யோகா, தியானம் ஆகியவை மூளையை வலுப்படுத்தும் என்பது உண்மையா?

    • எழுதியவர், அஞ்சலி தாஸ்
    • பதவி, பிபிசி இந்திக்காக

நவீன வாழ்க்கையின் பரபரப்பில் நாம் தினந்தோறும் பல்வேறு புதிய பணிகளை எதிர்கொள்கிறோம். இருந்தபோதிலும் அதைச் சிறந்த முறையில் செய்துமுடிக்க நாம் முயல்கிறோம்.

இதற்குக் காரணம் நம் மூளைதான். தன்னைத்தானே மாற்றிக்கொண்டு புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் திறன் அதற்கு உள்ளது.

இருப்பினும் அன்றாட நிகழ்வுகள் மூளையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அது செயல்படும் முறையை மாற்றலாம். இதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன.

மெலிசா ஹோகேன்பூம் ஓர் அறிவியல் செய்தியாளர்.

நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் மூளை செயல்படும் விதத்தையே மாற்றும் அளவுக்கு அதன் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதைக் கண்டறிய அவர் ஒரு பரிசோதனையை நடத்தினார்.

வாழ்க்கையின் சில அம்சங்களை மாற்றுவதன் மூலம் மூளையை வலுப்படுத்த முடியும் என்று அவர் நம்புகிறார்.

இதற்காக அவர் முதலில் தனது மூளையை ஸ்கேன் செய்தார். அவருக்கு Functional magnetic resonance imaging (எஃப்எம்ஆர்ஐ) சோதனை செய்யப்பட்டது.

"ஸ்கேன் செய்யும்போது எதைப் பற்றியும் யோசிக்காமல் இருப்பது சாத்தியம் அல்ல. மிக அதிக சத்தம் எழுப்பும் இயந்திரத்தின் (எஃப்எம்ஆர்ஐ) முன் என்னை அழைத்துச் சென்றனர். கருப்பு சிலுவையின் மீது என் கவனத்தை ஒருமுனைப்படுத்தும்படி சொன்னார்கள். எனக்கு கண்களைத் திறப்பதுகூட கடினமாக இருந்தது. சோதனை முடிவுகள் பற்றியும் நான் கவலைப்பட்டேன்," என்று அவர் கூறினார்.

நடத்தைகளை மாற்றுவது மூளையை மாற்றுமா?

இந்தப் பரிசோதனையின் முடிவுகளையும், அடுத்த ஆறு வாரகாலத்திற்கு சில மாற்றங்களைக் கடைபிடித்த பிறகு கிடைக்கும் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க மெலினா விரும்பினார்.

இதன் காரணமாக மூளையில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை அறிய அவர் விரும்பினார். இந்தச் சோதனையின் முடிவுகளை அறிய அவர் ஒரு மருத்துவ உளவியலாளரின் உதவியைப் பெற்றார்.

"தியானம் போன்ற எளிமையான ஒன்றுகூட மூளையில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதை அறிந்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஆனால் கேள்வி என்னவென்றால், அது என் மூளையில் வேலை செய்யுமா?"

"அடுத்த ஆறு வாரங்களில், உளவியல் நிபுணர் தோர்ஸ்டன் பார்ன்ஹோஃபர், தியானம் தொடர்பான ஆராய்ச்சிப் பாடத்தை எனக்குக் கொடுத்தார். இதில், தினமும் ஆடியோ பதிவைக் கேட்டுக்கொண்டே 30 நிமிடம் தியானம் செய்தேன். இதுதவிர வேறு சில நடவடிக்கைகளும் இதில் இருந்தன,” என்று அவர் குறிப்பிட்டார்.

மன வலிமைக்கும் தியானத்திற்கும் உள்ள தொடர்பு

தியானப் பயிற்சி பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆனால் சில தசாப்தங்களுக்கு முன்புதான் உளவியலாளர்களும் மூளை மருத்துவர்களும் இதுகுறித்து தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கினர். பல்வேறு ஆராய்ச்சிகளில் தியானத்தின் பயன் நிரூபணமான பிறகு இப்போது அது பரிந்துரைக்கப்படுகிறது.

மன அமைதி என்பது நமது அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையது என்று அமெரிக்க உளவியலாளர் டேவிட் கிரெஸ்வெல், பல ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார்.

மூளையின் நினைவாற்றல் பகுதியை வலுப்படுத்த தியானம் உதவிகரமாக இருக்கும் என்று ஜெர்மனியில் உள்ள மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிரெட்டா ஹோல்ஸும், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் சாரா லேசரும் கூறுகிறார்கள்.

"தியானத்தில் நீங்கள் உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்த வேண்டும். உண்மையில் இந்தச் செயல்முறை மூளையால் செய்யப்படுகிறது. இதைச் செய்வதன் மூலம் மனம் அங்கும் இங்கும் அலைவதை நிறுத்துகிறது. இது மூளை வேலை செய்கிறது என்பதைச் சொல்கிறது.

நாம் மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகிறோம். அதாவது நாம் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களைச் செய்கிறோம். கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு சுவாசம் மூலம் நமது தசைகளைப் பலப்படுத்துகிறோம். இதன்போது நமது உடல் மற்றும் மனதின் திறன்களை அதிகரித்துக் கொள்கிறோம்," என்று மெலிசா ஹோகேன்பூமின் உளவியலாளர் பார்ன்ஹோஃபர் கூறுகிறார்.

