நடிகர் மாரிமுத்து மறைவு: வருந்தும் பிரபலங்கள் - மு.க.ஸ்டாலின் இரங்கல்

பட மூலாதாரம், Marimuthu
திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பிரபலமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் மிகவும் பிரபலமானவர். அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.
நடிகராகவும் இயக்குநராகவும் ஆவதற்கு முன்பு, ராஜ்கிரண், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.
வளசரவாக்கத்தில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மரணமடைந்தார்.
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள பசுமலை கிராமத்தைச் சேர்ந்த அவர், கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், எதிர்நீச்சல் தொடர் தமிழ்நாட்டின் இல்லங்களில் அதிகம் அறியப்பட்டவரானார்.
பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த அவர், ஜெயிலர் திரைப்படத்தில் சிலைக் கடத்தலுக்கு உதவுபவராக நடித்திருந்தார்.
யுத்தம் செய், கொம்பன் உள்ளிட்ட சுமார் 50 படங்களில் அவர் நடித்துள்ளார்.

பட மூலாதாரம், X
திரையுலக, சின்னத் திரை கலைஞர்கள் அஞ்சலி
மறைந்த மாரிமுத்துவின் உடல் சென்னையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகம் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பலர் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
“என்னை மகளாகவே நேசித்தார்” என்று ”பரியேறும் பெருமாள்” திரைப்படத்தில் மாரிமுத்துவும் இணைந்து நடித்த கயல் ஆனந்தி கூறினார்.
“சினிமாவில் நான் நிறைய நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும் மாரிமுத்து அவர்களுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். நான் அந்தத் திரைப்படத்தில் அவரது மகளாக நடித்திருப்பேன். உண்மையிலேயே அவர் என்னை அவரது மகளாகவே தான் நேசித்தார். அதனால் தான் என்னவோ அது திரையில் அவ்வளவு அழகாக வந்தது.
மாரிமுத்து அவர்கள் இறந்த செய்தி கேட்டு என்னால் நம்பவே முடியவில்லை. அவர் மட்டுமல்ல, அவரது குடும்பமும் எனக்கு மிகவும் பழக்கம். அவரைப் போலவே அவரது குடும்பமும் என் மேல் மிகவும் அன்பாக இருந்தனர்.
படப்பிடிப்பு முடிந்தும் சிலரோடு மட்டுமே நட்பாக இருப்போம். அந்த வெகு சிலரில் ஒருவராக மாரிமுத்து இருந்தார். என் திரைப்படங்களைப் பார்த்து விட்டு எனக்கு மறக்காமல் ஃபோன் செய்து பாராட்டுவார். எப்பொழுதும் என் மீது அக்கறை கொண்ட மனிதராக இருந்தார்.” என்றார் அவர்.
“இரண்டு நாட்கள் முன்பு கூட நடிகை ஒருவர் இறந்து விட்டார் என புரளி கிளப்பிவிட்டனர். மாரிமுத்து அவர்களின் இறப்பு செய்தியும் அப்படி பொய்யாக இருக்கக் கூடாதா என நினைத்துக் கொண்டேன்.” என்று நடிகர் லிங்கேஷ் கூறினார்.
“மிகவும் நல்ல மனிதர். பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நான் அவரது சுறு சுறுப்பைப் பார்த்து வியப்படைந்தேன். நீங்கள் அவரது வயதைக் கணிக்கவே முடியாது. இளைஞர்களுக்கு இணையாக படப்பிடிப்புத் தளத்தில் ஓடிக் கொண்டிருப்பார்.
மேக்கப் அறையிலிருந்து அவ்வளவு துரிதமாக கிளம்பி ஷாட்டிற்கு நேரத்திற்கு வந்து விடுவார். என்னைப் பார்க்கும் போதெல்லாம் இப்பொழுது எந்த திரைப்ப்டத்தில் பணிபுரிகிறீர்கள் என அக்கறையுடன் விசாரிப்பார். அவரது இழப்பு தமிழ் திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு” என்றார் லிங்கேஷ் .

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் மறைவுச் செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.
மேலும், “தேனியில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றி, இயக்குநர் ஆனவர் மாரிமுத்து. சின்னத்திரையில் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வோர் இல்லத்திலும் அறிமுகமாகி புகழ்பெற்றவர்.
பல நேர்காணல்கள், நிகழ்ச்சிகளில் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன.
அவரது மறைவு தமிழ்த் திரையுலகு நிச்சயமாக ஒரு பேரிழப்பு. அவரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








