You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மரக்கட்டைகள் கண்டுபிடிப்பு - ஆதி மனிதன் எதற்காக பயன்படுத்தினான்?
- எழுதியவர், விக்டோரியா கில்
- பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி செய்திகள்
ஜாம்பியாவில் உள்ள ஓர் ஆற்றங்கரையில் பண்டைய கால மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பழங்கால மனித வாழ்க்கை பற்றிய தொல்லியல் ஆய்வாளர்களின் புரிதலையே புரட்டிப்போடும் விதத்தில் உள்ளன.
சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் தமக்கான கட்டமைப்பை உருவாக்க மரத்தைப் பயன்படுத்தி இருப்பதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள இந்தச் சான்றுகள், கற்கால மனிதனின் தங்குமிடங்களாக இருந்ததைக் காட்டுவதாக, ‘நேச்சர்’ ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்தக் கண்டுபிடிப்பு நமது ஆரம்பக்கால மூதாதையர்களைப் பற்றி இதுநாள் வரையில் எனக்கு இருந்த புரிதலை மாற்றியுள்ளது,” என்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் லாரி பர்ஹாம்.
லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி தலைமையிலான குழு, மனித இனத்தின் ஆழமான வேர்களைத் தேடி ஆய்வு மேற்கொண்டது. குறிப்பாக, பழங்காலத்தில் மரங்கள் பயன்பாட்டில் இருந்தனவா என்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.
பழங்கால மனிதர்கள் பற்றிய எண்ணத்தை மாற்றும் கண்டுபிடிப்பு
இந்தக் கண்டுபிடிப்பு பழங்கால மனிதர்கள் எளிமையான, நாடோடி வாழ்க்கை நடத்தியதாகக் கருதும் தற்போதைய நமது எண்ணத்தை மாற்றியமைக்கக் கூடும்.
“பண்டைய கால மனிதர்கள் மரத்திலிருந்து புதிய மற்றும் பெரிய ஒரு பொருளை உருவாக்கியதாக,” கூறுகிறார் பேராசிரியர் பர்ஹாம்.
“அவர்கள் தங்களின் புத்திசாலித்தனம், கற்பனை மற்றும் திறன்களைப் பயன்படுத்தி, தங்களது காலத்துக்கு முன்பும், பின்பும் பார்த்திராத ஒன்றை உருவாக்கினர்,” என்கிறார் பர்ஹாம்.
மரக்குச்சிகள் உள்ளிட்ட பழங்கால மரப் பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்தனர். ஆனாலும் அவற்றில், ஒன்றுக்கொன்று செங்குத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு மரக்கட்டைகள் தான் அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
“ஒன்றன் மீது ஒன்று சாய்த்து வைக்கப்பட்டது போன்ற நிலையில் காணப்பட்ட அவற்றில் வெட்டுகளும் இருந்தன என்கிறார் ஆய்வுக் குழுவின் உறுப்பினரும், அபெரிஸ்ட்வித் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியருமான ஜெஃப் டல்லர் கூறினார்.
“இந்த மரக்கட்டைகளில் உள்ள வெட்டுகள், கல்லால் ஆன கருவியால் ஏற்பட்டவை என்பதை நாம் தெளிவாகக் காணலாம்”
“இது இரண்டு மரக்கட்டைகளையும் ஒன்றாகப் பொருத்தி ஒரு கட்டமைப்பாக ஆக்குகிறது” என்கிறார் டல்லர்.
நெருப்பை உண்டாக்குதல்
இந்த மரக்கட்டைகள் சுமார் 4.76 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்பது மேற்கொண்டு செய்யப்பட்ட பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெருப்பை உருவாக்குவதற்கும் குச்சிகள், ஈட்டிகள் போன்ற தற்காப்புக் கருவிகளை உருவாக்குவதற்கும் தான் மனிதன் மரத்தைப் பயன்படுத்தி வந்தான் என்பதே இதுவரை நமது புரிதலாக உள்ளது.
ஆனால், “மனிதனுக்கும், மரத்துக்குமான தொடர்பு பழங்கால பாரம்பரியம் வரை ஆழமாக வேரூன்றி இருப்பத்தை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். நாங்கள் அசாதாரணமான ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம்,” என்று எனக்குப் புரிந்தது என்கிறார் ஜாம்பியாவில் உள்ள லிவிங்ஸ்டோன் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த குழு உறுப்பினரான பெரிஸ் நகோம்ப்வே.
