தூத்துக்குடி வெள்ளம்: 70 நாட்களாகியும் வெள்ளநீர் வடியாத கிராமம் - கள நிலவரம்

- எழுதியவர், மு.சுப கோமதி
- பதவி, பிபிசி தமிழுக்காக
17 டிசம்பர் 2023 — தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை கனமழை புரட்டி போட்ட நாள்.
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளத்தின் போது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திலுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை பாதிப்பிலிருந்து சுமார் பத்து நாட்களுக்குப் பிறகே இந்த மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின.
ஆனால், வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 70 நாட்களுக்கு மேலாகியும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் மழை நீர் வடியாமல் உள்ளது. இதனால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக கூறுகின்றனர்.
இயல்பு நிலைக்கு திரும்பாத ஊர்
கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பல கிராமங்களின் ஒன்று தான் திருச்செந்தூர் தாலுகாவிலுள்ள வெள்ளாளன்விளை கிராமம்.
இந்த ஊரில், 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கால் இங்குள்ள வீடுகள் மற்றும் கால்நடைகள் மிகவும் பாதிப்பட்டன.
உடன்குடி அருகிலுள்ள சடையநேரிகுளம் உடைந்ததன் காரணமாக வெள்ளாளன்விளை கிராமத்தின், மேற்கு தெரு மற்றும் வடக்கு தெருவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் முற்றிலுமாக மூழ்கின.

பிற ஊர்களின் வெள்ள நீர் வடிந்து 70 நாட்களுக்கும் மேலாகியும் இங்கு மட்டும் வெள்ள நீர் வடியாமல் வீடுகளுக்குள் தேங்கி இருக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
மழை பாதிப்பிலிருந்து இயல்பு நிலைக்கு இந்த கிராமம் திரும்பாத நிலையில், 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது சொந்த வீட்டிலிருந்து வெளியேறி, உறவினர்கள் வீடுகளிலும், வாடகை வீட்டிலும் தங்கி உள்ளனர்.
இந்த பகுதியில் வசிக்கும் சாமுவேல் ஞானப்பால் பிபிசி தமிழிடம் பேசிய போது, "டிசம்பர் 18 அன்று சடையநேரிகுளம் உடைந்து வெளியேறிய தண்ணீரால் என் வீட்டின் பின்புறம் உள்ள சுற்று சுவர் இடிந்தது. பின்னர் தரை தளம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து விட்டது. உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறி அருகிலிருந்த தேவாலயத்தில் தங்கி இருந்தோம். சில நாட்களுக்கு தண்ணீரின் அளவு குறைந்ததால் வீடுகளுக்கு திரும்பினோம். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் தண்ணீர் முழுமையாக வடியவில்லை," என்றார்.
போக்குவரத்து முடக்கம்

வெள்ளான்விளை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் வடியாமல் சூழ்ந்திருக்கும் வெள்ளம், அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையையும் சூழ்ந்துள்ளது.
இதனால் சில பகுதிகளில் இன்று வரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளாளன்விளை முதல் மானாடு ரோடு வரை செல்லும் சாலை மற்றும் வட்டன்விளை முதல் பரமன்குறிச்சி வரை செல்லும் சாலையில் தண்ணீர் நிற்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால், வட்டன்விளை, செட்டிவிளை, மருதூர்கரை உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சாலையை பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், இந்தச் சாலையின் வழியாக கல்லூரி மற்றும் அவசர வேலைக்காகச் செல்பவர்கள் அதிக நேரம் பயணிக்க வேண்டியுள்ளது.
கல்லூரியில் படித்து வரும் சாமுவேல் கூறியபோது, "டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மழை வெள்ளம் ஏற்பட்டது. எனது புத்தகங்கள் அனைத்தும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் என்னால் தேர்வுகளை சரியாக எழுத முடியவில்லை. எங்கள் ஊரில் இருந்து கல்லூரிக்கு செல்வதற்கு ஒரே ஒரு பேருந்து தான் உள்ளது. எங்கள் ஊருக்கு செல்லும் இந்த சாலையில் 2 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கியுள்ளதால் தற்போது அந்த பேருந்தும் இங்கு வருவதில்லை. அதனால் 10 நிமிடத்தில் செல்ல வேண்டிய கல்லூரிக்கு ஊரைச் சுற்றி செல்வதால் 30 நிமிடங்கள் ஆகிறது," என்கிறார்.
தேங்கியுள்ள தண்ணீரால் நோய்த் தொற்று பாதிப்பும் ஏற்படுவதாக இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
"எனக்கு நான்கு குழந்தைகள். என் வீட்டில் இடுப்பு வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு டெங்கு போன்ற நோய்கள் பரவி வருகிறது. அதிக நோய் தோற்றும் ஏற்படுகிறது," என்கின்றார் அப்பகுதியைச் சேர்ந்த ரெஜினா.
பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம்

