காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கடைசி 2 நாட்களில் நடந்தது என்ன? குடும்பத்தினர் புதிய தகவல்

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் காங்கிரஸ் கட்சியில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த மாதம் இறுதியில் அவர் எழுதியதாக கூறப்படும் 5 பக்கங்கள் கொண்ட கடிதம் இணையத்தில் பரவியுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் அவர் காணாமல் போய்விட, அவரது தோட்டத்தின் அருகில் எரிந்த நிலையில் அவரது உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மாவட்ட தலைவருக்கு நடந்தது என்ன? அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் யார்?
கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் யார்?
நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த கரைச்சுத்துப்புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். இவரது குடும்பம் நீண்ட காங்கிரஸ் பாரம்பரியத்தைக் கொண்டது. இவரது தந்தை கே.பி கருப்பையா ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் தலைவராக பதவி வகித்தவர்.
இவரது சகோதரர்களும் கட்சிப் பொறுப்பில் இருக்கின்றனர். ஜெயக்குமார், கட்சியை தாண்டி கட்டுமான தொழில் மற்றும் ஒப்பந்தம் எடுத்து சாலைகள் அமைப்பது போன்ற தொழில்களை செய்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளருக்காக தீவிரமாக கட்சிப் பணி செய்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஜெயக்குமார் தனசிங் மாயம் - மகன் புகார்
ஜெயக்குமார் தனசிங் கடந்த மே இரண்டாம் தேதி தனது வீட்டிலிருந்து வெளியே சென்று மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மகன் கருத்தையா ஜாப்ரின், உவரி காவல் நிலையத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
இந்நிலையில் அவரது உடல் உவரியில் உள்ள அவரது தோட்டத்தின் அருகில் எரிந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து காவல்துறையினர் ஜெயக்குமாரின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
'எனது உயிருக்கு ஆபத்து' என கடிதம் எழுதிய மாவட்ட தலைவர்
இந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் 2 நாட்களுக்கு முன்பு எழுதி அவரது உதவியாளரிடம் அளித்ததாக கூறப்படும் கடிதம் ஒன்று வைரலாக பரவியது. அவரது அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் எழுதப்பட்டிருந்த கடிதத்தில், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும் தான் இறந்தால் இவர்கள்தான் பொறுப்பு என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தில், “சமீப காலமாக தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. இதனை அரசியலில் சகஜம் என கண்டுகொள்வதில்லை. 3 தடவை இரவு நேரத்தில் எனது வீட்டின் அருகில் ஆள் நடமாட்டம் இருக்கிறது. நேரில் சென்று சத்தம் போட்டவுடன் ஓடி விடுகிறார்கள். திருட வந்த நபர்களாக இருக்குமென பெரிதுபடுத்தவில்லை”. என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடிதத்தில் இடம் பெற்ற 8 பெயர்கள்
நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்பட 8 பேரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களுடன் ஜெயக்குமார் தனசிங்கிற்கு கொடுக்கல் - வாங்கல் பிரச்னை இருந்ததாக அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை ஜெயக்குமார் தனது உதவியாளரான வேலனிடம் முன்பே அளித்திருப்பதாகவும் அதிலிருக்கும் எழுத்து அவருடையதுதான் என குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்ததாகவும் பிபிசி தமிழிடம் போலீசார் கூறினர்.

7 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார்
“இந்தக் கொலை தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைத்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் கொலை மிரட்டல் தொடர்பாக எழுதிய கடிதம் முன்பே வழங்கப்படவில்லை" என பிபிசி தமிழிடம் கூறினார் மாவட்ட எஸ்.பி என். சிலம்பரசன்.
“ஜெயக்குமாரின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன, அதேபோல் வயிற்றுப் பகுதியிலும் கல் கட்டப்பட்டிருக்கிறது. உடல் எரிந்த நிலையில் இருப்பதால், எப்படி சம்பவம் நடந்திருக்கும் என இப்போதைக்குக் கூற இயலாது. கொலையா அல்லது தற்கொலையா என பிரேதப் பரிசோதனையின் முடிவில் தெரியவரும்.
கடிதம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும். தன்னிடம் வாங்கிய பணத்தை பலர் திரும்பித் தரவில்லை என நண்பர்கள், உதவியாளரிடம் அவர் பகிர்ந்து வந்திருக்கிறார்”, என பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.
‘கொலை மிரட்டல் குடும்ப உறுப்பினர்களிடம் மறைப்பு’
"தனக்கு வந்தக் கொலை மிரட்டல்களை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளாமல் அவர் மறைத்துவிட்டார்", என்று கூறுகிறார் அவரது சகோதரர் கே.பி.கே ராஜா.
இது குறித்து பிபிசி தமிழிடம் கூறுகையில், "எனது அண்ணன் மிகவும் பொறுமையானவர், அனைவரிடமும் அமைதியாக பழகக் கூடியவர். இவருக்கு கொலை மிரட்டல் வந்த தகவலை தனது குடும்பத்தினரிடம் கூறாமல் இருந்துள்ளார், என்னிடமும் எதுவும் கூறவில்லை.
கடைசி இரண்டு நாட்கள் அமைதியாக இருந்து வந்தார். கடந்த இரண்டாம் தேதி 8:00 மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்ற அவர் கடைசியாக மன்னார்புரம் என்ற இடத்தில் அவரது நண்பரை சந்தித்து விட்டு சென்றார்.அதன் பிறகு ஆள் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
தற்போது உடலாக மீட்க பட்டு இருக்கிறார். குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்."
"இதுபோன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இனி இது போன்று குற்றச்சம்பவங்கள் நடைபெற கூடாது" என்றார் கே.பி.கே ராஜா.

பட மூலாதாரம், TamilNadu Congress Committee
‘கட்சி ரீதியாக விசாரணை நடத்தப்படும்’
“எங்களது மாவட்டத் தலைவர்களில் ஒருவரை இழந்து இருக்கிறோம். ஜெயக்குமார் குடும்பத்தாரின் புகாரை ஏற்று நேர்மையான விசாரணையை காவல் துறையினர் செய்து வருகின்றனர்.
மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது அதனைப் பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியின் சார்பில் வைத்திருக்கிறோம்.
அதனையும் போலீசார் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எங்களது கட்சியின் சார்பிலும் விசாரணை நடத்தப்படும். அதனை எங்களது தேசிய தலைமைக்கு அளிப்போம்”, என்றார்.
நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் பதில்
"நானும் ஜெயக்குமாரும் அண்ணன், தம்பி போல பழகியவர்கள் - நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தோம். வழக்கில் என்னை சிக்க வைக்க வேண்டுமென்றே யாரோ சதி செய்வது தெரிகிறது. உண்மைக்கு புறம்பான செய்திகளை பின்புலத்திலிருந்து பரப்புகிறார்கள்" என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன்.
கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












