய் வர்மா.

பட மூலாதாரம், X/VIRSA SINGH VALTOHA
ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் பஞ்சாப் பின்னணி
ஜலந்தரின் பார் சிங் புரா கிராமத்தில் வசித்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக நிஜ்ஜார் இருந்தார். மேலும், காலிஸ்தான் புலிப் படையின் செயல்பாடுகள், தகவல் அமைப்புகள், மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு பயிற்சி மற்றும் நிதி உதவி வழங்குவது ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார் நிஜ்ஜார்.
பஞ்சாப் அரசின் கூற்றுப்படி, ஜலந்தரில் உள்ள அவரது பூர்வீக கிராமமான பார் சிங் புராவில் நிஜ்ஜாரின் ஒரு ஏக்கர் நிலத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைப்பற்றியுள்ளது.
2020இல் தனி காலிஸ்தான் தனி நாட்டுக்கான ‘சீக்கிய வாக்கெடுப்பு 2020’ என்ற ஆன்லைன் பிரச்சாரத்தை நடத்தியது தொடர்பான வழக்கில் பஞ்சாபில் இருக்கும் நிஜ்ஜாரின் இந்த சொத்து முடக்கப்பட்டது.
தேசிய புலனாய்வு அமைப்பின் தகவலின்படி, நிஜ்ஜார் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்கள்’ (Sikh for justice) தொடர்புடையவர். ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் வாக்கெடுப்பு நிகழ்வில் வாக்களிக்கும்போது நிஜ்ஜார் பொதுவெளியில் காணப்பட்டார்.
செப்டம்பர் 2023இல், கனடா பிரதமர் ட்ரூடோ ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார். அவர் நாடு திரும்பிய உடனேயே, நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் சாத்தியமான தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக செப்டம்பர் 18 அன்று கனடா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறினார்.

பட மூலாதாரம், REUTERS
ஆனால், கனடா மற்றும் அமெரிக்காவில் சட்டவிரோத கொலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மோதி அரசு மறுத்துள்ளது.
அக்டோபர் 2023-இல், 40 கனடா தூதரக அதிகாரிகளின் ராஜீய விலக்குரிமையை (Diplomatic Immunity) ரத்து செய்தது இந்தியா. இதன் காரணமாக கனடா தூதரகத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி, நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு கனடா அளிக்கும் சலுகைகள், இந்தியாவுக்கு மட்டுமல்ல, கனடாவுக்கும் நல்லதல்ல என்று இந்திய அரசு கூறியிருந்தது.
மே 2024 முதல் வாரத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் சாத்தியமான தொடர்புகள் குறித்து மீண்டும் பேசினார். இந்திய அரசும் அதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