வெள்ளான்விளை கிராமத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தைச் சார்ந்தே வாழ்கின்றனர். குறிப்பாக பனை, தென்னை, வாழை ஆகியவற்றைச் சார்ந்து விவசாயம் செய்து வருகின்றனர்.
மழையினாலும், இரண்டு மாதங்களாக சூழ்ந்திருக்கும் வெள்ள நீராலும் விவசாய நிலங்கள் முழுவதும் சேதமடைந்துள்ளன என்று விவசாயிகள் தெரிவித்தனர். குறிப்பாக பனை சார்ந்து பொருட்களை வைத்து பிழைத்து வந்த இந்த கிராமத்தைச் சேர்ந்த பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
"நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் கூலித் தொழில் செய்து வருகின்றேன். பனங்கிழங்கு வாங்கி திருச்செந்தூர் கோவிலில் விற்பனை செய்து வருகின்றேன். வெள்ளத்தின் போது எங்கள் வீட்டு நாய், 6 கோழிகள் மற்றும் குஞ்சுகள், 10,000 ரூபாய் மதிப்பிலான பனங்கிழங்குகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதற்கான இழப்பீடு எதுவும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை," என்றார் ஆனந்தன்.
மழை வெள்ளம் வடியாததால் தினசரி பிழைப்புக்காக வெளியூர் செல்வது சிக்கலாக இருக்கிறது என்கிறார் ராஜாமணி. "பனை ஓலைகளை கொண்டு பெட்டி, பாய் செய்து விற்பனை செய்து வருகின்றேன். மேலும் பனங்கிழங்குகளையும் விற்பனை செய்வேன். வெள்ளத்தின் போது ஓலைகள் அனைத்தும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இன்னும் மழை நீர் வடியாத நிலையில் தொழிலுக்கு செல்ல முடியாமல் பல நாட்களாக வீட்டிலேயே முடங்கி இருக்கிறேன்," என்றார்.
தண்ணீரை வெளியேற்றுவதில் தாமதம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த கிராமத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அதன் பிறகு நீர் இறைக்கும் மோட்டார் மூலமாக கடந்த 5 நாட்களாக தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் தண்ணீர் குறையவில்லை.
வெள்ளான்விளை கிராமத்தின் ஒரு பகுதி மேடாகவும், மற்றொரு பகுதி பள்ளமாகவும் இருப்பதால், வெளியேற்றும் நீர் மீண்டும் சுழற்சி முறையில் ஊருக்குள் வருவதால், தண்ணீர் இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடிப்பதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.
"வெள்ளம் சூழ்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. உடுத்திய துணியுடன் வீட்டை விட்டு வெளியேறினோம். இன்று வரை வீட்டிற்கு திரும்பவில்லை. கணவன் கிடையாது. நான்கு குழந்தைகள் உடன் வாடகை வீட்டில் தங்கி இருக்கின்றேன். அங்கு தூங்குவதற்கு கூட இட வசதி கிடையாது," என்கிறார் ஜெய் சுதா.
சேதம் அடைந்த வீடுகளுக்கும் தண்ணீர் சூழ்ந்த வீடுகளுக்கும் இன்றுவரை எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
"மழை வெள்ளத்தால் என் வீடுகள் முழுக்க தண்ணீர் சூழ்ந்துள்ளது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கூட கொண்டாட முடியவில்லை. வீட்டில் இருந்து ஒரு பொருட்கள் கூட மிஞ்ச வில்லை. இனி வாழ்க்கையை புதிதாக தான் ஆரம்பிக்க வேண்டும்" என்கின்றார் ராதா.
அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் என் உறவினர் வீட்டில் தங்கி இருக்கின்றேன். 65 நாட்களாகியும் வெள்ள நீர் இன்றும் வடியவில்லை. வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளது. இதில் தங்குவது மிகவும் கடினம். 65 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் தேங்கியுள்ளதால் வீட்டின் உறுதித் தன்மை குறைந்துவிட்டது. எனவே அரசு மாற்று வீடு வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை," என்கிறார் சாமுவேல்.
அரசின் நிவாரணம் கிடைக்குமா?

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மற்றும் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா கடந்த மாதத்தில் வெள்ளான்விளை கிராமத்தை பார்வையிட்டுச் சென்றனர். அதன் பிறகு மணல் மூட்டைகளைக் கொண்டு ஆங்காங்கே தடுப்பு வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியது. ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது.
இது குறித்து பிபிசிக்கு விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, "வெள்ளாளன்விளை கிராமத்தில் வடக்கு மற்றும் மேற்கு பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும். சடையநேரிகுளம் குளத்தின் உடைப்பின் காரணமாக வெள்ளாளன்விளை கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை மின் மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணியைத் தொடங்கினோம். ஆனால் தண்ணீர் சுழற்சியாக குடியிருப்பு பகுதிக்குள் வந்ததால், தற்போது டீசல் பம்ப் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். கூடிய விரையில் தண்ணீர் முற்றிலுமாக வெளியேற்றப்படும். பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணமும் வழங்கப்படும்," என்றார்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்டச் சேர்ந்த மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடன் கேட்டபோது, "மோட்டார் பம்புகள் கொண்டு தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்துகொண்டு இருக்கிறது. விரையில் சரி செய்யப்படும்," என்றார்.
அண்மையில் தூத்துக்குடியில் நடைபெற்ற நலத்திட்டம் வழக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின், "வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அவற்றை பழுதுபார்க்க ரூ. 2 லட்சம் மற்றும் முற்றிலும் சேதமடைந்த வீடுகள் ரூ.4 லட்சம் வழங்கப்படவுள்ளது," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