டேட்டிங் தொழில்நுட்பம்
பிரிட்டனின் எசெக்ஸுக்கு உட்பட்ட கிளாக்டன் பகுதியில் மணலில் புதைந்திருந்த மர ஈட்டி , கடந்த 1911இல் கண்டெடுக்கப்பட்டது. உலகின் பழமையான மரக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்பட்ட அது, 4,00,000 ஆண்டுகள் பழமையானதாக மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ஜாம்பியா -தான்சானியா எல்லைக்கு அருகில் உள்ள கலம்போ நீர்வீழ்ச்சிக்கு மேலே வளைந்து செல்லும் ஆற்றங்கரையில் தற்போது இரு மரக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவை தண்ணீரில் மூழ்கியிருப்பதாக கருதிய ஆராய்ச்சியாளர்கள், அவற்றின் காலத்தை லுமினென்சென்ஸ் டேட்டிங் தொழில்நுட்பம் மூலம் கணக்கிட்டனர்.
அதில், எந்த வகையான பண்டைய மனிதர்கள் அல்லது மனித இனங்கள் இவற்றை உருவாக்கியது என்பதைத் தெளிவாகக் கணிக்க இயலவில்லை. மேலும், இந்த மரக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இதுவரை எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், 3,15,000 ஆண்டுகள் பழமையான நாகரிக மனிதன் அல்லது ஹோமோசேபியன் புதைபடிவங்களைவிட இந்த மரக்கட்டைகள் மிகவும் பழமையானவை என்பது மட்டும் டேட்டிங் தொழில்நுட்ப ஆய்வில் தெரிய வந்தது.
மரக்கட்டையின் நீளம் எவ்வளவு?
இரண்டு மரக்கட்டைகளில், சிறியதான ஒன்றின் நீளம் சுமார் 1.5 மீ ( 5 அடி). அதை மற்றொன்றுடன் பொருத்தி ஏதோவொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும்.
ஆனால் அது ஒரு குடிசை அல்லது நிரந்தர வசிப்பிடமாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறும் ஆய்வுக் குழுவினர், அது ஒரு தங்குமிடத்திற்கான தளத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
ஆற்றங்கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதற்கு வசதியான ஒரு கட்டமைப்பாக இருந்திருக்கலாம் என்றும் பேராசிரியர் டல்லர் கூறினார்.
ஆனால் அவை எந்த வகையான கட்டமைப்பாக இருந்திருக்கும் என்பதைத் திட்டவட்டமாக சொல்வது கடினம் எனவும் அவர் தெரிவித்தார்.
மரவேலை மரபு
“ஜாம்பியா ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட மரக்கட்டைகள் ஹோமோசேபியன் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாமா என்று எங்களுக்குத் தெரியாது. ஏனெனில் அந்த காலத்தைய புதைபடிவங்களை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை,” என்கிறார் பேராசிரியர் டல்லர்.
ஆனால், “தென்னாப்பிரிக்காவில் அந்த நேரத்தில் பல மனித இனங்கள் இருந்தன. எனவே ஹோமோ எரெக்டஸ் அல்லது ஹோமோ நலேடி மனித இனங்களின் காலத்தைச் சேர்ந்தவையாக இவை இருக்கலாம்,” என்கிறார் அவர்.
பகுப்பாய்வு மற்றும் பாதுகாப்பிற்காக இந்த மரக்கட்டைகள் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. கடந்த அரை மில்லியன் ஆண்டுகளாக மிகவும் அழகாக பாதுகாக்கப்பட்ட நீர் தேக்கத்தைப் பிரதிபலிக்கும் தொட்டிகளில் சேமிக்கப்பட்டுள்ள அவை, விரைவில் மீண்டும் ஜாம்பியாவுக்கு கொண்டு வரப்படும் என்கின்றனர் ஆய்வுக் குழுவினர்.
“இந்த கண்டுபிடிப்பின் மூலம், எங்கள் சேகரிப்பை வளப்படுத்தவும், ஜாம்பியாவில் மரவேலை பாரம்பரியத்தின் இருப்பு குறித்து விளக்குவற்கான ஆய்வுகளுக்கும் இந்த மரக்கட்டைகளை பயன்படுத்தலாம் என்று நம்புகிறோம்,” என்று என்கோம்ப்வே கூறினார்.
கொலம்போ நீர்வீழ்ச்சி தளத்தில் பணியைத் தொடர்ந்த அவர், “பண்டைய மரவேலை நுட்பங்கள், கைவினைத்திறன் மற்றும் சுற்றுச்சூழல் உடனான மனிதத் தொடர்புகள் குறித்த நமது அறிவை ஆழப்படுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளன,” என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்