தியானம் செய்வது முக்கியம், ஆனால் எச்சரிக்கையும் அவசியம்

"கோவிட் தொற்றுநோய்களின் போது மக்களின் சமூக வாழ்க்கை மிகக் குறைவாக இருந்தது. மரண பயம் மற்றும் எதிர்மறை உணர்வுகள் மக்களிடையே மிகவும் வேரூன்றியிருந்தால் அது அவர்களின் மன ஆரோக்கியத்தையும் பாதித்தது. கோவிட் தொற்றுக்குப் பிறகு கவலை, மன அழுத்தம் ஆகியவற்றுடன் கூடவே மனச்சோர்வும் அதிகரித்துள்ளது,” என்று புது டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் உளவியலாளர் மோனாலிசா தத்தா கூறினார்.

"நாம் நல்ல உணவை சாப்பிட வேண்டும். சரியான நேரத்தில் தூங்கி எழ வேண்டும். சூரிய ஒளியில் சிறிது நேரம் இருக்க வேண்டும். இயற்கையுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். இன்று கிட்டத்தட்ட அனைவரின் ஸ்க்ரீன் டைமும் அதிகமாக உள்ளது. இது மக்களின் மன அழுத்தத்தை அதிகரிப்பதோடு கூடவே அவர்களின் குணமும் ஆக்ரோஷமாக மாறி வருகிறது. இதை மேம்படுத்த நமது தனிப்பட்ட மற்றும் பணி வாழ்க்கைக்கு இடையே சமநிலையைப் பராமரிக்க வேண்டும்," என்றார் அவர்.

உணவுப் பழக்கத்தை மேம்படுத்தவும், சிறந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் அறிவுறுத்தியதோடு கூடவே யோகா மற்றும் தியானம் செய்யுமாறும் மோனாலிசா தத்தா வலியுறுத்தினார்.

"இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் மன அழுத்தத்தைத் தவிர்க்க முடியாது. ஆனால் அதைக் குறைக்க நீங்கள் தியானம் போன்றவற்றைச் செய்ய வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும் ஒரு நிபுணரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே தியானம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கிறார். குறிப்பாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மூடிய அறையில் அல்லது தனிமையில் அசௌகரியமாக உணரக்கூடும்.

ஆறு வாரங்களுக்குப் பிறகு மெலினா தனது பரிசோதனையில் என்ன கண்டுபிடித்தார்?

ஆறு வாரங்கள் முடிந்ததும் தனது மூளையில் இந்த சோதனை என்ன விளைவை ஏற்படுத்தியது என்பதை அறிய மெலிசா ஆர்வமாக இருந்தார்.

மீண்டும் ஒருமுறை ஸ்கேனிங் செய்து, பின்னர் தனது உளவியலாளர் பார்ன்ஹோஃபரிடம் அதைக் காட்டினார்.

பார்ன்ஹோஃபர் இரண்டு ஸ்கேன் முடிவுகளையும் பார்த்து, மெலிசாவின் மூளையில் மாற்றங்கள் தெளிவாகத் தெரிவதாகக் கூறினார்.

அவரது மூளையின் வலது பக்கத்தில் அமைந்துள்ள அமிக்டலா, அளவில் பாதியாகக் குறைந்திருந்தது. அமிக்டாலா என்பது மூளையில் உள்ள பாதாம் பருப்பு வடிவிலான ஓர் அமைப்பு. இது உணர்ச்சிகள் அல்லது உணர்வுகளின் மையம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாற்றம் மிகவும் சிறியதுதான். ஆனாலும் அது தெளிவாகத் தெரிந்தது.

தியானம் செய்வதால் அமிக்டலாவின் அளவு குறையும் என்று விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை ஒத்ததாக மெலினாவின் பரிசோதனை முடிவுகளும் இருந்தன. மன அழுத்தம் காரணமாக அதன் அளவு அதிகரிக்கிறது.

மூளை வலிமையின் ரகசியம்

மனித மூளை கற்றுக் கொள்வது, மாற்றிக் கொள்வது, தன்னைத்தானே வளர்த்துக் கொள்வது போன்ற திறன்களைக் கொண்டது. இது வெவ்வேறு பொருட்களாக மாறக்கூடிய பிளாஸ்டிக் போன்றது. இது நியூரோபிளாஸ்டிசிட்டி என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஏதோ ஒன்று பற்றிய நமது எண்ணங்கள் மாறும்போது, மூளையின் அமைப்பு மற்றும் அது செயல்படும் விதம் மாறுகிறது.

மேலும், யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் நாம் உண்மையில் நமது மூளையின் வலிமை, அளவு மற்றும் அடர்த்தியை அதிகரிக்க முடியும்.

இவை அனைத்தும் இளமைப் பருவம் வரை மட்டுமே நடக்கும் என்று முன்பு நம்பப்பட்டது. ஆனால் நம் அடையாளத்தை வடிவமைப்பதில் தொடர்ந்து செயல்படும் ஒரு நிலையான சக்தி இது என்பதை இப்போது நாம் அறிந்துகொண்டுள்ளோம்.

நாம் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போதெல்லாம் அது விரைவாக அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது.

தியானம் மூளையின் ஆரோக்கியத்தையும் ஓரளவு மேம்படுத்தும் என்பதை தன் மீது நடத்திக்கொண்ட பரிசோதனையில் மெலிசா ஹோகேன்பூம் கண்டறிந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: